புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

ஒரு ஸ்மைலி ஒரு காதலி

சனி ஞாயிறு என்றாலே மதியம் வரை தூங்குவான் நவீன்.அவன் மட்டுமில்லை.சென்னைவாழ் பிரம்மச்சாரிகள் பலருக்கும் அது தான் வீக் எண்ட் ஆகமம்.ஆனால் அன்றைக்கு விடியற்காலையில் எழுந்து கத்திப்பாரா சிக்னல் பக்கத்திலிருக்கும் பெட்ரோல் பங்கில் காதுகளைக் குளிர் தாக்கக் காத்திருந்தான். மதுரை ராதா வந்து நிற்க அதிலிருந்து ஏழாவது மனிதனாக இறங்கினான் செல்வம்.

நாட்டாமை எப்டிடா இருக்கே..?எனக் கட்டிப் பிடித்தான் நவீன்.செல்வத்தின் பட்டப்பெயர் நாட்டமை.தாத்தா ஊர் நாட்டமையாக இருந்தவர் என்பதால் அதுவே அவனுக்கு அடையாளமாயிற்று.பத்தாவது முடித்தவுடன் குலத்தொழிலான வட்டி பிஸினஸூக்குள் புகுந்துகொண்டவன்.கழுத்தில் நாய்ச்சங்கிலி போல் தங்கம் மின்னியது.

"என்ன நவீனு...ரொம்ப பீரடிக்கிறியா..?தொப்பை விழுந்திருச்சி..."என்று சிரித்தவனின் ட்ராவல் பேகை வாங்கி பெட்ரோல் டேங்க் மீது வைத்துக்கொண்டு அவன் ஏறியதும் தன் அறைக்கு வண்டியை விரட்டினான்.
ஊர்க்கதைகள் எல்லாம் பேசிவிட்டு "என்னடா வராதவன் வந்திருக்கே சென்னைக்கு..? இதைக் கேட்டதும் செல்வத்தின் முகம் வாட்டமானது.

ஒரு ஈ எறும்புக்காச்சும் துரோகம் நினைச்சிருப்பனா..?" எதையோ கேட்டால் என்னவோ சொல்றானே என குழம்பினான் நவீன். "ஈ சின்னது.எறும்பு அதை விடச்சின்னது.இதுக்கெல்லாம் ஒரு மனுஷனால எப்பிடி துரோகம் நினைக்க முடியும்..?"எனக் கேட்க நினைத்த கேள்வியைத் தனக்குள் புதைத்துக் கொண்டான்.
"நம்ம ஊரே இன்னிக்கு நல்லா இருக்குதுன்னா அதுக்கு எங்க குடும்பம் தானேடா காரணம்..?"என்றான் செல்வம்.

"அடப்பாவி...ஊர்ல பாதி பேர் இடத்தை எழுதி வாங்கிட்டப்புறம் ஊரே உங்ககிட்டே தானேடா இருக்கு..?"இதையும் கேட்கவில்லை.முரடன்.அடிப்பான்.

மௌனமாக இருந்த நவீனை உற்றுப்பார்த்த செல்வம் "அப்படிப் பட்ட எனக்கு இன்னிக்கு ப்ரச்சின..எல்லாம் காதல் படுத்துற பாடு"

பழைய படங்களிலெல்லாம் மேசை லைட்டை அணைத்து ஆன் செய்து மறுபடி அணைத்து ஆன் செய்து ஒரு காட்சி வந்தால் அதன் பக்கத்தில் ஒரு நாயகனோ நாயகியோ காதல் நோயில் தவிப்பது தெரியும்.பிற்காலத்தில் மின்வெட்டு கரண்ட் பில் பிரச்சினைகளால் அப்படி சீன் வருவதில்லை.அதற்கு மாற்றாக நவகால யுவர்கள் கையில் எடுப்பது ரிமோட்டை.

டீவீ ரிமோட்டைக் கையில் வைத்துக்கொண்டு மறுபடி மறுபடி சானல்களை மாற்றிக்கொண்டே இருந்தான் செல்வம்.

"ரிமோட்டை வைடா செல்வம்" சொல்லிவிட்டு ஹஸ்க் எனத் தும்மினான்.

"உனக்கென்ன நீ சாதாரணமா சொல்லிட்டே"என்ற செல்வத்திடம்

"ரிமோட்டை வைடான்னு சாதாரணமா சொல்லாம விழுந்து புரண்டு சொல்வாங்களா..?வச்சித் தொலைடா"என்றான்.கோபமான செல்வம் ரிமோட்டை கட்டிலில் எறிந்தான்.அந்த நேரம் செட் ஆன ம்யூசிக் சானலில் ""இந்தப் பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சுடா..எனப் பாட ஆரம்பித்தார் சிவகார்த்திகேயர்"". நவீனையும் டீவீயையும் மாறி மாறிப் பார்த்தவன் "இப்ப என்ன சொல்றே..?"என்றான்.

