புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

இருப்பது கனவு 7

தொங்கு மீசைப் பேரரசர்

வரிசையாக விழாக்கள்.சனவரி மாதம் தனக்குண்டான ஒப்பனையோடு இந்த முறை வரவில்லை.வழக்கமாக சனவரி என்றாலே காகித ஜூரம் உடம்பெல்லாம் நடுநடுங்கும்.கடந்த பதினான்கு ஆண்டுகளாக சென்னை புத்தகத் திருவிழாவுக்கு வந்து கொண்டிருக்கிறேன்.இந்தாண்டு ஒரு இல்லை பல இல்லைகளின் கூட்டமைப்பைப் போல் ஆகியது சோகசேதி.டிசம்பரில் மழை பெய்தால் சனவரியில் புத்தக விழாக் கெடும் என்பது யாரும் எதிர்பாராத தொடர்வினை தானே..?என் இரண்டு புத்தகங்கள் வர இருக்கின்றன.சனவரியில் வந்திருக்க வேண்டியவை.சற்றுத் தள்ளி வரும்.

அதைத் தாண்டி சென்ற மாதம் மதுரை அரிமா சங்கத்தின் சார்பாக ஏற்பாடாகி இருந்த பாரதி விழாவில் கலந்து கொண்டது பேச்சுக்காரனாக எனக்கும் திருப்தியைத் தந்ததென்றே சொல்ல வேண்டும்.இந்த மாதம் பொங்கல் விழாவுக்காக நான் படித்த புனித மரியன்னை மேல் நிலைப்பள்ளிக்கு அழைக்கப் பட்டிருந்தேன்.உள்ளேயும் வெளியேயும் நான் பெரிதும் என்னைக் கட்டமைத்துக் கொண்ட என் பள்ளி.எத்தனையோ மாறி இருந்தாலும் நினைவுகளின் தேம்பலுக்கும் நுரைத்தலுக்குமான பிரதான இடம் பள்ளிக்கூடம் தான் என்றே தோன்றுகிறது.அவரவர்க்கு அவரவர் பள்ளி.

லைஃப் ஆஃப் ஜோசுட்டி திருஷ்யம் எடுத்த ஜீத்து ஜோஸப்பின் அடுத்த படம்.ஜீத்துவின் கதை சொல்லல் ஒரு மாதிரி தன்னிஷ்டத் தேடல் எனலாம்.நின்று நிதானமாக ஒரு கதையை விஸ்தரித்துக் கொண்டு போவதும் எல்லா நேரத்தின் இடவல சாத்தியங்களையும் ஒரு படைப்பாளியாக சமரசம் ஏதுமில்லாமல் அவற்றின் போக்கிலேயே பரீட்சித்துப் பார்ப்பதையும் ஜீத்துவின் தனித்துவமாகச் சொல்வேன். ஜோஸூட்டியின் காதல் தோற்று பின் தன் குடும்ப நலனுக்கான ஒரு தியாக சமரச கல்யாணத்தில் ஈடுபட்டு அதிலும் முரண்பட்டு வெளியேறி வேறொரு சேரவியலாக் காதலுக்குள் மெல்லத் தடுமாறி நுழைந்து வாழ்வின் ஆதார ஸ்ருதியான தந்தையை இழந்து புகுந்த நாட்டிலிருந்து திரும்பி மீண்டும் நாட்டுக்காரனாய்ச் சொந்த ஊருக்குத் திரும்பி தன் உற்ற நண்பன் இறப்பு வரை அவனைப் புறக்கணித்ததன் சுய ஒவ்வாமை தாளாமல் விக்கி விக்கி அழுகிற சராசரியாய்க் காணவாய்க்கிற மத்யம மலையாளியின் இருபதாண்டு வாழ்வின் அலைதல் வரைபடம் இந்தத் திரைப்படம்.மலையாளம் தெரிந்தவர்களுக்கு இந்தப் படம் கூடுதல் தேன்சுவைக்கு இதன் வசனங்கள் காரணமாகும்.சமீபத்தில் இத்தனை ரசிக்கவைத்த வசனங்கள் வேறில்லை.இசை ஒளிப்பதிவு உள்ளிட்ட பலதும் கவனமாய் உடனுழைத்திருக்கிற அளவில் ஜோஸூட்டி சமர்த்துக் குட்டி.திலீப் வாழ்ந்திருக்கிறார் ஜோசூட்டியாகவே தான் இன்னுங்கொஞ்ச நாள் நமக்கெல்லாம் தெரிவார்.

