புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

தீராக்கடல் 16

தமிழில் புதுக்கவிதைகள் எனப் பேசத் தொடங்கினால் முதல் பத்து நிமிடங்களுக்குள் ஒரு தடவையாவது ஆத்மாநாம் என்ற பெயரைக் கடக்காமல் இருக்க முடியாது.ஆத்மாநாம் என்ற மனிதன் முப்பத்துச் சொச்ச வயதுகளில் தன் வாழ்க்கையைத் தானே முடித்துக் கொண்டார் என்னும் அதிர்ச்சி குன்றாத அவர் வாழ்க்கையின் பூர்த்தி வாக்கியம் தவிர அவரைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள நமக்கு வாய்ப்பவை அவரது கவிதைகளே.

ஒரு மனிதனின் இறுதிக் காலத்தை அவனே வரவழைத்துக் கொள்வதும் அந்தக் காலங்களெங்கும் அவன் எழுதிய வாக்கியங்கள் அது எழுத்தின் எவ்வகையாகினும் அதற்குள் மேலதிகமாய் அல்லது ரகசியமாய் எதையாவது விட்டுச் சென்றிருக்கக் கூடும் என்று தேடி நிரடுவதும் ஒன்றுடன் மற்றது தொடர்புடையதே.ஆனாலும் ஆத்மாநாமின் கவிதைகள் எண்ணிக்கையில் மிகச் சொற்பமானவையே.ஆனாலும் அவரது கவிதைகள் நிரந்தரித்து வந்திருப்பதற்கு அவரோ அவரது முடிவோ அல்லாது அவர் கைக்கொண்ட மொழியும் அவர் உருவாக்கிய கவிதாவெளியுமே முக்கியக் காரணிகளாகின்றன.

ஆத்மாநாமின் கவிதைகள் தீர்மானம் மிக்கவை.அதிகமாய் ஆணித் தரத் தொனி கொண்டு ஒலிப்பவை.குழைதலும் மென்மையும் அற்ற மிக நேரடியான கவிதைகள் அவை.ஆத்மாநாம் வாழ்ந்த காலத்திற்கு மிகவும் தூரமான வேறோரு காலத்தைத் தன் கவிதைகளுக்குள் தொனிக்க முயன்றிருப்பதும் இன்னமும் அந்தக் காலத்தின் முதல் தினம் விடிந்து துவங்கிவிடவில்லை என்பதும் மேலதிகத் தகவல்களே.ஆத்மாநாமின் புனைவுமொழி கட்டளைத் தன்மை நிரம்பியது எனலாம்.

என்னளவில் ஆத்மாநாம் கொதிக்கும் மனதுடன் காலத்தைச் செரித்துக் கொண்டிருந்தவர்.அவரது பல கவிதைகளில் இருண்மை மீதான நிராசையும் மனிதர்கள் மீதான நம்பிக்கையும் ஒருங்கே கலந்து தொனிப்பதன் முரணை புரிந்து கொள்ள முடிகிறது.தான் வாழ்ந்த காலத்தின் மீதான சாட்டுக்களாகத் தன் சில கவிதைகளை முழங்கிய ஆத்மாநாம் இன்னும் சிலவற்றில் வாழ்வின் அபூர்வத்தை அதன் மிக மென்மையான பட்டாம்பூச்சித்தனத்தை தனக்கு வாய்த்த நோக்குதல்களின் வாயிலாகக் கண்டுணரத் தலைப்பட்டதையும் சொல்ல முடிகிறது.இரண்டு நம்பகமானவர்களின் உரையாடல்களின் கச்சிதமான வெட்டுப் பதிவுகளாகவே ஆத்மாநாமின் பல கவிதைகள் விளங்குகின்றன.அவரது கவிதைகளின் தென்படும் நான் நீ மற்றும் நீங்கள் ஆகிய பதங்கள் அவற்றின் காலத்தை அழித்து மேலெழுதிய வண்ணம் எப்போதும் ஒளிர்ந்துகொண்டிருப்பதை உணரலாம். ஆத்மாநாமின் கவிதைகள் மொழி விளையாட்டு மாத்திரம் அல்ல.அவர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதில் இருக்கக் கூடிய சாஸ்வதத் தன்மை அவர்கள் எப்போதும் இருந்து கொண்டே இருப்பார்கள் என்னும் மாயவாசகத்துக்கான சாட்சியமாகப் பெருகிப் படர்கின்றது.

மிக எளிமையான வரிகளை மிகவும் அபாயமான பயன்பாட்டிற்கு மாற்றிச் செல்லும் உத்தியை ஆத்மாநாம் பரவலாய்ப் பயன்படுத்தியிருப்பது அவரது மொழிவன்மை.ஆத்மாநாமின் கவிதைகளுக்கு நான் எப்போதும் ரசிகன்.அவரது எல்லாக் கவிதைகளிலும் முதன்மையானதாக நான் கருதுவது பழக்கம் என்னும் இக்கவிதை (ஆத்மாநாம் கவிதைகள் காலச்சுவடு வெளியீடு பக்கம் 164)

எனக்குப் பிடித்த கவிதை 16

பழக்கம்


எனக்குக் கிடைத்த சதுரத்தில்
நடை பழகிக் கொண்டிருந்தேன்
கால்கள் வலுவேறின
நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று
என் நடப்பைத்
தெரிந்துகொண்ட சில மாக்கள்
விளம்பினர்
ரோட்டிலேயே நடக்க முடியவில்லை
ஒரு சதுரத்தில் நடக்கிறானாம்
நான் என்ன நூறு நாட்கள் நூறு பாம்புகளுடனா
என் கால்கள்
என் நடை
என் சதுரம்


ஆத்மாநாமின் சொல்வீர்யம் காலங்கடந்து நிற்பது.இந்தக் கவிதையில் OPINION என்கிற வஸ்து மீதான மாபெரும் எரிச்சலை ஆத்மாநாம் போகிற போக்கில் எள்ளுவதை உணரலாம்.என்ன செய்தாலும் நாலு பேர் நாலுவிதமாய்ப் பேசுவதற்குத் தலையைக் கொடுத்துவிட்டு கழுத்துப் பிசகி உழலும் நவ வாழ்வில் ஒரு கம்பீரமான மனிதனாக சுற்றியிருக்கும் புறவுலகை ஒரு அதட்டுப் போடும் தொனி அபாரமானது.நான் என்ன நூறு நாட்கள் நூறு பாம்புகளுடனா என்ற ஒரு வரி இந்தக் கவிதையைச் சிறகுள்ள பறவையாய் மாற்றித் தருகிறது.நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று என்னும் வரியில் சுழலும் இக்கவிதை வாசிப்பவனைக் கலைத்துத் தீர்மானங்களை அற்றுப் போகச் செய்கிறது.ஒரு நோய்மை நேரத்து ஆறுதல் சொல்லை விட அதிகதிக வருடலாய் இக்கவிதை வாசக மனதில் வியாபிக்கின்றது.வாழ்க ஆத்மாநாம்.

தொடரலாம்

அன்போடு
ஆத்மார்த்தி


02.11.2015

Last Updated (Tuesday, 03 November 2015 14:53)