செல்வம் ஒரு செண்டிமெண்ட் பயித்தியம்.டீவீயில் சிவகார்த்திகேயர் பாடுவது தனக்காகத் தான் என்பான்.இதால தான் அது நடந்துச்சி என்று குடும்பமே டார்ச்சர் செய்யும்.எந்த அளவுக்கென்றால்..
பத்தாவது பப்ளிக் பரீட்சை ஆரம்பிக்கிற அன்றைக்கு செல்வம் கிளம்பும் போது தற்செயலாக எதிர்வீட்டு சிந்துஜா மாமி எதிர்ப்பட்டாள்."என்ன செல்வம்..?பரீட்சைக்கா.?  ஆல் தி பேஸ்ட்"என்றாள். பெஸ்ட் ஐ பேஸ்ட் என்று சொன்னது அவள் ஞானம். அன்றைக்கு- அப்படி-அந்த மாமி எதிரே வந்து வாழ்த்திய ஒரே காரணத்தால் தான் கொஸ்டீன் ஈசியாக வந்தது என திடதிரவவாயுவாக நம்பிய செல்வம் நேரே தன் தகப்பனிடம் சென்றான்.
"யப்பா..நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ...எக்சாம் முடியுற வரைக்கும் தினமும் நா கெளம்புறப்ப எதுத்தாப்ல சிந்துஜா மாமி வந்தே ஆகணும்.எனக்கு ஆல் தி பேஸ்ட் சொல்லியே ஆகணும்"என்று கட்டளையிட்டான்.

அவனது தந்தையான உக்கிரபாண்டி சும்மா இருந்தாலே கோபமாய்த் தெரிவார். கோபப்பட்டால் ஊரே நடுங்கும்.செல்வந்தர் சொல் எட்டுத் திக்கும் எடுபடுமல்லவா..? சிந்துஜா மாமி கிட்டத்தட்ட தனியாரால் கைதுசெய்யப்பட்டாள்.அடுத்த நாள் பெங்களூரில் நடக்கும் சொந்த அண்ணன் மகன் கல்யாணத்துக்குப் போகவேண்டும் என்று மன்றாடியவளின் ட்ரெய்ன் டிக்கட் வலுக்கட்டாயமாக கேன்ஸல் செய்யப் பட்டது.சிங்கம் படத்தில் வேண்டா வெறுப்பாக கண்டிஷன் பெயிலில் கையெழுத்திட வரும் பிரகாஷ்ராஜ் போல முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டே தினமும் செல்வம் கிளம்புகையில் எதிரே வந்தாள்.ஆல் தி பேஸ்ட் சொன்னாள்.பரீட்சை முடித்ததும் இரவோடிரவாக காலி செய்து சொல்லொணாத் தூரம் நீங்கினாள்.
சிந்துஜா மாமி எதிரே வந்த ஒரே காரணத்தால் பத்தாப்பு பாஸ் ஆன செல்வம்.அதன் பின் அவள் எதிரே வராத அதே காரணத்தின் பின் காரணத்துக்காகத் தன் படிப்பை முடித்துக் கொண்டான்.இதையெலொலாம் நினைத்தவாறே கிலியான நவீன் மேசை மேலிருந்த பழத்தட்டை எடுத்து கட்டிலில் வைத்தான்.ஃப்ரிட்ஜில் இருந்து ஐஸ்வாட்டரை எடுத்து குடித்தவன் "உன் லவ்வரோட அப்பா அல்லது அண்ணன் யாரும் பிரச்சினை பண்றாங்களா..?"என்றான்

இதைக் கேட்டதும் “உக்கிரபாண்டி மகண்டா நானு..என் மாமன் மச்சினன் பிரச்சினைக்கா உங்கிட்டே வருவேன்..என் லவ்வுல ஒரு சின்ன டெக்னிகல் ப்ரச்சினைடா.."

"வந்ததுலேருந்து எதையுமே சொல்லாம முழுங்குறியேடா...சொல்லித் தொலைடா...என்று எரிச்சலானான் நவீன்.
“என்னடா என்னைய விட அதிகமாப் படிச்சிட்டம்னு திமிரா..?ஆத்தோட போயிருக்க வேண்டிய உன் உயிரையே காப்பாத்துனேனே...அதல்லாம் மறந்துட்டியா..?"

