புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

இருப்பது கனவு 6

தாரை தப்பட்டை

பாலா படம் வருகிறதென்றால் என் நண்பன் "கோழி" சீனிவாசனுக்கு உடம்பெல்லாம் வியர்க்கும்.அருள் வந்தாற் போல் அந்தப் படத்தின் விளம்பரத்தையே அடிக்கடி உற்றுப் பார்த்துத் தன் தலையை மானாவாரியாக அவ்வப்போதுகளில் குலுக்கிக் கொள்வான்.இன்னும் பத்து நாள் இருக்கு எட்டு நாள் இருக்கு அஞ்சு நாலு மூணு என்று தனக்குத் தானே கவுண்ட் டவ்ன் செய்துகொண்டிருந்து விட்டு முதல் நாள் முதல் ஆளாக எதாவதொரு தியேட்டரில் சென்று முழுப்படத்தையும் பிளந்த வாய் மூடாமல் பார்த்து விட்டு வருவான்.அதற்கப்புறம் இரண்டொரு நாட்கள் ஜன்னிஜூரம் நீங்காத டோராபுஜ்ஜி போல் இருந்து விட்டு மெல்ல சன்னதம் மறந்து இயல்புக்குத் திரும்புவான்.அப்படி ஒரு பாலா ரசிகனை பாலாவே பார்த்திருக்க மாட்டார்.

கோழி சீனிவாசன் ஒரு சிக்கன் கடை ஓனர்.என்ன ஒன்று..தான் வெட்டுகிற அத்தனை கோழியிடமும் சதா மன்னிப்புக் கோரிக் கொண்டே இருப்பான்.நீங்களும் நானும் சிக்கன் லெக் பீஸை பார்த்ததும் என்ன செய்வோம்..?ஆர்டர் செய்து கடித்து தின்னத் தானே பார்ப்போம்..?ஆனால் கோழி சீனிவாசன் தன் வாழ்நாளெங்கும் எங்கெல்லாம் லெக் பீஸ்களைப் பார்க்கிறானோ அப்போதெல்லாம் சாஷ்டாங்கமாக அந்த ஒற்றைக் காலில் விழுந்து வணங்கிக் கதறிக் கண்ணீர் உகுப்பான்.தான் ஒரு பாவி என்று தலையில் அடித்துக் கொள்வதும் அவன் ஸ்பெஷாலிடிகளில் ஒன்று.தான் எந்தக் கோழியின் இடது காலாகவோ அல்லது வலது காலாகவோ இருந்ததை மறந்து பொரிந்து செக்கச்செவேலென சில்வர் காகிதத்தில் சுற்றப்பட்டிருக்கும் அந்த சிங்கிள் காலுக்கே கோழி சீனிவாசனைப் பார்க்கையில் சிரிப்பு வரும்.இந்த முரண்பாட்டை என்னவென்பது..?யாருக்காக அழுகிறானோ அந்தக் கோழிக்கே அவனது அழுகை சிரிப்பைத் தான் வரவழைக்கிறது என்பதை எடுத்துச் சொல்ல யாரும் முனையவில்லை.இருந்தாலும் கோழி சீனிவாசன் பல கோழிக்கொலைகளைச் செய்வதையும் நிறுத்திவிடவில்லை.கோழிக் கால்களின் முன் வீழ்ந்து கதறி மன்னிப்புக் கேட்பதையும் நிறுத்திக் கொள்ளவில்லை.இரண்டுக்கும் இடையிலான நிதர்சனத்தில் அல்லாடும் அவனைக் காப்பாற்ற வந்த குருநாதராகத் தான் இயக்குனர் பாலாவை மானசீகமாக எண்ண ஆரம்பித்தான் சீனிவாசன்.

எனக்கும் அவனுக்கும் மிகக் கடுமையான முரண்பாடு வரும்.ஆனாலும் விடாமல் மெகாசீரியலுக்கு வசனம் எழுதுகிறா பின் நவீனத்துவ எழுத்தாளனின் இயலாமைக் கோபம் போன்ற விடாப்பிடிக் கோபத்துடன் திரிவான் சீனிவாசன்.

