புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

பாட்டுப்புத்தகம்இதைமட்டுமா இழந்தோம்? 5. பாட்டுப்புத்தகம்


என் நினைவின் படி நான் அப்போது 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என்று ஞாபகம்.நான் படித்தது செயிண்ட்மேரீஸ் பள்ளி.மதுரையில் கண்டிப்புக்கு பேர்போன தமிழ்வழிக்கல்வி நிலையம்.அப்போது ஆங்கில மீடியம் இல்லை.இப்போது உண்டு.வகுப்பில் கடைசியாகவும் உல்லாசக்குறும்புகளில் முதலாவதாகவும் வருவதென ரிஷிகளின் கொண்டை மீது நான் செய்திருந்த சத்தியத்தை மீற விரும்பாதவனாய் இஷ்டத்துக்குத் திரிந்தேன்.அப்போது எங்கள் பள்ளியில் விநோதமான ஒரு தண்டனை உண்டு.என்ன தவறு செய்தாலும் பள்ளியின் நடுவாந்திரத்தில் ஒரு ஆடிட்டோரியம் உண்டு.லீவ் எடுத்தாலும்,சேட்டை செய்தாலும்,ஃபெயில் ஆனாலும்,உடன் மாணவருடன் சண்டை இட்டாலும் அந்த ஆடிட்டோரியத்தில் தண்டனைக் காலம் முழுவதும் அது அனேகமாக இரண்டு நாளில் துவங்கி இருவாரங்கள் கூட இருக்கலாம் பள்ளியின் வேலை நேரம் முழுக்க அமர்ந்திருக்க வேண்டும்.ஒரு நாள் அருட்தந்தை அழைத்து அன்போடு அடித்து பிறகு வகுப்புக்கு செல்ல அனுமதிப்பார்.படிக்கிற மாணாக்கர்களுக்கு அந்த தண்டனைக் காலம் நரகம்.ஆனால் எனக்கு சொர்க்கம்.சொர்க்கமோ சொர்க்கம்.

என் உளவியல் வேறாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.எதற்குப் படிக்க வேண்டும் என்று ஜென் தத்துவ ஞானிபோல் எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டு அவ்விடத்தில் இருந்து பதில் வராத காரணத்தால் பொத்தாம்பொதுவாக சரி படிக்கவேண்டாம் என்ற பதில் தான் வரும் போலிருக்கிறது என்று எனக்கு நானே முடிவெடுத்துக்கொண்டு(காமராஜர் படித்தாரா,கமல்ஹாசன் படித்தாரா…எனக்கேன் வேண்டும் கல்வி..?)என்று கொண்ட கொள்கையை விடாமல் பற்றிக்கொண்டிருந்த அந்த நாள் ஞாபகத்தில் கொஞ்சகொஞ்சூண்டைப் பெயர்ப்பதே இப்பதிவின் நோக்கம்.சாணித்தாளில் அந்த வெண்மை கிட்டத்தட்ட கறுப்புக்குப் பக்கத்தில் இருக்கும்.அதன் முகப்பில் ஒரு பெயரும் படமும் இருந்துதீரும்.பாட்டுப்புத்தகங்கள்.

பாடப்புத்தகத்துக்குள் மறைத்துவைத்திருந்த பாட்டுப்புத்தகத்தை தான் அந்த தண்டனை மேடையில் அமர்ந்து மனனம் செய்தபடி காலம் கழிப்பதென் வழக்கம்..எனக்காவது தண்டனையாவது…?ஒரு நாள் அருட்தந்தை அந்தோணி ஆரோக்கியம்(இன்றைக்கும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறார்.சமீபத்தில் வாக்கிங்க் சென்றுகொண்டிருந்தவரை சந்திக்கையில் தூசிவிழாமல் கண்ணெல்லாம் கலங்கியது.) தன் அறையில் இருந்து எழுந்து வந்தார்.அவரை ரெக்டர் என்று அழைப்போம்.என்னருகில் நின்றது வரை நான் நிமிர்ந்து பார்க்காமல் என் புத்தகத்துக்குள் இருந்த பாட்டுப்புத்தகத்துக்கு (அனேகமாக அது சின்னதம்பி படப்பாடல் புத்தகமென்று நம்புகிறேன்) என் கண்களையும் மனசையும் கொடுத்து இசையில் ஆழ்ந்திருந்தேன்.என் கையிலிருந்த புத்தகத்தை பிடுங்கிக்கொண்டு தன் அறைக்கு சென்றுவிட்டார்.