அது சரி...நீச்சல் தெரியாத நவீனை கோபத்தில் ஆற்றில் பிடித்துத் தள்ளி விட்டவன் இதே செல்வம்.கெஞ்சிக் கதறியதில் மறுபடி தூக்கி கரையில் சேர்த்ததை மட்டும் வைத்துக்கொண்டு “உசுரைக் காப்பாத்துனேனே” என்கிறான் கிராதகன்.அவனொரு உபத்திரவன் என்பது புரிந்த நவீன் லேசாய்க் குழைந்தான்.

"கோபப்படாதே செல்வம்...ப்ராப்ளத்தை சொல்லு.சால்வ் பண்றது என் பொறுப்பு.எவ்ளோ ரெஸ்பெக்டா கேட்குறேன்.எத்தனை நேரம் வெயிட் பண்றது.

ஈகோவா எடுத்துக்காதே ப்ளீஸ்...உனக்கு அகெயின்ஸ்டா நான் எதும் திங்க் பண்ணக் கூட மாட்டேன்.என்னை பிலீவ் பண்றியா இல்லியா..?"என்றான் சாந்தமான குரலில்

செல்வத்தின் வீக்னஸ் இங்கிலீஷ்..சுட்டுப்போட்டாலும் வராது முழுவதுமாகப் பேசினால் புரியாது. பிடிக்காது.மிக்சருக்கு நடுவே ஒளிந்து கிடக்கும் வறுத்தகடலை போலப் பேச வேண்டும்.அப்படிப் பேசினால்  சுற்றிச் சுற்றி இருக்கும் மற்ற தமிழ் வார்த்தைகளின் துணை கொண்டு குத்துமதிப்பாகப் புரிந்து கொள்வான்.

நவீனின் ஆங்கிலீஷால் தன் ஆழ்மனதில் திருப்தியான செல்வம் சொல்றேன். என் பிராப்ளத்தை சொல்றேன்.உங்கிட்டே கம்ப்யூட்டர் இருக்கில்ல...?"

"டேப்ளட்டே இருக்குடா"என்ற நவீனிடம் கடுகடு குரலில் "எனக்கென்ன காய்ச்சலா தலைவலியா..?கம்ப்யூட்டர் இருக்கா இல்லியா..?பேச்ச மாத்தாத"என்றான் செல்வம்

சனியனுக்குப் பனியன் மாட்டுவதை விட சாலச்சிறந்தது மௌனம் என்ற முடிவுக்கு வந்தவனாய் "இருக்கு"என்றான்.தன் கையில் வைத்திருந்த பிட் பேப்பரை மறுபடி பார்த்தவன்  "சரி...அதுல நெட்டு கனெக்சன் இருக்குல்ல"

இதற்கு தமிழ்சினிமாவில் காலங்காலமாய் வசனவாய்ப்புக்கள் வழங்கப் படாத உபவில்லன் போல் நவீன் தன் தலையை மட்டும் ஆட்டினான்.
"அப்பிடின்னா ஃபேஸ்புக் இருக்கும்ல அதுல..?"இதைக் கேட்டதும் பாதிக்கிணறு தாண்டிய மன அமைதி தெரிந்தது செல்வமுகத்தில்.

"இருக்கு மாப்ளே..ஃபேஸ்புக் ட்விட்டர் யாஹூமெசெஞ்செர்"என ஆரம்பித்ததை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவன் அளவுசட்டையைப் பார்த்து அப்படியே தைத்துத் தரும் நல் டெய்லர் போலாகி "இருக்கு.ஃபேஸ்புக் இருக்கு"இறங்கிய குரலில் சொன்னான்.

.   "அப்பிடி சொல்றா என் அறிவாளி...அதுக்குத் தானே மூளைக்காரன் வேணும்னு இம்மாந்தொலைவு உன்னையத் தேடி வந்திருக்கேன்.எனக்குத் தெரியும்டா..நீ வெச்சிருப்பேன்னு..இந்தத் தெறமை இல்லைன்னா இம்புட்டுப் பெரிய மெட்ராஸ்ல கொடியேத்த முடியுமா..?உன்னைய விடாமக் கைல வெச்சிருக்கேன்னா அதுக்குக் காரணம் இதாண்டா...""என்று .ரஜினியை கீதாவுக்கு அறிமுகம் செய்துவைக்கும் தளபதி படத்து மம்முட்டி போல பற்பிரகாசனாய் சிரித்தான்.

