புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter


இதை மட்டுமா இழந்தோம்? 1 ஜிகினாகட்-அவுட்


எண்பதுகள் வாக்கில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை நெருங்குகையிலேயே பார்க்கிறவர்களின் கண்களை ஈர்க்கத்துவங்கிவிடும் சினிமா கட் அவுட்டுக்கள். ஜிகினா வேலைப்பாடுகளோடு தகதகவென குறைந்தபட்சம் ஐம்பது அடி அதிகபட்சம் நூறடிக்குக் கூட கட் அவுட் இருக்கும்.படம் ரிலீசாவதற்கு 10 அல்லது 15 தினங்களுக்கு முன்னமே நிறுத்தப்பட்டுவிடும் இந்த கட்-அவுட்களில் ஓவியமாய்த் தீட்டப்பட்ட நட்சத்திரங்கள் பற்றிய ஞாபகங்கள் நூறு நாள் வாழும் வண்ணத்துப்பூச்சியாய் இன்னமும் மனசுக்குள் படபடக்கின்றன.

எம்ஜீஆர் சிவாஜி காலமும் ரஜினி கமலின் காலத்தின் முற்பகுதியும் உட்பட்ட 1960களில் துவங்கி 1995 வரைக்கும் எல்லா ஊர்களிலும் பெரும்பாலும் பஸ் நிலையங்களைக் குறிவைத்து இத்தகைய கட் அவுட்டுக்கள் வைக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.எந்த ஊருக்கு சென்றாலும் சினிமா என்னும் மைய நூல் அந்த ஊரின் அந்நியத்தன்மையை உடைக்கிறதாய் இருந்தது எனச்சொல்லலாம்.

எந்த நடிகருடைய கட் அவுட் பெரியது எனத்துவங்கி என்னென்ன தியேட்டர்களில் அந்தப் படம் வெளியாகிறது என்ற விபரம் வரை.,அந்தக் கட்டவுட்டை மையப்படுத்தி அதன் கீழே ரசிகர்மன்ற விவரங்களும் கூட  இடம்பெறுவது வழக்கம்.(அப்போதெல்லாம் ஒரு படம் மதுரை நகரத்தில் பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும்.இன்றைக்கு அதிகபட்சமாக எந்திரன் நகரத்தில் மட்டும் 18 தியேட்டரில் வெளியானது முரண்மாற்றமே.).

அடுத்தடுத்து எந்தெந்த நடிகர்களின் கட் அவுட் களை வைக்கலாம் என்பதில் சில உள் அரசியலே இருந்தது சுவையான அம்சம்.ரஜினிக்குப் பக்கத்தில் கமல் நிறுத்தப்பட மாட்டார்.அவர்கள் நட்பாயிருக்கலாம்.ரசிகர்களின் மத்தியில் அனல் தெறிக்கும்.மதுரை அபிராமி அம்பிகை ஒரே வளாகத்தின் இரு அரங்கங்கள்.அதில் ஒன்றில் ரஜினியும் மற்றொன்றில் கமலும் தளபதியாகவும் குணாவாகவும் ஒரே தீபாவளி தினத்தில் அவதரித்ததும்,இரு ரசிகதரப்புக்கள் மத்தியில் ரிலீஸ் தினங்களில் ஒவ்வொரு ஷோவுக்கும் பகைத் தீ மூண்டதும் இன்றைக்கு நடந்தாற்போல் இருக்கிறது.

பஸ்நிலையங்களுக்கு எதிரே வைக்கப்படுகிற அதே கட் அவுட் படம் வெளியாகிற தியேட்டரிலும் வெளியே நிறுத்தப்பட்டிருக்கும்.உளவியல் ரீதியாக அடிக்கடி கண்ணில்படுகிற இடத்தில் பிரம்மாண்டமாக முன்நிற்கிற கட் அவுட் பிம்பம் ரசிகனை அப்படத்தைப் பார்க்கிற வரை விடாமல் உந்திக்கொண்டே இருந்தது நிஜம்.மேலும் இக்கட்டவுட்டுக்கள் விக்ரகங்களாகி எலுமிச்சை மாலைகள் அணிவிப்பதும் பாலாபிஷேகங்கள் செய்ததும் இன்னுமொரு கவனிக்கவேண்டிய தகவல்.