இந்த முறை தாரை தப்பட்டை படத்தை ஒரே ஷோவின் நானும் அவனும் பார்ப்போம் என்று நாங்கள் திட்டமிடவில்லை.ஆனால் அது இயல்பாக நடந்தது.படம் முடிந்து திரும்பி வரும் போது தான் கவனித்தேன்.கோழி ஆட்டோவில் வந்திருக்கிறான் என்று.நானாக வாலண்டியராக போய் வாயேன் என் வண்டியிலயே போயிடலாம் என்றேன்.முறைப்போடு ம்ம் என்று மட்டும் சொன்னானே ஒழிய ஒரு ஸ்னேகம் இல்லை.புன்னகை இல்லை.எல்லாம் பாலா எஃபெக்ட் என்று போலியாக பயம் காட்டி என் டூவீலரில் ஏற்றிக் கொண்டு நேரே வழக்கமாக நாங்கள் டீ சாப்பிடும் கடை வாசலுக்கு போனேன்.
ஆளுக்கொரு டீ சொல்லி அருந்த ஆரம்பிக்கும் போதும் கோழி சீனிவாசன் எதுவும் பேசவில்லை.பாலா படம் பார்த்தால் அவன் அதிலிருந்து வெளியேற நாளாகும் என ஏற்கனவே சொல்லி இருக்கேனல்லவா..அது தான்.

அந்த நேரம் பார்த்தா சென்னையில் இருக்கும் என் நண்பனும் டீவீ சீரியல்களில் உதவி இயக்குனராக இருப்பவனுமாகிய உத்தமனின் ஃபோன் வர வேண்டும்..?நேரே விஷயத்துக்கு வந்தான் உத்தமன்..என்ன மாப்ள படம் பார்த்தியா எப்பிடி என்று.பொங்கலுக்கு 4 படம் வந்திருந்தாலும் அவனும் கேட்கவில்லை நானும் சொல்லவில்லை.மற்ற மூன்றையும் விட தாரை தப்பட்டை தான் நான் பார்ப்பேன் என்று உத்தமனுக்கு மாத்திரமல்ல அவன் எதிரியான அயோக்கியனுக்குக் கூடத் தெரியுமே...

நான் உதட்டைப் பிதுக்கியபடி ஆரம்பித்தேன்."உத்தமா...பாலா வழக்கத்தை விட இதுல ரொம்ப களைச்சி போயிருக்காப்ல...எடுத்த கதையவே திருப்பி திருப்பி எடுக்குறதுல அவர் எக்ஸ்பர்ட்.பட் இந்த தடவை அது கொஞ்சம் கூட ஒர்க் அவ்ட் ஆகலைப்பா அப்டின்னேன்.என் கையில இருக்கிற ஃபோனை தன் பார்வையாலயே எரிச்சான் கோழி என்ன களைச்சி போயிருக்காப்ல...இந்தப் படத்துல என்ன குறை..?இல்லை என்னய்யா குறை..?இதை விட ஒருத்தன் என்ன படம் எடுத்துருவான்னு கேக்குறேன்..?ரசனை கெட்ட முண்டங்களுக்கு அறிவில்லாத தண்டங்களுக்கு இந்தப் படம் புரியாது"என்றான்.

எதிர்முனையில் உத்தமன் சிரித்தான்.என்ன மாப்ள கோழியும் நீயுமா போனீங்க...?அப்டின்னான்.ஆமாடா நீ ஏன் சிரிக்குறேன்னேன்

பின்ன சிரிக்காம..?பரதேசி முதல் ஷோ முடிஞ்சு நீ இதே டயலாகை சொன்னப்ப அவனும் அதே டயலாகை தானேடா பேசுனான்.இப்பிடி பாலா படத்துல கதைய ரிபீட் பண்றாப்லயே நீங்க ரெண்டு பேரும் டயலாகை ரிபீட் பண்றீங்க அப்டின்னு கெக்கெக்கேனு பயங்கரமா சிரிச்சான்.எனக்கும் சிரிப்பு தான்.ஆனா கோழி கொலைகாரனாய்டுவான் அதை விட என்னைக் கொன்றுவிடுவான் என்ற பயத்தில் அமைதியானேன்.

யாருமே படங்களில காட்டாத மனுஷங்களோட வாழ்க்கைய நுணுக்கமா ஒருத்தர் எடுக்குறாரு.பாராட்ட மனசு இல்லாட்டாலும் கொற சொல்லாமலாவது இருக்கலாம்ல..?அப்டின்னான் கோழி.

