புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

மண்

ஊருக்குள் நுழையும் இடத்திலேயே கும்பலாய் ஆட்கள் கூடியிருந்தனர்.விடிவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது வானம்.அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசல் தெளித்துக் கொண்டிருந்தார்கள்.மந்தையைத் தாண்டியதும் டிரைவர் மாணிக்கம் திரும்பி "எப்படிப் போகணுங்கய்யா..?" என்றான்.எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்த ராசாங்கம் அவன் இரண்டாவது முறை அழைத்த பிற்பாடே கவனம் திரும்பி "நேராப் போயி இடது பக்கம் திரும்பு" என்றார்.அவர் பிறந்த ஊர் கீழக்குயில்குடி.என்றாலும் ஊருக்குள் வந்து இருபது வருடத்துக்கு மேல் ஆகிறது.

தெருவுக்குள் நுழையவே முடியவில்லை.நாலைந்து கார்கள் வேன் ஒன்று எக்கச்சக்கமாய் டூவீலர்கள் தெருவை அடைத்து நின்றுகொண்டிருந்தன.காரில் இருந்து இறங்கிக் கொண்டார் ராசாங்கம்.அவரைத் தொடர்ந்து முத்தையாவும் இறங்கினார்.டிரைவரிடம் திரும்பி "நீ போயி எதுனா டீ சாப்டுக்க.வண்டியிலயே தூங்கு.வேணும்னா கால் பண்றேன்" என்று முனகிய குரலில் சொல்லிவிட்டு நூறு ரூபாய்கள் ரெண்டைத் தந்தார்.எதும் பேசாமல் முத்தையாவுடன் நடந்தார்.

பெரிய வீட்டின் தாழ்வாரமெங்கும் சனங்கள் அழுகையைத் தங்களுக்குள் அடக்கியவாறு ஊர் எழுவதற்காகக் காத்திருந்தனர்.இவர்களின் தலையைப் பார்த்ததும் சுந்தரபாண்டி வேகவேகமாய் வந்தான்.என்ன சொல்லப் போகிறானோ என்று தயங்கிய முத்தையா அண்ணனின் தோளைப் பற்ற அவரும் நின்றார்.வந்தவன் "மாமா" என்றவாறு ராசாங்கத்தின் வலது கரத்தைப் பற்றினான்."பாண்டி..."என்று கேவத் தொடங்கினார் முத்தையா.

வீட்டின் உள்ளே நடுவாந்திரமாக பாயில் கிடத்தப்பட்டிருந்த விருமாயியின் பிரேதம் தெரிந்தது.ராசாங்கத்துக்கு கண் கலங்கிற்று.குரல் எழவில்லைஅவரது கை நடுங்கிற்று..கூட்டமாக அமர்ந்திருந்த பெண்கள் பெருங்குரலில் அழத் தொடங்கினர்.உள் ரூமில் ஒரு சேரில் அமர்ந்து யாருக்கோ செல்போனில் தகவல் சொல்லிக்கொண்டிருந்த சின்னப்பாண்டியின் தோளைத் தொட்டார்.எதையும் யோசிக்காமல் திரும்பியவன் வந்திருப்பது தன் தாய்மாமன் ராசாங்கம் என்றதை அறிந்ததும் குழப்பம்,சந்தோஷம் கோபம் துக்கம் என கலவையான உணர்தல்களை நொடிக்குள் கால்வாசி நேரத்தில் தன் கண்களில் காட்டிவிட்டு உடனே இயல்பாகி எழுந்தான்.அவனை அமரச்சொல்லி விட்டு இன்னொரு சேரில் அமர்ந்தார் ராசாங்கம்.

"மாமா உங்கக்கா பெரிய ரோசக்காரி மாமா...ஒரு வாரமா ரொம்ப முடியலை.மாமங்களுக்குத் தகவல் சொல்லவான்னு அண்ணன் கேட்டிச்சி.வேணமே வேணாம்னு சொல்லிரிச்சி மாமா" என்றவன் "நேத்து ராத்திரி மூச்சு விடக் கஷ்டமா இருந்தப்ப மதினி கிட்டே பெரியவனைக் கூப்பிடுன்னு சொல்லிச்சாம்.மதினி அண்ணனைக் கூப்டதுக்கு இவனை சொல்லலை.ராசாங்கம் வர்லியா இன்னும்னு கேட்டுச்சாம் மாமா.நெனப்பு தப்பிருச்சி போல"என்றான் உள்ளது உள்ளபடி.தன் தோள் துண்டால் வாயைப் பொத்தியபடி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார் ராசாங்கம்.அவர் கண்கள் கலங்கியிருந்தன.குமுறிக் குமுறி அழுதவனை நெருங்கி அவனைத் தன் தோளில் அணைத்துக் கொண்ட கணம் தானும் அழுதார் ராசாங்கம்.