சர்வாங்கமும் தந்தி நடனம் ஒன்றை அபிநயிக்க முகத்தை மட்டும் விறைப்பாக வைத்துக்கொண்டு பின் தொடர்ந்து சென்றேன்.அவர் தன் நாற்காலியில் அமர்ந்துகொண்டார். பருமசரீரர் எங்கள் ரெக்டர்.இன்னுமொரு ஸ்பெஷல் தகுதி பாதிரியார்கள் அணியக்கூடிய அங்கியின் சிவப்புப் பட்டி தவிர கராட்டே பெல்ட்டுகளையும் வாங்கிக் குவித்தவர்.அது வேறு ஞாபகத்துக்கு வந்து எள்ளி நகையாடியது.டீ ஆர் ராமச்சந்திரன் போல் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு நின்றேன்.என் புத்தகத்தை முதலிலும் என்னை ரெண்டாவதாகவும் புரட்டி எடுத்தார்.

தேவர்மகன் சிவாஜி போல் “ஒரு பாட்டு பாடுரீ”என்றார்.எவ்வளவோ என் தொண்டை இத்யாதிகளை நனைத்துத் தயார்படுத்திக்கொண்டு நாலு வரிகள் பாடியிருப்பேன்.மளேர் என்று பின் மண்டையில் ஒரு அடி.”ஏண்டா…உன்னைய கத்தவா சொன்னேன்..? பாடச்சொன்னேன்… பாடு..” என்றார்.

எனக்கு அப்போது சிறுவயது என்பதால் அதிகாரவர்க்கம் ஆணவம் இதெல்லாம் புரியாமல் இன்னும் இரண்டு மூன்று குரல்களில் பாடி அடிவாங்கிய பிறகு தான் எனக்கு லேசாய்ப் புரிந்தது.மனிதர் எப்படிப் பாடினாலும் அடிப்பார் என்று.இப்படி முன்னும் பின்னும் அடிவாங்கினாலும் அதன் பின்னும் எந்த சக்தியாலும் என்னையும் பாட்டுப்புத்தகங்களையும் பிரிக்க முடியவில்லை.

பாட்டுப்புத்தகங்கள்.கறுப்பு மையினால் முகப்பில் படத்தின் பேர் பெரியதாகவும் அதன் மேலே ஒரே ஒரு பிளாக் மூலம் பதிப்பிக்கப்பட்ட படம் வெறும் கறுப்பில் பெரும்பாலும் நாயகர்களின் ஆக்ரோஷம் அல்லது ஏதாவதொரு டூயட்டின் ஒரு காதல் கணம் இவ்விரண்டை தவிர வேறெந்த அடையாளமும் இருக்காது.முதன்முதலாக என் அப்பரிடம் போய் அப்பா…தொகையறா’ந்னு போட்டிருக்கானே…அது என்னது என்று கேட்டதும் அவர் அரைத் தூக்கத்தில் உச்சவெறுப்பில் “தொகையலா…அம்மாட்ட கேளு”என்றதும் என் இசை ஆர்வத்தை கொஞ்சமும் குறைக்கவில்லை.

பழைய படங்களில் இருந்து அன்றைக்கு ரிலீஸ் ஆகிற படங்கள் வரைக்கும் எல்லா படங்களுக்கும் பாடல் வெளியான சூட்டோடு சூடாக சிவகாசியில் அச்சாகி வந்துவிடும் பாட்டுப்புத்தகங்கள்.அதில் முதல் பக்கத்தில் கதைச்சுருக்கம் வேறு.

