புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

இருப்பது கனவு 5

சில சினிமாக்கள்


1.தி இமிடேஷன் கேம் THE IMITATION GAME  (ENGLISH)

இரண்டாவது உலக யுத்தப் பின்னணியில் விரியும் உண்மைக் கதை.பிரிட்டன் சாம்ராஜ்யத்தின் கணிதமேதை ஆலன் டூரிங் ஜெர்மானியர்களின் பிரத்யேக தகவல் தொடர்பு சாதனமான எனிக்மாவை வென்றெடுக்கும் ஒரு இயந்திரத்தை வடிவமைத்தாக வேண்டிய ராஜாங்க நிர்ப்பந்தத்தில் துவங்குகிறது கதை.அவர் அந்த சாதனத்தை வடிவமைப்பதில் துவங்கி அவரது சொந்த வாழ்க்கை மற்றும் அப்போதைய அரசியல் நிகழ்வுகள் என எல்லாம் கலந்த சீரான திரைக்கதை.எதிர்பாராத முடிவு ஆகியவற்றைக் கொண்டது இமிடேஷன் கேம்.காலம் காலமாக அறிவுக்கும் அதிகாரத்துக்கும் இடையே நடக்கும் இடைவிடாத போராட்டம் எதிர்பாராத நட்பின் துரோகம் அதிமுக்கிய நகர்வுக் காலத்தின் அவசர நிர்ப்பந்தங்களை இளகச் செய்யும் காதல் ஒற்றை தவத்தை முன்னிறுத்தி வாழ்பவர்களின் தீராத மன ஊசலாட்டம் எனப் பலவகைகளில் இப்படத்தின் திரைக்கதை முக்கியத்துவம் கொண்டது. வசனங்களும் ஒளிப்பதிவும் கலை இயக்கமும் கூட சொல்லத் தக்கன.பெனடிக்ட் கம்பர்பேட்ச் கெய்ரா நைட்லீ மற்றும் மாத்யூ கூட் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியிருப்பவர் மார்டின் டைட்லம் (Fallen Angels BUDDY, Headhunters ஆகிய படங்களின் இயக்குனர்)

*****************

2.கனல் KANAL (MALAYALAM)

மோஹன்லால் அனூப்மேனன் அதுல்குல்கர்னி ப்ரதாப் போத்தன் ஹனிரோஸ் நிக்கிதா இசை ஔஸ்பச்சன் மற்றும் வினுதாமஸ் பின்னணி இசை ஔஸ்பச்சன்.ஒளிப்பதிவு வினோத் இளம்பள்ளி இயக்கம் எம்.பத்மகுமார்

கனல் இந்தாண்டின் அக்டோபரில் வெளியான மலையாள சினிமா.கதையின் துவக்கம் ஒரு இரயிலில் மோஹன்லால் ஏறி வட இந்தியாவின் கார்வார் நகரம் நோக்கிச் செல்வதில் தொடங்குகிறது.வரிசையாக மோகன் லால் செய்யும் கொலைகள்.அவற்றை ஊடகவாதியான அனூப் மேனனை சாட்சியாகக் கொண்டு செய்வது இறப்பதற்கு முன் ஒவ்வொருவரிடமும் அவரவர் சாவுக்கான காரணம் தற்கொலை என்று எழுதச் செய்வது அவர்களது அக்கவுண்ட்களிலிருந்து பணத்தை வேறொரு கணக்கிற்கு மாற்றுவது என அடுத்தடுத்து நிகழும் எதுவும் கதையின் ட்விஸ்டை வெளிக்காட்டாமல் செல்லும் படமாக்கள் இப்படத்தின் பெரும்பலம்.ரெசெஷன் எனப்படும் நவகாலத்தின் முக்கியப் பிரச்சினையை இப்படத்தின் நுட்பச்சரடாகக் கொண்டிருப்பது கவனிக்கத் தகுந்தது.இறுதியில் அவிழும் முடிச்சின் அதிர்வு உணர்வு ரீதியாகவும் அறிவுப்பூர்வமாகவும் பார்வையாளனைத் திருப்திப் படுத்துகிறது.இசை பெரிய பலம்.அவசியம் காண வேண்டியது.


**************

3.தி மேன் ஃப்ரம் எர்த் 2007 THE MAN FROM EARTH  (ENGLISH)

ஜான் ஓல்ட்மேன் david Lee Smithவேலையை ராஜினாமா செய்து விட்டுக் கூடாரத்தைக் காலி செய்து கிளம்பும் ஒரு பேராசிரியர்.வண்டி ரெடி.கிளம்பலாம் எனப் பார்க்கையில் அவரது சகாக்கள் அவரைப் பிரியாவிடை தர அங்கே குழுமி அவர் வேலையை உதறிப் போவதற்கான காரணத்தைக் கேட்கின்றனர்.முதலில் சமாளிக்கப் பார்க்கும் ஜான் ஓல்ட்மேன் அவர்களுடன் உரையாட ஆரம்பிக்கிறார்.அவரது சகாக்கள் ஹேரி (Richard Riehle)   எடித்(Ellen Crawford) டேன் (Tony Todd) சாண்டீ (Annika Peterson) டாக்டர் வில் க்ரூபர் ஆர்ட் (William Katt) மற்றும் அவரது மாணவி லிண்டா  (Alexis Thorpe  ) இவர்கள் ஒவ்வொருவரும் மண்ணியல் தொல்லியல் உயிரியல் கலைவரலாற்றியல் உளவியல் வரலாறு என புவி சார்ந்த பல துறைகளில் விற்பன்னர்கள்.