நான் சூடானேன்.இதுல கரகக் கலைஞர்கள் வாழ்க்கையை நுட்பமா பதிவு பண்ணிருக்கார்னு சொல்றதை விட அவங்களுக்கு பெரிய துரோகத்தை செய்துற முடியாதுடா கோழி அப்டின்னேன்.அவன் முறைச்சான்.

ஸ்பீக்கரை ஆன் பண்ணு அப்டின்னான் உத்தமன்.இவனுக்கு அவன் தான் செரி அப்டின்னு நானும் ஸ்பீக்கரை ஆன் செஞ்சேன்.

ஏண்டா கோழி...இதென்னடா கதை..?அரதப் பழைய கதை.ஒரு வில்லன் வேணும் பாலாவுக்கு.அவனை ஒரு ஹீரோ க்ளைமாக்ஸ்ல ஓடி ஓடி அடிச்சு தொரத்தி கொலை பண்ணனும்.அது வரைக்கும் சொல்லிட்டு வந்த கதையை அந்தர சந்தரையா அப்டியே நட்டாத்துல விட்டுட்டு எ ஃபிலிம் பை பாலா அப்டின்னு கூட்டெழுத்துல கார்டு போட்டுட்டு கெளம்பிடணும்.இதெல்லாம் நியாயமாடா அப்டின்னான்.

கையில இருக்கிற டீ கிளாஸை ஓங்கி தரையில அடிச்சான் கோழி.நான் நடுங்கிட்டேன்.

நாய்களா நாய்களா..உங்களுக்கெல்லாம் அறிவே வராதுடா..வழக்கமா பார்த்து தொலையிற கமர்ஷியல் சினிமாக்கள்ல இருந்து ஒருத்தன் உங்களை எல்லாம் காப்பாத்தி உலகத் திரைப்பட வரிசைல படம் எடுத்து உங்களை எல்லாம் மேடேத்தி விட்டுறணும்னு உயிரைக் குடுக்குறான்.நீங்க மரியாதை காட்டுற லட்சணம் இதாடா..?நாசமாப் போங்கடா நாய்ங்களா..அப்டின்னான்

அசப்புல தலைகீழா நிக்கிற நான் கடவுள் ஆர்யா மாதிரியே இருந்தான் கோழி.நான் நடுங்குறத நிப்பாட்டலை.ரெண்டு சிகரட்டை எடுத்து பத்த வெச்சி ஒரு சிகரட்டை கோழி கிட்டே கொடுத்தேன்.இன்னொண்ணை நான் இழுக்கலாம்னு நினைச்சேன்.எதிர்ல ருத்ர அவதாரமா அவனைப் பார்த்ததும் என்னை அறியாம சிகரட்டை கீழ போட்டு என் செருப்புக் காலால தேச்சி அணைச்சிட்டேன்.

(புகை பிடிப்பது கேன்சர் நோயை உருவாக்கும்.
புகை பிடித்தல் உயிரைக் கொல்லும்,
மது அருந்துதல் உடல் நலத்துக்கு தீங்கானது)


உத்தமன் ஒரு செகண்ட் அமைதிக்கு அப்புறம் ஆரம்பிச்சான்.அடேய் கோழி..உலகப் படம்னா வேர்ல்ட் மேப்புன்னு நினைச்சியாடா பைத்தியக்காரா...உலகப் படமெல்லாம் கிடைக்குதேடா...பார்த்துத் தொலைடா...பாலா எடுத்தது மொத்தம் ரெண்டே படம்.ஒண்ணு சேது.அதோட கதையை ரெண்டாக்கி ரெண்டு கேரக்டராக்கி பண்ணது தான் பிதாமகன்.அதுவும் இந்திப் படம் சத்யான்னு வந்திச்சே...நீயெல்லாம் பாக்கலியா..?அதுக்கும் பிதாமகனுக்கும் மையக் கதையில என்னடே பெரிய வித்யாசத்தக் கண்டே..?எரியும் பனிக்காடுன்னு ஒரு அற்புதமான நாவலை தன்னாலான அளவு கொதறினது தான் பரதேசி.படம் பார்த்த ஒவ்வொருத்தனும் தனக்குத் தானே கால் பண்ணி திட்டிக்கிட்டானுங்க..இத எல்லாம் கூட தாங்கிக்கலாம்டே...அவன் இவன் அப்டின்னு ஒரு படம்.அது என்னா அற்புதமான படம்டா..?ஓட்டைக் கண்ணாடி வழியா ஊரைப் பார்த்தவனுக்கு ஊர் உடைஞ்சி சிதறித் தாண்டா தெரியும்.பாலா படமாம் பெரிய பாலா படம்.நான் கடவுள் சேது இது இரண்டு தான் சொல்லிக்கிற மாதிரியான படம்.சேதுலேருந்து வெளிய வர முடியாத பாலா இப்ப நான் கடவுள் லேருந்து வெளிய வரமுடியாமத் தவிக்குறாரு..இதுல தன்னைத் தானே கும்பிட்டுகிறார் போல..தான் எடுக்குறதை எல்லாம் பார்த்தே ஆகணும்னு நம்மளை எல்லாம் சாட்டை எடுத்து அடிக்கல்ல பாக்குறாரு..?

