புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

தீராக்கடல் 2

 

விதை என்பது சன்னதம்.சுயத்திலிருந்து வெளியேறும் வழிகள் அனைத்தும் நனவின் கோரப்பிடியில் அழுத்தமாய் அடைக்கப் பட்டிருப்பது நிதர்சனம்.ஆனாலும் சன்னதம் சுவரை உடைத்து வெளியேற வைக்கும்.அதற்கு வழிகள் தேவையில்லை.சன்னதம் என்பது ஒற்றை.அதற்கு நிரூபணமோ சாட்சியமோ தேவையில்லை.ஒரு மனிதனின் பித்து நிலையில் வாய்க்கப் பெறுகிற அத்தனை ஒழுங்கின்மைகளுக்கும் மத்தியில் ஏற்பட வாய்ப்புள்ள ஒழுங்காகவோ ஒழுங்கின் பிறழ்வாகவோ கூடக் கவிதை என்பது நேரலாம்.இன்னும் சொல்வதானால் கவிதை என்பது முன் பின் வாய்க்கப் பெறாத அற்புதமாய் இருந்துவிடக்கூடும்.

சுயத்தின் அக மற்றும் புற வாதைகளினின்றும் ஏற்படுகிற ஒவ்வாமை மற்றும் உடலை மனதை எதிராடுவதற்கான மானுட இச்சை கவிதையாக வெளிவரலாம்.புற வாழ்வின் நிர்ப்பந்தங்களின் மீதும் இயலாமைகளின் மீதும் நிகழ்த்திப் பார்க்கிற கற்பனையான எதிர்போராகக் கவிதையைக் கைக்கொள்வது இயல்பான ஒன்று தான்.கூட்டு மட்டும் தனி வாழ்க்கை சமூக அரசியல் பொருளியல் ஆன்மீக சித்தாந்த இடையூறுகள் மீதான வினவுதலாகவும் கவிதையை சார்வது நிகழ்கிறது.தன்னிலிருந்து விடுபடுதல் மரணபயம் இயலாமை நோய்மை குழந்தமை மீதான நினைவேந்தல் உறவுகளை இழத்தல் காமம் சார்ந்த தடைகள் காதல் மற்றும் புணர்ச்சி ஆகிய பலவும் கவிதைகளின் பால் ஒருவரது சார்பை உறுதிப்படுத்துவதாக இருக்கக் கூடும்.ஆக கவிதைகள் வினவுதலாகவும் கண்டறிதலாகவும் மட்டுமன்றி இவ்விரண்டும் நிகழாத சார்புத் தொடர்ச்சியாகவும் இருக்க வாய்க்கிறது.

விதைக்குத் தடைகள் இல்லை.கவிதை என்பது ஒரு மொழியின் உச்சபட்சமான கலைவடிவம்.கலை எதையும் கலைக்கும். எதிர்க்கும்.கலையையும் அது அவ்வண்ணமே செய்யத் தலைப்படும்.அப்படி இருக்கையில் கவிதை என்பது நவ வாழ்வின் அத்தனை தனி மற்றும் கூட்டு வெளிப்படுதலின் அத்தனை தோல்விகளையும் விசாரணைக்கு உட்படுத்துகிறது.எல்லா நிர்ப்பந்தங்களையும் தகர்த்தெறிகிறது.சாத்தியமாக இருக்கிற அத்தனை அத்தனை நம்பகங்களையும் பகடி செய்கிறது.தன்னையே மறுதலிக்கிறது.எதையும் கலைக்கிறது.

ருபதாம் நூற்றாண்டுக்குப் பின் உலகமயமாக்கலும் அதீதமான கணிப்பொறி சார்ந்த உப பண்டமய ஆதிக்கமும் வாழ்வின் நிச்சயமின்மையும் கவிதைகளில் பலவாறும் கையாளப் படுகின்றன.இவற்றை இரண்டு விதமாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.ஒன்று தன்னியல்பில் அவ்வவற்றுக்கான தேவையுடன் எழும் இவ்வகையான கவிதைகள்.இரண்டாவது முதல்வகைக் கவிதைகளைப் போலச்செய்து உருவாக்கப்படும் கவிதைகள்.இவற்றை நிர்ணயிப்பதும் மறுதலிப்பதும் வாசகமனம் சார்ந்த முடிவாகத் தோற்றமளித்தாலும் தகுதி உள்ளது தப்பிப் பிழைக்கும் என்ற ஒற்றை வாக்கியம் போலச்செய்து உருவாக்கப் பட்ட கவிதைகளின் மீது எறியப்படும் சாபக்கற்கள் அல்ல என்பதும் அவை அவற்றை வெளிப்படுத்துவதற்கான சூத்திரம் என்பதும் சேதியல்ல.உண்மை.

குற்றத்தின் நறுமணம் தொகுப்பு புது எழுத்து வெளியீடு வெய்யில் எழுதிய இந்தக் கவிதையை மறக்க முடியாத முத்தத்தைப் போல எனக்கு நானே பரிசளித்துக் கொள்கிறேன்.

