புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

இருப்பது கனவு 8பிச்சைக்காரன்


பெயரிலிருந்து தொடங்கும் கிளைப்பாதை


பிச்சைக்காரன் படத்தின் விளம்பரத்தைப் பார்த்த போதே மறு தினம் வெளியாகும் அந்தப் படத்தை முதல் காட்சி சென்று பார்த்து விடலாம் என்ற ஆவலாதி ஏற்பட்டது.பல படங்களை வெள்ளிக்கிழமை முதல் ஷோ பார்ப்பது என் மரபணுவில் பொதிருந்திருக்கும் முன்னோர் வாக்கு என்பதை சொல்லவேண்டியதில்லை.சென்றேன்.

எது திசை என்றே தெரியாமல் காற்றுக்கேற்ற சகல திசைகளிலும் அசைந்தாடுகிற தமிழ்சினிமா என்னும் வஸ்துவில் யாராலும் மீற முடியாத முதல் விஷயம் செண்டிமெண்ட்.அனாதை பணக்காரனாகவும் துரோகி குருதிப்புனலாகவும் தெருப்பாடகன் புதுப்பாடகனாகவும் மாற்றப்பட்ட பெயர்கள்.கொஞ்சூண்டு நெகடிவ் வாடை வந்தாலே கூட அதற்காக வினியோக உரிமை வேண்டாம் என்று மறுப்பவர்கள் துவங்கி நடிக்க மறுக்கும் ஆர்டிஸ்டுகள் திரையிட மறுக்கும் அரங்கங்கள் என்று பெரிய செண்டிமெண்ட் கோழி தான் சினிமா.ஃப்ளைட்டில் பெட்டி கொண்டு வந்தால் ஓடாது க்ளைமாக்ஸில் துப்பாக்கி தூக்கினால் ஓடாது படம் எடுத்து ரிலீஸூக்கு முன் அதில் சம்மந்தப் பட்ட யாராவது இறந்து விட்டால் ஓடாது என்று பற்பல நம்பிக்கைகள் சுற்றியுலாவும் தமிழ் சினிமாவில் எல்லீஸ் ஆர் டங்கனுக்கே இப்படி ஒரு பெயரில் படமெடுக்க வாய்ப்புக் கிட்டியிருக்குமா என்று சிந்தித்தால் இராது என்றே தோன்றுகிறது.நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அழகான படம்.பிச்சைக்காரன்.இந்தப் பெயரை மனதினுள் ஒரு மந்திரம் போலப் பதிய வைத்திருக்கும் யூனிட்டுக்கு அன்பும் முத்தங்களும்.

கதை அறிந்த கதைதான்.தம்பிக்கு எந்த ஊரு ரஜினி அல்லது துள்ளித் திரிந்த வானம் பிரபுதேவா பணக்கார நாயகன் சந்தர்ப்பவசத்தால் ஏழையாக நடிக்க நேர்வது.இங்கே பிச்சைக்காரன் துவக்கமே வேறுபடுகிறது அழகு.

உன் அம்மா பிழைக்க வேண்டுமானால் கோடிகளைக் கொட்டி வைத்தியம் பார்த்தும் பலனில்லை என்றான பிற்பாடு திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்றாற் போல் ஒரு மண்டலம் 48 நாட்கள் நீ உன் அந்தஸ்து பணம் எதையும் பயன்படுத்தாமல் பிச்சை எடுத்து உண்டு வாழ வேண்டும்.ஒரு பைசாவைக் கூட மறு நாளைக்காக சேமிப்பதோ மேலெழுதுவதோ கூடாது என்று ஒரு சாமியார் சொல்கிறார்.அம்மாவுக்காக 48 நாட்கள் தன்னை ஒளித்துக் கொண்டு பிச்சை எடுக்கத் தொடங்கும் நாயகன் அந்த ஒரு மண்டல தவத்தை எப்படிப் பூர்த்தி செய்கிறான் என்பதே கதை.

பிச்சைக்காரர்களின் மேல் கரிசனமே வருகிறது.படம் முழுவதும் நம்பிக்கையூட்டும் பல காட்சிகள்.இந்த சிக்கலான வறட்சி ததும்புகிற கதைக்கு அட்டகாசமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் சசி.படம் முழுக்க அலுப்பே தட்டாமல் விறுவிறுப்பாக நகர்வது பெரிய பலம்.
நடிக தேர்வு அடுத்த சிறப்பம்சம்.எல்லாருமே அளவாக அழகாக நடித்திருக்கிறார்கள்.மிக முக்கியமாக கதாநாயகிக்கும் விஜய் ஆண்டனிக்கும் இடையே மலரும் நட்பும் காதலும் வெகு காலத்துக்குப் பிற்பாடு ஒரு முழுமையான பெண்ணை சித்திரப்படுத்தி இருக்கிறார் சசி.நம்பகத் தன்மைக்கு ஊறுவிளையாத அத்தனை காட்சிகளும் அழகு.


இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் பதினைந்து நிமிடங்கள் தியேட்டரில் பல முறை கைதட்டுகிறார்கள்.மனித நேயம் பாசம் அன்பு உள்பட இந்த நூற்றாண்டில் நூலாம்படை பிடித்து எங்கோ கிடக்கிற வார்த்தைகள் பலவற்றுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் சசி.இது தான் கதை என்ற பிற்பாடு கிளைக்கதைகள் ஒவ்வொன்றும் முடிவை நோக்கித் தேவை நிமித்தம் நகர்வது இன்னும் சிறப்பு.ஒளிப்பதிவாகட்டும் வசனங்களாகட்டும் நச்சென்று இருக்கிறதை தனியே சொல்ல வேண்டும்.

இசை மற்றும் நடிப்பு இரண்டிலும் மனதை அள்ளுகிறார் விஜய் ஆண்டனி.இப்படி ஒரு படம் எடுத்ததற்கு கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி நெற்றியில் முத்தமிட்டுப் பாராட்டலாம்.வெற்றியாவது தோல்வியாவது மனித எத்தனத்தின் கூட்டு முயல்வுகளில் உன்னதமானது சினிமா.இப்படி ஒரு திரைப்படத்தை வெறுமனே காகிதத்தில் கனவு கண்டாலே புனிதம் தான்.திரைப்படுத்தியதற்காகவும் இசை அமைத்து நடித்ததற்காகவும் மும்மடங்கு மனதாழ வாழ்த்துகளை இளம் படைப்பாளியான விஜய் ஆண்டனிக்குச் சொல்லலாம்.

சசி திரைத்துறையில் பல சவாலான படங்களை அழகுற மெய்ப்பித்தவர்.டிஷ்யூம் மற்றும் பூ ஆகியன காலம் கடந்து நிற்கும் சசி படங்கள் என்று இதுவரை ஒரு வாக்கியம் இருந்தது.இனி அதை டிஷ்யூம் பூ பிச்சைக்காரன் படங்கள் காலம் கடந்து நிற்கும் என்று திருத்தி எழுதலாம்.இன்னும் நிறைய எடுங்கள் சசி.