சாவுகளில் பெரிய சாவு சின்ன சாவு என்றெல்லாம் இல்லை.ஆனால் மரித்தவர் மீது மற்றவர் கொண்டிருக்கிற அபிமானமும் அன்பும் அந்த இறுதி மரியாதையை சிறப்பிக்கின்றன.ஒரே ஊரில் கூட்டமாய் வாழ்ந்து புழங்கியவர்கள் பெருவாழ்வு வாழ்ந்து வயதாகி இறக்கையில் அதனை ஒரு வைராக்கிய விழாவாக ஒரு அலங்காரக் கொண்டாட்டமாக சிறப்பித்தல் காலம்காலமாய்த் தொடர்கிறது.அதிலும் விருமாயி என்ன சாதாரணமானவளா..?இதே ஊருக்கு வெளியே வரண்ட பூமியில் தானும் தன் மூன்று மக்களுமாக யாரையும் அண்டாம கையேந்தாம தானும் பொழைச்சி தன் மக்களையும் ஆளாக்கி நிமிர்ந்த பெரிய மனுசி..வீம்புன்னா வீம்பு.வைராக்கியம்னா வைராக்கியம்..அது தான் விருமாயி.

வீட்டிற்கு வெளியே வந்த ராசாங்கம் இப்போது பந்தல் அமைத்து சேர்கள் ஒழுங்காக வரிசையில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்..டிரைவர் இவரை இறக்கி விட்டு விட்டு கண்ணனூர் சென்று ராசாங்கத்தின் வீட்டிலிருந்து அனைவரையும் ஏற்றிக்கொண்டு வந்து காரை நிறுத்த பெருங்கூட்டமாய் எல்லோரும் இறங்கி ஓவென்றழுதபடியே வீட்டுக்குள் சென்றனர்.அவர்களை வரவேற்கும் விதமாக இப்போது வீட்டுக்குள் இப்போது பதில் அழுகை ஒரு பேரலையாய்க் கிளம்பியது.

பெண்கள் எப்போதும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறார்கள்.இதே வீட்டில் இப்போது விருமாயி அக்கா உயிரோடு இருந்திருந்தால்,எல்லோரையும் அதட்டி இருப்பாள். "ஏண்டி சிறுக்கி மக்கா...எதுக்குடி ஒப்பாரி வெக்கிறீய...எவஞ்செத்தாலும் எம்புட்டு அளுதாலும் வரவா போறாக...இல்லக் கூடச்சேந்து குழிய நெரப்பக் கூட்டமா கெளம்பிருவீகளா...?நிறுத்துங்
கடி உங்க நாடகத்தை.."என்று கிண்டலும் கோவமும் கலந்த தன் குரலால் பெருங்கூட்டத்தை அடக்கி இருப்பாள்..இன்றைக்கு அவள் சாவுக்கு அதே மாதிரி பேச யாரும் இல்லையே என நினைத்துக் கொண்டிருக்கையில் பின்னால் வந்த வைரம் ராசாங்கத்தின் தோளைத் தொட்டான்.

என்னய்யா என்றார்.இறுகின முகத்தோடு முத்தையா ராசாங்கத்திடம் "அண்ணே....இத்தனை வருசம் நம்மள அண்டவிடாம ரோஷங்காட்டிட்டு போயிட்டா புண்ணியவதி.நல்லதுக்கும் கெடுதிக்கும் எதுக்கும் நம்மளத் தேடிவந்ததில்ல...நாமளும் அப்டியே இருந்துட்டோம்...என்னத்தண்ணே கொண்டுபோகப் போறோம்...?நம்ம கூடப் பொறந்தது ஒத்தப் பொம்பளையாளு..எந்தக் கொறையுமில்லாம சிறப்பா செஞ்சுறணும்னே...எல்லாமே நம்ம செலவா இருக்கட்டும்னே..என்ன சொல்றே..?" என்றார்.

