புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

இருப்பது கனவு 4

இருப்பது கனவு 4 லோகமும் உறுமீனும்


மலையாளப் படங்களை முன் மாதிரியாகச் சுட்டிக் கொண்டு ஏக்கப் பெருமூச்சு விட்டது ஒரு காலம். அப்போதைய இடைவெளி அதிகம்.ஸ்கேல் கொண்டு அளக்க முடியாத தூரமது.மெல்ல நெருங்கி ஒரு கட்டத்தில் தமிழ்ப் படமாக்கலின் தரம் உயர்ந்தது வரலாறு.தொண்ணூறுகளின் இறுதியில் ஷங்கரிஸம் நிலைபெற்ற பிற்பாடு வந்த பல தமிழ்ப் படங்கள் கேரளாவை விஞ்சி எடுக்கப் பட்டதை மார் தட்டிப் பெருமிதம் கொண்டு சொல்லலாம்.எதற்கு இந்த சேஷ்டை என்பவர்களுக்கு பொறுங்கள்.

என் பள்ளி இறுதிக் காலத்தில் மதுரை மினிப்ரியா தியேட்டரில் தொடர்ந்து மலையாளப் படங்கள் நேரடியாக வெளியிடப் படும்.அதற்கென்று மதுரையில் ரசிகமனோபாவம் இருந்தது இங்கே கூறத்தக்கது.சமரம் பரதம் சீபீஐ டைரிக்குறிப்பு சித்திரம் மதிலுகள் எனப் பல படங்கள் நேரடி மலையாளம் பேசி மதுரையில் நின்று விளையாடின.பிறகு மெல்லக் கரைந்து காணாமற் போனதையும் சொல்லலாம்.இன்றைய ஐநாக்ஸ் யுகத்தில் தெலுங்கு அத்திப் பூத்தாற் போல் சில கன்னடம் அப்புறம் மறுபடி பல மலையாளப் படங்கள் வெளியாகத் தொடங்கின.

ஆனாலும் மோகன் லால் நடித்த லோகம் படம் ரிலீஸ் ஆனது என் வீட்டு அருகாமையிலிருக்கும் பழைய மாப்பிள்ளை விநாயகர் தற்போதைய ஷண்முகா ஸ்க்ரீனில்.ஒரு தடவை அல்ல இரண்டு தடவை சென்று டிக்கட் எடுத்தும் கோரம் இல்லாமல் ஷோ கேன்சல் செய்து அனுப்பப் பட்டேன்.அராஜகம் என்று அவர்களை மலையாளத்தில் திட்ட ஆசை.என்ன வார்த்தை எனத் தெரியாததால் அழகுத் தமிழிலேயே திட்டினேன்.

இது நடந்து பதினைந்து நாட்களுக்குள் லோகம் படத்தின் ஒரிஜினல் டீவீடியை வாங்கிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.பெரிய ஸ்க்ரீனில் அடித்துப் பிடித்துப் பார்க்கும் அளவுக்கு இல்லை என்பது தான் உண்மை.சில நூறு படங்களைத் தாண்டிய லாலேட்டன் பாவம் கிடைத்த கேரக்டர்களை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்.அவருக்கும் அவ்வப்போது திருஷ்யம் போல் கிரவுண்டு கிடைத்தால் அடித்தாடுவதில் சமர்த்தர். கடைசியாக அருண் வைத்யநாதனின் பெருச்சாழி ஒரு முழுமையான லால் அனுபவம்.அவற்றோடு ஒப்பிடுகையில் லோகம் சற்று டம்மி டப்பாஸ் தான்.இன்னும் பிரமாதப் படுத்தி இருக்கலாம்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்த இன்னொரு படம் தமிழில் வெளிவந்திருக்கும் உறுமீன்.ஆகச் சிறந்த படம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.ஆனாலும் இந்தப் படத்தை ஜஸ்ட் லைக் தட் சுமார் என்று கடந்து விட முடியாது.புதியவர் சக்திவேல் பெருமாள்சாமிக்கு மேக்கிங் வருகிறது.ஒரே படத்தில் பல கதைகளைக் கம்ப்ரெஸ் செய்து கதை சொல்லும் முறை தமிழில் அவ்வளவாக எடுபடுவதில்லை.என்றாலும் ரிஸ்க் எடுத்திருக்கிறார்.உறுமீன் கடைசி வரை ரசிக்க வைக்கிறது.