இப்படி சிரிக்கும் அளவுக்குத் தான் அப்படி என்ன சொல்லிவிட்டோம் என நவீனுக்குப் புரியவில்லை.கம்ப்யூட்டர் நெட் கனெக்சன் இதெல்லாம் இருந்தால் ஃபேஸ்புக்கும் இருக்கும் தானே..?இதில் என்ன பெருமை..?இதுக்கெதுக்கு இவ்ளோ களிப்பு....?நானா ஃபேஸ்புக்கைக் கண்டுபிடித்தேன்..?நவீனுக்குக் குழப்பமானது.எதுவும் அக்கவுண்டை ஹேக் செய்ய சொல்வானோ..?"

"மாப்ளே...எதும் ஹேக் பண்ணனுமா..?பெங்களூர்ல என் ஃப்ரெண்டு இருக்கான் மணிகண்டன்னு..அவன் தான் இந்தமாதிரி விசயத்துல எல்லாம் எக்ஸ்பர்ட்...அவண்ட்ட கேக்கலாம்டா.."என்றான்.

காதிலேயே வாங்காத செல்வா "உங்கிட்டே ஃபேஸ்புக் இருக்கில்ல..?அவ்ளோ தான் பிரச்சினை சால்விடு...சால்விடு(solved)என்

றான்...என்னவோ தன்னிடம் நவீன் வந்து மன்றாடியதை நிறைவேற்றினாற் போல் கர்வமாக சொன்னான்."கேக்கா பிரமாதம்..?வா ஃபுல் கோளியே சாப்டுட்டு வர்லாம்."என்று ரன்னிங்க் போகிறவர்கள் அணியும் ஷூக்களை அணிய ஆரம்பித்தான்.

"ஊருக்குப் போறேன்..இன்னிக்காச்சும் நான் எதுக்கு சரிவர மாட்டேன்னு சொல்லுங்க” என்று சிங்கமுத்துவிடம் வடிவேலு கெஞ்சிக் கேட்க உடனே ரௌத்ரமாகி "அதான் சொன்னேன்லடா...நீ அதுக்கு சரிவரமாட்டேன்னு.."என்று மாபெரும் அதட்டு அதட்டிக்கொண்டிருந்தார்.தன் சிச்சுவேஷனும் அதே போலாகி விட்டதை நொந்தபடி டீவீயை அணைத்துக் கிளம்பினான் நவீன்.

குடித்துவிட்டுக் கோளியும் தின்றுவிட்டு அறைக்கு மறுபடி கூட்டி வருவதற்குள் போதும் போதும் என்றானது நவீனுக்கு.திரும்பத் திரும்ப “ஃபேஸ்புக்கு ஃபேஸ்புக்கு” என்றானே ஒழிய அதில் என்ன செய்யவேண்டும் என சொல்லவே இல்லை.இரவெல்லாம் கெட்ட பல கனவுகளில் வேறு வந்தான் செல்வா.வெகு நேரம் கழித்து எழுந்தவன் “என்ன மாப்ளே...நேத்து ஓவராயிடுச்சா?” என்றபடியே பல் துலக்கப் போனான்.இது ஒரு கடினமான கொஸ்டீன்.ஆமாம் என்று பதில் சொன்னால் இவனுக்குப் பிடிக்காது.இல்லை என்று சொன்னால் ஏன் பொய் சொல்றே என்பான்.மையமாய்த் தலையை மேலும் கீழுமாய் ஒருதரம் இடதுவலதாய் ஒருதரம் ஆட்டியவாறே சிரித்தான் நவீன்.ஒரு தேர்ந்த அடிமையின் ராஜதந்திரம் அது.

பல் துலக்கியவன் நவீன் தந்த காஃபியை குடித்துக் கொண்டே "ம்ம்"என்றான்.

தனக்கு வழங்கப்பட்ட கமாண்ட் என்ன எனத் தெரியாத முதல் தலைமுறை கம்ப்யூட்டர் போல் குழம்பின நவீன் தானும் "ம்ம்..?"என முனக பர்ரென சிரித்தவாறே "ஆன் பண்ணுடா ஃபேஸ்புக்கை" என்றான் செல்வம்

கட்டிலுக்கே தனது டேப்ளட் பீஸீயை எடுத்து வைத்து வைஃபையை கனெக்ட் செய்த நவீன் தன் முகப்புத்தகப் பக்கத்துக்குப் போனான்.
கடுப்பான செல்வா"இதென்ன உன் ஃபோட்டோ வருது..?

"என் ஃபேஸ்புக்குல என் ஃபோட்டோ தான் மாப்ளே வரும்.பின்ன உன் ஃபோட்டோவா வரும்..?என்றான்.

"நேத்து ஒரு பேப்பர் வெச்சிருந்தனே..என்று தேடினான்.நல்லவேளை அது காஃபி டம்ப்ளருக்குக் கீழே இருந்தது.

