புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

உங்கள் நண்பருடன் என்னால் கரங்குலுக்க இயலாது.

1
நானும் அவரும்-----
ஒரே நிலப்பரப்பில் வசிக்கிறவர்கள்.
ஏற்கனவே சந்தித்துக் கொண்டதில்லை
என்றபோதும் எந்தப் பகையுமில்லை,.
மெலிதான புன் சிரிப்புடன் கடந்து சென்றுகொள்கிறோம்
என்றபோதும் எந்த முரணுமில்லை.
ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் இல்லை
என்றபோதும் ஒருவரை ஒருவர் அறிந்தே வாழ்கிறோம்.
ஒரு வரலாற்றின் நெடிய ஆற்றங்கரையில்
மெல்ல நகர்ந்துகொண்டிருக்கும்
மாபெரிய க்யூ வரிசையில்
முன்னும் பின்னுமாய் இடம்பெற்றிருப்பவர்கள் தாம்.
என்றபோதும்
நானும் அவரும் இதுவரை
ஒரு சொல்லைக் கூட வழங்கிப் பெற்றுக் கொண்டதில்லை.

2.
மன்னிக்கவேண்டும்,
எங்கள் இருவருக்குமே
நீங்கள் அற்புதமான பொது நண்பர்.
யாதொரு தீய எண்ணமுமின்றிப்
பெருகும் வாஞ்சையுடனும்
ததும்பும் பேரன்புடனும்
இருவருக்குமான அறிமுகத்தை
நிகழ்த்தப் பார்க்கிறீர்கள்.
உங்கள் குரலைக் கேளாதவன் போல்
கடந்து செல்கிறேன் நான்.

3.
உங்கள் நண்பருடன் என்னால் கரங்குலுக்க இயலாது.
நீங்கள் அழைப்பதைக்
காதில் வாங்காதது போலக்
கடந்து போகிற என்னை மன்னியுங்கள்.
இந்தக் காரணத்தை
அடுத்த சந்திப்பில் உங்களிடம் சொல்ல முடியும் என்னால்.

4
மிகச்சரியாக மூன்று இரவுகளுக்கு
முந்தைய சாயந்திரத்தில்
ஒரு முகப்புத்தக நிலைத்தகவலின் கீழ்
பதியப்பட்டிருந்த
முப்பத்தியாறாவது பின் ஊட்டத்திற்குத்
தனது விருப்பக் குறியை
இட்டிருக்கிறார்
உங்கள் நண்பர்.

5
அந்தப் பின் ஊட்டத்தை இட்டவர்
என் நிலைப்பாட்டுக்கு எதிரானவர்.
அவருக்கும் எனக்குமான பகை
எங்கும் வியாபித்திருக்கிறது..
அவருக்கு விருப்பக் குறி இடுபவரை
என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

6
ஆகவே
என்னை மன்னியுங்கள்
உங்கள் நண்பருடன்
என்னால்
கரங்குலுக்க இயலாது.

ஆத்மார்த்தி
02.11.2015