புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

தீராக்கடல் 21

சன்னதம் : பிறழும் பித்தும்

கவிதை எதையும் கற்பிக்க வேண்டியதில்லை.எதையும் நிறுவி ஆக வேண்டியதில்லை.கவிதை என்பது நரம்பு புடைக்கும் உத்வேகம் என்று ஒருபுறம் தோன்றினால் மறுபுறம் மண்ணுளி போல் நகர்ந்து நகர்ந்து மெதுமெதுவே காலத்தை ஏமாற்றிப் பிழைக்கவும் வல்லது.இதுதான் கவிதை என்று வரையறுப்பது முழுவதும் ஏற்புக்குரியதல்ல.

கவிதை என்பது வாழும் காலத்தை பிரதிபலிக்கவேண்டும்-வாழும் மனிதர்களின் அகச்சிக்கல்களை வெளிச்சொல்வதாகவோ அல்லது வெளியே சொல்லாமல் மறைத்து வைப்பதாகவோ இருத்தல் வேண்டும்-போலவே முந்தைய காலத்தை அகழ்ந்து வரும் காலத்தை நோக்கி மொழியினூடாக எதையாவது கடத்துவதாக இருப்பது கவிதையின் இன்னுமோர் கடன் என்றெல்லாம் கவிதையைக் கட்டாயப்படுத்த முடியாது.எதுபோலவும் இல்லாமற் போகும் சாத்தியமுள்ள வஸ்துவே கவிதை.அது போலவும் அது இராது எனலாம்.

மொழியறிவு அகச்சலனம் புற அழுத்தம் ஆகியன மூன்றும் சிதைவதற்கான சேர்மானத்தில் விளைவது கவிதையாகவும் இருக்கக் கூடும்.இந்த அளவில் இது ஒப்புக்கொள்ளத் தக்கதே.இத்தோடு நான்காவது விஷயமாக சன்னதத்தை நனவிலியை அருள் வந்து ஆடுவதைக் கொணர்ந்து சேர்க்கையில் தான் கவிதை குறித்த உரையாடலின் மேல் திவலைகள் கசியத் தொடங்குகின்றன.

ஏன் கவிதை குறித்து எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்..?இதையே மாற்றிக் கேட்க முயன்றால் ஏன் எல்லா மொழிகளிலுமே (ஆங்கிலம் தவிர்த்து) கவிதையியல் குறித்துப் பெரிய அளவில் யாரும் எழுதுவதில்லை(இருப்பு மிகவும் குறைவே.தமிழில் கவிதையியல் குறித்த உரையாடல்களாகட்டும் கட்டுரைகளாகட்டும் தீர்மானங்களாகட்டும் மிகச்சொற்பமே.)தமிழில் புதுக்கவிதை என்ற ஒன்று தோன்றி முதல் நூற்றாண்டை நிறைவு செய்ய இருக்கிறோம்.
நிற்க.சன்னதத்தின் சன்னதிக்குள் நுழையலாம்.


எனக்கே தெரிவதில்லை.எதையோ எழுதலாம் என அமர்கிறேன்.எதுவோ எழுதிவைக்கிறேன்.எழுதிய எனக்கே பிரமிப்பாக இருக்கிறது.நானா எழுதினேன்..?இதை நான் யோசிக்கக் கூட இல்லையே..?இதை அயர்ச்சியாகவும் பிரமிப்பாகவும் அணுகவேண்டி இருக்கிறதே..?இது நானா..?நான் என் பிரக்ஞையிலிருந்தா எழுதினேன்.என் ப்ரக்ஞை என்பது நானா..?என்னில் இருந்து விலகி ஏதேனும் ஒன்று என் கவிதை வரிகளை நிகழ்த்துகிறதா..?

கவிதை என்பது பித்து நிலை சார்ந்தது.பித்து நிலை என்பதற்குரிய வரைபடம் ஒழுங்கறுதல் சார்ந்தது.ஒழுங்கறுகையில் நேர்கிற விடுபடுதல் ஞாபகநம்பகங்களைத் தாண்டி ஒரு மனதின் அடியாழத்திலிருந்து வினைபுரியவல்லது.மொழி என்பது எழுத்துக்களின் மூலசித்திரங்களில் தொடங்கித் தொடர்ந்த மனனத்தின் பயிற்சியின் விளைவாகப் பரிச்சயம் உற்று அதன் தொடர்ச்சியாகப் புலமை கொள்வது வரைக்கும் பின்னதான எழுத்துப் படைத்தலை வந்தடையும் ஒரு வரைபடத்தின் தொடர்ச்சியாக இணைக்கச் சாத்தியமுள்ள புள்ளிகளை இணைக்கும் கோட்டைப் போன்ற முடிவை முன்வைப்பது.இந்த வரைபடத்தின் தொடர் புள்ளிகளில் ஒன்றா கவிதை..?இல்லை.


