புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

செல்ல நாய்களும் வேட்டை நாய்களும்

(வெ.இறையன்புவின் ""நின்னினும் நல்லன்"" தொகுப்பின் கதைகளை முன்வைத்து)

றையன்பு எழுதிய நின்னினும் நல்லன் தொகுப்பை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது.இதன் பல கதைகளை அவை இதழ்களில் வெளியான தருணங்களில் வாசித்திருந்தாலும்  தொகுப்பாகப் படிக்கையில் கதைகள் தரும் கூட்டு அனுபவம் அலாதி,.வேறானதும் கூட.இறையன்புவின் கதைகள் மழைக்குப் பிந்தைய காட்சிகளைப் போல் தெள்ளத் தெளிவாய்க் கிடைக்கின்றன.இறையன்பு தன் நம்பகங்களுக்கு எதிரான ஒற்றைச் சொல்லைக் கூட எழுத விரும்பாதவர்.தன் வாழ்வியல் விழுமியங்களென தனக்கு முன் இட்டு வைத்திருக்கிற மஞ்சள் கோட்டை அவர் மாத்திரம் அல்ல அவரது பாத்திரங்களும் கூடத் தாண்ட அனுமதிப்பதில்லை.இறையன்புவின் ஆதி அறத்தின் மின் வேலிக்குட்பட்டே அவரது கதைகள் மொத்தமும் இயங்குகின்றன.

றையன்புவின் கதைகள் .மானுடம் என்ற சொல்லின் விரிவாக்கமாகப் படர்கின்றன.அன்பு நட்பு வேற்றுமையறுதல் சக மனிதப் போற்றுதல் நம்பிக்கை, சொற்களைக் காப்பாற்றுதல் பிறர் மீதான வாஞ்சை போன்ற விழுமியங்களை உறுதிசெய்யும் வண்ணமே தன் கதைகளை முன்வைக்கிறார்.சமூகத்தின் பிரதி பிம்பமான இருள் ததும்பும் குற்றவுலகின் எதிர்மானுடர்கள் தம் கதைகளுள் வந்துவிடாமல் மேற்சொன்ன அறவேலி பாதுகாக்கிறது.எவை எழுதப்படக் கூடாது என்பதில் ஆழ்ந்த பிரக்ஞை கொண்ட சக மனிதனின் கதைகள் இவை.

ற்றுப் பிறழ்ந்தாலும் கூட உபன்யாச உட்குரலாகவோ தத்துவார்த்த விரித்தலாகவோ நீதிநெறி மொழிதல்களாகவோ தன் கதைகள் நிராகரிக்கப் படக் கூடும் என்னும் அபாயத்திலிருந்தே தன் கதைகளைத் துவக்கும் இறையன்பு தனித்த சன்னத மொழியாடலாலும் எதிர்பாராத முடுக்கங்களாலும் வாசிப்பவரைக் கடக்கவிடாமல் அயரடிக்கும் சொல்லாடல்களாலும் அவற்றைப் பெருங்கதைகளாக மாற்ற முனைகிறார்..நடுத்தர வர்க்கத்துக் கூட்டுக்குரலாகவும் சாமான்ய மனசாட்சியின் சாட்சியமாகவும் இறையன்புவின் சிறுகதைகள் விரிகின்றன. உயிர்மை வெளியீடாக வந்திருக்கும் "நின்னினும் நல்லன்" தொகுப்பில் மொத்தம் பதினாறு கதைகள் இடம்பெற்றிருக்கின்றன

