புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter


இதை மட்டுமா இழந்தோம்..?’2 பேக்கரி வண்டிகள்:

இன்றைக்கு உலகமயமாக்கலின் அனேக ஆசீர்வாதங்களில் நம்மனைவருக்கும் நின்றுகொண்டிருக்கும் நிலம் அமெரிக்க சன்னிதானமாகவே மாறித்தோற்றமளிக்கின்றன.  அதனை நமக்கேற்படுத்திக்கொடுத்தவர்கள் உலகமயமுதலாளிக் கம்பெனிகள். எதை எடுத்தாலும் ஏன் எதனை நினைத்தாலும் நமக்கு உடனே ஞாபகத்துக்கு வருகிற விஷயம் தொலைக்காட்சி விளம்பரங்கள் நம் மூளையச்சலவை செய்து நம் மனங்களில் உள்ளீடு செய்திருக்கிற உலகளாவிய பிராண்ட் களில் ஒன்றாக தான் இருக்க முடியும். தகரத்துக்கும் தங்கத்துக்கும் ஏகத்துக்குமாய் நம்மை ஒப்படைத்துவிட்டு நாமெல்லாரும் ஜாலியாக வாழ்வதற்காகச் சபிக்கப்பட்டிருக்கிறொம். மலங்கழித்தால் கூட அமெரிக்கன் போல் மலம்கழிப்பது தான் உசிதம் என்று நினைக்கிற அளவுக்கு நம்மைத் தயார் செய்வது அவ்வளவு எளிதானது.. அத்தனை இரக்கமும் அத்தனை அன்பும் மிக்கவர்கள் நாமெல்லாரும் என்றால் அதில் அமெரிக்கனை குறை சொல்வதென்ன நியாயம்.

நம் காதுகள் பெரியது.அமெரிக்கத் தோடுகள் புதியது.வாழ்க்கை இனியது.தட்ஸ் ஆல்…

எண்பதுகளின் தமிழகச்சாலைகளில் சில வண்டிகள் வளையவரும் எண்ணமே மனசுக்குள் ஏகாந்தத்தைப் பெயர்த்து சிலிர்க்கச்செய்வதாக இருக்கிறது. பன்வண்டிகள் என்று செல்லமாய் நம் நினைவுகளில் தங்கிவிட்ட பேக்கரி வண்டிகள். அது கிளம்புகிற நேரத்தில் இருந்து என்னென்ன கிழமைகள் எந்தெந்த ஏரியாக்களுக்கு வரும்..?என்னென்ன கிழமைகள் மட்டுமல்ல..எந்த நேரம் எந்த ஏரியாவில் வளையும் என்பது கூட இரண்டு தரப்பாருக்கும் முன் திட்டமாகவே ஒப்புக்கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்ட ஒழுங்கு.அந்த இரண்டு தரப்பார் யார் என்றால் ஏரியாவின் வாடிக்கையாளர்களும் பன்வண்டிக்காரர் அல்லது பேக்கரிக்காரர்.

ஒரு பெருஞ்சதுரத்தை ட்ரை சைக்கிளில் பூட்டி ப்ரத்யேகமாய்த் தயார் செய்யப்பட்டிருக்கக் கூடிய பன்வண்டிகளின் உள்ளமைவு வியக்கத்தக்கதாய் இருக்கும்,மூன்றுபுறங்களிலும் கண்ணாடியினூடே உள்ளெயிருக்கிற பதார்த்தவகைகள் பாக்கியின்றி வெளித்தெரியும் வண்ணம் அடுக்கப்பட்டிருக்கும். மக்ரூன் பால்பன், கேக், பிரட்பன், ஜாம் தடவிய கேக் என விதவிதமான ஐட்டங்கள் அழகுற அடுக்கப்பட்டிருக்கும் பாங்கே பாங்கு.

பன்வண்டிக்காரர் வாடிக்கையான ஏரியாக்களில் செல்வாக்கானவர்.அவர் ஒருதினம் வராது போனால் மறுமுறை வருகையில் கொத்தித் தின்றுவிடுவார்கள் என்ன காரணம் என்று கேட்டு.மேலும் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளாக பன்வண்டிக்காரருக்கு விஷேஷங்களுக்கு அழைப்புவிடுத்துப் பத்திரிக்கை தருவதுவும் நடக்கும்.

ஒரு பன் வண்டிக்காரரின் ஏரியாவில் அவர் வராத தினங்களில் கூட அவரது போட்டியாளரோ புதியவரோ எதையும் விற்றுவிட முடியாது.சில மறக்கவியலாத நிகழ்வுகள் காலத்துக்கும் அழியாமல் மிஞ்சிவிடுகிறவை.எனக்குத் தெரிந்து நான் பால்யத்தைக் கடந்து வாலிபத்தில் நுழைகையில் வசித்தது மதுரை திருநகரை அடுத்த ஒரு பகுதி.அங்கே வாடிக்கையாக விற்பனை செய்கிற பன்வண்டிக்காரர் தான் ஒரு பிரித்துவைக்கப்பட்ட காதல் ஜோடிகளுக்கு இடையில் தூதாக செயல்பட்டு அந்தக் காதல் கைகூடக் காரணமாக இருந்தார்.பதற்றமிகுந்த அந்தக் காதல் பெண்ணின் அதே தவிப்பும் வெம்மையும் தூதாய்ச்செயல்பட்ட பன்வண்டிக்காரர் முகத்திலும் தெரியும்.பன் சுற்றித் தரும் காகிதம் காதலனின் சிறுகுறிப்பைத் தாங்கியதாக இருக்கும் என்ற தகவல் சிறு சந்தேகத்தைக் கூட அவ்விரு வீடுகளிலும் விதைக்கவில்லை.விளைவு காதல் கரையேறியது.இன்றைக்கு பன்மணக்க வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் அவ்விருவரும்.

பேக்கரி வண்டிகள் பெருமுதலாளிகளின் வருகைக்குப் பின் நீயா நானா போட்டிக்குள் கலந்து தன் தனித்தன்மையை கொஞ்சம் இழந்தன.மணிச்சப்தத்துடன் வளையவந்த பன்வண்டிகளும் நாமும் விற்றதும் பெற்றதும் வெறும் தின்பண்டங்களை அல்ல.அதன் பின்னணியில் இன்றைக்கு உலகமயமான பதார்த்தங்களை தேவையின்றி வாயில் திணித்துக்கொள்ளும் செயற்கைச் சாப வாழ்க்கையொன்றை வாழ்ந்துகொள்ளத் தலைப்பட்டிருக்கிறோம்.

இதை மட்டுமா இழந்தோம்…?தட்டுக்களில் வைத்து விற்பனை செய்யும் டெண்ட்டுக்கொட்டாய்களின் இடைவேளையை,இடைவேளைகளில் மட்டும் ஸ்பெஷலாக கிட்டக் கூடிய க்ரஷ் எனப்படுகிற க்ரேப் ஜூசை,மண்டையில் ஐஸ் வழிந்துறைகிற ஃப்ரூட் மிக்சரை,இந்திய நிலத்தின் தயாரிப்புக்களாய் நம் இல்லங்களை அலங்கரித்த எக்கச்சக்கமான பிராண்ட் குளிர்பானங்கள் உள்ளிட்டவைகளை இன்னமும் நினைத்தாலே இனிக்கக் கூடிய நினைவுகளாக மாற்றிக்கொண்டு வாழ்கிறோம்இன்னமும் பேசுவோம்

ஆத்மார்த்தி