புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

இருப்பது கனவு 2.1

(புதிய முகம் இதழில் வெளியாகத் தொடங்கி இருக்கும் புதிய தொடர் இருப்பது கனவு இதன் முதல் அத்தியாயம் இங்கே)முகமற்றவர்களின் நகரம்


தொலைதலும் தேடலும் காத்திருத்தலும் இடையிலான ஏமாற்றமும் பதற்றமும் வருத்தமும் ஊடலும் கூடலும் புரிதலும் பின் சேர்தலும் காதலுக்கு மாத்திரமா..?வாழ்க்கையின் இலக்கணமாகவும் இத்தனை சொற்களைச் சொல்லலாம் தானே..?கடைசியாக தொலைத்து விட்டுத் தேடியது எதை..?கவனிக்கவும்...யாரை எனக் கேட்கவில்லை.அது பெரிய சப்ஜெக்ட்.எந்தப் பொருளைத் தொலைத்து விட்டுத் தேடினோம் என்ற கேள்வி ஸ்வாரசியமானது மட்டும் அல்ல.நம் நினைவுகளின் ஒழுங்கற்ற வனத்தில் நுழைவதற்கான சாவியும் அந்தக் கேள்விதான்.நான் அடிக்கடி தொலைத்து விட்டுத் தேடுவது சாவிகளைத் தான்.இப்போது கார் சாவி.முன்பு டூவீலர் சாவி.அவ்வப்போது பீரோ சாவி.

எத்தனை சாவிகள் நம் வாழ்க்கையில் சம்மந்தப் பட்டிருக்கின்றன.?முதன் முதலில் ஒருவருக்குச் சொந்தமாகும் சாவி எதனுடையது.?எனக்கு என் பதின்ம வயதில் ஒரு பெட்டி வழங்கப்பட்டது.வெளியூர்களில் விடுதியில் தங்க நேர்கிற மாணவர்கள் எடுத்த எடுப்பில் பெரியதோர் ட்ரங்க் பெட்டியை வீட்டிலிருந்து எடுத்துப் போவார்கள்.அது வருடத்திற்கொரு முறை தான் மறுபடி வீட்டுக்கு வரும்.மற்றபடி பயணங்களுக்கென்று வேறு சிறு பெட்டியோ அல்லது பையோ இருக்கும்.விடுதியில் இருத்தப் படும் பெட்டியின் சாவி தான் சின்னவர்களின் உலகத்திலிருந்து பெரியவர்களின் நிஜ உலகத்திற்கான முதற்கதவைத் திறந்து வைக்கும்.நான் வீட்டிலிருந்தே படித்து முடித்தேன் என்றாலும் கூட என் பதின்ம வயதில் எனக்கென்று அழுது அடம்பிடித்து ஒரு ட்ரங்க் பெட்டியை வாங்கிக் கொண்டேன்.தீபாவளி சமயத்தில் அம்மா தொண்ணூறு ரூபாய்க்கு அந்தப் பெட்டியை எனக்கு வாங்கித் தந்தாள்.அதன் மேற்புறங்கள் முதலில் நீல வர்ணம் பூசியதாய் இருந்தன.சில வருடங்களுக்குப் பிற்பாடு பெயிண்டரைக் கொண்டு பச்சை வண்ணம் மாற்றப் பட்டது.

