புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

தீராக்கடல் 4


ரு கவிதையால் என்ன பயன்..?எழுதுகிறவர்க்கு அது ஆயாசம்.எழுதி முடித்ததும் எதையோ சாதித்துவிட்டாற் போலவொரு பாவனை.இன்னும் மிச்சமிருக்கும் சொற்களின் பிசுபிசுப்பை நீரள்ளிக் கழுவிக்கொண்டு இன்னொரு இரவு இன்னொரு கனவென்று நகர்ந்து போய்விட ஒரு சின்ன உந்துதலைக் கவிதை தரக்கூடும்.யாரும் படிக்கத் தேவையில்லை.இது என் கவிதை என்று எழுதி வைத்துக் காணாமலே போய்விட்ட எத்தனை கோடிக் கவிதைகள் உண்டு தெரியுமா இந்த உலகத்தில்..?இது இவ்வாறிருக்க கவிதை கவிதை இல்லை ஆகப்பிரமாதம் இது சுத்த மோசம் என்றெல்லாம் வல்லடி செய்வது அர்த்தமற்றது தானே..?

புதுக்கவிதை என்பது மொழியின் தளைகளெல்லாவற்றையும் அறுக்கும் குறுங்கத்தி.அது தொடங்கிய காலத்தில் மொழியில் செல்வாக்குப் பெற்றிருந்த மரபுக் கவிதையின் ஒற்றை நாற்காலியைத் தகர்த்துத் தானொரு தனியாசனத்தில் ஏறி அமர்ந்தது புதுக்கவிதை.மேலைச் சூத்திரங்களையும் மொழிபெயர்ப்புக் கவிதைகளினுள்ளே காணக்கிடைத்த தைர்யவீர்யங்களையும் சற்றும் அறியாத பலரும் புதுக்கவிதை எழுதத் தலைப்பட்டார்கள்.இன்று நவ கவிதை எழுபத்தைந்து ஆண்டுகளில் எங்கெங்கோ தன் நிறமற்ற வேர்களைப் புதைத்து நெடுமரமாய்க் கிளைத்திருக்கிறது.ஆகச்சிறந்த கவிதைகளைத் தேடுவதென்பதே ஒரு சுகம் தானே..?

வாழ்க்கையின் அதே நாட்களிலிருந்தும் அதே சம்பவங்களிலிருந்தும் போலச்செய்யப்பட்ட வாழ்வின் அத்தனை நிர்ப்பந்தங்களிலிருந்தும் காணக்கிடைக்கிற கானல் வெளிச்சமாய் சென்றடையமுடியாத கற்பனை முகடாய்க் கவிதை விளங்குகிறது.ஒரு கவிதை என்பது விடுதலை அல்ல.மாறாக அது தப்பித்தலுக்கான எண்ணற்ற முயல்வுகள்.ஒரு கவிதை என்பது மாற்றம் அல்ல.எதிர்ப்பின் விடாப்பிடியான தொடர்குரல்.

கிணறு என்றதும் ஆத்மாநாமின் ஞாபகம் வந்துவிடுகிறது.நாமெல்லாரும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் வெகு நிச்சயமாய்த் தொலைத்துவிட்ட அழிந்து போன முந்தைய காலத்தின் இலச்சினைகளில் ஒன்று தான் கிணறு என்பது.தனி வீடு என்னும் பதம் வேகமாய் அழிந்துகொண்டிருக்கிறது.அடுக்கக வீடுகளுக்குள் அடையாளங்களை மறைத்தும் தொலைத்தும் வாழப் பழகியவர்கள் நாம்.எது முந்தைய காலத்தில் ஒவ்வாததாக இருந்ததோ அதெல்லாம் இன்றைய வாழ்வில் நிம்மதியாய் இருப்பது வாழ்வின் அபத்தம்.

மிழில் எழுதப்பட்ட மிகச்சிறப்பான கவிதைகளுள் ஒன்றென இதனைச் சொல்வேன்..கூடுகளை விட்டு என்னும் தொகுப்பு சவுத் ஏசியன் புக்ஸ் வெளியீடாக ஏப்ரல் 1992ஆமாண்டு வெளியானது.இதனை எழுதியவர் போப்பு.

எனக்குப் பிடித்த கவிதை 4

கிணறு

எப்போது ஆரம்பம்
யாருக்குத் தெரியும்

குட்டிச்சுவரும்
இழுப்புச் சக்கரமும்
சுற்றுக் கட்டும்
பெயர்ந்த பாசியும்

பார்க்கும் இட மெல்லாம்
அறியாமல் கால் போகும்

கண்ணும் மனசும்
சேர்ந்து எட்டிப்பார்க்கும்

ஏன் இந்தப் பழக்கம்
யாருக்குத் தெரியும்


க்கவிதையின் அழகு இரண்டாவது வரியாகவும் ஈற்று வரியாகவும் வரும் யாருக்குத் தெரியும் என்ற வாக்கியத்தின் ஆழம்.இன்னமும் எங்கேயாவது அரிதினும் அரிதாய்க் காணக்கிடைக்கிற கிணறு ஏதையும் வாகனத்தின் விரைதல்களில் வளைதல்களில் சட்டென்று கடந்து செல்வது தான் வாய்க்கிறது என்றாலும் கூட அந்தக் கிணற்றை ஒருதரம் மனசு மட்டுமாவது எட்டிப்பார்ப்பது நிகழ்ந்து விடுகிறது.தடுப்பதற்கில்லை.கவிதை என்னும் வடிவத்தின் உள்ளார்ந்த ஆச்சர்யங்களில் ஒன்று என்னவெனில் அது மிகப்பலமான எதிர்ப்பை ஒரு பூகம்பம் போல் நிகழ்த்த வல்லதாகவும் இருக்கக் கூடும் போலவே கவிதை என்பது மிகச் சன்னமான பலவீனத்தின் மரணகாலத்து முனகலாகவும் இருந்துவிடக் கூடும்.சிந்தித்தால் இரண்டின் விளைதல்களும் ஒன்று தான் என்பது புரியும்.

வரவர் மனசு அவரவர் கிணறு. எட்டிப்பார்ப்பதற்கான ஆழங்களை மனனத்தில் மட்டுமாவது மிச்சம் வைத்திருப்பவர்கள் தானே நாமெல்லாரும்.?

தொடரலாம்
அன்போடு


ஆத்மார்த்தி
15.06.2015