புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

2 அசல்ராஜா நகல்ராணி

கடவுளாகவே கருதப்பட்டவர்கள் தான் அரசர்கள்.கடவுளுக்கு மேலாகக் கூட அரசர்களைத் துதிபாடியதும்   வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது.அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்கிற பொருள் படும் யதோ ரஜா ததோ ப்ரஜா என்கிற சமஸ்கிருத வசனம் கண்மூடித் தனமாக அரசர்களைப் பின் பற்றுவதைக் குறிப்பிடுவதாகக் கொள்ளமுடியும்.வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் நன்மைக்கும் தீமைக்கும் உதாரணங்களாகப் பற்பல கிளைக் கதைகள் உண்டு.பெரும்பாலும் அரசர்கள் என்றாலே வீரமானவர்கள் தங்களது மக்களைக் காத்து ரட்சிக்கிறவர்கள் என்பதே பொதுப்புத்தியில் உறைந்த சித்திரங்களாக இருந்த போதிலும் வினோதங்களுக்கும் குறைவேயில்லை எனலாம்.
அரசர்கள் எதனைச் செய்தாலும் உடனே வானளாவிய புகழ்ச்சிகளைத் தொடங்கி விடுகிற அமைச்சர்களைப் பற்றி எல்லாம் பல கதைகளைப் படித்திருக்கிறோம்.அரசர்களது செய்கைகளே அவர்களைக் கடவுளுக்கு ஒப்பானவர்களாகவும் கொடுங்கோலர்களாகவும் பிரித்துக் காட்டுகிற கண்ணாடியாய்த் திகழ்ந்திருக்க முடியும்.


இது ஒரு புறமிருக்க அரசர்களது ஆட்சிக்காலம் முழுவதுமாக ஒரே விதமான பரிபாலனத்தை நிகழ்த்தினார்கள் என்று கூறுவதற்கில்லை.இளம் வயதில் அரியணை ஏறுவதிலிருந்து முதியவயதில் நோயுற்று இறந்து போவது வரைக்குமான நீள் பெரிய ஆட்சிக்காலம் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது எனப் பார்த்தால் சுவாரசியமே மிஞ்சுகிறது.உள்ளும் புறமும் பகை சூழ பல்வேறு இடர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு அரசரும் ஆட்சிக்காலத்தை நகர்த்துவதென்பது மகா பெரிய சவாலுக்கு ஒப்பாகவே இருந்து வந்திருக்கிறது.துரோகங்களும் போர்களும் எப்போது எந்த அரசரை வீழ்த்தியெறியும் என்று எந்த விதத்திலும் உத்தரவாதமில்லாத நிலையாமையைப் பறைசாற்றியபடியே தான் வரலாற்றின் பக்கங்கள் நகர்கின்றன.

வெகு சில அரசர்களுக்கு சதிகளோ அல்லது போரச்சமோ இல்லாமல் வேறு சில காரணங்கள் அவர்களது ஆட்சியதிகாரத்தை வீழ்த்துகிற ஆயுதங்களாக மாறியதும் நிகழ்ந்திருக்கிறது.அவற்றில் முக்கியமானதாக மனநலனைச் சொல்ல வேண்டியிருக்கிறது.வியப்பாக இருக்கலாம்.ஆனால் அது தான் உண்மை.மன நலச் சிதைவின் காரணமாகத் தங்களது ஆட்சியதிகாரத்தை ஆயுளின் இறுதிக் கோடாக மாற்றிக் கொண்டவர்களும் இருந்திருக்கிறார்கள்.மனசு என்கிற ஒன்றில்லாவிட்டால் மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் எந்த வித்யாசமும் இருந்திராது அல்லவா..?அந்த மனசே பிரச்சினையாகிச் சரிந்தும் வீழ்ந்தும் போன சாம்ராஜ்யங்கள் ஏராளம்.