கவிதை என்பதற்கும் பிற எழுத்துக்கலை வடிவங்களுக்கும் உண்டான மகாமுதல் வேறுபாடாக எழுதுகிறவனின் நனவைச் சுட்டமுடியும்.கதையோ நாவலோ கட்டுரையோ ஒரு மனிதனின் மனதாழத்தில் அவனது தீர்மானத்தின் இரு அடைப்புக்குறிகளுக்குள் இயங்கவல்லவை.இதனை இன்னும் விரித்தால் ஒரு அயர்ச்சியுறும் வசனமோ காட்சி வருணனையோ இன்னபிறவோ யதேச்சையாக நிகழலாம் என்றாலும் கூட முன் தீர்மானத்தின் பெரும்பரப்பிற்குள் தான் அவையும் நேர்கின்றன என்பது திண்ணம்.ஆனால் கவிதை ஒரு மனிதனின் நனவின் பரப்பினுள் இயங்குவதில்லை.அவனது பிறழ் பித்து சன்னதம் ஆகிய மூன்று நிலைகளுக்குள்ளேயும் ஒழுங்கற்ற சித்திரங்களை நேர்ப்பிப்பதன் சாத்தியங்களே கவிதை.

மொழியும் மனிதனின் கவனமும் நேர்வினை ஆற்றக் கூடிய பிற படைப்புக்களிலெல்லாம் மொழி மற்றவேலைப்பாடுகளைப் போலவே இன்னுமொரு மற்றொன்றாகவே வினைபுரிகிறது.ஒரு நாவலோ குறுநாவலோ அல்லது சிறுகதையோ மொழியின் புலமைக்கான களமாகுமே தவிர மொழி கவிதையைத் தவிர்த்த வேறெந்தப் படைப்பினுள்ளேயும் சன்னத ஆட்டத்தை நிகழ்த்துவதில்லை.மொழி கவிதையினுள் மனிதனுடைய தனி மற்றும் கூட்டு மனநிலைகளை வைத்து விளையாடுகிறது.கவிதை என்பது மொழியின் ஆகச்சிரமமான வேலை என்பதை நிறுவுவதற்கல்ல இச்சொற்கள்.கவிதை என்பது மொழிக்குள்ளே இருந்தபோதிலும் மொழியைத் தாண்டிய அதீதம் என்பதே கூறத்தக்கதாகிறது.


ஸ்ரீநேசனின் பல கவிதைகள் மொழியின் ஆழத்தில் எங்கோ யாரோ பகிர்ந்துகொண்டிருக்கக் கூடிய ரகசியத்தைக் கேட்க வாய்க்கிற பைசாச உணர்தலை முன்வைப்பவை.அறிந்த சொற்களின் நடுவே சின்னதான அயர்ச்சியைத் திட்டமற்ற ஒரு நொடியில் நிகழ்த்திவிடுகிற வல்லமை ஸ்ரீநேசனின் எழுத்துக்களுக்கு உண்டு.அவரது ""காலத்தின் முன் ஒரு செடி"" புது எழுத்து பதிப்பக வெளியீடாக வந்தது.

எனக்குப் பிடித்த கவிதை 41


பேரண்டப் பட்சி


எல்லை மீறிய
இப்புவியின்
ஒரு சிறுபறவை
வரம்பற்றுப் பறந்ததன் வேகத்தில்
வானினூடே
பேரண்டப் பட்சியாகப்
பெருகி
வெளியெனப் பரந்து
மிதந்து நிற்கையில்
ஓயாத இயக்கத்தின்
தீராத பெரும்பசி
கண்ட
பறவையின் பார்வையில்
புவியொரு
தான்யமெனத் தெரிய
விழுங்கி விட்டது
இதை
இப்பேருந்தின் உள்ளிருந்து
காணும் என் இருப்பு
தான்யத்தின்
உள்ளியங்கிக் கொண்டிருக்கும்
ஒரு சலனத்துள்
நிகழ்ந்து கொண்டிருக்கும்
ஓர் அணு.

()()()()()()

அபத்தமாவது அற்புதமாவது... எல்லாம் கண்சிமிட்டக் காணக் கிடைப்பது.


தொடரலாம்

அன்போடு
ஆத்மார்த்தி


25.02.2016