********************

தாய் தந்தை அறியாதவன் சூர்யா.ஊரையே ஆள்பவன் தேவா.இருவரும் மோதலில் சந்திக்கிறார்கள்.பிறகு சினேகமாகின்றனர்.உயிருக்கு உயிரான நட்பு அவர்களுக்கிடையில்.இவர்களை ஒழிக்க நினைக்கிறான் வில்லன்.அந்த ஊருக்கு புதிதாக வரும் கலெக்டர் அர்ஜூன் தன் அண்ணன் தான் சூர்யா என்று அறியாமலேயே அவனுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கிறான்.சூர்யா காதலிக்கிற பெண்ணுடன் அர்ஜூனுக்கு திருமணமாகிறது.சூர்யாவின் அம்மா சூர்யாவிடம் உன் தம்பியைக் கொன்றுவிடாதே என்று சத்தியம் வாங்குகிறாள்.

ஒருபுறம் நண்பன்.மறுபுறம் தம்பி.நட்பு வென்றதா..?உறவுகள் இணைந்ததா..?நண்பர்கள் பிரிந்தனரா…?

மீதியை வெள்ளித்திரையில் காண்க.

*********************

மேலே இருப்பது தளபதி படப் பாடல்புத்தகத்தில் இருந்த கதைச்சுருக்கம்.பாட்டுப்புத்தகங்களில் எடிட் செய்து படிக்கிற கதைச்சுருக்கத்தை இஷ்டத்துக்கு விரித்து எங்கள் தெருப்பையன்களிடத்தில் சரடுவிட்டிருக்கிறேன்.படம் ரிலீசாகி சண்டை போடும் ரமேஷ்,ஷண்முகம் போன்ற நண்பர்களிடம் நான் அப்ப்டி சொல்லவே இல்லையே என்று சாதித்ததும் உண்டு.

அந்தந்த படம் ரிலீசாவதற்குள் பாட்டுப்புத்தகத்தை வாங்கிவைத்துக்கொண்டு பாடிக்கொண்டே திரிவதை ஹாபி என்று நான் சொல்வதைவிட பாபி என்று என்னை பிறர் வைதது இன்னமும் மறக்கவில்லை.ஆனாலும் பாடல்கள் என் இதயத்தில்…..எனக்கு எப்போதும் இசைமயமாய் இருப்பதே பிரியம்.அன்றைக்கும் இன்றைக்கும்.

ஒரு படத்தின் பாட்டுப்புத்தகம் 25 பைசா.தொகுப்பாக 600பாடல்கள் இளையராஜா ஹிட்ஸ் எஸ்பீபி ஹிட்ஸ் என்று இருப்பதை தீவாளி சீசனில் எக்குத்தப்பாய் பணம் புழங்குகையில் வாங்கிக்கொள்வென்.மற்றபடிக்கு பழைய அதாவது அன்றைக்கு 1975க்கு பிறகான ஹிட் படங்களின் பாட்டுப்புத்தகங்களும் அன்றைக்கு 90-93 வரை ரிலீசான புதியபடங்களின் எல்லா பாடல்புத்தகங்களையும் சேகரித்துவைப்பதும் எப்போதெல்லாம் இல்லறம் கசக்கிறதோ அப்போதெல்லாம் நினைத்தாலே இனிக்கும் போன்ற எல்லோரும் விரும்பக் கூடிய பாடல்களை சிங்கநிகர் சூப்பர்சிங்கராகி பாடித்திரிந்ததும் ஞாபகப் பசுமரங்கள்.

இதை மட்டுமா இழந்தோம்..?

பிடித்த பாடல்கள் காதல் தூதாகி இருக்கின்றன.நேயர்விருப்பத்துக்கு கடிதம் அனுப்பி விட்டு தன் பெயர் வரும்வரை காத்துக்கிடக்கிற சுகானுபவத்தை,வானொலியை,பாடல்களை,இன்னமும் எண்ணிலடங்கா ஜீவனுள்ள பாடல்சார்ந்த நினைவுகளை,டைரியில் பிரத்யேகமாய்க் குறித்து வைத்துச் சேகரம் செய்த தன்விருப்ப வரிகளை இன்னும் இன்னும் எத்தனை இழந்திருக்கிறோம்.?

இன்னமும் பேசலாம்

அன்போடு

ஆத்மார்த்தி