அந்தப் பெட்டியை அத்தனை நேசித்தேன்.அது தான் என் வாழ்வின் முதல் செல்வந்தம் என நம்புகிறேன்.எனக்கென்று இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் சின்னதோர் இடமாக அந்தப் பெட்டியின் உட்புறம் இருந்தது.அதனுள் இருக்க வேண்டிய பொருட்களை நான் தேடித் தேடித் தேர்வெடுத்தேன்.சொல்லப் போனால் அந்த வயதில் எனக்கென்று பிரத்யேகமாய் ஒரு பெட்டிக்கான எந்தத் தேவையும் இருந்திடவில்லை.ஆனாலும் அந்தப் பெட்டியே எனக்கான ப்ரத்யேகமாகப் பொங்கி வழிந்தது.அதனுள் சின்னச் சின்ன பொம்மைகள் குட்டி நோட்டுக்கள் ஒரு பர்ஸ்.காசு போட ஒரு ப்ளாஸ்டிக் டப்பா, பாட்டுப் புத்தகங்கள் ரஜினி படங்கள் பிக்ஃபன் ரன்கள் (BIGFUN என்று அந்தக் காலத்தில் ஒரு பபுள்கம் வரும்.அதன் உட்புறம் சின்னத் தாளில் ஒரு ரன் இரண்டு ரன் நான்கு ரன் ஆறு ரன் விக்கெட் மற்றும் கேட்ச் ஆகியன பதிவிடப்பட்டு ஒவ்வொரு வீரரின் படங்களும் இருக்கும்.அதனை வெறித்தனமாக சேகரித்தவர்களில் நானும் ஒருவன்).,என் உலகத்தில் அந்தச் சின்னத் தாட்களுக்குப் பெருமதிப்பு இருந்தது.

பொய்களும் கயமையும் சேர்ந்த பிற்பாடு தான் ஓருவனது வாழ்வின் ரகசியங்களும் உருவாகத் தொடங்குகின்றன.வயது அதற்கொரு பாலமாகிறது.குழந்தையின் கண்களல்ல பதின்ம வயதுக்காரனுக்கு இருப்பது.பதினைந்தாம் வயதில் காதலென்ற சொல் அத்தனைக் கிறக்கத்தைத் தந்தது.யாரையாவது காதலிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.எங்கள் பகுதியில்அடிக்கடிக் காண வாய்த்த ஒரு பெண்ணை (அவளும் அப்போது என் போலவே பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தவள் தான்.) என் ஒருதலைக் காதலியாக நியமித்துக் கொண்டேன்.என் காதலி என்று தூரத்தில் நிற்பவளை என் நெருக்கமான சினேகிதர்களிடம் சொல்லி மகிழ்ந்துகொண்டேன்.அப்படிச் சொல்கையிலேயே ஏதோ மொத்தக் காதலையும் வென்றெடுத்த சுகம் மேலோங்கிற்று.சொல்லிக்கொள்ள ஒருத்தி என்பது என் காதலின் குறைந்த பட்சத் தேவையாக இருந்ததே ஒழிய அவளை அணுகவோ என் காதலை அவளுக்குத் தெரிவிக்கவோ எனக்குள் தைரியமில்லை.அவள் என்ற ஒருத்திக்கு என்னைத் தெரியவே தெரியாது.

இந்த இடத்தில் என் பெட்டியினுடைய முக்கியத்துவம் அதிகரித்தது.இருக்காதா என்ன..?எனக்கென்று ஒரு டைரி.என் மனதை அழுத்தும் காதலைச் சொற்களின் வழியே காகிதத்தில் பெயர்த்து விடுவதற்கான லட்சியத்தை வரையறுத்தேன்.எழுதித் தள்ளினேன்.அவற்றைக் கவிதைகள் என்றும் அதற்குக் காரணத்தைக் காதலென்றும் நம்பினேன்.வயதின் கோளாறு தான் என்றாலும் கூட இயல்பான கிளர்ச்சியை எழுத்தென்னும் நுட்பக் கூடத்தில் மீண்டும் மீண்டும் கொண்டு சேர்த்தேன்.முந்தைய தினம் எழுதியது வரை அடிக்கடிப் புரட்டிப் படிப்பேன்.அப்போதெல்லாம் எனக்குள் ஒரு கற்கண்டுக் கட்டி உடைந்து தித்திக்கும்.என்னை நான் நேசிக்கத் தொடங்கியது அந்த டைரியின் வாயிலாகத் தான்.