த்தொகுப்பின் முதற்கதையான அப்துல்லா பாய் கதை அப்துல்லா பாயின் மரணச்சேதி ஆனந்தனைச் சென்றடைவதிலிருந்து துவங்குகிறது.ஆனந்தனுக்கும் அப்துல்லாவுக்குமான உறவென்பது தொழில் சார்ந்து ஏற்பட்டது.பல்லாண்டு நட்புறவு.சமீபத்தில் தான் ஆனந்தனிடம் ஒரு லட்சம் ரூபாயைக் கடனாக வாங்கித் தன் மகன் சாதிக் கடை வைப்பதற்கு ஏற்பாடு செய்தவர் அப்துல்லா பாய்.துக்க வீட்டில் அப்துல்லா பாயின் உற்றார் அந்தப் பணத்தை சீக்கிரமே சாதிக் திரும்பத் தந்துவிடுவான் என்று ஆனந்தனுக்கு உறுதி சொல்ல முயல்கின்றனர்.

னந்தன் அந்தப் பணம் அப்துல்லாவினுடையது தான் எனவும் சாதிக் பொறுப்பாய் தொழிலில் வெளிப்படவே தன் கையால் தரச்சொன்னார் எனவும் சொல்லி அந்தக் கடன் அடைபட்டு விட்டது என்பதைச் சொல்லி விடைபெறுகிறான்.இந்த இடத்தில் முடுக்கம் துவங்குகிறது.ஆனந்தனின் நினைவேந்தலில் பல வருடம் முன்பு திடீரென்று ஏற்பட்ட பணம் சார்ந்த அலுவல் நெருக்கடியும் அதைத் தானாகவே முன் வந்த அப்துல்லா பாய் சமயோசிதமாய்த் தீர்த்து வைத்து அவனது வேலையைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்க்கிறான்.அப்துல்லாவுக்குத் தான் சமீபத்தில் தந்த ஒருலட்சத்தை விட அவர் முன்னொரு காலத்தில் தனக்குக் காலத்தால் செய்த பத்தாயிரம் ரூபாய் உதவி என்பது தன் கவுரவமும் சேர்ந்த பேருதவி என்று எண்ணுகிறான். அப்துல்லா தரவேண்டிய கடனை அவரது பணம் என்று தான் சொன்னதன் மூலம் சின்னதோர் கைம்மறு செய்தாற் போல் உணரும் ஆனந்தனின் மன நிம்மதி  பணத்தைச் சுற்றிலும் தவித்தேகும் மத்யம வாழ்வின் ஆதார இசை.

"அத்தைகள்" என்ற  கதையில் பணக்கார அத்தையை விழுந்து உபசரிக்கும் பெற்றோர் இன்னொரு ஏழை அத்தையைப் பாராமுகம் செய்வதையும் பார்த்துக் கொண்டிருக்கும் சரவணன் மற்றும் சங்கீதா ஆகிய சிறார்களின் பார்வையில் விவரிக்கும் கதைசொல்லி கதையின் இறுதிப் பத்தியில் பெரியதோர் வெடியை சிதற்றுகிறார்."நாம பெரியவங்களான பிறகு என்னை நீ எப்படி நடத்துவே தஞ்சாவூர் அத்தையை நடத்துவது போலவா அல்லது ஈரோட்டு அத்தையை நடத்துகிறாற் போலவா..?" என்று கேட்டு அழும் சங்கீதாவுக்குச் சொல்ல சரவணனிடம் மட்டுமல்ல நம்மிடமும் பதிலேதும் இல்லை.ஒரு அண்ணன் ஒற்றைத் தங்கை என்றான நவ வாழ்வின் அபத்தம் பெரியவர்களின் உலகில் அபாயமாக உருக்கொள்வதை அழகுற கதைப்படுத்துகிறார். குழந்தைகள் காண்பதற்காகப் பெரியவர்கள் ஏற்படுத்தித் தருகிற காட்சிகளின் மறு நேர்த்தல்களாகத் தான் அவர்களின் அடுத்த கட்ட வாழ்வு இருக்கப் போகிறது என்பதைப் பொட்டில் அடித்துப் பகிர்கிறது இக்கதை.

