புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

குமரகுருபரன்

குமரகுருபரனைப் பற்றி இப்போது பேசலாம் என்று நினைக்கிறேன்.குமரகுருபரன் என் முகப்புத்தகக் கணக்கின் முதல் நண்பன்.எனக்கு எப்படி ஃபேஸ்புக் கணக்கை தொடங்குவது என்று மதுரை இரயில்வே நிலையத்திற்கெதிரே இருக்கும் ஜம்ஜம் டீக்கடை முன் சாலையில் நின்று கொண்டு வகுப்பெடுத்தவன் பிஜிசரவணன்.அன்றைய இரவே அவன் சொன்னபடி கணக்கைத் தொடங்கினேன்.அவனே முதல் நண்பனானான்.அவனிடமே எனக்குச் சில நண்பர்களை சிபாரிசு செய்யேன் என்று கேட்டபோது சரவணன் எனக்கு இரண்டு பேரை சிபாரிசு செய்து அழைப்பை அவன் கணக்கிலிருந்தே அனுப்பினான்.எனக்குத் தெரிந்தவர்கள் உறவினர்கள் சிலருடன் மாத்திரமே புரியாத புதிரை வெறித்துக் கொண்டிருந்தவனுக்கு சரவணன் அறிமுகம் செய்த இரண்டு பேர்கள் தான் அமுதா தமிழ் மற்றும் குமரகுருபரன் ஜெயராமன் இருவரும்.குமரனது முகப்புத்தகப் பக்கத்தைப் பார்த்ததுமே இவன் வேறு உலகத்து வாசி என்பது புரிந்தது.இதெல்லாம் நிகழ்ந்தது 2011இல்.

தினமும் ஒரு அலுவலகத்துக்கு வரும் தினுசில் அப்போதெல்லாம் ஃபேஸ்புக்கினுள் வருவதும் அங்கேயே தினமும் எதையாவது எழுதி அதற்கான லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் என்னவாக இருக்கிறது என்பதைப் பார்த்தபடியே யாருடனாவது இன்பாக்ஸில் ச்சாட் செய்தபடி பொழுது கழியும்.உண்மையில் தொழிலை மூடி விட்டு வேலை ஏதும் இல்லாத ஒருவனாய் நானும் என் புத்தகங்கள் நிரம்பிய அறையுமாய் இருக்க நேர்ந்த எனக்கு முகப்புத்தகமும் இணையமும் வேறு வழியே இல்லாத ஒற்றைச் சாலையாக விரிந்தது.வெறி கொண்டு எழுதுவதே வேலை ஆயிற்று.என் ஆரம்பங்கள் பலவற்றை கண்டித்துக் கட்டமைத்துக் குறி சொல்லி கேள்வி கேட்டு வழிநடத்தி வடிவமைத்து எல்லாமுமாய் இருந்த ஒருவன் குமரகுருபரன்.இந்த வாக்கியத்தை அவன் இருக்கும் வரை என்னால் சொல்லி இருக்கவே முடியாது.அவன் அனுமதிக்கவில்லை.

என் வாசிப்பிற்கு வெளியே இருக்கும் அணுக்கமான இன்னொரு உலகத்தைத் திறந்து எனக்குள் சர்வதேச இசையை புகுத்தி என்னை வேறோருவனாக்கியவன் குமரன்.எழுத்தின் ஒவ்வொரு சந்தோஷத்தையும் மற்றும் தடுக்கி விழும் தடைகளையும் உடனே ஓடோடிச் சென்று அவனிடம் மாத்திரமே கொட்டுவேன்.அப்போதெல்லாம் என்னை ஆற்றுப்படுத்துவான்.முடியாத பட்சத்தில் அவன் சொல்லும் வாக்கியம் எங்கிட்ட சொல்லிட்டேல்லடே...விட்று என்பான்.எனக்குத் தீர்வுகளைத் தாண்டிய பலமாக ஒரு நிம்மதியின் மானுட உருவமாக இருந்தவன் குமரன் தான்.

