புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

இருப்பது கனவு 9

மூன்று மலையாளப் படங்கள்

மலையாளக் கரையோரம் அவ்வப்போது ஒதுங்குவதை ஒரு ஆகமமாகவே கொண்டிருக்கிறேன்.யோசித்தால் மதுரை மினிப்ரியாவில் முதன் முதலில் பரதம் என்கிற நேரடி மலையாளப் படத்தைப் பார்த்து ஆ வென்று வியந்தது ஞாபகத்தில் வந்து போகிறது.புத்தாயிரத்தின் புதிய படைப்பாளிகளில் பலரும் காட்டடி அடித்து மெய் மறக்க வைத்து விடுகிறார்கள்.

டார்விண்டே பரிணாமம்

சின்ன முடிச்சு தான்.இந்தப் படத்தின் ஹீரோ செம்பன் வினோத் ஜோஸ்  சமீபகாலங்களில் அறியப்பட்ட மலையாள வில்லன்.அவருக்கு வில்லனாக நடித்திருப்பது ப்ருத்வி ராஜ்.வழக்கமான கதைகளில் ஒன்று என ஒதுக்கி விட முடியாத சின்ன முடிச்சாகப் பட்டது எதுவென்றால்....டார்வின் ஒரு ரவுடி.பணத்துக்காக எதையும் செய்பவன்.வீட்டிலிருந்து வெளியேறி மனையாளுடன் வேற்றூர் வருகிற அனில் ஆண்டோவின் மனைவி கழுத்தில் இருந்து நகையைப் பறித்து ஓடுகிறான் டார்வினின் கூடப் பிறந்த தம்பி.அவளது கரு கலைகிறது.அனிலுக்கும் டார்வினுக்கும் மோதலாகி அனிலின் வாழ்க்கையை இன்னும் சிதைக்கிறான் டார்வின்.

நிற்க நரம்பு புடைக்க கத்திக்கொண்டு பலான சண்டைகள் பல போட்டு இறுதியில் டார்வினைக் கொன்று பழி தீர்க்கிறான் அனில்..அது தானே..?இல்லை ஐயா..இந்தப் படம் வேறு ரகம்.செகண்ட் ஹாஃப் முழுக்க டார்வினின் நவ துவாரத்திலிருந்தும் குருது கொப்பளிக்க அனில் செய்வதெல்லாம் வேறு ட்ரீட்மெண்ட்.

படம் ஒரு அழகிய திருப்பத்தோடு முடிகிறது.ரெண்டே மெயின் பாத்திரங்களை வைத்துக் கொண்டு பிடல் எடுத்திருக்கிறார் டைரக்டர் ஜிஜோ ஆண்டனி.இசை ஷங்கர் ஷர்மா..ஒரு பாட்டு வில்லனுக்கு பெண் கடலே......என்று தொடங்கும் பாடல்.இந்தப் பாடலை குறைந்த பட்சம் இன்னும் நாற்பது ஐம்பது வருஷங்களுக்குக் கேட்பதாய் எனக்குள்ளேயே ஒரு ஏற்பாடு

(((பார்க்கலாம்.நல்ல படம்)))

மகேஷிண்டே ப்ரதிகாரம்

மகேஷ் இடுக்கியில் ஒரு ஸ்டூடியோ ஓனர்.பக்கத்துக் கடை படங்களுக்கு சட்டம் போடுகிறவர் கடை.வயதான தன் தகப்பன் மெல்ல நினைவு விடுபடல் நோய்மையில் தவிப்பதால் அவரை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் மகேஷூக்கு.வெகு காலமாய் ஒரு காதல் சௌம்யாவுடன். அப்பாவைக் காணோம் என்று போலீசுக்கெல்லாம் சொல்லிப் பின் திரிச்சு வந்து நோக்குங்கால் ஆயாள் தோட்டத்தில் ஒரு வல்லிய ஸ்னாப் கிட்டுமோவென...ஸாரி...அப்பா ஒரு க்ளிக்கிற்காக இரவின் நடுவே பனியில் காத்திருக்கிறார்.மகேஷூக்கு போன உயிர் திரும்புகிறது.

இப்படியான மகேஷின் வாழ்க்கை ஒரு ஸீனில் மாறிப் போகிறது.யாரோ மகேஷின் நண்பனைத் தாக்க தட்டிக் கேட்கப் போகும் மகேஷை நட்ட நடு வீதியில் வைத்து வேஷ்டியை உருவிவிட்டு அடித்து நொறுக்கிப் போகிறான் அந்த ஊரின் தாட்டியக்காரனான ஜிம்ஸன்.ஊரே வேடிக்கை பார்க்கிறது.ஜிம்ஸன் போன பிற்பாடு மெல்ல எழுந்திருக்கும் மகேஷ் ஜிம்சனை வீழ்த்தி விட்டுத் தான் இனித் தன் காலில் செருப்பை அணிவேன் என்று சபதம் எடுக்கிறான்.