"நின்னினும் நல்லன்" கதை பிறிதோர் முக்கிய தளத்தில் இயங்குகிறது.இரண்டு பேருக்கிடையே நிகழும் பணப்பரிவர்த்தனையில் சொன்ன தேதிக்குப் பணத்தைத் திருப்பித் தர முடியாத பொன்னுமுத்து,அவருக்கு உதவி செய்துவிட்டுத் தற்போது தன் பெண் திருமணத்துக்குப் பணம் தேவைப்படும் கருப்புசாமி இருவரிடையே பிரச்சினை முற்றும் தருணம் தன் ஓய்வுகால தொகுப்பூதியத்திலிருந்து மூன்று லட்சத்தை எடுத்து கருப்புசாமியிடம் தந்து பொன்னுமுத்துவின் கடனைத் தீர்க்கிறார் முகம்மது ஷா.எனும் கல்லூரிப் பேராசிரியர்.அடுத்த நகர்வில் கடனுக்கு பதிலாக கருப்புசாமி ஏற்க மறுத்த தன் கரம்புக் காடு ஒன்றரை ஏக்கரை முகம்மது ஷா பேருக்குப் பத்திரக் கிரயம் செய்து தருகிறார் பொன்னுமுத்து.வேண்டாத விருந்தாளியாய் இப்போது முகம்மது ஷா வசம் ஒன்றரை ஏக்கர் நிலம்.நெடு நாள் ஆசையான  விவசாயம் செய்யும் கனாவைப் பூர்த்தி செய்துகொள்கிறார் ஷா.இரண்டு வருடங்கள் கழித்து ஒரு பெரிய தொழிற்சாலை கட்டுவதற்கு ஷாவின் நிலம் தேவைப்படுவதாக ஒரு கோடி ரூபாய் வரை விலை கேட்டு வருகிறார்கள்.ஷா மறு நாளே பொன்னுமுத்துவின் வீட்டுக்கு ஓடுகிறார்."நான் உன் நிலத்தை வேறு வழியின்றி உரிமை கொண்டேன்.நீ தரவேண்டிய 3 லட்சத்தைக் கொடுத்துவிடு.ஒரு கோடிக்கு விற்றுக்கொள்" என்கிறார்."கொடுத்ததைத் திரும்ப வாங்குற புத்தி எந்தக் கஷ்டத்துலயும் எங்களுக்கு இருந்ததில்லை.அது உங்க நிலம்.நீங்க வித்தாலும் சரி வெச்சிகிட்டாலும் சரி.இனி இந்தப் பேச்சைப் பேசி இங்கிட்டு வராதீக" என்று பொன்னுமுத்து கறாராய் சொல்வதுடன் கதை முடிகிறது.

"சொல் பிறழாமை" என்பது மத்யம வர்க்கத்தின் காலகால தெய்வாம்சமாகத் தொடர்வது குறிப்பிடத் தக்கது.சொல்மாறிகள் ஒருபுறமும் சொல்லுக்காக மரிப்பவர்கள் மறுபுறமுமாக இரண்டாக வகுபடுகிறது மத்யமர் சமூகம்.அதனுள் வாழ்வாதாரச் சிக்கல்களை இணைப் பாத்திரமாக்கி மூன்று வெவ்வேறு மனிதர்களைப் படைத்து விடுவது இறையன்புவின் சூசகம்.ஒரே மனசாட்சியின் வெவ்வேறு பிரதி பிம்பங்களாக பொன்னுமுத்து கருப்புச்சாமி மற்றும் முகம்மது ஷா ஆகிய மூவருமே அல்லாடுகின்றனர்.அதீத சந்தோஷம் அளப்பறிய செல்வந்தம் துக்கத்துக்கு நிகரான சுமையை சாமான்ய மனசாட்சியின் முதுகினில் ஏற்றிப் பார்க்கிறது.

