புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

கேசட் செண்டர்கள்


இதை மட்டுமா இழந்தோம் 3 கேசட் செண்டர்கள்


உள்ளூரில் பெருக்கெடுத்து ஓடிய சாயல் நதிகளாக மனமெங்கும் நிறைந்து ததும்புகின்றன கேசட் செண்டர்கள் பற்றிய நினைவுகள்.

HF60 HF90.கம்பனி கேசட்டுக்கள் விலை அதிகம்.ஒரு படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கும்.A சைடில் 3 பாடல்கள் B சைடில் இரண்டு பாடல்கள்,ஆகமொத்தம் ஐந்தே பாடல் கொண்ட கேசட்டுக்கள் 25 ரூபாயில் ஆரம்பித்து அதிகபட்சம் 40 ரூ வரை இருக்கும்.இந்த விலையானது 90ஆம் வருட வாக்கில்.ஏழைகளின் இசை ஆலயங்களாக இசையாபத்பாந்தவர்களாகத் உள்ளூர் இசை AUTHORITY க்களாகத் திகழ்ந்தவர்கள் யாரென்றால் கேசட்கடைகளை நடத்திவந்தவர்கள தான்.பதின்பருவத்தில் ஆடவர் பெண்டிர் என எவ்வித்யாசமும் இல்லாமல் செல்வாக்குப் பெற்ற உள்ளூர் வீஐபிக்களில் தலையாயவரும் கூட.

கிராமஃபோன் இசைத்தட்டுக்கள் வழக்கொழிந்து அடுத்த தலைமுறையாக கேசட்டுக்களின் காலத்தின் தொடக்கம் தொட்டு கேசட் கடைக்காரர்களின் செல்வாக்கு பெருகி ஓங்கியிருந்தது நிஜம்.வரிசையாக அடிக்கப்பட்ட ரேக்குகளில் கம்பெனி கேசட்டுக்கள்(அதற்குப் பெயர் ஒரிஜினல் கேசட்)வரிசை கட்டி நிற்கும்.தவிர மாஸ்டர் கேசட் என்று பொக்கிஷம் போல் பாதுகாக்கப்பட்ட கேசட்டுக்கள் தனியிடத்தில் அலங்கரிக்கும்.எப்போதும் இசைமயமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறவராக எங்களூரின் வெங்கிடு,சுபாஷ் என இரண்டு பேர் மீது அப்போது எனக்குப் பெரும்பொறாமை இருக்கும்.கடையின் முகப்பில் இருக்கும் பெயர்ப்பலகையில் ரஜினிக்கும் கமலுக்கும் இடம் இல்லவே இல்லை.இளையராஜா தான்.அதுவும் இசைக்குறிப்புக்களுடனான டிசைனில் இசைமயமாய் வரையப்பட்ட ஓவியம் தத்ரூபமாக இருக்கும்.கடைகளின் பெயர் இசை சம்மந்தப்பட்டதாகவே இருக்கும்.உதாரணமாக கணேஷ் கானம்,சுரேஷ் ம்யூசிகல்,ஸ்ருதி ம்யூசிக்ஸ் என சர்வம் இசைமயம்.

வரிசையாக ஃபைலுக்குள் பாலித்தீன் இலைகளுக்குள் செருகி வைக்கப்பட்டிருக்கும் தாட்களில் படங்களின் பெயர்கள் வரிசைக்கிரமமாக சிவப்பு மையிலும் அதன் கீழ் பாடல்கள் எல்லாமும் நீல பால்பாயிண்ட் பேனாவினாலும் எழுதப்பட்டிருக்கும்.கோயில்களில் சாமி பேருக்கே அர்ச்சனை செய்கிறாற்போல் “நீங்களே பதிஞ்சு குடுங்கண்ணே நல்ல நல்ல பாட்டா..”என்று எப்போதாவது யாராவது கேட்டால் ரெகார்டிங்க் கடைக்காரர் மகிழ்ந்துபோவார்.ஆனால் மணிக்கணக்கில் சேலைஎடுக்கிறாற்போல் அமர்ந்து ஒரு லிஸ்டை எழுதித் தந்தவர்கள் அனேகர்.முன் தயாரிப்பாக இந்த இந்த பாடல்கள் தான் வேண்டும் என்று லிஸ்டோடு வருகிறவர்கள் உண்டு.

“பனிவிழும் மலர்வனம்” பாட்டுக்கு அடுத்து “கண்மணியே பேசு மௌனமென்ன தூது” பாட்டு எழுதி இருக்கீங்க…ரெண்டும் வேற வேற டெம்போ தம்பி…சிங்க் ஆவாது…மூட் மாறிடும்ல…?பனிவிழும் மலர்வனம் பாட்டுக்கு அடுத்து “ராஜ ராஜ சோழன் நான்” பதிஞ்சுக்கொங்க…:என்று கன்சல்டேஷனும் கொடுப்பார் ரெக்கார்டிங் ஸ்பெஷலிஸ்ட்.ஒத்துவராது என்று அவர் சொல்லை மீறமுடியாது..அவருக்குத் தெரியாதா என்ன என்று ஒத்துக்கொள்வர்.

