புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

பால்யத்தின் குமிழிகள் BIG FUNஇதை மட்டுமா இழந்தோம்..4 .பால்யத்தின் குமிழிகள் BIG FUN

இந்தியா உலகக் கோப்பையைக் கபில் தலைமையில் வென்றிருந்த நேரம்.கிரிக்கெட்டை முன் நிறுத்தி இந்தியச்சந்தையைக் குறிவைக்கலாயின கம்பெனிகள்.ஊடகம் தகவல்தொடர்பு ஆகியன அவற்றின் தனிமை உச்சத்தில் இருந்த நேரம்.இன்றைக்கு இருக்கக்கூடிய சாதனவெளி அன்றைக்கு இல்லை.பத்திரிக்கைகள் ரேடியோ டீவீ ஆகியன தனி ஆவர்த்தனங்களில் இருந்த காலம் எண்பதுகளின் மத்திமம்.

கிரிக்கெட் இந்திய நிலத்தின் அடிமைக்காயங்களுக்கு பெருமைக்குரிய பதிலடியாக மாறியது.ஆல் இன் ஒன் என்னுமளவுக்கு தெருக்களில் கிரிக்கெட் ஸ்டம்புகள் ஆக்ரமித்தன.என்னேரமும் கிரிக்கெட் காய்ச்சல் பிடித்து அலைந்தனர் பசங்கள்.அன்றைக்குப் பெண்குழந்தைகள் புறக்கணிக்கப்பட்ட தெருவிளையாடலான கிரிக்கெட்டை அவர்களும் அன்னியமாய்க் கருதவில்லை.தன் அண்ணன் அல்லது தம்பி கிரிக்கெட்டில் வாகைகள் சூடுகிறவனாக இருக்கவேண்டும் என்றே அக்காதங்கைகள் கவலைப்பட்டனர்.

இப்பதிவு நேரடியாக கிரிக்கெட் பற்றியது அல்ல.கிரிக்கெட் தான் இதன் மூலவர்.ஆனால் உற்சாக உற்சவர் வேறொருவர்.80களின் மத்தியில் தத்தமது பால்யத்தில் இருந்த எவருக்கும் BIG FUN என்றால் சட்டென்று நினைவுக்குவரும்.பிக்ஃபன் தான் முதல்முதலில் இந்திய அளவில் பொட்டலம் கட்டி விற்கப்பட்ட சூயிங்கம்.சவ்வுமிட்டாய்களுக்குப் பழக்கமாயிருந்த வாழ்க்கையில் ஒரு அன்னியப்பொருள் அவ்வளவு எளிதில் சந்தையைப் பிடித்துவிட முடியுமா…?இந்தியாவெங்கிலும் பிக் ஃபன் சூயிங்கத்தின் விற்பனை கொடிகட்டிப் பறந்தது.அதற்குக் காரணம் அந்த மிட்டாயின் சுவை தரம் இன்னபிறவெல்லாம் பிறகுதான்.அதனுள் மூன்றாக மடிக்கப்பட்ட ஒரு சின்ன காகிதம் இருக்கும் அதன் பேர் பிக்ஃபன் ரன்.சூயிங்கத்தை பிரபலப்படுத்த ஒரு கூடுதல்வியாபாரத் தந்திரமாக அந்தக் கம்பெனி செய்த ஒரு வேலை அந்த பொருளின் விற்பனையை பன்மடங்கு உச்சத்துக்குக் கொணர்ந்தது.அது தான் அந்த பேப்பர் ரன்.

ஒவ்வொரு சூயிங்கத்துக்குள்ளேயும் ஒவ்வொரு பேப்பர்.அதில் ஏதாவது ஒரு நாட்டைச்சேர்ந்த ஏதாவது ஒரு க்ரிக்கெட் வீரரின் படம் இருக்கும்.தம்ப்னெயில் என்று சொல்லுமளவுக்கு.அதன் சைடில் அவரது பேர் அவரது நாடு மற்றும் 1,2,4,6 என ரன்கள் இருக்கும். எல்.பீ.டபிள்யூ கேட்ச் என்று விக்கெட்டுக்களும் இருக்கும்.          தீப்பற்றி எரிந்தது சிறார்களிடத்தில்.எப்போதும் இந்த ரன் சேகரிப்பு பற்றியே எண்ணமாயிருந்தது இன்னமும் பசுமையாக நினைவுக்கு வருகிறது. குழுவாகச் சேர்ந்து சேர்ப்பதுவும் உண்டு.மாதா மாதம் அல்லது வாராவாரம் ஒரு பொது இடத்துக்கு வந்து  பசங்களின் குழுக்கள் சங்கமித்து அவரவர் சேகரித்த ரன்களை கணக்கெடுப்பதும்,பிறரிடம் இல்லாத ரன்கள் குறிப்பாக சிக்சர்கள் யாரிடம் அதிகம் இருக்கிறது என்று பெருமை/பொறாமை கொள்வதும் ஒன்று இரண்டல்ல…கிட்டத்தட்ட ஏழெட்டுவருடம் சிறுவர்களின் மத்தியில் தேசியகீதமாக ஒலித்தது என்றால் அதற்கு முன்னும் பின்னும் இந்த அளவுக்கு வேறெந்த அம்சமும் பொதுத்தேர்வாக அங்கீகரிக்கப்பட்டு விருப்பமாயிருந்ததில்லை.