"நாய்ப்பிழைப்பு" இத்தொகுப்பின் மிக முக்கியமான கதை என்பேன்.சமீபத்தில் எழுதப்பெற்ற பகடி சார் கதையாடல்களில் முக்கியமான ஒன்றாக நாய்ப்பிழைப்பை சொல்ல முடிகிறது.இதன் மேலோட்ட எளிமையைத் தாண்டியது உள்ளுறையும் சேதி.முன் குறிப்பே "இது தனியார் நிறுவனமொன்றில் நிகழ்ந்த உண்மை நிகழ்வு ஒருவேளை ஏதேனும் அரசு அலுவலகத்தில் நடந்திருந்தால் அதற்கு இக்கதையில் வரும் நாய்கள் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" எனத் தொடங்குகிறது.

'கறார்' கணேசன் அந்த நிறுவனத்தின் நிதித்துறை மேலாளர்.அத்தனை சீக்கிரம் எந்த செலவினத்தையும் அனுமதிக்காத மனிதர் கணேசன்.அங்கே அவருக்குக் கீழே வேலை பார்ப்பவர் ஜோசப்.அவர் ஒரு நாய்ப் பயித்தியம்.நாய் வளர்ப்பு மீது அதீதப் ப்ரியம் கொண்டவர்.நாய்களைப் பற்றியே பேசவும் சிந்திக்கவும் தலைப்படுகிறவர். சென்ற மாதத்துக்கான ஜோசப்பின் செலவின சிட்டை கணேசனுடைய ஒப்புதலுக்கு வருகிறது.அதில் ஜோசப் நாலு தடவைகள் கேரளா சென்று வந்த குறிப்பு இருக்கிறது.இத்தனைக்கும் கம்பெனியின் எந்த கிளையோ அல்லது எந்த முகவரோ திருவனந்தபுரத்தில் இல்லை என்ற நிலையில் அது குறித்த விளக்கத்தை ஜோசப்பிடம் கேட்கிறார்.நேரில் வந்து சந்திக்கும் ஜோசப் தன் திருவனந்தபுரம் ட்ரிப் குறித்து விளக்குகிறார்.

வர்கள் கம்பெனி எம்டி சுதீர்குமார்.மனைவி சுபா.ஐம்பது வயதைத் தாண்டிய குழந்தை ஏதும் இல்லாத சுபாவுக்கு அவள் வளர்க்கும் டயானா என்ற "பீகில்" எனும் உயர்ரக வகை நாய் தான் குழந்தை.அதன் மீது உயிரையே வைத்திருக்கிறாள்.அதன் பருவகாலத்தில் அதனோடு கூடுவதற்காக ஒரு ஆண் ஃபிகில் நாயை ஏற்பாடு செய்யும் பொறுப்பை எம்டி ஜோசப்பிடம் ஒப்படைக்கிறார்.தேடலின் முடிவில் திருவனந்த புரத்தில் இருக்கும் வந்தனாவிடம் ஆண் ஃபிகில் இருப்பதை அறிந்து முதல் முறை செல்லும் ஜோசப் ஃபீகில் பற்றிய ஒரு புத்தகத்தை அவளுக்குப் பரிசாக அளிக்கிறார்.மேட்டிங் பற்றி பேச்சை எடுத்ததுமே அந்த அம்மாள் மறுத்து அவரை விரட்டி விட அடுத்த வாரமே தற்செயலாக போகிற மாதிரி மீண்டும் செல்கிறார்.இந்த முறை அவளுக்குப் பிடித்தமான திருநெல்வேலி அல்வாவை பரிசளிக்கிறார்."ஏன் மறுபடியும் வந்தாய்..?" எனக் கடிந்து கொள்ளத் துவங்குபவள் மெல்ல சகஜமாகிகிறாள்.இந்த முறை ஜோசப் மறந்தும் ஃபீகில் மேட்டிங் பற்றிப் பேசவேயில்லை.