அதை எடுத்து நீட்டியவன் "இது தான் சுசியோட ஃபேஸ்புக்.இதுக்குள்ளே போ என்றான்.நிம்மதியாகி சுசிசென்னை2014 என்ற ஐடிக்குள் போனான்.ஒரு பூங்கொத்து படத்தை முகத்திற்குப் பதிலாக முகப்பில் வைத்திருந்தாள்.பாராட்டும் தொனியில் "நாலாயிரத்து ஐனூறு பேர் இருக்காங்கப்பா...உன் ஆளு ஃப்ரெண்ட் லிஸ்ட்ல "என்றான்.

போர்முனையில் பெரிய வெட்டுக்காயம் அடைந்தவனைப் போல முகத்தை வைத்துக்கொண்ட செல்வா “எதுக்கு அவ்ளோ பேரு...?கட்சியா நடத்தப் போறா..? இருக்கட்டும் கல்யாணம் ஆனப்புறம் நாலு பேர் தான் இருப்பாங்க “ என்றான்.யார் அந்த நாலு பேர் எனக் கேட்கவில்லை.

"நான் வேணா ஒரு ரிக்வெஸ்ட் குடுக்கட்டுமா..?என்றான்.
ரிக்வெஸ்ட்னா.?என்றான் செல்வா.

நட்புக்கோரிக்கை.நான் குடுத்தா உன் ஆளு அதை அக்செப்ட் பண்ணனும்.பண்ணா நானும் அவளும் ஃப்ரெண்ட் ஆய்டுவோம்.இதற்கு சிறிது நேரம் யோசித்தவன்

"மாப்ளே...அது உன் தங்கச்சி..நீ ஏன் உன் தங்கச்சி கூட ஃப்ரெண்ட் ஆகணும்..?நீ வேணா அண்ணனாகுறதுக்கு ரிக்வெஸ்ட் குடு."என்றான்.

நாட்டாமையின் செம்பைத் திருடிய சகா போல் ஆகி

" அண்ணனாகனும்னா கூட முதல்ல ஃப்ரெண்ட் ஆனப்புறம் தான் ஆகமுடியும்”.

:அதென்ன கட்டாயம்..?என்று நம்பாமல் பார்த்தவனிடம்

"மாப்ளே....வந்து பாரு..அமெரிக்காவுல என் தங்கச்சி விஜி இருக்காள்ல..அவளும் நானுமே ஃபேஸ்புக்குல ஃப்ரெண்டாத் தான் இருக்கம் பாரு...என தன் ஃப்ரெண்ட் லிஸ்டைக் காட்டினான்.அதைப் பார்த்ததும் லேசாய் மனம் தெளிந்த நாட்டாமை “சரி ரிக்வெஸ்ட் குடு. ஆனா சீக்கிரமே அண்ணனாகிடனும்..தெரியுதா..?நா சந்தேகப் படறவன் இல்லை. இருந்தாலும் ஊர்கண்ணுனு ஒண்ணு இருக்கில்லையா..? என்றான்.

நவீன் ரிக்வெஸ்ட் அனுப்பியதும் ஓகே செய்தாள் சுசித்ரா.சட்டென்று ச்சாட் விண்டோ வேறு ஓபன் ஆனது

"என்னது டப்பா வருது என்றான் சந்தேகன்.

“இல்லைப்பா..இன்னிக்கு ஞாயித்துக் கிழமை இல்லியா.?”..என ஆரம்பித்தவனிடம் “ஏன் ஞாயித்துக் கெழமைன்னா டப்பா வருமா?” என்றான்.அயர்ந்து போன நவீனுக்குத் தான் செல்ல வேண்டிய கடினபாதையை நினைத்துக் கவலையானது.தன் மீதே எக்கச்சக்கமாய் சுய இரக்கமும் பச்சாதாபமும் எழுந்து துக்கம் தொண்டையை அடைத்தது.என்ன செய்யப் போகிறேன் என் பிதாவே என்று சுவரில் மாட்டியிருந்த ஜீசஸ் படத்தை முதல் முறையாக ஏறிட்டுத் தேடினான்.

".என்னவாம்..?"எனக் கேட்ட செல்வத்தின் குரலில் சினேகிதம் அறவே இல்லை.இந்த என்னவாம் தன்னை அல்ல.சுசியை என்பது தெரிந்தது.