ஒன்றும் பேசாமல் தன் வேட்டியில் இறுக்கியிருந்த பச்சை பெல்டில் இருந்து ஜிப்பை திறந்து ஒரு ஆயிரம் ரூபாய்க் கட்டை எடுத்து நீட்டினார் ராசாங்கம்.அதே போலத் தன் அண்டர்வேரில் இருந்து இன்னொரு கட்டை உருவின முத்தையா.அதையும் ராசாங்கத்தின் கைகளிலேயே வைத்தான்.ரெண்டுபேருமாய்ச் சேர்ந்து வீட்டு வாசலில் நின்றுகொண்டு வருகிறவர்களை உள்ளே அனுப்பிக்கொண்டிருந்த பெரியவன் சுந்தரபாண்டியையும் சின்னப் பாண்டியையும் அழைத்துக் கொண்டு முன்னறைக்கு சென்றனர்.

"மாப்பிள்ளை....இதுல ரெண்டு ரூவா இருக்குது...வாடிப்பட்டி கொட்டு வடக்கம்பட்டி வேட்டு அவனியாபுரம் கரகம் சிம்மக்கல் டிரம்ஸ்..ஊர் முழுக்க மைக்செட் கட்டி சும்மா தூள் கிளப்பிறணும்ப்பா.....செத்தவ உனக்கு மட்டும் தாயி இல்ல பாண்டி..எங்களுக்கும் அவ தான் தாயி...எந்த விசயத்தையும் சுருக்கிடாதீய...இன்னும் என்னன்னாலும் செய்யலாம்..சும்மா இப்பிடி ஒரு ரதம் சுத்தூரு பத்தூருலயும் இல்லைன்ற அளவுல செஞ்சிறணும் மாப்பிள்ளை..."என்றார்.அவருக்கு குரல் கம்மியது.

"இல்லை மாமா...வேண்டிய மட்டும் காசுபணம் இருக்கு...இதையெல்லாம் நாங்க பாத்துக்குறோம் மாமா..."எனத் தொடங்கிய சின்னப் பாண்டியை அடக்கும் விதமாக "குடுங்க மாமா...உங்கக்காவுக்கு நீங்க ரெண்டு பேரும் நினைக்கிறதை செஞ்சி சிறப்பா தூக்கிவிடுவோம்...உங்க இஷ்டம் தான் மாமா..."என்றபடி அந்த பணத்தை வாங்கி அதை மீண்டும் தன் மாமன் கையிலேயே கொடுத்து "மாமா...இந்த ரெண்டு ரூவாயை நீங்களே வச்சி...எல்லாத்தையும் ஏற்பாடு செய்யுங்க...உங்க மனசுபோல எதை செஞ்சாலும் சம்மதம்தேன்..."என்றான்.

சின்னப்பாண்டி இதனை நம்பமாட்டாமல் அதே நேரம் அதற்கு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் அமைதியானான்.
"மண்ண மலர வெச்சு...விண்ண விளங்க வெச்சு.....பொன்ன புலரவெச்சு என்ன வளரவெச்சு...ஏ ஆத்தா.........எங்க குல தெய்வமே ஆத்தா....வாழ்ந்தா உன்னைய மாதிரி வாழணும்னு எல்லாரையும் நெனைக்க வெச்ச தங்கமே...ஆத்தா...."

யாரோ ரெண்டு பெண்மணிகள் தொங்குகிற மைக்கின் முன் மாரடித்து அழத்துவங்கி இருந்தனர்.கூட்டம் கூட்டமாக மக்கள்.அந்தத் தெருவே தலைகளால் நிரம்பித் ததும்பியது.அனைவருக்கும் காபி டீ கொடுத்தபடிக்கு இருந்தனர்.வீட்டின் உள்ளே சென்று அலங்கரித்த சிலையின் படுக்கை வசம் போலத் தோற்றமளித்த விருமாயியின் உடலுக்கு மாலைகளை சார்த்திவிட்டு வெளியே வந்து மரியாதைக்கு அமர்ந்தனர்.ஒரு ஓரத்தில் பேண்டு வாத்தியம் அடிக்க இன்னொரு பக்கம் அந்த தாளங்களுக்கு ஒப்பாத நடனமொன்றை கரகக் குழுவினர் ஆடிக்கொண்டிருக்க,அவர்களுக்கு அருகில் சென்று வம்புக்கிழுப்பதும் கண்ணடிப்பதுமாய் சில அசிங்கமான விரல் சைகைகளை செய்வதுமாய் இருந்தனர் குடிபோதையில் நிலைகொள்ளாத இளவட்டங்கள்.கூர்ந்து கவனித்தால் இன்னும் மணி நேரங்களைக் கடத்துவதற்கு அந்தச் சூழலே சின்னதொரு உத்திரவாதத்தை அளித்திருந்தது தெரியும்.