எத்தனை சண்டைகள் இட்டிருப்போம் என்று கணக்கே இல்லை.எதற்கெல்லாம் கோபம் வரும் என்றே தெரியாது.வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அன்பின் வாசனையாக அன்பின் முழுமையான நீர்மமாக அன்பின் உடைக்கமுடியாத அணுத்தெறலாக அவனை நான் உணர்ந்திருக்கிறேன்.சண்டைகளின் முடிவில் என்னை அவன் அழைக்கும் முன்பே நானாக ஓடோடிச் சென்று அவனிடம் மறுபடி சரணடைவேன்.அதற்காக பெரிதும் அதிர்வான்.நீயும் எங்கிட்டே கோபப்படு மாப்ளே...ஏன் என்னைப் பெருசா நினைக்கிறே என்று முப்பது நாட்கள் முன்னால் வரைக்கும் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பான்.

குமரனுக்கும் எனக்கும் கால அளவில் பெரிய பிளவுக்குப் பின் மதுரைக்கு அவனொரு கூட்டத்தில் பங்கேற்கிறான் என்று அறிந்த மாத்திரத்தில் அந்தக் கூட்டத்துக்குச் சென்று அவனை முதன்முறை பார்த்தேன்.அதுவரைக்கும் எத்தனையோ முறைகள் அவன் அழைத்த போதும் நானாக அவனைச் சென்று பார்த்ததில்லை.அது அவனுக்குப் பெரிய குறை.என்னைத் தேடி வராதவன் நீ என்று அடிக்கடித் திட்டுவான்.அவன் வீட்டுக்குச் சற்றே அருகாமை தூரத்தில் ஒரு கொசுக்கடி லாட்ஜில் வழக்கமாக நான் அறை எடுத்துத் தங்குகிறேன் என்று தெரிந்த போது மிகவும் வருந்தினான்.நீ ஏன் மாப்ளே கஷ்டப்படணும்..?நம்ம வீடு இருக்குல்லடே..என்பான்.நம்ம வீடு நம்ம கார் என்ற சொற்களை மகா நகரத்தில் சொல்வதை நிறுத்தாத ஒருவனாகத் தான் குமரன் இறுதி வரைக்கும் இருந்தான்.விருந்து உபசாரத்தில் அவன் ஒரு பேரரசன்.

குமரனுக்கும் எனக்கும் கடந்த ஒரு வருடமாக சினேகம் பெரிதும் இறுக்கமானது.சென்றாண்டு மழைகளுக்கு முந்தைய மாதமொன்றில் மனுஷ்யபுத்திரனை பிடிக்குமா என்னைப் பிடிக்குமா என்று என்னிடம் கேட்டான்.அதற்கு நான் என்னிடம் மனுஷ் இதே கேள்வியைக் கேட்டால் கூட உன்னைத் தான் சொல்வேன்.ஏன் என்று தெரியாது ஒரு சிட்டிகை உன்னைத் தான் கூடப் பிடிக்கும் என்று சொன்ன போது குரல் நெகிழ்ந்து மாப்ளே நீ யார்டே...மதுரைக்காரங்கிய மனசே தனிடே...என்று சிரித்துக் கொண்டான்.உடனே மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் குறித்து பேச்சு வந்தபோது அவரது நீராலானது தொகுப்பில் இருந்து ஒரு கவிதையை அப்படியே சொன்னான்.நான் லேசாக அதிர்ந்தேன்.இத்தனை ப்ரியமான மனிதனை ஏன் இத்தனை விலகி இருக்கிறாய் எனக் கேட்டேன்.வேணாம் மாப்ளே..அந்தாளுக்கும் நமக்கும் ஒத்து வராது என்று ஃபோனை வைத்துவிட்டான்.

பிறிதொரு நாள் ஏதோ பேசிக்கொண்டிருக்கும் போது மனுஷ்யபுத்திரனது சமீபத்திய கவிதைகளில் ஒன்றை அவனுக்கு அனுப்பினேன்.இது எந்த மாத இதழில் வந்தது எனக் கேட்டான்.அடுத்த இதழில் வரப்போவது என்றேன்.மனுஷ்யபுத்திரன் எனக்கு இன்பாக்ஸில் எப்போதாவது அவர் எழுதியவுடன் கவிதையை அனுப்புவார் அப்படி அனுப்பியது என்றேன்.அந்தக் கவிதையை வெகுவாக சிலாகித்துவிட்டு என்னிடம் ஒரு வார்த்தை சொன்னான்."மனுஷ்யபுத்திரன் கவிதையை மத்தவங்களுக்கு முன்னாடியே நீ படிச்சிடுறியா வோய்...?பெரிய ஆளுதாம்டே நீ.."என்று நான் கண் மல்க சிரித்து விட்டு நானாவது தெரிஞ்சு படிச்சேன்.நீ அவருக்கே தெரியாமப் படிச்சிட்டியே மாமா"என்றேன்.

இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து தனது முதல் தொகுப்பிற்கு ராஜமார்த்தாண்டன் விருதை மறுத்துவிட்ட பிற்பாடு அடுத்த தொகுப்பை எந்தப் பதிப்பகத்தில் கொண்டு வரலாம் என்று பேசிக்கொண்டிருந்த போது நான் கேட்டேன்.நீ தருவதாக இருந்தால் உயிர்மையில் கொண்டுவரலாம் என்றேன்.

ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு மனுஷ்யபுத்திரனுக்கு என் கவிதைகளை அனுப்பி வை.அவருக்கு ஏற்பாயிருந்தால் உயிர்மையில் வரட்டும்.இல்லாவிட்டால் நாம் பார்த்துக் கொள்ளலாம்.அவரை எந்த விதத்திலும் நிர்ப்பந்திக்கக் கூடாது நாம் என்று சொல்லி எனக்கு அவனது அதுவரையிலான கவிதைகளை அனுப்பினான்.

அதனைப் படிப்பதற்கு நான் எடுத்துக் கொண்ட இரண்டு முழு தினங்களில் தமிழின் நவீன கவிதைப் போக்கில் இது வேறோரு திறப்பைக் கொண்டு வருகிறது என்று நம்பினேன்.என் அதிர்வு குறையாமல் மனுஷ்யபுத்திரனிடம் செல்பேசியில் நண்பன் குமரனின் கவிதைகளை உங்களுக்கு அனுப்பட்டுமா..?எனக் கேட்டேன்.ஒரு வினாடி கூட தாமதிக்காமல் அவர் அனுப்புங்க ரவி...கொண்டு வந்திடலாம் என்றார்.

இதனைக் கேட்டதும் குமரனுக்கு நெகிழ்ச்சியும் தயக்கமும் ஒருங்கே வந்ததை உணரமுடிந்தது.
என் கவிதைகளைக் கவிஞர் படிச்சிட்டு என்ன சொன்னார் எனக் கேட்டுக் கொண்டே இருந்தான்.அப்போது அரசியல் மேடைகளில் வெகு பரபரப்பாக அலைச்சலில் இருந்த மனுஷ்யபுத்திரன் அன்றிலிருந்து மூன்றாவது நாள் இரவு பேசும் போது என்னிடம் சொன்னார்.தமிழின் மிக முக்கியமான எழுத்தாளன் இவன்.நிச்சயம் மாயங்களைச் செய்வான்.மிக முக்கியமான படைப்பு இது என்றார்.பெருங்கவி என்பதைத் தாண்டி மனுஷ்யபுத்திரன் தன் மனதின் ஆழத்திலிருந்து புதிய எழுத்தாளர்களைப் பாராட்டுவதைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.அன்றைக்கு நெகிழ்ந்தேன்.

முதன்முறை மனுஷ்யபுத்திரனை சந்தித்து விட்டு வந்து குமரன் என்னிடம் ஒரு குழந்தையைப் போல என்னை நடத்த விரும்பினார் கவிஞர்.எனக்கு முன்பிலாத நிம்மதியை உணரச்செய்தார் என்றான்.

என் வாழ்க்கையில் எனக்கொரு நண்பனை அறிமுகம் செய்தவர்கள் மிகக் குறைவு.வெகு நாட்களுக்குப் பின் முதல் சந்திப்பிலேயே ஒரு நண்பனை அடைவதாக உணர்கிறேன்.குமரன் என் வாழ்க்கையின் முக்கியமான நண்பனாக இருக்கத் தொடங்குகிறான் என்று மனுஷ்யபுத்திரன் சொன்னார்.

மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது என்ற தலைப்பை இங்கே ஒருதடவை நினைத்துப் பார்க்க விரும்புகிறேன்.

மனுஷ்யபுத்திரனுக்கும் எனக்கும் இதுவரை எத்தனையோ பிணக்குகள் வரும்.அதுவாகத் தீரும்.என் வாழ்க்கையில் நான் தவிர்க்க முடியாத ஆசான்களில் மனுஷ்யபுத்திரன் முதன்மையானவர்.ஆனாலும் அவர் மீதான என் வருத்தங்களையும் ஏன் கோபங்களையும் கூடக் குமரனிடம் கொட்ட முடிந்தது.குமரன் எங்கள் இருவருக்காகவும் இருவரிடமும் அடிக்கடிப் பேசினான்.நாங்கள் அவன் வந்த பிறகு ஒரே ஒரு முறை சுகமாக சண்டையிட்டதை இங்கே நினைத்துக் கொள்கிறேன்.

மழை வெள்ள காலத்தில் சென்னையின் சாலைகள் துண்டிக்கப்பட்டன.குமரன் தன் அன்பால் மனுஷ்யபுத்திரனை தன்னால் இயன்ற அளவு எந்தப் பொருளும் கிட்டாமல் அவர் வாடிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.என்னை நீ கேட்டியா கவிஞருக்கு என்ன வேணும்னு கேட்டியா..?எதாச்சும் சொன்னா உடனே எனக்கு சொல்லணும் தெரியுமா என்று அடிக்கடி நினைவூட்டிய வண்ணம் இருந்தான்.

குமரனின் புத்தக வெளியீடு காலத்தில் என்ன மெனு யார் யாரை அழைப்பது என்பதெல்லாவற்றையும் ஒரு நாளைக்கு மூன்று மெயில்கள் எனக்கு வரும்.அவற்றிலெல்லாம் அன்பும் கண்டிப்பும் அன்பும் கோபமும் அன்பும் தித்திப்பும்  என்றெல்லாம் ஒப்பமிடுவான்.அந்த விழாவின் போது குமரன் பெரிதும் நெகிழ்திருந்தான்.அத்தனை சந்தோஷமாக அவனைப் பார்த்து விடையளித்துத் திரும்பினேன்.

அதன் பிற்பாடு முருகேசபாண்டியன் மகள் திருமணத்துக்கு வந்த போது அவனை மண்டப வாயிலில் சந்தித்தேன்.பத்து நிமிடங்களுக்குக் குறைவாகப் பேசிக் கொண்டிருந்தோம்.ஊருக்குச் சென்ற பிறகும் தினமும் இல்லாவிட்டால் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை என்னிடம் ஃபோனில் பேசிவிடுவான்.குமரனுக்கும் எனக்குமான உரையாடல்கள் எந்தவிதமான சந்தேகங்களோ அல்லது கட்டுப்பாடுகளோ இல்லாதவை என்பதால்  நாங்கள் பேசத் துவங்கும் போது மாப்ளே பிசியா இருக்கியா எனக் கேட்பான்.ஆமாம் என்றால் உடனே வைத்து விடுவான்.பெரும்பாலும் ஆமாம் என்றாலும் அதை சொல்ல மாட்டேன் நான்,.நேரம் பார்ப்பதில்லை நாங்கள்.எல்லா நேரமும் பேசிக்கொண்டே இருந்திருக்கிறோம்.

ஒரு குழந்தையைப் போன்ற மனதும் அறிவும் சேர்வது அபூர்வம்.அது குமரனுடைய செல்வந்தம்.அவனது ஆளுமையும் கம்பீரமும் தாண்டி எல்லோரும் இன்புற்றுக் கொண்டாடிக் கொண்டே இருக்க விரும்புகிற மனது அவனுடையது.என் வாழ்க்கையின் பல நண்பர்களை அவனுக்குத் தெரியும்.அவனுடைய உலகத்தின் பெரும்பாலானவர்களை எனக்குத் தெரியாது.என்னை செதுக்கியவன் குமரன்..எனக்குக் கிடைத்த ஆசிரியர்களில் அவன் பேசினால் எதையுமே கேட்கவேண்டும் பின்பற்ற வேண்டும் என்று தோன்றுமே ஒழிய ஒரு விழுக்காடு கூட மீறிப் புறந்தள்ளியதில்லை.எழுத்தைத் தாண்டி என் ரசனையை உயரச்செய்த மேதை என் குமரன்.