1368 ஆமாண்டிலிருந்து 1422 ஆமாண்டு வரை ஃப்ரான்ஸ் பேரரசை ஆட்சி செய்த 4ஆம் சார்லஸின் கதை ஆரம்பத்தில் நன்றாகத் தான் போயிருக்கிறது.தலைவருக்கு 1392ஆமாண்டு காய்ச்சலும் வலிப்பு நோயும் வந்த பிற்பாடு மெல்ல மெல்ல மனச்சிதைவின் பல தாக்குதல்களுக்கு உள்ளாகி யிருக்கிறார்.நாடாளும் ராஜா என்கிற உண்மை நம்பர் ஒன்றையே அவர் மறந்து போய்விடுகிறார்.தன் மனையாளையும் குழந்தைகளையும் அடையாளம் மறக்கிறார்.இப்படியான நினைவுதப்புதல் பல மாதங்களுக்கு நீடிக்கிறது.அடிக்கடி சரியாகிப் பின் மறுபடி தன் நிலையை மறக்கிறார் சார்லஸ். வினோதமான அவரது நடவடிக்கைகள் அவரது சிதைவின் பல நிலைப் பரிணாமங்களாக உருவெடுக்கின்றன.கோட்டையின் பல தளங்களுக்கு வெறிபிடித்த ஓநாயைப் போல் பிளிறலை ஒத்த சப்தங்களை எழுப்பியபடி ஓடுவது அடிக்கடி நிகழ்கிறது.மேலும் சார்லஸ் தன் உடல் என்பது கண்ணாடியாலான பண்டம் என்று நம்ப ஆரம்பிக்கிறார்.யாராவது தன் அருகில் வந்தாலோ அல்லது தன்னைத் தொட்டாலோ தான் பொடிப் பொடியாக உதிர்ந்து போய்விடுவோம் என்று அஞ்சுகிறார்.இதனை மறுத்து யார் எத்தனை செப்பினாலும் நோ யூஸ்.ராஜா சொல்லிவிட்டால் மறுக்கவா முடியும்..?தான் உடைந்து போகாமலிருக்க இரும்புக் கம்பிகளாலான மேலாடையைத் தயாரித்துத் தன் சாதாரண ஆடைகளின் மீது அணிந்து திரிவது ராஜாவின் இன்னொரு குணாம்சம்.
நாலாம் சார்லஸின் தத்துப் பித்துக்களிலிருந்து தப்பிப்பதற்காக அவரது மனைவியும் ராணியுமான இஸாப்யூ தன்னைப் போலவே தோற்றமளிக்கக் கூடிய ஓடட்டே என்பவளைக் கண்டுபிடித்து அவள் தான் இஸாப்யூ என்று அரசரை நம்பவைத்து என் கண்ணையே உன் கிட்டே ஒப்படைக்கிறேன் என்று வசனம் பேசாமலேயே எஸ்கேப் ஆகிறார்.தன்னோடு வாழ்வது இஸாப்யூ அல்ல வேறோருத்தி என்ற உண்மையான உண்மை சார்லஸ் சரியாக இருக்கும் தருணங்களில் கூட அவருக்குத் தெரியாமலே போகிறது.அந்த அளவுக்கு நகலின் துல்லியம் அவரை அசத்தி விடுகிறது.

ஸீஷோப்ரீனியா பைபோலார் டிஸார்டர் போன்ற பலவிதமான மன நோய்களின் கூட்டு நோயாளியாகத் தன் வாழ்க்கையில் துயருற்ற 4ஆம் சார்லஸைக் காப்பாற்றுவதற்காக அரச மருத்துவர்கள் செய்த முயல்வுகள் ஏராளம்.அதில் முக்கியமான ஒன்று அரசர் தூங்குகையில் ஏற்கனவே அவரது படுக்கையறையில் மறைந்திருக்கும் முகமெல்லாம் கரி பூசிய ரகசிய டீம் ஒன்று அவர் படுக்கை மீது குதித்து அவரைக் கைகால்களைப் பற்றிக் கொண்டு நெற்றியில் சிறுசிறு துளைகளை இட்டு அவரது வியாதிகளைக் குணப்படுத்த முயன்றிருக்கிறார்கள்..ஆனால் எதுவும் பலனளிக்காமல் அடுத்த ராசாவாக 4ஆம் சார்லஸின் மருமகன் அடுத்த பட்டத்துக்கு வந்ததுடன் முடிந்துபோனது 4ஆம் சார்லஸின் வரலாறு.

