புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

தீராக்கடல் 7

குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்


ள்ளிப் பிராயத்தில் மனப்பாடப் பகுதியில் திருக்குறளையும் சேர்த்திருந்தனர்.அப்படி நாலாம் வகுப்பிலிருந்து பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டவை மொத்தம் நாற்பது அதிகாரம் இருந்தால் அதுவே அதிகம்.அவற்றில் எத்தனை குறள்கள் அர்த்தம் தெரிந்து மனனமாயிற்று என்பது விசித்திரம்.பிற்காலத்தில் அதே திருக்குறளைக் காதலோடு படிக்கையிலெல்லாம் இதையுமா பாடங்களோடு பாடமாய்த் தாண்டி வந்தனன் என்று எண்ணாத நாளில்லை.இன்னமும் திருக்குறளை உலகப் பொதுமறை என்று உயர்த்தி ஒரு புறம் வைத்துவிட்டு உலகின் அதி உன்னத இலக்கியங்களையெல்லாம் தேடித் தேடிப் படிக்கிற பலரையும் அறிவேன்.தமிழின் ஆதார செல்வந்தங்களில் ஒன்று குறள்.குறளை விதவிநோத மன நிலைகளில் உள்ளாழ்ந்து வெளிப்படுகையிலெல்லாம் வேறெங்கும் வாய்க்காத தனித்த ஒளியை உணர்ந்திருக்கிறேன்.

நிற்க.என் நட்பு வட்டாரத்தில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று எட்டாம் வருடவாக்கில் நண்பர்கள் நாங்கள் சந்தித்துக் கொள்ளும் அவ்வப் போழ்துகளில் பிடித்தமான குறள்களைப் பகிர்ந்து கொள்வோம்.என் நண்பன் பரணீதரன் தனக்கு ஆகப்பிடித்தமான குறளாக மேற்சொன்ன குறளைச் சுட்டுவான்.எனக்கு வெள்ளத் தனைய மலர்நீட்டம் எனத் தொடங்கும் குறள் சாலப்ரியம்.

புதுக்கவிதைகளை விரும்புகிற எழுதுகிற பலரும் தங்களின் உள்ளே ஏதோவொரு சன்னதத்தின் விளைவாகவே தாங்கள் கவிதை எழுதுவதாகத் திரும்பத் திரும்ப நிறுவ முயல்வதைக் காண்கிறேன்.மொழி நமக்குள் ஒரு கலயத்திலிருந்து உட்புகுந்து வேறொரு கலயத்தில் தன்னை நிரப்பிக் கொள்கையில் தன் நிறகுண மாற்றங்களை நாமறியாமல் நிகழ்த்த வல்லது.சன்னதத்தின் ஆழத்தில் அதுகாறும் வாசித்துக் கடந்த மொழியின் பேராழி இருக்கும் தானே..?
மேற் காணும் குறளை இனிச் சொல்லப்படும் கவிதை நினைவுபடுத்தும்.நல்லது.தமிழின் வண்ணமின்னும் கவிதைகளில் ஒன்றாக இந்தக் கவிதையை எப்போதும் போற்றுவேன்.யூமா வாசுகி எழுதிய என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர் எனும் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் இக்கவிதை எப்போதும் என்ப்ரியம்.