அதிலும் ஜோஸூட்டியை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தவிக்கும் ஜெஸி ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் வேறு மார்க்கமின்றி வீட்டார் சொல்லும் மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டுகிற காட்சியில் நிமிர்ந்து உட்கார வைக்கும் திரைக்கதை அதன் பின்னதான ஜோஸூட்டியின் அலைதல் முடிவு வரைக்கும் ஜெஸியை ஜோஸூட்டியின் வாழ்விடை ஒரு துன்பியல் நகைச்சுவைக்கான குறியீடாக மாற்றி வைத்திருப்பது சுவாரஸ்யம்.கேரள சித்ரங்களில் மாத்ரமே சாத்யமான ட்விஸ்டானு அது.வளர சந்தோஷம்.


அடுத்த படம் ரஜினிமுருகன்.இந்தப் படத்தின் டைடிலுக்கு எதற்கு ரஜினி என்பதே தெரியவில்லை.முத்து முருகன் செல்வமுருகன் என்றெல்லாம் வைத்திருக்கலாம்.ரஜினி ஒன்றும் கோபப்பட்டிருக்க மாட்டார். இதுவும் ஒரு படம்.இதற்கு மேல் இந்தப் படத்தைப் பற்றி சொல்வதற்கு நான்கு  விசயங்கள் இருப்பதாக கருதுகிறேன்.

1.சூரி.
இன்னும் ரொம்ம்ம்ம்ம்ப மெனக்கெட்டால் அடுத்து சூரிதான்.அதற்குக் கடுமையான உழைப்பும் போலிசெய்யாத புத்தம்முயல்வுகளும் அவசியம்.செய்தால் நலம்.

2.ராஜ்கிரண்.
உங்கள் பல நல்ல படங்களை நினைத்துக் கொண்டே வாழ்ந்து விடுவோம் தமிழர்களாகிய நாங்கள்.நீங்கள் இப்படிப் பட்ட கதாபாத்திரங்களில் தயவு செய்து நடிக்க வேண்டாம்.ப்ளீஸ்..

3.இமான்.
பப்பர பப்பர பப்பாங்க் பப்பாங்க் என்று எழுதுவது கஷ்டம்.இது இமானின் காலகட்டம்.இமானின் இசை புத்துணர்வையும் மெல்லுணர்வையும் ஒருங்கே தக்கவைத்துத் தருகிறது.இமானிசம் என்றே இதனை சொல்ல முடியும்.தன் பேடர்ன் என்பதை இன்னும் விஸ்தரித்தால் இமான் தான் அடுத்த கிங்.


4.கீர்த்தி சுரேஷ்
மேனகாவின் மகள்.அந்தப் பெயர் அம்மாவை விட மகளுக்குப் பொருத்தமாய் இருக்கும் என்பேன்.இன்னும் கொஞ்ச தீபாவளி பொங்கல்கள் கீர்த்தி வசம் என்றே தோன்றுகிறது.இன்ஸ்டண்ட் ஜூர மேக்கர்.ஏன் இவ்ளோ அழகா இருக்கீங்க என்று கண்டிக்கும் அளவுக்கு அப்படி ஒரு அழகி.

