புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

தீராக்கடல் 8

கவிதை என்பது விடுபடுதல்.எதிலிருந்தும் தப்பித்துயிர்க்க மனித மனம் அல்லாடுகிற போதெல்லாம் கவிதை தன்னளவில் வினவுதலை சாத்தியப்படுத்துகிறது.ஒரு வினாவைத் தன் அகத்தினுள் சரியிடம் பார்த்துச் செருகுகின்ற அம்பெறிதலாகக் கவிதை தொடங்குகிறது.புறத்தே கேள்வி எதையெல்லாம் சார்கிறதோ எதாலெல்லாம் வினவுதலுக்குப் பின்னதான பதிலறிதல் சிதைவுறுவதற்குச் சாத்தியமுள்ளதோ அவை அத்தனையையும் சரிபார்க்கிறது.அதனினும் நீண்டு வினவுதலின் அயர்வடையும் இருண்மைக்குள் கவிதை தன்னை இயக்குவதற்கான முயல்வுகளைப் பரிசோதிக்கிறது.பின்னர் ஒழுங்குற அமைந்த திறப்பாகவோ ஒழுங்கறுதலின் உடைப்பாகவோ வினவுதலின் பதில் விளைவதற்கான இடத்தை நெருங்குகிறது.

மாறாக வினவுதலின் மௌனம் தொடர்ந்து நீண்டு கொண்டே போவதன் முடிவிலிச் சாத்தியமாகவும் கவிதை குவியக் கூடும்.இவை தவிர ஒரு அயர்ச்சி அல்லது தோல்வி உள்ளிட்ட புற வாழ்வின் எதிர்மறைத் தன்மைகளின் மற்றுமோர் கூடிய வடிவமாக கவிதையின் ஊடாக வினவப்படுவதன் தோல்வி முடிவு அல்லது இயலாமை ஆகியனவும் நேரலாம்.மொத்தத்தில் கவிதை ஆன்ம விசாரணை.இயல்பாக நேர்வதற்குச் சாத்தியமான மௌனம்.முடிவற்ற இருள்.

சுகந்தி சுப்ரமணியம் தமிழின் மறக்க முடியாத கவிதாயினி.அவரது கவிதைகள் மிக அபூர்வமான மென் தொனியில் மொழியப்பட்டவை.,நாளும் அதிகரித்துக் கொண்டே செல்லத் தக்க வாதையினின்றும் விடுபடுவதற்காகக் கடைசிவரை கவிதை ஒன்றின் மீது சாட்டப் பெற்ற நம்பகம் சுகந்தியின் கவிதைகள்.இந்தக் கவிதை சுகந்தியின் கவிதாபூர்வத்தின் உச்சம்.என்னளவில் தமிழின் ஆகச்சிறந்த கவிதைகளில் ஒன்றாக இதனைச் சொல்வேன்.

எனக்குப் பிடித்த கவிதை 8


சுதந்திரம்

சுதந்திரம் என்பது காற்று
இசையைப் போல் உயிர் வளர்க்கும்
சுதந்திரம் என்பது ஒரு கலை
கவிதைகளை உருவாக்கும்
சுதந்திரம் என்பது கற்பனை
நம்மை நமக்கே பகையாக்குகிறது
சுதந்திரம் என்பது அபாயம்
அது நம்மை சோதிக்கிறது
அது நாகத்தைப் போன்றது
கூரான கத்தியைப் போன்றது
ஒரு விளையாட்டைப் போன்றது
எல்லோருக்கும் சுதந்திரம் தேவை
எவருக்கு எவரிடமிருந்து எப்படி..?
சுதந்திரம் நதியைப் போன்றது
சுதந்திரம் மரத்தைப் போன்றது
சுதந்திரம் சூரியனைப் போன்றது
சுதந்திரம் நிலவைப் போன்றது
சுதந்திரம் பெண்ணைப் போன்றது
சுதந்திரம் தாயைப் போன்றது
சுத்தமான மனசுக்குள்
சங்கல்பமாகும் சுதந்திரம்
நம்மை அது
நம்மிடமிருந்து
விடுவிக்கும்

மீண்டெழுதலின் ரகசியம் என்னும் தொகுப்பில் இடம்பெற்ற இக்கவிதையை எழுதிய அமரர் சுகந்தியின் சொல்வன்மை மனதைக் கீறி அறுத்துப் பாளங்களாக்குகிறது.இதன் இடைவரியான சுதந்திரம் என்பது அபாயம் அது நம்மை சோதிக்கிறது என்பது மாத்திரம் கவிதைக்குள் கவிதையாக பெரும் குரலெடுத்துப் பல தூரத்திற்குக் கடத்தப்பட்ட அறிதலின் பிரமாணமாக இன்னும் நம்பிக் கொண்டிருப்போரின் முன் திரும்பி வந்த பயணியின் வழிக்குறிப்பாக அனுபவத்தின் சுடர் ஒன்றை ஒளிரச்செய்கிறது

தொடரலாம்
அன்போடு


ஆத்மார்த்தி

27.06.2015

Last Updated (Saturday, 27 June 2015 15:41)