புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

தீராக்கடல் 18

தீராக்கடல் 18  (குறுங்) கவிதைகள்

விதை என்பதற்கான இலக்கணங்கள் ஒரு புறம் இருக்கட்டும்.ஒரு நல்ல கவிதைக்கான அடையாளம் எது..?ஒரு கவிதைக்கென்று ப்ரத்யேகமான வாசனை ஏதேனும் இருக்கக் கூடுமா...?ஒரு வசந்த காலத்தின் முதல் தென்றலைப் போல ஒரு மழைக்காலத்தின் முதல் தூறலைப் போல ஒரு வேனிற்காலத்தின் முதல் வெம்மையைப் போல ஒரு நல்ல கவிதைக்கான முன் கட்டியம் ஏதேனும் உண்டா..?கவிதைக்கான அடையாளம் என்ன..?மொழி என்பதைத் தாண்டி கவிதைக்கென்று முன் தயாரிப்பு அல்லது தகுதி ஏதேனும் இருக்கக் கூடுமா.?இளங்கலை முதுகலை பட்டயப் படிப்புக்களைப் போலக் கவிதை எழுதுவதைக் கற்றுத் தேற முடியுமா..?மொழியறிதலின் ஒரு பண்டித வெளிப்பாடாகக் கவிதையை முன் வைக்க இயலுமா..?படித்தவர்களுக்கான பாங்குகளில் ஒன்றா கவிதை..?

மேலே காணப்படுகிற பல வினாக்களுக்குமான ஒற்றை பதில் இல்லை என்பதே.கவிதை கற்றறிதலின் அலங்காரம் அல்ல.அது காட்டினூடே பிரயாணிக்கிறவனுக்கு யதேச்சையாகக் கிட்டுகிற ஒரு சொட்டுத் தேனைப் போல் அத்தனை பாசாங்கற்றது.கவிதை என்பது தன்னியல்பின் எழுகை என்றே சொல்ல முடிகிறது.சன்னதத்தின் வெளிப்பாடாகச் சாத்தியமாகிற கலைவடிவமே கவிதை என்பது.அதனால் தான் உலகின் பெருவாரிக் கவிசொல்லிகள் தாங்கள் எழுதிய வரிகளைத் தாண்டிச் சென்று மீவருகையில் இதை நானா எழுதினேன் என்று அயர்ந்து போகிறார்கள்.அது பாசாங்கல்ல.நிஜம்.கவிதை தன்னை எழுதுவதற்காகத் தேர்ந்தெடுக்கிற ஊடகமே கவிசொல்லியின் சிதைந்த மனது.உற்சாகமோ சோகமோ தனிமையோ சந்தடியோ யாதும் மொழி என்னும் சட்டகத்துக்குள் புகுந்து வெளியேறுகையில் கவிதையாகக் கூடிய சாத்தியப்பாட்டின் நிகழ்தகவை என்னவென்பது.?கவிதையாகிறது கவிதை.

போலவே கவிதை என்பதன் அளவும் பேசவேண்டியதாகிறது.எத்தனை வரிகள் இருந்தால் கவிதை என்பது குறித்து எப்போதும் பல்வேறு கருத்தாக்கங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன.இத்தனை வரிதான் என்று எப்படி எங்கனம் ரேஷன் வைக்க முடியாதோ அதே போலத் தான் குறைந்த பட்சம் இத்தனை வரிகளாவது இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதும் ஆகாது.உலக அளவில் குறுங்கவிதைகளுக்கென்று தனிக்குழுமங்களும் தனித்த விதிகளும் இருந்துவருகின்றன.தமிழில் அவ்வாறான வரி சார்ந்த நிர்ணயக் கவிதை சொலல் முறைகள் இல்லை.லிமரிக் ஹைகூ போல ஜப்பானிய வடிவங்கள் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் வந்து சேர்ந்தாலும் கூட கவிதை இங்கே திருத்தம் செய்யப்படாத சுதந்தரியாகவே நிலைத்து வருவது சத்தியம்.

சிறு அல்லது குறுங்கவிதைகள் பெரும் கவிதைகளுக்கு எந்த விதத்திலும் குறைவானவை அல்ல.ஒரு கவிதை மாத்திரமே தீர்மானிக்கிறது அதன் நீட்சியை என்பது நிஜமாகும் வண்ணம் குறுங்கவிதைகள் வெகு வீர்யமாகத் தமிழில் நிலைபெற்றிருக்கின்றன.