அடேய்....உனக்குக் கலைன்னா என்னான்னு தெரியுமாடா..?பாலா எடுக்குற எல்லா படமுமே நிஹிலிஸ்டிக் வகை இலக்கிய உன்னதங்கள் டா..உன்னை மாதிரி பரதேசிகளுக்காகவா அவர் படமெடுக்குறாரு..?எங்களை மாதிரி நந்தாக்களுக்குத் தாண்டா அவர் படம் புரியும்."

""சூப்பர்டா கோழி...உங்களை மாதிரி நந்தாக்களுக்குத் தன் படங்களை காட்டி அவங்களை சேதுவா ஆக்குறது தாண்டா பாலாவோட லீலா..இருந்துட்டு போகட்டும்..

என்னைப் பொறுத்த வரைக்கும் பாலாவோட படங்கள் அதீதமான வன்முறை முழுவதும் முட்டாள்களாகவும் ஆணை சார்ந்திருப்பதை பெரிய வரமாக திணிக்கப் படும் பெண்களும் பெண்களையும் குழந்தைகளையும் அளவுக்கதிகமாகக் கொடுமைப்படுத்துகிற காட்சி சார் வன்முறையும் கஞ்சா போன்ற சமூகத்தின் மறையிருள் பழக்கங்களுக்குக் கலாச்சார வக்காலத்து வாங்கத் தலைப்படும் வக்கிரமும் அமைப்பை எதிர்த்து சாமான்யர்கள் எளிதாக வெற்றிபெறுவது போன்ற லாகிரித் தனமான காட்சிகளும் தமிழ் சினிமாவின் பெயர் பெற்ற மக்கள் அபிமானம் பெற்ற நடிகர்களைத் தன்னாலான அளவு வக்கிரமாகக் கிண்டல் செய்யும் விஷமத் தனமும் அளவுக்கதிகமான ரத்தமும் வெறியும் சிதைந்து உருத்தெரியாமல் நிர்க்கதியாக பொது மனங்களின் நம்பகங்கள் அனைத்தையும் தன்னாலான அளவு அலசிக் கலைத்து விடும் க்ரூரமும் தான் நிரம்பி இருக்கு.இதைப் பற்றி நீ மறுத்தா இன்னும் என்னென்ன படத்துல என்னென்ன இடத்துல எந்தெந்தக் காட்சிகள்ல பாலா இவற்றை எல்லாம் செய்திருக்கார்னு விலாவாரியா நான் சொல்லத் தயாரா இருக்கேண்டா கோழி" அப்டின்னான் உத்தமன்.

"போடா டேய்..டீவீ சீரியல்ல வேலை பார்த்துக்கிட்டு இருக்கிற உனக்கே இவ்ளோ அதப்பு இருந்தா பாலா..இந்தியாவோட ஏன் வேர்ல்டிலயே நம்பர் ஒன் டைரக்டர்.அவருக்கு எவ்ளோ அதப்பு இருக்கும்...?இல்ல நான் தெரியாமத் தான் கேக்குறென்.உனக்கு என்ன ரோமத்துக்கு கதை சொல்லணும்..?ஒரு கதை கதையா இருக்கணும்னு ஆர்டர் போட நீ யார்றா..பாலா படம்னாலே அப்டித் தான்.தான் எடுக்குறதை வேற யாரும் எடுக்காத மாதிரி எடுக்குற அசல் கலைஞன் தாண்டா பாலா..உனக்கு வலிக்குதுன்னா ஆந்திராவுக்கோ கேரளாவுக்கோ போடா" அப்டின்னு சசிக்குமார் மாதிரியே சிலிர்த்துக்கிட்டான்.