இந்தப் படம் என்னளவில் ஏன் கவர்ந்தது என்பதற்கான முதல் காரணம் திரைக்கதையில் கையாளப் பட்டிருக்கும் ஸ்பின் உத்தி தான் என்பேன்.படம் தொடங்கும் போது ஒரு முன் கதை.அதற்கென்று ஒரு காலம்.அதில் காலஞானி என்பவரது புத்தகம் ஒன்றைப் பற்றிய கதை சொல்லல் வந்து முடிகிறது. தற்காலத்தில் படம் தொடங்குகிறது.அதன் பின் இடைவேளை வரை தற்காலத்தில் நகரும் கதை இடை வேளைக்குப் பின் 1940 களுக்குச் செல்கிறது.பிறகு க்ளைமாக்ஸ் தற்காலத்தில் இரண்டு கூறுகளாகப் படம் சொல்லும் சினிமா மரபில் இந்த நான்கு கூறு முறையை எந்த வித அலுப்பும் இல்லாமல் படமாக்கி இருப்பது சிறப்பு.

கதையின் உறுமீன் அந்த காலஞானம் புத்தகம் தான்.சற்றுப் பிசகி இருந்தாலும் லக்கிமேன் தனமாக நகைப்பிற்குரிய ஒன்றாக மாறி இருக்கும்.கத்தி மேல் நடக்கிற வித்தையை வெகு லாவகமாக கையாண்டிருக்கிறார் இயக்குநர்.படத்தின் ஒரு காட்சியில் உனக்கு உரித்தானது உன்னை வந்தடையும் என்று ஒரு கடையின் மூடிய ஷட்டரில் எழுதப்பட்டிருக்கும்.அதைக் கவனிக்காமல் கடந்து போவான் நாயகன்.நாம் கவனிப்போம்.இந்த ஒரு காட்சி தான் இந்தப் படம்.நாயகனுக்கு உரித்தான காலஞானம் புத்தகம் அவனைத் தேடி வந்து அடைவது படத்தின் முற்பகுதிக் கதை.அப்படி ஒரு புத்தகத்தை என்ன ஏதென்று அவன் உணர்ந்த பிற்பாடு கதையின் முடிவு.

கலர்ஃபுல்லான ஒளிப்பதிவும் பதறவைக்கும் இசையும் கூடுதல் பலங்கள்.இந்தப் படத்தில் நாயகன் நாயகியைத் தேடித் தேடிக் காதலித்து அவள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருப்பதில்லை என்பதில் தொடங்கி க்ளைமேக்ஸில் தானே தன் ஸ்தூல உடலால் பல வில்லன்களைப் புரட்டி எடுத்து கசக்கிப் பிழிந்து கொலை செய்வது வரை எதையும் செய்யாத பாபி சிம்மாவின் நடிப்பு ஆறுதலான மாறுதல். உயிருள்ள ஒரு மனிதனுக்குத் தெரிந்த ரகசியம் வெளிப்படுவது போலவே ஒரு புத்தகம் காலங் கடந்து பயணிக்கிற கதையும் அதனை சொன்ன விதமும் புதியது.படத்தின் இன்னுமோர் நல்லுழைப்பு கலையரசனுடையது.டீ கிளாஸில் துவங்கிப் பல கோடிகளைக் குவிக்கும் பண வெறிக் கதாபாத்திரத்தில் தன்னாலான அளவு நடித்திருக்கிறார்.

இதே கதையில் சென்ற பிறவியில் கலையரசன் தான் இந்தப் பிறவியில் பாபி சிம்மா என்று மாற்றி யோசித்தால் இன்னும் சிறப்பான கதையாகத் தோன்றுகிறது.ஃபேஸ் ஆஃப் போன்ற ஆங்கிலப் படங்களில் தான் அது சாத்தியம்.தமிழில் நாயகன் பாதி வில்லன் பாதியாக எடுக்க விடமாட்டார்கள்.காட்சிப் பூர்வமான கதை சொல்லலுக்காகவும் அமானுஷ்யமான அதே சமயத்தில் குருதி கொப்பளிக்காத நம்பகமான க்ளைமேக்ஸூக்காகவும் கூட உறுமீனை ரசிக்கலாம்.உறுமீன்...எனக்குப் பிடித்த படங்களின் வரிசையில் ஒருமீன்.

அன்போடு
ஆத்மார்த்திLast Updated (Friday, 11 December 2015 17:22)