குமரன் இறப்பதற்கு முந்தைய தினம் சரியாக ஒன்றே முக்கால் மணி நேரங்கள் என்னோடு பேசிக்கொண்டே இருந்தான்.ஜெயமோகன் மீதான காதல் சாரு மீதான பற்று மனுஷ்யபுத்திரனுடனான நட்பு தொடங்கி தேவேந்திரபூபதிக்கும் தனக்குமான பிணைப்பு மதுரை அருணாச்சலம் போன்ற நண்பர்களுடைய அன்பு என கோர்வையாகப் பலரைப் பற்றியும் பேசியபடி இருந்தான்.

இயல் விருது பெற்றதற்காக அவனுக்கு ஒரு பாராட்டுவிழாவை மதுரையில் ஏற்பாடு செய்யப் போவதாகச் சொன்னேன்.வேணாம்டே...மாப்ளே..என்னைய விடு..மகாபாரதத்தை ஜெமோ எழுதிட்டு வர்றார்டே...அது எவ்ளோ பெரிய வொர்க்..?அவருக்கான ஒரு விழாவை மதுரையில வை..எனக்கெதுக்குடே விழா..?என்றான்.ஜெமோவுக்கு விழா வைப்போம்.உனக்கு ஒரு விழா வைக்கக் கூடாதா என்றேன்.

என்னைய விடுடே மாப்ளே...செய்றதுக்குப் பல வேலை இருக்குல்லடே...அதைப் பார்த்தா பத்தாது..?என்றவன் வழக்கம் போல் இன்னும் பலதை பலரை பேசி விட்டு சரிடே...பத்தே காலுக்கு பஸ்.இன்னம் ஒன் அவர் இருக்கு.என்றான்.

பென்ஸ் பஸ்..செமி ஸ்லீப்பர் ஒரு சின்ன ஷேக் கூட இருக்காது.காலை ஆறு மணிக்குக் கோயம்பேடு போய்விடுவேன் என்றெல்லாம் சொல்லி விட்டு வைத்தான்.அவ்வளவு தான் சொன்னான்.அதற்கு மேல் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை.வழக்கமாக ஊரிலிருந்து கிளம்பும் போது போனை வைக்கும் போது ஒரு வார்த்தை சொல்வான்.நாளைக்கு ரீச் ஆயிட்டு கூப்டுறேண்டே...என்று.இந்த முறை சொல்லவில்லை.வைத்த உடனேயே தோன்றியது.திரும்ப ஃபோன் செய்து நானாக நாளை ரீச் ஆயிட்டு கூப்டு மாமா என்று சொல்லி விட்டு வைக்கலாமா என்று.

ச்சீ...இதென்ன...சிறுபிள்ளைத் தனமாக என்று தோன்றியதால் கேட்கவில்லை.
மறுநாள் காலை அவன் ரீச் ஆகிவிட்டு அழைக்கவில்லை.

குமரகுருபரன் வாழ்க்கையைக் கொண்டாட்டமாக மாற்றிக் கொண்டவன்.அவனுடைய வழி எத்தகையது என்பதைத் தாண்டி அவனது மொழி அன்பாலானது.அவன் மிக மெல்லிய மனதாலான மனிதன்.இத்தனை பாதியில் இத்தனை முழுமையாக வாழ்ந்து மரிப்பது எல்லோர்க்கும் வாய்க்காது.என் குமரன் முழுமையாக வாழ்ந்தவன்.


////////////////////////////////////////////////என் அன்புக்குரியவனே...குருவாகவும் கிடைத்த நன்நண்பனே...குமார்..என் அன்பு மாமா...ஞாபகத்தில் வாழ்கிறாயடா...எப்போதும் வாழ்வாயடா...உன் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறதடா என் ப்ரியமான நண்பனே...லவ் யூ குமரா...லவ் யூ மாமா...////////////////////////////////////