எனக்குப் பிடித்த கவிதை 7

பூமொழி

வீட்டின் பக்கத்தில் நிற்கிறது ஒரு மரம்
கூடத்துச் சன்னலையும்
சமையலறைச் சன்னலையும்
விரிந்த கிளைகளால்
பார்த்துக் கொண்டிருக்கிறது
கைகளசைத்துக் கால்களுதைத்துக்
கூடத்தில் கிடக்கும் சிசு
மிழற்றுகிறது ஒரு சொல்லை.
சமையலறையில்
பணி முனைந்திருக்கிற அம்மா
அச்சொல்லையே நீளவாக்கியங்களாக்கி
பதில் அனுப்புகிறாள்
விரல்நீட்டி சிசு பேசுகிறது மறுபடியும்
அத்தொனியிலேயே அம்மா குழறுகிறாள்
கடவுளுக்கும் புரியாத அவ்வுரையாடலைக் கிரகிக்க
கூடத்துச் சன்னலுக்கும்
சமையலறை சன்னலுக்குமாய்க்
கிளைகளின் வழியே ஓடிஓடிக்
கவனிக்கிறது அணில்
பெருகும் சொற்களும்
அபூர்வ எதிர்வினைகளும்
அதீதக் குழப்பத்திலாழ்த்த
அணில் ஓடிக்களைக்கிறது சன்னல்களுக்கிடையே
அர்த்தங்களை மரம் பூக்களாக மொழிபெயர்த்து
அதன் மீது உதிர்த்துக்கொண்டிருப்பது தெரியாமல்


யல் வாழ்வின் சர்வ சாதாரணமாக நடந்தேறச் சாத்தியப்பாடுள்ள ஒரு நிகழ்வின் உள்ளே தன் தனித்த பார்வையால் அபூர்வமான கவிதையை ஒரு கவிஞனால் உருவாக்கி விட முடியும்.அப்படியான கவிதைகள் சப்தங்களின் ஒழுங்கின்மைக்குள் இருக்கக் கூடிய இசையைப் பெயர்த்துத் தரச் சித்தப்படுகிற இசைக்கலைஞனின் கண்டடைதல்கள் போல் தனிக்கின்றன.மேற்காணும் கவிதை அப்படியான ஒன்றுதான்.குழந்தையின் சிசுகால மொழி இக்கவிதையின் மையமாகிறது.வாழ்வியலின் சகல நிலங்களிலும் காணக்கிடைக்கிற அடுத்தடுத்த காட்சிகளைத் தேர்ந்த படப்பிடிப்பாளன் போல் மட்டுமல்லாது சிறந்த படத்தொகுப்பாளனைப் போலவும் பதிவு செய்து தருகிறார் யூமா வாஸூகி.மிக இயல்பான காட்சிப்படிமங்களைத் தன் மாய வார்த்தைகளால் மாபெரும் கவியுன்னதமாக்கித் தருகிறார் யூமா வாஸூகி.மிட்டாய் விற்பவனைப் பின் தொடர்கிற பிள்ளைகளாய் அவரிடம் வசப்பட்டுக் கிடக்கின்றன சொற்கள்.

சிசு முதலில் மிழற்றுகிற ஒரு சொல்லையே நீளவாக்கியங்களாக்கி பதில் அனுப்ப இயலுகிறது அம்மாவுக்கு.அடுத்த வரியின் நுட்பம் அதன் பூடகம்.வாஸூகி விரிக்கிறார் "விரல் நீட்டி சிசு பேசுகிறது மறுபடியும்".இதற்கடுத்து "அத்தொனி யிலேயே அம்மா உளறுகிறாள்"இந்த இரண்டு வரிகளுக்குள் குழந்தையின் முத்தப்போழ்தினிமையை அற்புதமாய் உணர்ந்து கிறங்குகிறது வாசகமனம்."கடவுளுக்கும் புரியாத அவ்வுரையாடலைக் கிரகிக்க" என்னும் வரியில் கவிதை உச்சமடைகிறது மீண்டும் மீண்டும் இரு இடங்களுக்கு வந்து வந்து போகும் அணில் இந்த உரையாடலைக் கிரகிக்கத் தான் அப்படி அல்லாடுகிறது என்று சிந்திப்பது பெருங்கவிதை.அர்த்தங்களை மரம் பூக்களாக மொழிபெயர்த்து உதிர்க்கும் நேரம் அந்த அணிலாக இருக்கத் தான் ஆசைப்படுகிறான் ஒவ்வொரு வாசகனும்.

தொடரலாம்

அன்போடு
ஆத்மார்த்தி


25.06.2015