நான் இடையில புகுந்தேன்.இந்தப் படத்தைப் பத்தி கொஞ்சம் பேசுனா நல்லா இருக்கும் உத்தமன்..மிஸ்டர் கோழி...இதை சொல்லும் போது டீவீ விவாதங்கள்ல பரிதாபமா இடையில் புகுந்து சமாதானத்தை கெஞ்சுவாரே காம்பியரர் நல்லநல்லவர் அவரை மாதிரியே இருந்தது என் குரல்.

உத்தமன் கேட்டான் "ஏண்டா கோழி....என்னடா கதை..?கரக ட்ரூப் வெச்சிருக்கிற சசியோட அப்பா சாமிப் புலவர் ஒரு வித்வான்.அவர் இதே ப்டத்துல சிந்துபைரவி ஜேகேபி மாதிரி வெள்ளக் காரனுங்க மத்தியில ஒரே ஒரு கச்சேரி பண்றார்.அங்கயும் வெறும் சரக்க மட்டும் அடிச்சிட்டு காசு வேணாம்.பணம் வேணாம்.பட்டுத் துணி வேணாம் எதும் வேணாம்னு திரும்பி வந்து செத்துர்றார்.அதுக்கு மின்னாடி சசிக்குமார் அவரை ஏன் அந்த திட்டு திட்டுறாரு...?இதுக்கும் படத்துக்கும் என்ன சம்மந்தம்.?வரலட்சுமிக்கு கல்யாணம் ஆகும் போது மழு மழுன்னு ஷேவ் பண்ணின முகத்தோட தாலி கட்டுற வில்லன் சுரேஷ் அன்னிக்கு ராத்திரியே முதல் இரவுல பாதி டீராஜேந்தரா தாடியோட இருக்காரு..இண்டர்வல்னு போடுறாரு...அவர் கெட்டவர்னு காட்டியாச்சி.அதுக்குள்ளே தாடி எப்படி மொளச்சிதுன்னு நான் கேட்கலைப்பா...கேட்க மாட்டேன்.பாலான்னா தாடியும் பயப்படும்ல...அதானே லா..?"

செகண்ட் ஆஃப்ல கதை தண்ணியப் போட்ட மனுஷக் கொரங்கு மாதிரி தன் போக்குக்குத் திரியுது.அது இஷ்டத்துக்கெல்லாம் போகுது.எவனோ ஒரு பணக்காரன் வரான்.அவனுக்கு வரலட்சுமி வயித்துல கொழந்தையை இன்ப்ளாண்ட் பண்ணி அதுக்கு மின்னாடி அந்த வில்லன் சுரேஷை ஊருக்கு நடுவுல ஏதோ ரேஷன் கடை நடத்துறாப்ல பொண்ணுங்களை கொடுமைப் படுத்தி விபச்சாரம் நடத்துறவனா காட்டுறார் இயக்குனர்.அதே சுரேஷை வரலட்சுமியோட அம்மா அஞ்சாறு மாசமா தேடிட்டே இருக்காங்க.கலெட்டர் கிட்டே புகார் குடுக்குறாங்க.அதை உடனே கலெட்டர் தன்னோட ஆபீஸ் அதிகாரி ஒருத்தர் கிட்டே இதை விசாரிங்கன்னு சொல்லிட்டு உடனே வண்டியேறி கெளம்பிடுறார்...இதெல்லாம் எந்த ஊரு..?எந்த கலெட்டர்..?எந்த காலகட்டம்..?மீடியா ரேடியோ பத்திரிக்கை டீவீன்னு சர்வபலம் பொருந்திய இந்த காலத்துல அப்படியான ஒரு பெரிய மோசடிக்காரனை யாராலயும் கண்டே பிடிக்க முடியாம போகுது.ஆனா அதே சுரேஷை சசிக்குமார் சட்டுன்னு போயி கண்டுபிடிச்சிர்றாரு.அதே இடத்துக்கு வரலட்சுமியோட மம்மியும் வந்துர்றாங்க..யப்பா தலை சுத்துது...
இதை எல்லாம் விட ஜீஹெச் ல புகுந்து ஏய் டாக்டர் மரியாதையா வரலட்சுமிக்கு ஆபரேஷன் பண்ணு அப்டின்னு மிரட்டுற வில்லன் அந்த டாக்டர் முடியாதுன்னு சொன்னதும் உடனே ஏய் மார்ச்சுவரில வேலை பார்க்குற நண்பா..அதே ஆபரேஷனை உன் கோ ஆபரேஷன்ல நீயே பண்ணுன்னு வெட்டுக்கத்தி சகிதம் பிணவறைல ஆஜர் ஆகுற இந்தப் படத்தோட க்ளைமாக்ஸ் இருக்குதே....யய்யாடீ....அடேய் கோழி...ஆப்ஸ்ட்ரடிக்ஸ் அண்ட் கைனகாலஜிஸ்ட்ஸ் அசோசியேஷன் அப்டின்னு உலக அளவுல இயங்குற ஒரு சங்கம் இருக்கு.பிரசவ மருத்துவர்களோட உலகம் தழுவிய அமைப்பு அது.அதன் சார்பா இந்த வருஷம் சிறந்த டாக்டருக்கான விருதை ஏன் நோபல் பரிசைக் கூட பாலாவுக்கே கொடுத்துறலாம்னு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போறாங்களாம் தெரியுமா..?
பாக்குறவன் கேனையன்னு நினைச்சா பாழாப் போன பாலா இன்னும் பத்துப் படம் எடுப்பாருடா...அதை நீ வேணா பாலாபிஷேகம் செஞ்சி பாரு..எங்களை விட்டுறுடா கோழி"
பேசி முடிச்சான் உத்தமன்.