ரகசியம் நுழையும் பொழுதே பதற்றத்தையும் உடன் அழைத்து வரும் இயல்புகொண்டது.என் பெட்டியில் டைரியை விட்டுவிட்டு வெளியே செல்வது பெரும் வாதையாயிற்று.என்ன செய்யலாம் என யோசித்து நான் வைத்திருந்த பேனா ஒன்றைக் காணோம் என்று அக்காவிடம் சண்டை போட்டேன்.வேறு ஒருவருடைய பொருளைக் காணோம் என்றால் என்னைச் சொல்லலாம்.என் வரலாறு அங்கனம்.இதில் நான் தொலைத்து பிறர் எடுப்பதாவது.வீட்டார் மொத்தமாக என்னை வெறுப்புமிழ்ந்து பார்த்தார்கள்.அன்றைய மாலையே திருநகர் 4 ஆவது நிறுத்தத்தில் சஞ்சீவி கடையிலிருந்து அந்தப் பெட்டிக்கென்று ஒரு பூட்டை வாங்கி வந்தேன்.அதன் சாவியில் முனி உயிர் உறையும் கிளி போல் என் காதல் உறைந்தது.

அது வெறும் பூட்டு சாவி அல்ல.அந்தப் பெட்டியை ஒரு நகரம் போல் கற்பனை செய்வேன்.அது என் நகரம்.அங்கே நான் ,மட்டும் வாழ்வேன்.எனக்குப் ப்ரியமானவர்களும் என்னோடு அங்கே இருப்பார்கள் என்றாலும் அவர்கள் பொம்மைகளைப் போலத் தான் அதனுள் தோன்றினார்கள்.முழுமை வாய்க்கவியலாத அந்தரம் அந்த நகரம்.அதன் அத்தனை வீதிகளிலும் என் ப்ரியத்தை அதன் சொற்களை என் ரகசியங்கள் அனைத்தையும் கொட்டி வைத்திருந்தேன்.நான் மட்டுமே புழங்குகிற உப சௌகரியம் எப்போதும் என் பெட்டி குறித்த ஞாபகமாகவே இருந்தது.நான் விரும்பிய பெண்ணின் பெயரை ஒரு மறைவிடத்தில் எழுதி வைத்திருப்பேன்.பல வண்ணங்களில் அதனை ஒரு சிற்பம் போலவே கருதினேன்.இளையராஜா ரஜினிகாந்த் கபில்தேவ் எழுத்தாளர் சுஜாதா பாலகுமாரன் என்று பலரது புகைப்படங்களை அந்தப் பெட்டியின் உட்புறம் ஒட்டி வைத்திருப்பேன்.

என் பெட்டி நகரம் எனக்கு அத்தனை விசுவாசமாக இருந்தது.என் மீது பெரும் அன்போடு இருந்தது.எனக்கு அந்தப் பெட்டிக்குள் எந்த ஏமாற்றமும் இல்லை.புற உலகின் கண்களுக்குத் தெரியும் நான் என்ற ஒருவனை விரும்பவோ வெறுக்கவோ இல்லை.என் பெட்டிக்குள் இருக்கும் நான்.இங்கே சொல்ல வந்தது என் முதற்காதலை மாத்திரம் அல்ல.அந்தக் கதையின் முடிவு எளிதாக யூகிக்கக் கூடியது தான்.அந்தப் பெண்ணுக்கு என் காதலை எடுத்துச் சொல்ல அவளுக்கும் எனக்கும் தெரிந்த ஒரு பெண்ணை நான் அணுகியதிலிருந்து மிகச்சரியாக ஒரு மணி நேரத்தில் என் வீட்டாரால் நையப்புடைக்கப் பட்டேன்.என் காதல் தீர்ந்தது.