சீன வரலாற்றின் ஒரு சுவையான மனிதர் ஷீ ஹ்வாங்டி.ஜெங்க் என்ற இயற்பெயரில் தனது 13 ஆவது வயதில் அரியணை ஏறிய பின் பல துண்டங்களாகச் சிதறிக்கிடந்த சீனத்தை ஒருங்கிணைத்த பின் தன்னை அதன் முதல் பேரரசராக அறிவித்துக் கொண்டார்.ஷீ ஹ்வாங்டியான தனது சாம்ராஜ்யம் இன்னும் பத்தாயிரம் தலைமுறைகளுக்குத் தழைத்துச் செழிக்கும் என்று அறிவித்துக் கொண்டார்.தலைவர் சும்மா சொல்லக் கூடாது செமையான ராஜாவாகத் தான் இருந்திருக்கிறார்.என்ன ஒன்று இவருக்கு ஒரே ஒரு அலர்ஜி தான்.ஸாருக்கு சாகப் பிடிக்கவில்லை.ஒரே பயம் தான்.

ஹ்வாங்டி ஜப்பானிய தீவுப்பகுதிகளில் செமையாக அலைந்து திரிந்து அமுதத்தைத் தேடியிருக்கிறார்.பல வருடங்கள் அமுதம் கிடைத்துவிடாதா என்ற அலைச்சலில் ஈடுபட்டிருக்கிறார்.இதற்காகப் பல மனிதர்களுடைய எத்தனம் மற்றும் பெருஞ்செல்வம் ஆகியவற்றைச் செலவழித்த ஹ்வாங்டி கடைசியில் அமுதம் கிட்டாமல் பரிதாபராக இறந்தார்.அதற்குப் பின் தான் க்ளைமேக்ஸே...இன்றிலிருந்து இரண்டாயிரத்துச் சொச்ச ஆண்டுகளுக்கு முன்னால் சீனத்தை ஆளவந்த முதல் பேரரசன் ஷி ஹ்வாங்டி மரணத்துக்குப் பின்னும் வாழ்வாங்கு வாழ்கிறார்.எப்படி என்றால் உலகின் கலாச்சாரப் பெருஞ்சேகரமாக அறிவிக்கப்பட்டிருக்கும் டெரகோட்டா ஆர்மியைப் பற்றிச் சொல்லியாக வேண்டும்.

மூன்று களங்களாக சீனத்தில் 1974 முதல் 1976 ஆமாண்டு வரைக்கும் கண்டறியப்பட்ட டெரகோட்டா ஆர்மி மரணத்துக்குப் பின் பேரரசரின் நல்வாழ்வைக் காக்கும் எட்டாயிரம் படைச்சிப்பாய்கள்  130 சாரட்டுக்கள் தலா நாலு குதிரைகளுடன் என மொத்தம் 520 குதிரைகள் 150 குதிரைகளுடனான குதிரைப்படை ஆகியன மற்றும் பலவிதமான மனித உருவங்களும் அடுத்தடுத்த மூன்று களங்களில் கண்டறியப்பட்டன.ஒரு காலகட்டத்தின் போர் சார் வாழ்வியலின் சாட்சியங்களாக உருவாக்கப்பட்ட மண்சிற்பங்கள் அந்தப் பேரரசரின் கல்லறையை இன்னமும் காவல்காத்து வருவது தான் ஹைலைட்.


இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு அம்சம் அத்தனை மண்சிற்பங்களான மனித உருவங்கள் பல்வேறு முகபாவங்கள் உருவக்குறிப்புகள் உடைகள் ஆயுதங்கள் என்று நுட்பமான பல்வேறு வித்யாசங்களுடனான கலாச்சாரப் புதையலாகவே இருப்பது தான்.வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று பார்த்தாக வேண்டிய ஒரு இடமாக இதனைத் தாராளமாகச் சொல்லலாம் தானே..?இன்றைய இரவு கனவில் அமுதத்தைத் தேடிய தொங்குமீசைப் பேரரசர் வராதிருப்பாராக.


தொடரலாம்.

அன்போடு
ஆத்மார்த்தி

26.01.2016