மரண வீட்டிற்கென்று ஒரு பிரத்யேக வாசனை வந்துவிடுகிறது.அந்த வாசனையை ஏற்படுத்துவது எரியும் சாண எருவாட்டியா அல்லது குவித்து வைக்கப்படும் ரோஜா மாலைகளா..?அப்படி இல்லை என்றால் கொத்தாக எரியும் ஊதுபத்தியின் மணமா?அல்லது ப்ரேதத்தின் உடலில் இருந்து ஒருவித வாசனை வருகின்றதா?எனத் தெரியவில்லை.ராசாங்கம் தன் மடியில் அமர்ந்திருக்கிற தன் மகள் வயிற்றுப் பேத்தி அனுஜாவை இறுக்கிக் கொண்டு யோசித்தார்.அவருக்குத் தெரியவில்லை.என்றாலும் இவை எல்லாமும் கலந்த சங்கமம் தான் அந்த வாசனையாக இருக்கக் கூடும் என நம்பினார்.அனுஜாவை வந்து வாங்கி கொண்டு உள்ளே சென்ற தன் மகள் பரமேஸ்வரியைப் பார்த்தார்.ஒழுங்காக உறவு பேணி இருந்தால் இந்த வீட்டின் இரண்டாவது மகன் சின்னப்பாண்டிக்கு மனைவியாக இருந்திருப்பாள் பரமேஸ்வரி.ஆன மட்டும் சமாதானத்தை ஏற்படுத்தி விடலாம் என எவ்வளவோ முயற்சித்தார் ராசாங்கம்.விருமாயி ஒத்துக் கொள்ளவில்லை.இந்தப் பக்கம் தன் தம்பி முத்தையாவும் வீம்பாக எதிர்க்கவே அந்த சமாதானப் படலத்தை கைவிட்டார் ராசாங்கம்.

ஒரு பிடிவாதம் சில வருடங்களை முரட்டடி அடிக்கிறது.ஒரு வைராக்கியம் குடும்பத்தின் உறவுகளை பகிரங்கமாகப் பகடையாட்டம் ஆடிவிடுகிறது.இன்றைக்கு நடந்தாற்போல் இருக்கிறது.கிட்டத்தட்ட இருபத்து இரண்டு வருடங்களாயிற்று.உறவு அறுந்து.தான் செய்வது தான் சரி என்று நினைக்கிற மனித மனம் எல்லா நேரங்களிலும் எப்போதும் நேர்வழிகளிலேயே நம்மை வழி நடத்தும் என்று சொல்லுவதற்கில்லை.இருபத்து மூன்று வருடங்களுக்கு முன்னால் தன் சொந்த அக்காவான விருமாயிக்கு பைத்தியம் பிடித்து விட்டதாக சொந்த தம்பிகளே சொன்னார்கள்.அப்படி சொன்னது அப்படியே இருந்தது.அந்த ஒற்றை வாக்கியம் உறவை அறுத்தது.குடும்பத்தை துண்டாடியது.எல்லோரும் விருமாயியைக் குறை சொன்னார்கள்.ஊரில் பெரும்பான்மையானவர்கள் சொந்தபந்தத்தினர்.கட்டப் பஞ்சாயத்துகளில் உறுதிகாட்டினாள் விருமாயி..."சொன்ன சொல்லுக்கு சாட்சி எதுக்கு....?பொறளுற நாக்குப் பேசுன பேச்சு சுத்தமா இருக்கணும்...பேச்சை மாத்தி மாத்திப் பேசுறதுக்கும் படுக்கையை மாத்தி மாத்திப் போடுறதுக்கும் என்னா வித்தியாசம்..?"

சின்னதொரு சபலம் தான் அண்ணன் ராசாங்கத்தையும் தம்பி முத்தையாவையும் மாற்றிப்போட்டது.விருமாயி மூத்தவள். எட்டு வயது இளையவன் ராசாங்கம்.அதற்கடுத்து இரண்டு பிறந்து நிலைக்கவில்லை.ஐந்தாவதாகப் பிறந்த ஆண்மகவு முத்தையா அக்கா விருமாயியின் கல்யாணத்தின் போது அவளுக்கு வயது பதினெட்டு.ராசாங்கத்துக்கு வயது பத்து.முத்தையாவுக்கு வயது இரண்டு.தான் பெறாத பிள்ளைகளாகவே தன் தம்பிகளை வளர்த்தாள் விருமாயி.தகப்பனும் தாயும் அடுத்தடுத்து கண்மூட, தம்பிகள் ரெண்டு பேரும் கரையேறட்டும் என வளர்த்தெடுத்தாள் இருவரையும்.இரண்டு பேருமே விவசாயம்,வீடு வாசல் என ஓரளவு நிலை பெறுகையில் விருமாயியின் கணவர் ஜெயக்கொடி புளியமரத்தில் புல்லட்டை மோதி அடியானார்.