சொல்லப் போனால் அது காதல் அல்ல என்பதே நிஜம்.மாறாக என் ரகசியங்களை நான் கொட்டி வைப்பதற்கான முதல் இடமாக எனக்கு அந்தப் பெட்டி வாய்த்தது.இன்றைக்கு நான் வாழ்ந்து கொண்டிருப்பதும் அதே அந்தப் பெட்டியின் பெரிதுபடுத்தப் பட்ட ஒரு வாழ்வைத் தானோ என்று இன்னமும் யோசிக்கிறேன்.ஒன்று நிச்சயம்.என் எழுத்தின் ஆதி ஆரம்பம் அந்தக் காதலை ஒட்டி நான் கைப்பற்றிய டைரியின் காகிதங்கள் தான்.என் காதலை இறக்கி வைப்பதற்காக நான் கடிதம் ஒன்றை நாடாமல் எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் உள் ஆழ மொழியாகக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்ததில் இருந்து என் வாழ்வின் தீராப்ரியமாகப் பொங்கிப் பெருகிக் கொண்டே இருக்கிறது எழுத்தின் மீதான இச்சை.எந்தச் சொற்களை நான் நம்பினேனோ எந்த மொழியின் மடியில் நான் புதைந்து கதறினேனோ அந்தச் சொற்களும் மொழியும் என்ன ஆரத் தழுவிக் கொண்டன.கைவிடத் தெரியாத தெய்வமொன்றின் மெய்மை போலாகி என்னுள் கலந்தன.

எந்தப் பெட்டிக்குள் என் காதல் கவிதைகளை எழுதி வைத்த டைரியை இருத்தி அதனை ரகசியமாய்க் காவற்காக்க அதற்கொரு பூட்டும் இட்டுச் சாவியை கணப்போதும் பிரியாது திரிந்தேனோ என் கண் முன்னால் அந்தச் சாவிக்கான தேவை அழிவதைப் பார்த்தேன்.அதன் பூட்டு என் காதலின் முடிவைப்போலவே உருகி என் அறையெங்கும் வழிந்தோடியது.இனி அதனைப் பூட்டத் தேவையில்லை என்ற நிஜம் என் காதலின் தோல்வியை விடவும் மனதைக் கனக்கச் செய்து என்னைத் துண்டந்துண்டமாக உடைத்தெறிந்தது.

என் பெட்டி நகரம் என்னை ஆற்றுப்படுத்தியது.சிந்தித்தால் எத்தனை பொருட்களை ஒளித்து வைக்க முயன்றிருக்கிறேன்.?எத்தனை ரகசியங்களுக்கு அந்தப் பெட்டி சாட்சியமாக இருந்திருக்கிறது..?என் பதினமத்தின் குருகுல வரிசையில் அந்தப் பெட்டி நகரத்தையும் சொல்ல வேண்டும்.காலம் மாறும் பொழுது உடன் சேர்ந்தபடி மெல்ல என் ரசனைகளும் மாறின.காதல் மீதும் வாழ்க்கை மீதுமான புரிதல்கள் மாற்றியமைக்கப் பட்டன.நான் கல்லூரியில் படிக்கத் தொடங்கினேன்.பெரியவர்களின் உலகத்தில் கவனிக்கப்படுகிற ஒருவனானேன்.எனக்கு என் வீட்டில் வழங்கப்பட்ட இடமும் சற்று அதிகரிக்கப் பட்டு ஒரு பெரிய அலமாரி எனக்கே எனக்கென்று கிடைத்திருந்தது.அதன் கீழ்த்தளத்தில் அந்தப் பெட்டியும் வெகு அந்தஸ்தோடு வீற்றிருந்தது.

ஒரு நாள் என் அக்கா தனது சான்றிதழ்களை எல்லாம் மர பீரோவில் வைப்பதற்கான இடத்தை வெகு சிரமத்தோடு தேடிக் கொண்டிருந்தாள்.அவளிடம் நான் "வேணும்னா என் பெட்டில வெச்சிக்கிறியாக்கா.?" எனக் கேட்டேன்.என்னை நம்பாமற் பார்த்தாள்."நீயாடா சொல்றே..?உன் பெட்டியை திறந்து கூடக் காட்ட மாட்டியேடா?" என்று அதிசயித்தவள் அப்போதே என் பெட்டிக்குள் தன் சான்றிதழ்கள் அடங்கிய கோப்பை இடம்மாற்றினாள்.

அன்றைக்கு நான் தூங்கி விட்டேன் என நினைத்து என் அம்மாவிடம் அக்கா சொன்னாள்."தம்பி பெரியவனாயிட்டான்மா.அவன் பெட்டியை எனக்குத் தந்துட்டான்னா பார்த்துக்கயேன்...என்று.எனக்கு
ள் ஏதோ திருப்தியாக இருந்தது.வெகு நேரத்துக்குப் புரண்டு கூடப் படுக்காமல் அப்படியே இருந்தேன்.சாலச்சுகம்.