நடப்பு ரிலீஸ் படங்களின் கட் அவுட்டுக்களுக்கு மத்தியில் திடீரென்று ஒருவெற்றிடத்தில் ஒரு கட் அவுட் முளைக்கும்.அது ஆயிரத்தில் ஒருவன் .எங்கவீட்டுப்பிள்ளை, அரசகட்டளை,நாடோடிமன்னன்,உலகம் சுற்றும் வாலிபன்.எதாவது ஒரு அவதாரத்தில் மீண்டும் வருவார் மக்கள்திலகம்.அவ்வளவுதான்…ரீவைண்டாகும் காலம்.காலத்தை வென்ற கலைஞனின் காலத்தால் மாறாத ரசிகர்கள் திருவிழாவாகவே கொண்டாடிமகிழ்வர்.

சிலகாலம் கழித்து சமயம் பார்த்து எழுவார் நடிகர் திலகம். வீரபாண்டிய கட்ட பொம்மன், திருவிளையாடல்,தெய்வமகன்,பாசமலர்,ஊட்டிவரைஉறவு என்று அவரது பிள்ளைகள் துள்ளாட்டம் போடுவர்.அரசியலில் நிலைபெற்று முதல்வராகி பிறகு மரணமடைந்த பின்னரும் இன்றைக்கு வரை தகர்க்க முடியாத ஒரு இடத்தைப் பெற்றிருக்கிற எம்ஜீயார் மற்றும் நடிகர்திலகமாக புகழின் உச்சங்களைத் தொட்ட சிவாஜியும் அத்தகைய கட் அவுட்களில் விண்ணளாவ நின்றதை எப்போதும் எதிர்பார்த்திருக்கக் கூடிய ரசிகர்கள் மாறாது தொடர்ந்தது குறிப்பிடத்தகுந்தது.

வருகிற சினிமாயானைகளுக்கு முன் மணியோசைகளாக திகழ்ந்தவை ஜிகினா தகதகத்துக்கொண்டே இருக்கக் கூடிய கட் அவுட்டுக்கள்.  “எங்க ஆள் கட் அவுட் தாண்டா உசரம்….”உங்காளு கட் அவுட்டை விட எங்க ஹீரோ கட் அவுட் தாண்டா மின்னுது….”"படத்த தூக்கி பத்து நாளாச்சி…இன்னும் வெக்கமில்லாம நிக்கிறதப் பாரு”என்றெல்லாம் மானசீக மொழிகளில் நட்சத்திரங்களுடன் உறவாடிய கனவுக்காலம் அது.

ஒரு படம் வெற்றிகரமாக ஓடி 200 தினங்கள் கழித்து அந்த படத்தின் கட் அவுட் அகற்றப்படுகையில் ஒரு ப்ரத்யேக சோகம் ஒவ்வொரு ரசிகனுக்குள்ளும் அந்தக் கட் அவுட் பெயர்த்துவிட்டுத் தான் செல்லும்.ஒரு நடிகரின் வெற்றிப்படத்தின் கட் அவுட் நிலைத்து நின்று விளையாடிக்கொண்டிருக்கையிலேயே அவரது அடுத்த படம் வெளியாகி ஓடாமல் காலியாகி சுருண்டு வீழ்வதன் மௌனசாட்சியாக இவையனைத்தையும் ஒரு கட் அவுட்டின் வருகையும் நீக்கமும் விளக்கும்.

பிறகு ராட்சத ஃப்ளெக்ஸ் வந்தது..விண்ணை முட்டுகிற ஹோர்டிங்குகள்.மகா பெரிய பட விளம்பரங்கள்…பின்னாலேயே சட்டம் தன் கடமையைச்செய்தது.இன்றைக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக விளம்பரம் வீதிக்கு வருகிறது.

இதை மட்டுமா இழந்தோம்….?  இந்தக் கட் அவுட் கலாச்சாரம் நன்மையா தீமையா என்பதல்ல இங்கே கருப்பொருள்.ரசிகமனங்களுக்குள்ளே கிளர்பொருளாகவும், சினிமாத் துறையினருக்கு விளம்பரம் என்ற விதத்திலும்,தச்சுவேலை உள்ளிட்ட ஒரு கட் அவுட்டை ஏற்படுத்திய தொழில்சார்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பாகவும் இருந்த கட் அவுட்கள்….நாற்பதாண்டு காலம் தமிழகத்தின் சினிமா,வாழ்க்கை ஆகியவற்றின் கலாச்சாரக்குறியீடுகளில் ஒன்று என்பதில் ஐயமில்லை.

இன்னமும்

நினைப்போம்

ஆத்மார்த்தி