எனக்குப் பிடித்த கவிதை 2

ஆண்களின் சிவந்த கண்கள்

நள்ளிரவில் மனைவியோடு
சண்டையிட்டு வெளியேறுபவன்
முதலிலொரு துண்டு சிகரெட்டை
கண்டடைந்து பதற்றம் தணிக்கிறான்

கலவியிற் தோற்ற அவமானத்தின் புழுக்கத்தில்
மொட்டை மாடிக்கு வருகிறவன்
சலிப்பைத் தந்தாலும்
வளர்தேய் நிலைக் குழப்பத்தோடு
நிலவையே பார்த்துக் கொண்டிருக்கிறான்

கொலையொன்றைத் தவிர்க்க நிலம்பெயரும் ஒருவனை
சுமந்து கொண்டு
அடிவானத்தில் நகரும் ரயிலின் வெண்ணிறப்புகை
வானில் சுழன்றலைகிறது
உதிரக்கசிவு தினங்களில்
நடனமாடும் மதுவிடுதிப் பெண் போல

இந்நகரமெங்கும் இருளின் மறைவில்
உறங்காதிருக்கும் எண்ணிலா ஆண்களின்
எல்லா நிலவையும் தழுவுகின்றன மேகயிழைகள்

காயமுற்ற பறவையின் துயரொழுகும் கூவலில்
உதிரும் நட்சத்திரங்களின் திசையிலிருந்து
நடுங்கச் செய்யாத மார்புகளில் தன்னை
புதைத்துக் கொள்ள அவள் வருவதான
கனவில் மெல்ல சாய்கிறார்கள்


வெய்யிலின் கவிதைகள் தனிமையின் அனாதித் தன்மையை வெளிக்கொணர்பவை.ஆண் மனதின் வாதையின் இருண்ட பக்கங்களை எடுத்துரைக்கும் சொல்லாடல்களாக வெய்யிலின் கவிதைகளில் பல விளங்குகின்றன.எதையும் அதனதன் நேர் நியாயங்களோடு பூடகமேதும் இன்றிச் சொல்வது வெய்யிலின் தனித்துவம்.பெரும்பாலும் வாசகனுக்கு இது இன்னின்னது என்று உறைந்த காட்சிகளை உறுத்தலேதுமற்ற ஓவியங்களைப் போல எடுத்து வைத்துத் தன் கவிதையின் அடுக்குகளுக்குள் பயணிக்கச் செய்வதும் குறிப்பிடத்தக்கது.வேறாரும் முயன்று பார்க்காத சற்றே சிக்கலான சூத்திரத்தை அனாயாசமாக முயன்று பார்க்கிறதோடு மட்டுமன்றி அதனைத் தன் இலகுவான உப இயல்பாகவே மாற்றிக் கொள்வது வெய்யிலின் சாமர்த்தியம்.தேவைக்கதிகமான ஒற்றைச் சொல்லைக் கூட அனுமதித்து விடாத வெட்டுக்கத்தி மொழி வெய்யிலின் பலம்.

தைத்துவம் குறையாத துவக்கம் ஈர்க்கிறது.வளர்தேய் நிலைக் குழப்பத்தோடு நிலவையே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்கிற வாக்கியம் ஒரு சிறுகதைக்கு நிகரான காட்சியனுபவம்.முன் வரியின் சலிப்பு அடுத்த வரியின் குழப்பம் இவ்விரு சொற்களையும் தன்னியல்போடு எழவைக்கிறார் கவிசொல்லி.எண்ணிலா ஆண்களின் எல்லா நிலவையும் என்னும் வாக்கியத்தின் கனம் தொடர்ந்து தன்னை நீட்டித்துக் கொள்ளும் அதிர்வொலி.தன்னிடம் விசையோடு வரும் பந்தினை அவ்விசை குறையாமல் எதிராளி நோக்கித் திருப்பி விடுகிற தேர்ந்த ஆட்ட லாவகத்தோடு வெய்யிலின் இவ்வரி என்னைக் கிளர்த்துகிறது.

"கொலையொன்றைத் தவிர்க்க நிலம்பெயரும் ஒருவனை" இதன் மறைபூடகம் வெய்யிலின் சிறப்பு.
"கொலையொன்றைத் தவிர்க்க நிலம்பெயரும் ஒருவனை/ சுமந்து கொண்டு/அடிவானத்தில் நகரும் ரயிலின் வெண்ணிறப்புகை/ வானில் சுழன்றலைகிறது /உதிரக்கசிவு தினங்களில்/ நடனமாடும் மதுவிடுதிப் பெண் போல."சமகாலத்தில் எழுதப்பெற்ற மிகுந்த அதிர்வேற்படுத்தக் கூடிய கவிதை வரிகளாக என்னால் இவற்றைச் சுட்டமுடிகிறது.கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸில் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற இருவேறு காட்சிகளை அடுத்தடுத்து வெட்டிச் சேர்த்து  அதனை ஒற்றை அனுபவமாக்கி ஜாலவித்தை காட்டும் திரைப்படங்களை நாம் பார்த்துப் பிரமிக்கிற காலம் இது.அப்படியான முயல்வை ஒரு கவிதையில் செய்து காட்டியிருக்கிறார் வெய்யில்.

மேற்சொன்ன இரண்டாவது பத்தியைத் தாண்டும் ஒருவனின் மனதில் ஒரு இரயிலும் நிலம்பெயரும் ஒருவனும் உதிரக்கசிவு தினங்களில் நடனமாடும் மதுவிடுதிப் பெண் ஒருத்தியும் அவளது வாதையும் அவனது வாழ்வின் எதிர்பாராமையும் இரயிலின் சர்வாதிகாரத் தனிமையும் ஒன்றின் மேல் மற்றோன்று தன்னைத் தானே அடுக்கிக் கொண்டு வாசகனை வெகுதூரத்தின் இருண்மைக்குள் ஆழப்புதைத்துவிடுவது அற்புதம்.

வாதையின் சொல்லவொண்ணாக் கணங்களைக் கவிதைப்படுத்தும் போது அதற்குண்டான அளவீட்டைத் தாண்டி இம்மியும் செயற்கை கலவாமல் சொல்லப்படுகிற கவிதைகள் சொற்பமே.அவ்வகையில் வெய்யிலின் இக்கவிதை காலங்கடக்கும்.தொடரலாம்


அன்போடு
ஆத்மார்த்தி

12.06.2015Last Updated (Friday, 12 June 2015 08:26)