அவர்களுடனான ஜான் ஓல்ட்மேனின் பிரிவுபசாரப் பொழுதின் உரையாடல்கள் தான் திரைப்படத்தின் முழுக்கதையுமே.இதற்கு முன் ஒரு பெரும் திரைக்கதையை வெறும் வசனங்களினாலேயே நகர்த்திச் செல்லும் ஒரு களத் திரைப்படம் இதுபோல் வந்திருக்குமா எனத் தெரியாத அளவுக்கு ஆரம்பிக்கையில் ஏற்படும் பிரமிப்பு சிறிதும் குறையாமல் இறுதிவரை பெருகிக் கொண்டே செல்வது நிஜம்.

ஜான் ஓல்ட்மேன் தன்னைப் பற்றிய உண்மையை மெலிதாக எடுத்துரைக்கையில் அதிர்கிறார்கள் சகாக்கள்.ஜான் ஓல்ட்மேன் தான் வரலாற்றின் மூத்து முந்தைய குகைமனிதன்.அவரது வயது 14000 ஆண்டுகள்.காலத்தோடு தன்னை மேலுதியவாறே இன்று வரைக்கும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிற பூமியின் அற்புதம் அவர்.பல காலகட்டங்களில் வரலாற்றின் பல பக்கங்களில் இதுவரைக்குமான பூலோகத்தின் நம்பகங்களை மாற்றியமைக்கும் பல விசயங்களை அவர் எடுத்துச் சொல்கிறார்.

அவர் புத்தருடைய காலத்தைக் கடக்கும் போது அவருக்கும் புத்தருக்குமான பரிச்சயம் நிகழ்கிறது.அவரது கருத்துக்களால் ஈர்க்கப்படுகிற ஓல்ட்மேன் புத்தருடன் தான் பெற்ற ஞானத்தை அடுத்தடுத்த காலங்களுக்குள் கொணரும் போது அவரது சீடர்கள் அவரை தெய்வமனிதனாக சித்தரித்துவிடுவது ஒரு தற்செயலாக நிகழ்கிறது.அவர் ஐயூஸூவஸ் என்ற பேரில் அக்காலத்தில் வாழ்ந்ததே பிற்பாடு ஜீஸஸ் என்றாகியது.

தான் தான் இயேசு என அந்தக் குகைமனிதன் சொல்வதை வரலாற்றியலாளரும் கிறித்துவ ஆய்வாளருமான எடித் ஆல் ஏற்க முடியாமல் தேம்புகிறார்.நீ இறைவனின் மகனாக இருக்க முடியாது என்று வாதிடுகிறார்.

காலம் என்ற ஒன்றின் சார்பு அமைப்புக்களான நிலம் வரலாறு கலை அரசியல் உயிரியல் உளவியல் எனப் பல்வேறு பட்ட விற்பன்னர்களின் எல்லாக் கேள்விகளுக்கும் ஜான் ஓல்ட்மேன் பதிலளிக்கிறார்.அவரது பதில்களை அவரால் நிரூபிக்க இயலாமல் போவதைப் போலவே அவற்றைத் தகர்க்க எதிராளிகளாலும் இயலாமற்போகிறது.தனக்கு வயதாவதில்லை தன் உடல் 35 வயதிற்கு மேல் அப்படியே சாகாவரம் பெற்று நிரந்தரித்துத் தொடர்கிறது என்பதை ஜான் ஓல்ட்மேன் அத்தனை சகாக்களை மாத்திரம் அல்ல நம்மையும் நம்பச் செய்கிறார்.

காலம் குறித்த கேள்விகள் அவற்றைப் பற்றிய விவரணைகள் காலத்தின் முன் வாழ்க்கை என்பது எத்தனை அற்பமானது மேலும் சந்ததி என்ற ஒன்றின் வாயிலாக மனிதனின் வாழ்வின் நீட்சி இத்தனையும் படத்தின் வசனங்கள் வாயிலாக அலசப்படுவது கிடைத்தற்கரிய மனிதன் ஒருவனது நெடிய நேர்காணலைப் போன்ற நிறைவை ஏற்படுத்துகிறது.
படத்தின் இறுதி பத்து நிமிடங்கள் திரைக்கதை உத்திகளின் மகத்துவமான நிமிடங்கள் என்பேன்.வெறும் காட்சி அனுபவம் என்பதிலிருந்து விலகி இந்தப் படம் பார்ப்பவர் மனங்களில் பல்வேறு சலனங்களை மாத்திரமல்ல புதிய திறப்புக்களையும் உருவாக்குகிறது என்பது மகா நிஜம்.

இதன் கதையை ஜெரோம் பிக்ஸ்பை பல்வேறு ஆய்வுகளுடன் கிட்டத் தட்ட 38 ஆண்டுகால தவ நிகர் உழைப்பின் வாயிலாக வடித்திருக்கிறார்.அவரது மரணத்துக்குப் பின் இதனைப் படமாக்கியவர் ரிச்சர்ட் ஷெங்க்மேன்.அபூர்வமான திரைப்படம்


அன்புடன்
ஆத்மார்த்தி

21.12.2015