"ஹாய் சொல்லுதுப்பா”

“உன்னை யாருன்னே தெரியாது.நீ விண்ணப்பம் அனுப்புறே.அதை உடனே ஏத்துக்குறா.அதைக்கூட விடலாம்னு வைய்யி...இப்ப எதுக்கு முன்னப் பின்னத் தெரியாத உன்னைத் தேடி வந்து ஹாய் சொல்றா.?எல்லார்கிட்டேயும் இப்பிடித் தான் சொல்வாளா..?"என்றான் சந்தேகப் பிராணன்

தலையில் அடித்துக் கொள்ள நினைத்தவன் "யாருமே அறிமுகமான புதுசில ஹாய் சொல்றது வழக்கம் தாண்டா"என்றான் பலவீனமாய்

"சும்மா நீ பேசாத நவீனு.. நீயும் நானும் பதினஞ்சு வருச பளக்கம்.ஊர்ல உன் தங்கச்சி விஜியைப் பார்த்து என்னிக்காச்சும் ஹாய் சொல்லிருக்கனா..?இல்ல என் அக்கா தங்கச்சிக்கு நீ ஹாய் சொல்லிருக்கியா..?தெரிஞ்சாலே சொல்ல மாட்டம்.இங்க தெரியாமலே சொல்லுதுங்க...நம்ம கலாச்சாரம் பண்பாடெல்லாம் என்ன ஆகுறது..?"

இன்பாக்ஸில் வரிசையாக டைப்பி இருந்தாள் சுசி.
"உங்க ப்ரொஃபைல் படம் நல்லா இருக்கு.எங்கே வேலை பாக்குறீங்க..?எந்த ஊரு..?ஏன் என் கூட நட்பாகணும்னு தோணிச்சி..?"என்றெல்லாம் ஆங்கிலத்தில் அடுத்தடுத்து இருந்தது.

நாலடியாரைப் பார்த்துவிட்ட நல்லசெல்வம் அழாச்சி குரலில் "என்னவாம்..?வரிசையா..?"என்றான்

அவன் பொசஸிவ்நெஸ்சுக்குத் தீ வைக்கும் ஆவலைப் புதைத்துக் கொண்டு "இல்லப்பா என்னைய யாரு எந்த ஊரு என்னான்னெல்லாம் விசாரிக்குது"என்றதும் முகம் லேசாய்த் தெளிந்தான்.கழுத எல்லாத்தையும் மாத்தி மாத்தித் தான் செய்யும் போல...முதல்ல விசாரிக்கணம்.அப்பறம் ஹாய் சொல்லணும்..இது தலகீழா பண்ணுது.நல்லவேளை இப்பமாச்சும் யாரு என்னான்னு விசாரிக்குது பார்த்தியா..?என்னதான் வாழ்றது சென்னைன்னாலும் வேர்மண்ணு ஊர்ப்பக்கம் தானே..?பிடிமானம் இல்லாமப் போவுமா.?"என்றான் நாட்டாமை.

லென்ஸ் வைத்துக்கொண்டு ரேகை பார்ப்பவனைப் போல இன்னமும் இன்பாக்ஸையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான்.
"ஏன் செல்வம்...நான் உன் ஃப்ரெண்டுன்னு சொல்லிடவா..?"

படாரென்று அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்தான்.படபடப்பான குரலில் யார்றா இவன்....கிறுக்கனா இருக்கான்....சொல்லாதரா...அணைடா அந்தப் பெட்டியை...அதுங்காதுல எதுனா விழுந்தா அதை நான் சந்தேகப் பட்டு உன்னைய உளவு பார்க்க சொல்றேன்னு நினைக்காதா..?அணைக்கிறியா இல்லியா..?"என்றவன் மெல்ல தன் அதீதத்தைத் தானே உணர்ந்தவனாய் "ஆமா,,,இது வெறும் எழுத்து தானே போயிட்டு வருது,..?காதுல ஏதும் விழாதுல்ல..?"எனக் கேட்டான்

அதல்லாம் கேக்காது என்ற நவீன் தன் வேலை வாழ்க்கை விபரங்களை எல்லாம் அனுப்பினான்.சிறிது நேரம் பதிலே இல்லை.நவீன் வேறெங்கேயோ பார்த்துக் கொண்டிருக்கையில் ப்ளங் என்னும் சப்தத்துடன் ஒரு ஸ்மைலி வந்தது.அதுவொரு விவகாரமான ஸ்மைலி.மஞ்சள் மொட்டைத் தலையில் உதடுகளிலிருந்து சிவப்பு சிவப்பாய் ஆர்டீன் முத்தங்கள் பறந்து வருவதைப் போல் அனுப்பி இருந்தாள்.

திரும்பிப் பார்த்தவன் செல்வம் விடாநோக்கனாய் இருப்பது கண்டு இன்பாக்ஸை தற்காலிகமாக க்ளோஸ் செய்ய முயல அவன் விரல் பட்டு படம் பெரிசானது.நெருக்கமாய் ஆர்ட்டீனைப் பார்க்கும் பொஸசெல்வம் என்ன செய்வானோ என்ற பயத்தில் நவீனுக்கு உச்சா வரும் போலக் குளிர்ந்தது.