சௌம்யாவின் அப்பா அவளை வேறோருவருக்கு கல்யாணம் செய்து கொடுக்கிறார்.சௌம்யாவால் பெரிதாக ஒன்றும் எதிர்க்க முடியவில்லை.வாழ்வின் பெண்வர்ணத்தையும் இழந்தவனாய்க் கரிய இருளில் திகைக்கிறான் மகேஷ்.மகேஷின் ஒரே வெறி தீர்மானம் சபதம் இலக்கு எல்லாம் ஜிம்ஸனை வீழ்த்துவது தான்.அதற்காக ஜூடோ பயில்கிறான்.ஜிம்ஸனின் வீடு நோக்கிச் செல்பவன் ஜிம்சனின் வயதான அம்மாவும் தங்கையும் மட்டுமே இருப்பதைக் கண்ணுறுகிறான்.ஜிம்ஸன் துபாயில் பணி புரிவதைக் கேள்விப் பட்டு திரும்புகிறான்.

ஜிம்சனின் தங்கை ஜிம்ஸி (அபர்ணா பாலமுரளி) ஒரு பத்திரிக்கை அட்டைப்படப் புகைப்படப் போட்டிக்குத் தன்னை படமெடுத்துத் தர வேண்டி மகேஷின் ஸ்டூடியோவுக்கு வருகிறாள்.மகேஷ் எடுத்துத் தரும் எந்தப் புகைப்படமும் எந்தவித ஜீவனும் இல்லாமல் சப்பென்று இருப்பதாகக் குறை சொல்லி விட்டுச் செல்பவளை அவளறியாமல் சில படங்கள் எடுத்து தானே சில பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்கிறான் மஹேஷ்.அதில் ஒரு படம் பெரிய பத்திரிகை ஒன்றின் அட்டையில் வருகிறது.ஜிம்ஸி பெரிதும் மகிழ்கிறாள்.

ஜிம்ஸிக்கும் மகேஷூக்கும் மெலிதான நட்பு மலர்கிறது.மகேஷின் அப்பா அவனது படங்களைப் பார்த்து விட்டு புகைப்படக் கலை என்பதை வெறும் இயந்திரத் தனமாக செய்யக் கூடாதென அறிவுறுத்துகிறார்.ஒரு நல்ல கலைஞன் எந்த ஒரு புகைப்படத்தையும் ஏற்படுத்த மாட்டான்.மாறாக ஒரு சிறப்பான தருணத்துக்காக எப்போதும் காத்திருப்பான்.அந்தத் தருணத்தின் நேர்தலை சிதைக்காமல் க்ளிக் செய்வான் என்று கற்றுக் கொடுக்கிறார்.அதுவரைக்கும் பிழைப்புக்காக படங்களை எடுத்துக் கொண்டிருந்த மகேஷ் அதன் பின்னர் தனக்குள் இருக்கும் கலைஞனை உயிர்ப்பிக்கிறான்.

ஜிம்ஸியுடனான ஸ்னேகம் ப்ரேமமாகி அவள் சொல்கிறாள் தன் அண்ணனை எதிர்க்கும் தைரியம் இருந்தால் என்னைக் காதலி என்று.போதாதா..?மிஸ்டர் மகேஷ் ஜிம்ஸியை செமையாகக் காதலிக்கிறார்.அண்ணன் காரன் வந்து சேர அவனை சென்று சந்திக்கும் மகேஷ் தன் சபதம் பற்றி எடுத்து சொல்லி சண்டை போடுகிறான்.அந்த சண்டையின் முடிவில் மகேஷ் வெற்றி பெற்று மறுபடி புதிய செருப்பை வாங்கி அணிந்து கொள்கிறான்.மருத்துவமனையில் இருக்கும் ஜிம்ஸனை சென்று பார்க்கிறான்.அங்கே ஜிம்சியும் அவள் அம்மாவும் கூட இருக்கிறார்கள்.

நான் உங்களை அடிச்சதுக்கு காரணம் நீங்க தான்.சோ திருப்பி அடிச்சு பழி தீர்த்துக்க வேண்டியதாய்டுச்சி...பட் இப்ப நான் வேற ஒண்ணு சொல்லப் போறேன்.அதாவது நானும் ஜிம்ஸியும் லவ் பண்றோம்.நீங்க என்ன சொல்றீங்க..?"

என்று கேட்கிறான்.அவனையே உற்றுப் பார்க்கும் ஜிம்ஸன் என்ன பதில் சொன்னான் என்று தெரிவதற்குள் A FILM BY DILEESH POTHEN எனப் படம் முடிகிறது.

பிஜுபாலின் இசையாகட்டும் சைஜூ காலிதின் ஒளிப்பதிவாகட்டும் பஹத் பாசிலின் நடிப்பாகட்டும் குறையொன்றுமில்லாத சூப்பர்ஹிட் தனமாக அமைந்திருக்கின்றன.இன்னும் ஒரு முக்கியஸ்தரை சொல்லிப் பாராட்டி சிலாகித்துக் கொண்டாடியே தீரவேண்டும்.அபர்ணா பாலமுரளி.ஜிம்ஸியாக வரும் அச்சு அசலான 2016 பெண் ரோலை இத்தனை தெளிவாக நடிக்கிற இன்னொருத்தியை இனிதாவ தெங்கும் காணோம் என்பேன்.அதிலும் படத்தின் முக்கால் பாகத்தில் ஒரு FLASH MOB வருகிறது.கண் வழியாக மனசுக்குள் புகுந்து அதனை சுக்கு நூறாக உடைத்துக் கெடுத்துப் படுத்தி....வெல்.....செம்மை நடிகை.