கவாஸ்கர் 4 ரன்கள் எளிதில் கிடைக்கும்.கவாஸ்கர் விக்கெட் அல்லது கவாஸ்கரின் 6 ரன்கள் கிடைக்கவே கிடைக்காது.ஒன்றிரண்டு இருப்பதாகவும் அதை பெரியதொரு ப்ளேயரே தனக்காக வாங்கிக்கொண்டதாகவும் கூட ஒரு வதந்தி உலாவியது.ஆனால் நான் பால்யகாலத்தில் வளர்ந்துவாழ்ந்த மதுரை கே.புதூர் ஈ.எம்.ஜி நகரில் அப்போது கதிர் என்ற பையன். செல்வச் செழிப்பான வீட்டுப் பைய்யன்.அவன் தான் இந்த பிக்ஃபன் ரன்களைப் பொறுத்தவரை ஹீரோ.          அன்ஷூமன் கெய்க்வாட் என்ற இந்திய வீரரும்,முடாசர் நாசர் என்ற பாகிஸ்தான் வீரரும் இயான் போத்தம் என்ற இங்கிலாந்துவீரரும்,அவன் 6 ரன்கள் காட்டியபோது என் விழிகள் விரிந்ததை இன்றைக்கும் மறக்கவியலவில்லை.பின்னாட்களில் எத்தனையோ கரன்சி காகிதங்களை அடைந்த போதெல்லாம் எழாத இன்பம்.அபூர்வம் அல்லவா,பால்யம்..?

இரண்டு பேருக்கிடையிலான சண்டையையும் இரண்டு தெருக் குழுக்களுக் கிடையிலான மோதலையும் சமாதானத்தையும் இந்த ரன்கள் தீர்மானித்தன.1987 ரிலையன்ஸ் உலகக் கோப்பையை இந்தியா தோற்றபோதும் கிரிக்கெட் என்பது இந்தியாவின் மூச்சில் கலந்து விட்டிருந்தது.ஆனால் அந்த ரன்களின் உருவத்தில் செய்யப்பட்ட சின்ன சின்ன மாற்றங்கள் மேலும் எங்களது அடுத்த மேல்வகுப்புக்களுக்கு சென்றது இரண்டும் சேர்த்து அவற்றின் மீது எங்களின் ஆர்வத்தைக் குறைத்தன.

மொத்த மொத்தமாக 100 ரன் பந்தய கிரிக்கெட் மேட்சுகள் விளையாடியதும்,எப்போதும் சூயிங்கத்தை மென்று வாய் சிவந்து புண்ணானதும் எனக்கு மட்டுமல்ல. அக்காலகட்டத்துக்கே. உள்ளிருக்கும் பேப்பருக்காக மிட்டாயை மொத்தமாக வாங்கி அதை தின்னாமலேயே எறும்புப் புற்றுகளுக்கு தாரைவார்த்து வள்ளலாய் மாறியதினங்களும் பசுமையானவை

கதிர்வேல் என்கிற கதிர் இப்போது அமெரிக்காவில் இருக்கிறானாம்.அவனை நான் சந்தித்து எப்படியும் 20 வருடம் இருக்கலாம்.இந்த பதிவில் இருக்கிற உணர்வுகளும்,செய்திகள் பற்றிய நினைவுகளும்,ஏன் பழைய பிக்ஃபன் ரன்களும் கூட அவனிடம் இன்னமும் இருக்கலாம்.

இதை மட்டுமா இழந்தோம்…?

வாயிற்திண்ணைகளை,பல்லாங்குழி சொக்கட்டான் தாயம்,பாண்டி,கிட்டிப்புள் என சிறுவிளையாட்டுக்களை,ஸ்டாம்ப் சேகரித்தல் இன்னபிறவற்றை பொருள்ரீதியாக மாற்றிக்கொண்டுவிட்டோம். மீண்டுமீண்டு மரிக்கின்றன பால்யத்தின் நினைவுக் குமிழிகள்.

இன்னமும் பேசலாம்

அன்போடு

ஆத்மார்த்தி