"இதென்னடா படம்..?"என்றான் எடுக்கவோ கோர்க்கவோ ஸீனில் துரியோதனன் கேட்ட அதே வாய்ஸில் தான் கேட்டான்.நவீனுக்கு அலர்ஜியாகி மாப்ளே..மனசுவிட்டுப் பழகுறதா இருந்தா என் கூடப் பேசுன்னு அர்த்தம்டா...பேச்சுல மனசு இருக்கிறது நட்புல நியாயம் விஸ்வாசம்டா என்று டோட்டலாய்க் குழறினான்.

தன் செல்லை நோண்டிக்கொண்டே "சரி ஏன் பதறுறே.?வெறும் படம் தானே..?என்றவன் அண்ணன்னு சொல்லிட்டியா..?"என்றான்

"என்னடா இன்னிக்குத் தான் பேச ஆரம்பிச்சி உடனே அண்ணன்னு சொன்னா சந்தேகம் வராதா..?"எனக் கேட்டுவிட்டு தான் சொன்னதற்குப் புதுப் புது அர்த்தங்கள் கீதாபோல என்ன சொல்வானோ என்று உச்சபட்ச குழப்பத்தில் நின்றான்.

"சரி...நாளைக்கு சொல்லிடு...என்றவன் உதடுகளுக்கு மத்தியில் விரலை வைத்து "உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் என்றான் பெரும் பிரஷர்குக்கரைப் போல.

அவனே மெல்லிய குரலில் ரிங்கு போவுது.சுசி...என்றவாறே பால்கனிப் பக்கம் சென்றான்.

நண்பன் தன் புதிய காதலியுடன் பேசுவதை ஒட்டுக்கேட்பது தவறுதான் என்றாலும் உள்ளே ஒரு சைபர் சாத்தான் உந்தித் தள்ளியதால் மெல்ல பூனைப்பாதங்களால் நடந்து பால்கனிக் கதவோடு காதை வைத்துக் கேட்டான் நவீன்
"சுசீ மேடம்..நல்லா இருக்கீங்களா..?என்ன மறந்துட்டீங்களா..?ரயில்ல பார்த்தமே...செல்வம்...ஆங்க்...நாந்தான்..சென்னை வந்தா ஃபோன் செய்ய சொன்னீங்களே.."

எதிர்முனை ஏதோ பேசியது நவீனுக்கு கிர்ரென்றது...என்னமோ என் ஆளு என் ஆளுன்னான்..இங்க மேடம்ன்றான்.?

"அப்டீங்களா..?ரைட்டு அடுத்த தரம் வரப்ப சந்திக்கலாம்...அம்மா நல்லா இருக்காங்களா..?"இதற்கும் மேடத்தின் பதிலைப் பெற்றுக்கொண்டு

"மேடம்...உங்க ஃபேஸ்புக் ஐடி தந்தீங்களே...நாளைக்குத் தான் என் கம்யூட்டர் சர்வீசுலேருந்து வருது...நான் ஒரு ரிக்வெஸ்ட் அனுப்பட்டுங்களா..?":

"ரொம்ப நல்லதுங்க...ரொம்ப கேட்டேன்னு சொல்லுங்க மேடம்...சரிங்க மேடம்..."என்று வைப்பதற்குள் ஒரே ஜம்பாக கட்டிலில் ஜம்பிய நவீனின் உடலுக்குள் கடல் கொந்தளித்து சுனாமி வந்து அலையடித்து இடிகள் இடித்து மழைகள் பொழிது சுக்கு நூற்றைம்பதாய் உடைந்தான்.

உள்ளே வரும்போதே "இப்பவே கெளம்பி வா உடனே உன்னையப் பார்க்கணும்ன்றாடா சுசீ....நான் வேலை இருக்கு..நாளைக்குப் பார்க்கலாம்னுட்டேன்..."என்றவாறே..தன் செல்லில் ஒரு படத்தை எடுத்து "மாப்ளே..இதான் சுசி எனத் தந்தான்.நல்ல அழகி தான்.இரயிலில் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள்.அடேய் அல்ப ஆமை....இரயிலில் கூட வந்தவளின் ஃபேஸ்புக் ஐடியை நைச்சியமாய் வாங்கிக் கொண்டு வந்து என் உசிரை எடுக்கிறியா..?இதுல ம்யூச்சுவல் லவ்வுன்னு பொய் வேற...இருடா..உன்னைய என்ன பண்றேன் பாரு.."என்று மனப்பற்களைக் கடித்தான்.