அக்கா சொல்லே மந்திரம் என்று தான் இருந்தனர் தம்பிகளும்.அவளே பார்த்துப் பார்த்து கட்டி வைத்து குடித்தனம் அமைத்துக் கொடுத்தாள் இருவருக்குமே.சீர் கொணர்ந்த இரண்டு பெண்களுமே மரியாதைக்கு குறை இல்லாதவர்கள்.எல்லாம் நன்றாகத் தான் போய்க்கொண்டிருந்தது.ஊருக்குத் தெற்கே ஒரு கார்கம்பெனி வருவதாகப் பேச்சு கிளம்பி நிலங்களின் மதிப்பு குண்டக்க மண்டக்க ஏறத்துவங்கியது.ஆறு மாதம் டயம் கேட்டு தன் தந்தைவழிப் பங்கு பிரிக்காத பொதுச்சொத்தான பன்னிரண்டு ஏக்கர் பூமியை விலை பேசி ஒரு சேட்டிற்கு ஆறுலட்சத்திற்கு கிரயம் பேசி அட்வான்சாக ஒரு லட்சம் வாங்கி இருந்தாள் விருமாயி.வீட்டிற்கு மூத்தவள் விருமாயி என்பதைத் தவிர தம்பியர் இருவருக்கும் அவள் தாய் என்றே ஊர் சொல்லியதால் சேட் அவள் பேரில் அக்ரிமெண்ட் போட்டிருந்தார்.இன்னும் ஒரு மாதத்தில் கிரயம் முடிக்கவிருந்த நிலையில் நிலமதிப்பு குபீரென்று உயர்ந்தது.அண்ணன் தம்பி ரெண்டுபேரையும் நெருங்கிய சொந்தக்காரர்களே கலைத்தனர்.

சொன்ன மாதிரி சொன்ன விலைக்கு சொன்ன தேதிக்குப் பதிந்துகொடுத்தே தீருவேன் என ஒற்றைக்காலில் நின்றாள் விருமாயி.உடன்பட மறுத்த தம்பியரை எச்சரித்தாள்.,ஊர்க்கூட்டத்தில் வைத்து அவள் பங்கை மட்டும் விற்றுக்கொள்ளட்டும் என பேச்சு வந்தபோது உறவே இனி இல்லை என மிரட்டினாள்.எங்க அக்காவுக்குப் பைத்தியம் என்று சொன்ன முத்தையாவின் பக்கம் திரும்பி .ரௌத்ரம் காட்டினாள்.பணம் கண்ணை மறைத்தது.அண்ணனும் தம்பியும் கூடுதல் விலைக்கு ஆசைப்பட்டு அக்காளை உதறினர்.

உறவே இல்லை என்றான பின்னரும் தன் பங்கான நாலு ஏக்கரை மட்டும் சேட்டிற்கு விற்றாள் விருமாயி.குடும்பம் ரெண்டானது ரெண்டானது தான்,மத்யஸ்தம் பேச யார் வந்தாலும் சிரித்தபடியே அனுப்பி விடுவாள்.உறவுன்றது இல்லாமப் போவுமா எனக் கேட்கப்படுகையில் தெர்ல.ஆனா எனக்கு ஒறவ விட சொல்லு தான் முக்கியம்னு நினைக்கிறேன் என்பாள் மெலிந்த குரலில்.

நேற்றைக்கு ராத்திரி வரை விருமாயி என்ற ஒற்றை மனுஷியின் முடிவற்ற வைராக்கியத்தின் சாலை நெடியதாக இருந்தது.இன்றைக்குக் காலையில் சின்னப் பாண்டி ஃபோன் செய்து ராசாங்கத்தை எழுப்புவான் என அவருக்குச் சத்தியமாய்த் தெரியாது.