எனக்குப் பிடித்த 21 (குறுங்) கவிதைகள்

1.வழியில்

வழியில்
ஒன்று மட்டும் புரிகிறது
புறப்படாமலேயே போய்க்கொண்டிருக்கிறேன்


பாதசாரி மீனுக்குள் கடல்

2.இருப்பதற்குத் தான்
வருகிறோம்
இல்லாமல் போகிறோம்


நகுலன்

3,காவல்

வீட்டைச் சுற்றி
தோட்டம் போட்டேன்
தோட்டத்தைச் சுற்றி
வேலி போட்டேன்
வேலியைச் சுற்றி
காவல் போட்டேன்
காவலைப் பற்றி
கவலைப்பட்டேன்


ஷண்முக சுப்பையா

4ஓம் பகார்டி

பகார்டி கடவுளை இயல்பாக
அழைத்து வந்து விடுகிறது
கடவுளால் பகார்டியை
கொண்டுவர
இன்னும் முடியவில்லை

ஓம் பகார்டி


குமரகுருபரன் ஞானம் நுரைக்கும் போத்தல்


5,நீச்சல் தெரியாதவன்
கனவெல்லாம்
படகுப் பிரயாணம்
பற்றியே இருக்கிறது


கனவுகளைப் பேச வந்தவன் ஜே டி

6.இவ்வேளை

வாடாத வாசமில்லாத
இச் செயற்கைப் பூக்கள்
நினைவூட்டிக் கொண்டிருக்க
வாடி உதிர்ந்து மறைந்த மலர் நீ


தேவதேவன் பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்

7.யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
எல்லாம்


நகுலன்

8. அது சரி
இது தான் புரியவில்லை
ஆற்றைக் கடக்கலாம்
கடலைக் கடக்கலாம்
சாலையைக் கடக்கலாம்
எதுக்கு இதெல்லாம்


விக்ரமாதித்யன்

9.சிலிர்க்கச் சிலிர்க்க அலைகளை மறித்து
முத்தம் தரும் போதெல்லாம்
துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து
அப்பறவைக்குத் தருகிறது
இக்கடல்


ஜெ.ஃப்ரான்ஸிஸ் கிருபா

10. புனலின்
கனிந்த புன்னகை மறைய
பேய்த்தாமரையால்
நிறைகிறது குளம்


பூமா ஈஸ்வரமூர்த்தி

11.செடியோடு
கிடக்கும் பூக்கள்
என்னதான் செய்துவிடப் போகிறது

கண்ணில் படுவதைத் தவிர


பூமா ஈஸ்வரமூர்த்தி

12 நாள் செல்லச் செல்ல
மிளிர்தல் இழந்து பழுப்பேறி
ஷேவிங் பிரஷ் மாதிரி
ஒரு பக்கம் சாய்கிறது தேகம்

ஞானக்கூத்தன்

13  தூரத்தே புணரும்
தண்டவாளங்கள்
அருகருகே வந்ததும்
விலகிப் போயின


கலாப்ரியா

14. இருக்கிறேன்
சத்தியத்தைப் போல
இல்லாமலும் இருப்பேன்
ஆழ்ந்த சத்தியத்தைப் போல


தேன்மொழி தாஸ்

15.வீசிய புயலில்
மல்லாந்து கிடக்கும்
பாதை காட்டும் பலகை
திசை தப்பி நுழையும்
ஒரு வெயிலும்
ஒரு மழையும்


கணேசகுமாரன்


16.ஒளியைப் போல்
மிதக்கும்
மொழியை அள்ளியெடுக்க
எத்தனிக்கிறேன்
ஒவ்வொருமுறையும்
விரல்கள் வழி
நழுவி விடுகிறது
கவிஞனாயிருப்பதன்
சாத்தியம்


அசதா

17.கொடுப்பினை

இரா முழுக்கத்
தவம் கிடந்தன
வான் நிறைய மீன்கள்
பரிதியை
நேர் நின்று கண்டதோ
விடிய வந்த ஒரு வெள்ளி


ராஜ சுந்தர்ராஜன்

18,பிரார்த்தனை

இந்த உலகம்
நம்மால்
அழியாமலிருக்கட்டும்


எஸ்.வைத்தீஸ்வரன்

19.யுத்தம் பற்றிய ஒரு மிகச்சுருக்கமான அறிமுகம்

நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களானால்
அது கண்ணீரின் குருதி

நீங்கள் ஒடுக்குபவர்களானால்
அது குருதியின் கண்ணீர்.

சேரன்


20.எப்படி யோசித்தாலும்
ஒரு வேலை நாளில்
நான் இறப்பது
நல்லதல்ல என்றே
தோன்றுகிறது


மனுஷ்யபுத்திரன்

21 ஆயிரம் முத்தங்களில்
ஒரு முத்தம்
திகைக்கிறது

எதையோ
நினைக்க வைக்கிறது

புன்னகையுடன்
கடந்து போகிறது


மனுஷ்யபுத்திரன்


தொடரலாம்
அன்போடு

ஆத்மார்த்தி

10.12.2015