மூன்றாம் முறை செல்லுகையில் அழகான புடவை அல்வா காராசேவு ஆகியவற்றோடு வந்தனாவை சந்திக்க செல்லும் ஜோசப்பை வரவேற்கும் வந்தனா அவருக்கு மதிய உணவு கொடுத்து உபசரிக்கிறாள்.மகன்கள் வெளிநாட்டில் வசிக்க யாருமற்ற தனிமையைத் தான் தன் நாயைக் கொண்டு பூர்த்தி செய்துகொள்வதாக மருகுபவள் இந்த முறை சுபாவின் ஃபீகிலுடன் தன் ஃபீகில் இணைவதற்குச் சம்மதிக்கிறாள்.நாலாவது முறை அதற்காக சுபாவின் நாயோடு சென்று வந்ததாக கணக்கை ஒப்பிக்கிறார் ஜோசஃப்.கறார் கணேசன் எம்டியே ஆனாலும் சொந்தச் செலவை எப்படி அலுவலகக் கணக்கில் சேர்ப்பது..?நான் வேண்டுமானால் எம்டியிடம் கேட்டு வாங்கித் தந்துவிடுகிறேன் என்கிறார்.இதைக் கேட்டுத் தூக்கி வாரிப் போடும் ஜோஸஃப்.."நான் நாய் வளர்த்தா இதை செய்யமாட்டேனா..?தயவு செய்து எம்டியிடம் இதனைத் தெரியப்படுத்த வேண்டாம்.நான் என் செலவுக்கணக்கை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்" என்று சொல்வதுடன் கதை நிறைகிறது.

நாய்களின் மீதான பரிச்சயம் எம்டியின் சொந்தவேலையை ஜோசப்பின் வசம் சாட்டுகிறது.அதன் நிமித்தம் தன் உடலாலும் மனதாலும் பணத்தாலும் இன்னபிறவற்றாலும் வந்தனா என்னும் ஒரு பெண்மணியை சம்மதிக்க வைப்பது ஜோசப்பின் வேலையாகிறது. உலகத்தின் எல்லா இடங்களையும் அதிகாரம் கோலோச்சும் எல்லாத் தலங்களையும் ஒரு புள்ளியில் கொணர்ந்து நிறுத்துகிறார் இறையன்பு.அங்கே ஜோசப்புக்கு தன் எம்டியின் நாய்க்கு இணையாக இன்னொரு பிகில் வகை நாயைத் தேடுவது வேலையின் ஒரு பகுதியாக அல்ல (very urgent)கூடுதல் வேலையாகத் தரப்படுகிறது.ஒரே மாதத்தில் நாலு முறை திருவனந்தபுரம் செல்ல வேண்டியிருக்கும் ஜோசப் எப்படியாவது அந்தப் பெண்ணின் நாயைத் தன் எம்டியின் நாயுடன் கூடுகைக்குச் சம்மதிக்க வேண்டியவராகிறார்.அதற்காகப் பயணிக்கிறார்.காத்திருக்கிறார்.கெஞ்சுகிறார்.அல்வா சேலை இன்னபிற பொருட்களை வாங்கிப் பரிசளிக்கிறார்.தன் முயல்வில் சற்றும் தளர்வடையாத விக்கிரமாதித்யனைப் போல் செயபட்டு அதில் வெற்றி காண்கிறார்.இந்த செயல்பாடு அவரது எம்டியால் அதிகபட்சம் ஒருமுறை பாராட்டப்பட்டிருக்கலாம்.அதைக் கூட இறையன்பு பதிவு செய்யவில்லை.அதன் பொருள் அந்தப் பாராட்டு அனர்த்தமானது என்பதாயிருக்கலாம்.