சரித்திரத்தில் க்ரூரமான ஐவன் என்றழைக்கப் படுகிற மன்னர் ஐவனுக்கு சிறுவயது முதலே துன்பம் பெருகும் பால்யம் தான் வாய்த்தது.தாய் தந்தையரை சின்னஞ்சிறு பிஞ்சாக இருக்கையிலேயே இழந்து விடுகிற ஐவன் பிற்பாடு அந்த தேசத்தின் இரண்டு பெரிய குடும்பத்தினரால் வளர்க்கப் பட்டார்.எல்லோருமே ஐவனை ஒரு அரசியல் கருவியாகவே பார்த்தார்கள்.அந்த பிராயத்தில் ஐவனுக்கு கிட்டாமற்போன பாசமும் பெற்றோரின் அன்பும் ஒரு காரணம் என்றால் அவரது க்ரூரங்களுக்கான பெரும் காரணம் இன்னொன்று.சிறுவன் ஐவன் கண் முன்னே பல்வேறு வன்முறைகள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டன.பலரும் துள்ளத் துடிக்க க்ரூரமான முறையில் துன்புறுத்தப் பட்டார்கள்.தண்டனைகளின் விதவிதமான சப்தங்களும் பொங்குகிற குருதியும் வெட்டி வீழ்த்தப்பட்ட உறுப்புக்களும் அழித்தொழிக்கப் பட்ட மனிதர்களும் எல்லாமே சரி எதுவுமே சாதாரணம் என்கிற எண்ணப்போக்கை ஐவனின் மனதாழத்தில் விதைத்தன.

முதன் முதலில் க்ரெம்ளின் நகரத்தின் சுவர்களில் நாய்களையும் பூனைகளையும் தூக்கி அடித்துக் கொலை செய்த ஐவனின் வெறியாட்டங்கள் எத்தனை தூரத்துக்குப் போகும் என்று யாருமே அறிந்திருக்கவில்லை.தன் முதல் மனைவி அனஸ்தாஷியா மீது பெருங்காதல் கொண்டிருந்த ஐவன் அவளது திடீர் மறைவுக்கு அப்பால் முழுவதுமாக மனம் சிதைவுற்றார்.எப்போதும் தன் உப பிரதானிகள் மீதெல்லாம் எரிந்து விழுந்து கொண்டே இருக்கத் தொடங்கினார்.தன் ஆளுமையிலிருந்து விடுபடுவதற்காக கிளர்ச்சிகளைத் துவக்கிய நகரங்களுக்கு ஓப்ரிஸ்நிக்கி என்றழைக்கப் பட்ட ரகசியப் போலீஸ்படையை அனுப்பி அவைகளைத் தன் ஆளுமையிலிருந்து தகர்ந்திடா வண்ணம் காத்துக் கொண்ட ஐவன் விரோதிகளுக்கும் பிடிக்காதவர்களுக்கும் வழங்கிய தண்டனைகள் கொடூரமானவை.அதற்குப் பலகாலம் முன்பே வழக்கொழிந்திருந்த தலையை வெட்டுதல் தூக்கிலிடுதல் நகங்களை இமைகளைப் பிடுங்குவது மேலும் கொதிக்கிற எண்ணையில் பொறித்துவிடுவது மிருகங்களைக் கொண்டு மனிதர்களை வேட்டையாடுவது எனப் பல விதங்களில் கொடுமையை அரங்கேற்றினார்.

அரசரின் இம்சைகள் நாளுக்கு நாள் பெருகின.ஒரு புறம் ஒழுக்கத்தைத் தன் சகாக்களுக்கு மணிக்கணக்கில் போதித்து உரை நிகழ்த்தும் ஐவன் அடுத்த சில மணிகளில் அவர்களோடு மது அருந்திக் கொண்டே நடனம் ஆடுவார்.மனிதர்களைக் கொடூரமாகத் தாக்கி விட்டு மணிக்கணக்கில் சர்ச்சில் தரையில் உருண்டு பாவமன்னிப்புக் கோருவார்.மொத்தத்தில் கூட இருப்பவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு ஓடவேண்டியது தான்.அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று இத்தனை செய்த ஐவன் தன் சொந்த மகனையே தாக்கிக் கொலை செய்தது தான் அவரது க்ரூர உச்சம்.பின் அவரது அடுத்த மகன் ஃபியோதர் ரஷ்ய சாம்ராஜ்யத்தின் அரசனானார்.அவரும் பெருமளவு சோபிக்கவில்லை.

4ஆம் சார்லஸ் மற்றும் ஐவன் இவ்விருவர் என்றில்லை.இன்னும் வரலாற்றின் பல பக்கங்களில் தங்களது மனதின் நோய்மையை உணராத மற்றும் அவற்றை ஒத்துக் கொள்ளாத பல அரசர்களும் தங்களது ஆட்சிக்காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை சித்ரவதை செய்திருக்கிறார்கள்.மக்கள் பாவம் என்ன செய்வார்கள்..?யதோ ரஜா ததோ ப்ரஜா!


தொடரலாம்
அன்போடு
ஆத்மார்த்தி