ஒவ்வொரு ஊரிலும் பூட்டு ரிப்பேர்க்காரர்கள் இருப்பார்கள்.சாவி தொலைந்து போனால் பூட்டின் உள்ளளவை கொண்டும் சாவி செய்வார்கள்.ஒரே ஒரு சாவி இருந்தால் அதற்கான உடன்போலிகளையும் தயாரித்துத் தருவார்கள்.அப்படியான ஒருவரை முதன் முதலில் மதுரை தமிழ்ச்சங்கம் அருகே சந்தித்தேன்.அலட்சியமாகத் ஒரு சாவியை ரம்பத்தால் அறுத்து அறுத்து தயார் செய்துகொண்டிருந்தார். என் இரு சக்கர வாகன சாவிக்கான டூப்ளிகேட் செய்வதற்காக கொடுத்தேன்."அரை அவர்ல வாங்க" என்றார்."நீங்க தப்பா நினைக்கலைன்னா இருந்தே வாங்கிட்டு போயிர்றேன்" என்றேன்.அதற்கும் அலட்சியம் தான்.சரி என்றாற் போல் பார்த்துவிட்டு தான் தயாரித்துக் கொண்டிருந்த சாவிக்குத் திரும்பினார்.

ஒரு கேள்வியை சட்டென்று கேட்டுவிட்டு நான் சற்றுத் தயங்கினேன்.கேட்டிருக்கக் கூடாதோ என்று.ஆனாலும் அவர் அதை லேசான சிரிப்புடனே எடுத்துக் கொண்டார்.

"யார் கேட்டாலும் சாவி செஞ்சு குடுத்திருவீங்களா..?ஒருவேளை கெட்ட நோக்கத்துக்காக யாராச்சும் அணுகினா என்ன பண்ணுவீங்க என்றேன்.அவர் சிரிப்பு மாறாமல் அப்படி ஆளுகளை கிட்டத்லயே சேக்குறதில்லை.ஒண்ணு ரெண்டு பேர் வந்தாலும் முடியாது கஸ்டமான சாவின்னு சொல்லி கத்திரிச்சி அனுப்பிருவேன் என்றார்.
எப்படி கண்டுபிடிப்பீங்க..?" எனக் கேட்டேன்.
அவர் சொன்ன பதில் தான் இந்த இடத்தில் அவரை எழுத நிர்ப்பந்திக்கிறது.
ம்ப்ச்....மனுஷனும் பூட்டும் ஒண்ணு தான் தம்பி..ஒவ்வொருத்தன் மனசைத் திறக்குறதும் ஒரு சாவியோட வேலை தான்..கொத்துச் சாவியே  எங்கிட்டே இருக்கு.ஒண்ணும் பிரச்சினையில்லை என்றார்.
தொடர்ந்து மனிதர்களைக் கையாண்ட பிற்பாடு தோன்றுகிற ஒளி அந்த மானுடரின் முகத்தில் தெறித்தது.நான் வணங்கியபடியே எனக்கான சாவியைப் பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.மானுடம் பழுத்தலும் மேதமை தானே..?


பழைய புத்தகம் 1

The Concise Encyclopedia of LIVING FAITHS edited by R.C.Zaehner hawthom books
உலகில் எஞ்சியிருக்கும் மதங்கள் நம்பிக்கைகள் குறித்த முழுமையான திரட்டாக இந்தப் புத்தகத்தைச் சொல்ல முடியும்.இதன் வேறு இரு சிறப்புகள் இதன் எளிமையும் இதற்கான கட்டுரைகளைத் தந்தவர்களின் உழைப்பையும் சொல்லலாம்.நிகோலஸ் ஜெர்னோவ் எட்வர்ட் கோன்ஸ் ஏசி க்ரஹாம் ழிவி வெர்ப்லாவ்ஸ்கி உள்ளிட்ட பலரின் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கிறது.

தொடரலாம்

அன்போடு
ஆத்மார்த்தி