திகாரம் தனக்குக் கீழே வேலை பார்ப்பவர்களை வேட்டை நாயாக்குகிறது.வேட்டைக்குப் புறப்படுகிற நாய்க்கு வழங்கப்படுகிற கட்டளையின்  பின்னே இருக்கும் அதிகாரியின் மடியில் வேறொரு செல்ல நாய் இருக்கக் கூடும்.இங்கே எம்டி சுதீர்குமார் அவர் மனைவி சுபா அவள் வளர்க்கும் டயானா அதற்காக ஜோசஃப் அலைந்து சந்திக்கும் வந்தனா அவள் வளர்க்கும் டாமி ஆகிய அனைவருமே வேட்டை நாய்களாகவும் செல்ல நாய்களாக ஒருவர் மற்றவர் மீது அன்பையும் அதிகாரத்தையும் செலுத்தத் தலைப்படுகின்றனர்.

வேட்டை நாய் தனக்கிடப்பட்ட கட்டளையை செவ்வனே நிறைவேற்றி முடித்த பிற்பாடு இப்போது அதிகாரம் கறார் கணேசன் வசம் வந்து சேர்கிறது.பயணச்செலவுகளை நான் ஏன் அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வியோடு அங்கே சமர்ப்பிக்கப் பட்ட பில்லைத் தள்ளுபடி செய்வதுடன் அதன் கடமை நிறைவேறுகிறது.அது தனக்கு மேலதிகாரியான எம்டி தனக்கு வழங்கிய வேலையை செவ்வனே செய்கிறது.எம்டிக்கு வேட்டை நாயாகவும் ஜோசப்புக்கு செல்ல நாயாகவும் இரண்டுபடுகிறது.செய்வதறியாத ஜோசப்புக்கு கடைசி வாய்ப்பாக எம்டியிடம் பெர்சனலாக கேட்டு வாங்கி அத்தனை செலவினங்களையும் திரும்ப பெற்றுத் தருவதாக கணேசன் சொல்வதே ஒரு மாயவேலை தான்..அதனை ஒருபோதும் கணேசனுக்கும் கீழே வேலை பார்க்கும் ஜோசப் ஒத்துக்கொள்ளப் போவதில்லை என்று நன்றாய்த் தெரிந்தும் கணேசன் சொல்வது நிசக் காயத்துக்கு சொல்லால் மருந்திடுவதைப் போன்ற பம்மாத்து வேலை.இந்தப் புள்ளியில் நம்மில் பலரும் நாய்களாக உருமாற்றம் அடைவதை உணரமுடிகிறது.செல்ல நாய்களுக்கும் வேட்டை நாய்களுக்கும் இடைப்பட்ட நகர்தலின் பெயரே வாழ்க்கை எனலாம்..சிலருக்கு அதுவாகவே நகர்கிற அந்த நதி பலருக்கும் புறக்காரணிகளால் நகர்த்தப்படுகிறது.

ழைய பாணி கதை சொல்லல் முறையை  பற்றிக் கொண்டிருக்கும் சில எழுத்தாளுமைகளுக்குள் ஒருவராகவே இறையன்புவின் சிறுகதைகளைக் கருதுபவர்களுக்கான பதிலாகவும் இதனைச் சொல்வேன்.இறையன்புவின் கதைகள் அபாயமான செய்திகளைத் தன்னுள்ளே பொத்தி வைத்திருக்கின்றன.பெரும் மணல் வெளியில் புதைபட்டிருக்கும் வைரக் கற்களாய் அவற்றைப் பிரித்துக் கைக்கொள்வதென்பது எல்லார்க்குமானதன்று.சென்றடைவதன் பெயர் தானே பயணம்..?அப்படித் தன் கதைகளினுள்ளே "பூடகங்களை நேரடிகளுக்குள்" ஒளித்து வைக்கிறார் இறையன்பு.மனிதம் குறித்த கணிதசூத்திரங்களாய் விரிகின்றன "நின்னினும் நல்லன்" தொகுப்பின் கதைகள்.

((((குமுதம் தீராநதி ஆகஸ்ட் 2015 இதழில் வெளியான கட்டுரை)))