(((அதி அவஸ்யமாயிட்டு நோக்கணம்)))

ACTION HERO பிஜு

நடிப்பு நிவின் பாலி ஜூட் ஆண்டனி ஜோசப் அனு எம்மானுவல் ரோஹிணி சுராஜ் வெஞ்சரமூட்
தயாரிப்பு நிவின் பாலி இயக்கம் அப்ரித் ஷைன் இசை ஜெரி அமல்தேவ்


போலீஸ் படங்களில் இந்திய அளவில் உண்மைத்தன்மைக்கு வெகு நெருக்கத்தில் எடுக்கப் பட்ட ஆகச்சிறந்த படம் என்று இனி இதனைச் சொல்ல முடியும்.நீள் தோரணமாக சம்பவ நகர்தல்களின் மூலம் கதை சொல்லிப் பழக்கப்பட்ட இந்திய சினிமா முறைமையிலிருந்து விலகி நீள் தோரணத்தை மையக் கதையாகக் கொள்ளாமல் அடுத்தடுத்த தொடர்பற்ற சம்பவங்களின் மெய்மைத் தன்மை மூலமாக மறைபொருளாக ஒரு கதையற்ற கதையை நோக்கிப் பார்வையாளனைத் தயாரித்தபடியே சென்று முடிகிற திரைக்கதை ஆக்ஷன் ஹீரோ பிஜூ.

ஒரு சப் இன்ஸ்பெக்டரின் பாத்திரம் என்ன என்பது இரண்டாம் பட்சம்.உண்மையான ஒரு சப் இன்ஸ்பெக்டரின் வரையறுக்கப் பட்ட அதிகாரம் மற்றும் தினசரி வாழ்க்கையில் ஒரு எஸ்.ஐ சந்திக்க நேர்கிற சம்பவங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியின் குற்ற வரையறை மற்றும் குற்ற மனிதர்களின் இருப்பு சமூகத்தின் மேல் நடு கீழ் மற்றும் விளிம்பு மனிதர்கள் சட்டத்தின் உள்ளேயும் வெளியேயும் வந்து போகிற நுணுக்கம் குற்றங்கள் பிழைகள் தவறுதல்கள் இன்ன பிறவற்றின் பின்னணியில் இருக்க நேர்கிற மனிதர்கள் என இத்தனை அடர்த்தியான நம்பகத்தோடு அமைக்கப் பட்ட திரைக்கதைக்கு ஒரு சபாஷ்.

கதை என்ன..?
ஒரு சப் இன்ஸ்பெக்டரான பிஜூவின் ஒரு வருட கால போலீஸ் வாழ்வின் சம்பவங்கள்.அவனுக்குக் கல்யாணம் நிச்சயிப்பதில் தொடங்கி ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனாகிறது வரை அலுவலாக அவனுக்கு நேர்பவை மாத்திரமே கதை. மனிதர்கள் சம்பவங்கள் குற்றங்கள் தவறுதல்கள் குழந்தைகள் பெரியவர்கள் தகப்பன் ஒருவன் தாய் ஒருத்தி என சதா இயல்பாகக் காண வாய்க்கிற பல மனிதர்களை வெகு அழகாக கோர்த்து ஒரு சம்பவ மாலையாக்கி இருக்கிறார் இயக்குனர்.

ரோகிணி வருகிற எபிஸோடாகட்டும் சுராஜ் வெஞ்சரமூட் வருகிற எபிசோடாகட்டும் மனதைக் கலைத்துக் கசக்கித் தூர எறிகின்றன.தேசிய விருது பெற்ற சுராஜ் ஏற்றிருக்கிற பாத்திரம் மகாகனம்.அதிலும் ஒரு பார்வை பார்த்து விட்டு ஸ்டேஷனை விட்டு அகன்று போகையில் மனிதர் மனசை வெல்கிறார்.சுராஜ் போன்ற நடிகர்கள் திரையற்புதங்கள்.

வாத்தியார் சுஜாதா எழுத வந்த காலகட்டத்தில் எத்தனை ஃப்ரெஷ் ஆகத் தனியாக அறியப்பட்டாரோ அப்படியான ஒரு திரைக்கதையாக ஆக்ஷன் ஹீரோ பிஜூவைச் சொல்ல முடிகிறது.இனி இது போன்ற பல படங்கள் வரவேண்டும்.வரும்.நம்பலாம்.சில படங்கள் மாத்திரமே எழுந்து நின்று கை தட்ட வைக்கத் தக்கவை.வாழ்வின் அபூர்வ சினிமாக்கள்.ஆக்ஷன் ஹீரோ பிஜூ அப்படியான ஒரு திரைப்படம்.

(((MUST WATCH.)))