"நா குளிச்சிட்டு வர்றேன் மாப்ளே...எனக்கொரு ஃபேஸ்புக்கை ஆரம்பிச்சி குடுரா என் மாப்பிள்ளைத் தோழா.."என்றான்.தாடை வரை கடிபட்டது நவீனுக்கு.

சமாளித்துக் கொண்டு "நாட்டாமை உன் கிட்டே ஆதார் கார்ட் இருக்கா..?".படு கேஷுவலான குரலில் கேட்டான்.

துணுக்குற்ற செல்வம் "இல்லியே ஏண்டா..?"என்றதும்

"அய்யய்யோ..ஆதார் கார்ட் இல்லைன்னா ஃபேஸ்புக் ஓபன் பண்ண முடியாதே...இருக்கும்னு நினைச்சேன்"

"இல்லியேடா...ஏண்டா..இந்த ரேசன் கார்டு வாக்காளர் அட்டை இதெல்லாம் முடியாதா...?"

"மாப்ளே...அதெல்லாம் இண்டியால செல்லும்.இது அமெரிக்கா சமாச்சாரம்.ஆதார் கார்ட் மட்டுந்தான் ஒப்புக்குவான்."

"என்னடா இது..?'

"உனக்கு நம்பிக்கை இல்லைன்னா யார்ட்ட வேணாலும் கேளு.."என்று அடிஷனல் வெயிட்டேஜ் தந்த நவீனிடம் சலிப்பான குரலில்

"என்னடா இது..நம்பிக்கை இல்லாமலா உன்னைய தேடி வந்தேன்.?நான் ஒண்ணு பண்றேன்..இப்பமே கெளம்பி ஒரு வாரத்துக்குள்ளே ஆதார் கார்டை எப்பிடியாச்சும் வாங்கிட்டு வந்துர்றேன்.சரியா..?குளிச்சிட்டு வந்ததும் என்னையக் கோயம்பேட்டுல எறக்கி விடு"

அதே போல் இறக்கி விடப் பட்டான்.

அடுத்த நொடி புரோக்கர் பழனிச்சாமி வீட்டு முன்னால் நின்றான் நவீன்

"இங்க பாருங்க ப்ரோக்கர்...கோடம்பாக்கத்துல நான் இப்ப குடியிருக்கிற ரூமை இன்னும் 2 நாளுக்குள்ளே காலி செய்யப்போறேன்..எனக்கு ஊரப்பாக்கம் உள்ளகரம் எங்கனயாச்சும் ஒரு நல்ல ரூமாப் பாருங்க.சிட்டி வேணாம்னு பாக்குறேன் கொஞ்ச நாளைக்கு"என்று கமிஷன் அட்வான்ஸைத் தந்து விட்டு ரூமுக்குத் திரும்பினான்.

"நாட்டாமை...நீ எப்ப வந்தாலும் சரி....இந்தச் சென்னை மா நகரத்துக்குள்ளே ஒளிஞ்சிக்கப் போற என்னைய உன்னால இனிமே கண்டுபிடிக்கவே முடியாது.உனக்குள்ளே

மூடுபனி பிரதாப் மாதிரி இருக்கிற இன்னொரு செல்வத்தை சமாளிக்கணும்னா..நான் எஸ்கேப் ஆனாத் தான் உண்டு.எங்கம்மாவோ அமெரிக்காவுல தங்கச்சி விஜி கூட செட்டில் ஆய்ட்டாங்க...சொந்த ஊர்ல சொல்லிக்கிறதுக்குன்னு யாரும் இல்லை.நானா வரவும் போறதில்ல..எப்பிடியோ ஒழி."

நம்பியார் படத்து மனோகர் போல சொல்லிக்கொண்டான்.

டேப்ளட் பீஸி ஒளிர்ந்தது.இன்பாக்ஸில் சுசி.

ஹாய்..

இவனும் ஹாய் என்றனுப்ப

உங்க கிட்டே வாட்ஸப் இருக்கா..?லெட் அஸ் கனெக்ட் இன் வாட்ஸப்

என்று அனுப்பினாள்.

இவன் ஒய் நாட்...நான் நம்பர் மாத்தப் போறேன்..நாளைக்குப் புது நம்பர் வாங்கிட்டு கால் பண்றேன்.உன் நம்பர் தா என்றான்.

இவன் ஒருமையில் அனுப்பியதை அவள் பொருட்படுத்தாமல் தன் நம்பரை அனுப்பினாள்.
இவன் தேங்க்ஸ் என்றான்

அவளிடமிருந்து ஒரு ஸ்மைலி  வந்தது

அது என்ன ஸ்மைலி என்றால். .....வேணாம்...ப்ரைவஸி...