தன் தந்தையை உடன் அழைத்து வந்து சின்னஞ்சிறு குமரிகள் கொடுக்கிற லிஸ்டை வாங்குகையில் அதிகம் பேசாமல் அட்வான்சைப் பெற்றுக்கொள்வார் கடைக்காரர்.ஆனால் மூன்றில் இருந்து ஏழு நாள் வரைக்கும் ரெக்கார்டிங் டைம் குறிப்பிட்டிருக்க அந்தப் பெண் இடையில் ஒருமுறை தனியாக வந்து வேறொரு லிஸ்டைக் கொடுக்கும்.”இந்த பாட்டெல்லாம் அப்பா திட்டுவாரு….இருந்தாலும் பதிஞ்சுருங்க…எனக்கு பிடிக்குற பாட்டை தானே நான் கேக்கமுடியும்?”என்று சட்ட நியாயம் பேசிவிட்டுச்செல்லும் அந்தப் பெண்டு.அதனை உதட்டோரப் புன்னகையுடன் ஏற்றுக்கொள்வார்.மறுத்தால் அப்பெண் படிக்கிற பள்ளிமொத்த பெண்களின் மத்தியிலும் அந்த ஒரே ஒரு பகை கடைபெயரைக் கெடுத்துவிடும் என்பது அவருக்குத் தெரியும்.

மீண்டும் சொன்ன தினத்தில் அப்பாவுடன் பூனைக்குட்டி வந்து உதடு வியர்த்து வாங்கிச்செல்லும் கேசட்டை.நாலு நாள் கழித்து பள்ளி யூனிஃபார்மோடு தேடிவந்து “நல்லா பதிஞ்சிருக்கீங்க…தேங்க்ஸ்…”என்று சொல்லிச்செல்பவளும் அவளே..

இசை அமைத்த இளையராஜா சங்கர் கணேஷ் கூட அவ்வளவு மெனக்கெட்டிருக்க மாட்டார்கள்.பாடலைப் பதிவதென்பது ஃபேன் கூட ஓடாமல் பூட்டிய சின்னன்ஞ்சிறு அறையில் எந்த புற ஒலியும் பாதிக்காத வண்ணம் ஈக்குலைசர், சிந்ததைசர், ஆம்ப்ளிஃபையர்,ஊஃப்ஃபர், பேஸ்…டெம்போ என கண்ட கர்மாந்திர ஸ்விட்ச்களை ஏற்றி இறக்கி கேட்டு அழித்து ஒரு கேசட்டை ரெடி செய்வதற்கு ஏகமெனக்கெடல் இருக்கும்.பாடல் பதிவதை தவம் போல் கருதியது சத்தியம்.

கேசட்டின் எல்லாப் பாடல்களும் ராஜாவின் ராகங்களாக அமைத்துக்கொள்வது பெருமளவு ரசனை.ரஜினி ஹிட்ஸ் கமல் ஹிட்ஸ் உள்ளிட்ட ரசிகக் கண்மணிகளின் கோரிக்கைகள்,ஜெமினி ஹிட்ஸ்,கண்டசாலா ஹிட்ஸ் ஏஎம் ராஜா ஹிட்ஸ் என ரசனைக் கண்மணிகளின் தனித்துவங்கள் என எதையும் விட்டுவைக்காமல் இசைபட வாழ்ந்தவர்கள் கேசட்பதிவர்கள்.குத்துப் பாடல்கள்,பக்திப்பாடல்கள் இவ்விரண்டும் ட்ராவல்ஸ் ட்ரைவர்களின் சாய்ஸ் என்றால் சோகப்பாடல்கள்,கொள்கைப் பாடல்கள் ஒயின்ஷாப் பார் நடத்துகிறவர்கள் சாய்ஸ்.

ஐய்யப்ப சீசனா…முருக சீசனா…எப்பாடல் யார் யார் விருப்பமாயினும் அப்பாடலைத் தேடித்தருவது எம் கடமை என்று செயல்பட்டு நல்ல பேர் வாங்கிக்கொள்வர்.கேசட் கடைக்காரர் கிரிக்கெட் விளையாடினால் ஒருஓவருக்கு எட்டு பந்து வீசி அவரை சந்தோஷப்படுத்துமளவுக்கு தனி செல்வாக்கு கொடிகட்டிப் பறந்தது.தியேட்டர்களில் இலவசபாஸ்கள் கோயில்களில் ஸ்பெஷல் தரிசனம் என்றெல்லாம் கிடைத்தது மிகையாய்சொல்வதல்ல.உண்மை.

சீடீக்கள் சுனாமியாக வந்தன.

இதை மட்டுமா இழந்தோம்..?

சீடீக்களும் அதன் கைபற்றி டீவீடீக்களும் ஒரே எம்பீ3 யினுள் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கான ஜிப்பிங் ஃபார்முலா கேசட்டுக்களை அழித்தது.முற்றிலுமாக ஒழித்தவை மெமரி கார்டுகள் ஐபாடுகள் என இன்றைக்கு புற்றெறும்புகளைப் போல் ஆயிரக்கணக்கான பாடலை மாயத்தகடு என்று சொல்லப்படுகிற மெமரிகார்டுகள் அஜீரணம் செய்து அவ்வப்போது வாந்தி எடுக்கின்றன.பாடல் கேட்கும் சூழலைப் பொதுவெளியில் இருந்து தனித்த ஹெட்செட் தனிமைகளுக்கு மாற்றிக்கொண்டுவிட்டோம்.

என்ன இருந்தாலும்,கேசட்டுக்களுக்குள் இருந்த இசையில் உயிர் இருந்தது.இன்றைக்குப் பாடல்களின் சவஊர்வலம் நடக்கின்றது.

தொடர்ந்து பேசுவோம்

அன்போடு

ஆத்மார்த்தி