புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

தீராக்கடல் 5

3 இலக்கணங்கள்


******************************

ஒவ்வொரு கவிதையின் மீதும் இரண்டு எதிர்பார்ப்புகள் உள்ளன. முதலாவதாக, ஒரு கவிதை,அது எழுதப்பட்ட மொழியை மதிப்பிற்குரியதாக்கும் வகையில் நுட்பமாகச் சொல்லப்படுதல் வேண்டும். அடுத்ததாக அனைவருக்குமான பொது மெய்மையைத்  தனித்த பார்வையோடு சொல்லப்படுதல் அவசியம்.கவிஞர் முன்னரெப்போழ்தும் சொல்லப்படாத ஒன்றைச் சொல்கையிலும் அதனை வாசிப்பவர்கள் அதைத் தமதாக உணர்வர்.

டபிள்யூ ஹெச் ஆடன்

*************************

மொழியின் பின்னியங்கும் மொழி. இதுவே கவிதை.

ஆந்திரியா பாஷியோன்


**********************************

அர்த்தப்படுதல் அன்று அதுவாதல் கவிதை

ஆர்க்கிபால்ட் மாக்லேய்ஷ்

******************************

விதைக்கென நூற்றுக்கணக்கான இலக்கணங்கள் இருப்பது இயல்புதானே..?என்னைக் கவிதைக்கு ஒரு இலக்கணம் சொல் என்று யாரேனும் வற்புறுத்தினால் இப்படிச் சொல்வேன்  "ஆகச்சிறந்த கவிதை யாரும் எழுதுவதற்கில்லை".இதனைத் தீர்மானமாக நம்புகிறேன்.காலமும் வார்த்தைகளும் வாழ்வின் நிர்ப்பந்தங்களும் அக மற்றும் புற பொது மற்றும் தனி சுய மற்றும் வெளி எனப் பல வகையான சிதைவுகளுக்கு ஆட்பட நேர்கிறது.அதற்கேற்பக் கலையின் எல்லா உப பிரிவுகளும் சிதைகின்றன.அவற்றின் சிதைவுகளுக்கிடையே தொடர்ச்சி இல்லாது போதல் இயல்பாகிறது.அப்படி இருக்கையில் இரண்டு காலகட்டத்தினரின் கவிதைகள் முற்றிலும் வெவ்வேறகக் கிளைத்துச் சிதறும்.கவிதை என்பது ஒரு கருத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை.ஆனால் ஒரு கருத்தை உறுதிசெய்வதாகவோ விசாரணைக்கு உட்படுத்துகிறதாகவோ கூட அமையலாம்.


எனக்குப் பிடித்த கவிதை 5

தாமரை இலையில்
புரண்டு களிக்கும்
மழைத்துளியைப் போல்
பேரழகுடன்
தவித்துக் கொண்டிருக்கின்றது
நம் கள்ளக்காதல்


என்.டி.ராஜ்குமார்

(கருடக்கொடி தொகுப்பில் பாதரசம் வெளியீடு)

என்.டி.ராஜ்குமாரின் மொழி நேரடியானது.உரையாடலுக்கு உபயோகிக்கும் பல சொற்கோர்வைகளைக் கொண்டே சடாரென்று மாயம் செய்து கவிதையாக்கும் வித்தகம் என்.டி.ராஜ்குமாரின் கவிதைகள்.மேலோட்டத்தில் முதல் நிரடலில் வாசிக்கையில் வெகு சாதாரணமாகத் தொனிக்கும் அதே கவிதை ஆழப்புகுகையில் வெறோன்றாகும்.கலைடாஸ்கோப்பின் உட்சித்திரங்களாய் மனசைக் கலைத்துத் தடவி மெல்ல ஒரு வலி உருவாகி நிலை கொள்வதைப் போல நிலைகொள்ளும். மிக அபூர்வமான ஒரு ஊசலாட்டத்தோடு முடியாமல் மறுபடி மறுபடி வாசகனைச் சுழற்றித் தன் பிடியினுள் அமிழ்த்தும். மெல்ல அதே அறிந்த சொற்களுக்குள் இருக்கும் பூடகங்கள் வெளியாகும்.மானுடத்தின் இருவரிடை உறவின் அர்த்த அனர்த்தங்களை ராஜ்குமாரின் கவிதைகள் ஒப்பிடற்கரிய இருள் முகடுகளில் நிறுத்திப் பார்க்கின்றன.அந்த வகையில் மேற்சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கவிதை மறுவாசிப்புகளில் ஏற்படுத்தித் தரும் சித்திரம் புரியா ஓவியத்தினைப் பின் தொடர்வதைப் போல் வாசகனைக் கிளர்த்துவதை நம்மால் உணரமுடிகிறது.""ஒட்டாமல்"" என்ற ஒரு சொல்லை இந்தக் கவிதையின் எந்த வரியிலும் பொருத்த முடிகிறதை என்னவென்பது..?ஒரு கவிதையின் வெற்றி அதன் நீட்சியை நோக்கி வாசகனை நகர்த்துவதில் இருக்கிறது.அந்த வகையில் என்.டி.ராஜ்குமாரின் இந்தக் கவிதை அற்புதம்


தொடரலாம்
அன்போடு


ஆத்மார்த்தி

20.06.2015