புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

தீராக்கடல் 6

கவிதை எனப்படுவது ஒரு உணர்வு அதன் எண்ணத்தை கண்டறிதலும் அந்த எண்ணம் அதன் வார்த்தைகளைக் கண்டறிதலும் ஆகும்.

ராபர்ட் ஃப்ராஸ்ட்
*******************
நிதர்சனத்திற்கு எதிராய்ப் போரிடுவதன் ஒரே ஆயுதமே கற்பனை

ஜூலியஸ் தெ காஸியெர்
*******************
எந்த ஓர் கவிதையும் முடிவுறுவதில்லை மாறாக நிறுத்தப்படுகிறது.

பால் வாலேரி
*******************
கவிதை என்பது முன் வைக்கிற அனுபவம் எப்போதும் அறியாத புதிய உண்மைகளைக் கண்டறிவதாகவோ வேறாரும் முயன்றுபாராத திறப்புக்களை ஏற்படுத்தி விடுவதாகவோ நெடியதோர் வார்த்தைக்கோர்வைக்கு அடுத்ததான பெரியதோர் மயக்கத்தை நேர்த்திவிடுவதாகவோ இருக்கவேண்டும் என்று யாதொரு நியதியுமில்லை.விரித்துச் சொன்னால் ஒரு கவிதையின் முடிவில் ஏற்படச் சாத்தியமாயுள்ள வெறுமையும் அயர்ச்சியும் மலங்க மலங்க விழிக்கும் அனாதித் தனிமையும் ஆழமான இருளில் வாசிப்பவனை அமிழ்த்தி வைக்கும் தன்னந்தனி அனுபவமாய்க் கூட நேர்ந்துவிடலாம்.ஒரு கவிதை எதையாவது கற்பிக்கவேண்டும் என்பதோ எதையாவது புதிதாய்க் கண்டறியவேண்டும் என்றோ எதையாவது உறுதிப்படுத்த வேண்டும் என்றோ நிர்ப்பந்திப்பது கூட அபத்தமே.மாறாக ஒரு கவிதை இவ்வெதையும் செய்யாது மிக மிக அமைதியான ஓரிடத்தில் வாசிப்பவனை ஆழ்த்திவிட்டுத் தான் அப்படியே முடிந்து போவதும் நிகழ்கிறது.அப்படியான கவிதைகள் அபூர்வமானவை என்பது மட்டுமல்ல மெலிதான எள்ளலை இயலாமையை நிர்க்கதியை வாசிப்பவன் மீது சாற்றி விட்டுத் தான் முடிவது என்பது அக்கவிதையின் அளவுக்குச் சாத்தியப்படுகிற நேர்மையாகவும் இருந்திடக் கூடும்.
சுகிர்தராணியின் கவிதைகள் பெண் நோக்கில் எழுதப்படுகிற பெண்வாழ்வினைப் பாடுபொருளாகக் கொள்கிற கவிதாவழி காத்திரம் குறையாது வினவுதலின் முன் வைத்தல்கள்.மேலும் உடலைப் பேசுவதன் மூலமாக மனதைப் பேசுவதும் புறவாழ்வின் அத்தனை நிர்ப்பந்தங்களையும் அறுத்தெறியத் தலைப்படுவதுமான பலமான மொழியாடல்கள்.ஆளற்ற வனாந்திரத் தனிமையில் பலங்கொண்ட மட்டும் எழுப்பப் படும் குரல்வழிப் போராட்டங்களாகவும் அதே நேரத்தில் மிக இயல்பான வெள்ளந்தி அன்பின் மீது வைக்கப் படுகிற நம்பகத்தின் சாட்சியங்களாகவும் எழுவது சிறப்பு.
சுகிர்த ராணியின் இந்தக் கவிதை நாள்காட்டி தேவைப்படாத எனதறை தமிழில் கடந்த பத்து ஆண்டுகளில் எழுதப்பட்ட அற்புதமான கவிதைகளில் ஒன்று என்பேன்.

எனக்குப் பிடித்த கவிதை  6


நாள்காட்டி தேவைப்படாத எனதறை

ஒருவர் மட்டுமே படுக்க இயலும் எனதறையில்
சன்னல்களென்று எவையும் இல்லை

சூரியன் இடப்பக்கம் உதிக்கிறதா
நிலவு தலைக்குமேல் தோன்றுகிறதா
எதைக் குறித்தும் கவலைப்படுவதில்லை

உடலைப் பருகக் கொடுப்பதற்கும்
காலத்தை அறிந்துகொள்வதற்கும்
என்ன தொடர்பு இருக்க முடியும்

ஒருபோதும் காலத்தை உடலைக்
கணக்கில் வைத்துக்கொள்வதில்லை
வருகிறவன் எத்தனையாவது ஆண்மகன் என்பதையும்

அவர்கள் என் ஆடைகளைக் களையும்போது
வெட்கப்படுவது போலவும்
உச்சத்தில் முனகுவது போலவும்
நான் பாவனை செய்தாக வேண்டும்

அவர்கள் தம் ஆண்குறிகளால் எழுதும்போது
வழுவிச் செல்லும் எனதுடலை
நானேதான் தடுத்து நிறுத்துவேன்

கன்றிச் சிவந்த பற்காயங்களில்
அவர்களின் நுரைத்துப் பொங்கும் விந்துவை
உறையவைக்கிறார்கள்

அப்போதெல்லாம்
என் மதர்த்த இளமையைத் தின்று செரிக்கின்ற
இரவுகளும் பகல்களும் தீர்ந்துபோனதொரு பருவம்
என்னைத் தீண்டாதா என யோசிக்கிறேன்

கீழறையில் உறங்கும் எனதிரு குழந்தைகளுக்கு
எந்த அனுபவத்தைப் போதிப்பது

மிருகங்களோடு பழகுவது குறித்தும்
அவற்றைப் பழக்குவது குறித்தும் சொல்வது எளிது
அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்

என்னுடைய குழந்தைகள்தான்
அடிக்கடி நச்சரிக்கிறார்கள்
நாள்காட்டி தேவைப்படாத எனதறையில்
சிதறிக்கிடக்கும் ஆணுறைகளை ஊதித் தரச்சொல்லி


தீராக்கடல் வதனம் பதிப்பக வெளியீடு

அணுகவும்
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated (Tuesday, 23 August 2016 13:30)