"மாமா....உங்க அக்கா,நம்மளை எல்லாம் விட்டுட்டு போயிட்டா மாமா..."என்றான்.
.............................
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்...வையகம் இது தானடா.....என பலவீனமான குரலில் சொல்லத் துவங்கிய ஆட்டக்காரனை அடக்கி மறித்து மைக்கிற்கு நேரே வந்த ஆட்டக்காரி....."ஏய்...இந்தா ஆம்பிளை....என்னா பாட்டு பாடுறே....உள்ளே செத்தருக்குதே மகராசி....எங்கே அந்த தெய்வத்தை ஏச முடியுமா...?இந்த ஊர் மட்டுமல்ல...ஈரேழு பதினாலு லோகத்திலயும் சொன்ன சொல்லுக்காக வச்ச வைராக்கியத்துக்காக வாழ்ந்து காமிச்சவ ஆத்தா விருமாயி...என்னா பேச்சு பேசுறே...ஒழுங்கா பாட்ட மாத்திப் பாடு...."என்றாள்.

உடனே ஆட்டக்காரன் மைக்கில்..."மன்னிக்கவும்....இதோ சரியான பாடல்....என்றபடி தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு.."வாழ்ந்தாலும் பேசும்....இறந்தாலும் பேசும்...வாழ்த்துக்கள் பாடும்....வையகம் இது தானடா..."என தானே மெட்டுக்குள் அடங்கியும் அடங்காமலும் வார்த்தைகளைப் போட்டு பாடலானான்.
ஒரு வெளிநாட்டுக் கார் வந்து நின்றது.உலகம் முழுவதும் தன் இந்தியத் தயாரிப்புக் காரை ஏற்றுமதி செய்கிற அந்த இளம் மார்வாடி பெயர் அமர்சிங் லால்சந்தானி.அவன் தன் வயோதிகத் தந்தை காரில் இருந்து இறங்குவதற்கு உதவி செய்தான்.மெல்ல நடத்தி அழைத்து வந்தான்.உள்ளே சென்று டிரைவர் கொடுத்த மலர்வளையத்தை விருமாயியின் உடல் மீது வைத்தார் கிழவர்.வெளியே மெல்ல நடந்து வந்தார்.அவர் யாரென அதற்குள் எல்லோருக்கும் தெரிந்து விட அவ்வளவு பெரும்பணக்காரர் எதற்காக கீழக்குயில்குடி என்னும் கிராமத்தை சேர்ந்த விருமாயியின் சாவுக்கு வருகிறார் எனத் தெரியாமல் விழித்தனர்.
பின்னாலேயே போலீஸ் வாகனங்களும் பிரஸ் மக்களும் கூட்டமாய்த் தெரிந்தனர்.

ராசாங்கத்துக்கு அந்த சேட்டை யாரென்று தெரியவில்லை.தானும் முத்தையாவும் சொல்மாறியது இந்த மனிதரிடம் தானா..?இத்தனை வருடங்களில் இன்னும் பெரிய செல்வந்தராகி வயதானவராகி இருக்கும் பெரிய சேட்டை பார்த்ததும் மனதினுள் ஏதோ உடைந்தது.சேட்.பெரியவர் சுந்தரபாண்டியின் கைகளைப் பற்றிக்கொண்டார்.அவரது கண்கள் பனித்திருந்தன."விருமாயி மீன்ஸ்...டிரஸ்ட்...எவ்ரி வேர்ட் இஸ் எ ப்ராமிஸ்.நான் என் வாழ்க்கையின் முக்கியமான பாடத்தை அந்த மனுஷியிடம் கற்றுக்கொண்டேன்.."என்றார்.சாயந்திரப் பேப்பர் நிரூபர் உங்க அம்மா படம் இருந்தா குடுங்க.ந்யூஸ் போடணும் என்றார்.சேட் .கிளம்பிப் போய் வெகு நேரம் ஆகியும் வெடிகள் சுற்றிலும் தீப்புழுதி கிளப்பியபடிக்கு சுழன்று வெடிக்க ஆடும் ரதத்தின் உயரத்தில் ஆடாமல் அசையாமல் படுத்தமர்ந்தபடி கண்மூடித் தனது பயணத்தை தொடங்கினாள் விருமாயி.முத்தையாவின் கைகளைப் பற்றியபடிக்கு ராசாங்கம் சொன்னார்..
"சொல்லு தான் பெருசுன்னு அக்கா அதட்டுற கொரல் இன்னம் கேக்குதுடா சின்னவனே "என்று.முத்தையாவின் கண்கள் இன்னுமோர் முறை கலங்கியது.