பேசி முடிச்சான் உத்தமன்.எனக்கு உடம்பெல்லாம் குளிரா இருந்திச்சி..கோழி தலையை சிலுப்பினான்.பின்னாடி ஏதோ தீம் ம்யூசிக் ஸ்டார் ஆகுறாப்ல ஒரு ஃபீலிங்.அவனோட கண்ணு ரெண்டும் வானத்த வெறிச்சிச்சி..கையையும் காலையும் நிப்பாட்டாம பலம்மா சுத்தினான்.அவனைப் பார்த்தா அவனே பயந்திருப்பான்.நான் எம்மாத்திரம்.என்னைத் துரத்திட்டு சசிக்குமாரோ ஆர்யாயோ நான் கடவுள் ராஜேந்திரனோ அல்லது ஆர்கேவோ இல்ல சுரேஷோ விக்ரமோ சூர்யாவோ இவங்க எல்லாரோடயும் கோழி சீனிவாசனும் பாலாவும் ஸ்லோ மோஷன்ல வர்றாப்ல இருந்திச்சி.திரும்பி பார்க்காம என் வண்டிய எடுத்தேன்.விட்டேன் ஒரு ஓட்டம்.எந்த சிக்னல்லயும் நிக்கலை.

பாலா கிட்டே எனக்கு பிடிச்ச ஒரே ஒரு விஷயம் இருக்கு.அதை சொல்லியே ஆகணும்.அது என்னன்னா...
பாலா ஒவ்வொரு படத்தையும் எடுக்குறதுக்கு ரெண்டு மூணு வருசமாவது எடுத்துக்கிறது தான்.
அந்த வகையில் அடுத்த பாலா படத்தை 2016 மே ஜூன்ல ஆரம்பிச்சா கூட 2018 ஜனவரில தான் குறைஞ்ச பட்சம் வெளியாகும்.ஹப்பா...இன்னும் எப்ப்டிப் பார்த்தாலும் ரெண்டு வருஷம் இருக்குதுடா ராசா....


பின் குறிப்பு.

தாரை தப்பட்டை.

சசிக்குமார் வரலட்சுமி ஜீ.எம்.குமார் ஆகியோருடன் இன்னும் சிலபலர் நடித்திருக்கிறார்கள்.சிலபலர் அழுதிருக்கிறார்கள்.சிலபலர் நடனமாடி இருக்கிறார்கள்.சிலபலர் சண்டைக் காட்சிகளில் சண்டையிட்டிருக்கிறார்கள்.சிலபலர் வசனம் பேசி இருக்கிறார்கள்.
இளையராஜா இந்தப் படத்துக்கும் இசை அமைத்திருக்கிறார்.
செழியன் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
மேற்சொல்லப்பட்டவர்களின் நடிப்பு இசை ஒளிப்பதிவு ஆகியன சிறப்பாகவே இருந்த போதிலும்.

இந்தப் படத்தை இவர்கள் யாராலும் காப்பாற்ற முடியவில்லை.