புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

தர்மதுரை

குடியின் பின்னால் அயர்ந்து திரியும் ஒருவன் மருத்துவருக்குப் படித்தவன்.அவனது வாழ்க்கையின் சில அத்தியாயங்களை முன் பின்னாகக் கலைத்துப் போட்டிருக்கும் நிஜத்துக்கு அருகாமையிலான சினிமா தர்மதுரை.முதலில் இப்படி ஒரு திரைப்படத்தைக் கற்பனை செய்ததற்கே அன்பையும் நன்றியையும் தெரியப்படுத்தலாம்.நாமெல்லாரும் நன்கு அறிந்த கதை மாந்தர்களைக் கொண்டு நாம் அறிய வேண்டிய பெரும் திருப்பங்களுடனான கதை செய்வதற்குப் பதிலாக உணர்வுகளின் குவியலுக்குள் பார்வையாளனை அமிழ்த்தி முடிந்த மட்டுக்கும் அவனது ஆழ்மனதினுள் தான் விரும்பிய சலனங்களை நேர்த்த முயன்றிருக்கும் சித்திரம் தர்மதுரை.

அண்ணன் தம்பிகளுடன் விரோதம்.நாலு மகன்களுக்கு இடையே எப்போதும் முட்டிக் கொள்வதைப் பார்த்துக் கொண்டும் சகித்துக் கொண்டும் எந்த ஊறும் அல்லது எந்தப் பெரிய விளைதலும் நிகழ்ந்து விடாமல் பார்த்துக் கொள்வதையே தன் முழு வேலையாகக் கொண்டு அலைந்து திரியும் தாயாக ராதிகா.இத்தனை வருடங்களில் ராதிகா ஏற்றிராத ஒரு கதாபாத்திரத்தையும் உடல்மொழியையும் அடக்கி வாசிக்கும் கீழ்ஸ்தாயிக் குரலையும் திட்டமிட்டுத் தனக்கு வேண்டிய ஒரு கிராமத்துப் பெண்மணியை அச்சு அசலாய் வெளிக்கொணர்ந்திருக்கிறார் இயக்குனர்.

"எம் பையன் மேல எஃப்.ஐ ஆர் போட்டாங்கிய...டேசனைக் கொளுத்திப் புடுவேன்" என்று விளைவறியாமல் கண்ணை மறைக்கும் பாசத்தில் உருகும் ஒருத்தி தர்மனை ரூமில் பூட்டிவைத்திருக்கும் பிற மகன்களை எதுவும் சொல்ல முடியாமல் அதே நேரம் அவனைக் காப்பாற்றுவதற்காக சாப்பாட்டுத் தட்டின் ஆழத்தில் ரம்பத்தை வைத்து நல்லா பிசைஞ்சு சாப்பிடு ராசா என்று க்ளூ கொடுக்கும் அன்பரசி.ராதிகாவின் படப்பட்டியலில் முக்கியமான திரைப்படம் இது என்றால் மிகையல்ல.

தப்பாட்டமா...இது தான்யா சரியான ஆட்டம் என்று தப்பாட்டக் கலைஞர்களைக் கட்டிப் பிடித்து அவர்களோடு ஆடிப்பாடும் டாக்டர் தர்மதுரையின் கதாபாத்திரம் ஒரே நேர்கோட்டில் பயணிக்காமல் தனக்குத் தேவையான நெகிழ்தல்களோடு பயணிப்பது சொல்லத் தக்கது.அதே நேரத்தில் கதாபாத்திரத்தின் மையச்சரடு அவனது நேர்மையும் சமரசம் செய்து கொள்ளாத மென் மனதும் பிசகாமல் இருப்பதும் சேரும் போது ரசிக்கத் தக்கதாகிறது.சமகாலத்தில் நடித்துக் கொண்டிருக்கும் எல்லாரையும் தன் உச்சபட்ச பரிமளிப்பால் விஞ்சுகிறார் சேது.


சீனுராமசாமியின் பெண் பாத்திரங்கள் கடந்த முப்பதாண்டுகளில் சினிமாவில் தோன்றலுக்குட்பட்ட பெண் பாத்திரங்களில் ஆகச்சிறந்தவர்களாக அமைவது இந்தப் படத்திலும் தொடர்கிறது.மிகச் சன்னமான விகற்பமில்லாத நட்பும் அன்புமாய் சேதுவுக்கு இடவலமாக தமன்னாவும் ஸ்ருஷ்டி டாங்கேயும் இடம்பெறும் கல்லூரிக் காட்சிகள் மிகையற்ற சினிமாத்தனம் கொஞ்சமும் கலக்காத ரியாலிடி எபிஸோட்.பேராசிரியராக வரும் ராஜேஷின் பின்புலமும் கல்லூரி காலம் முடிந்த பிற்பாடு தன் ஓய்வுக்காலத்தில் தென்காசி ஏரியாவில் தன் பழைய மாணவனாக இருப்பானோ என்ற ஆவலாதியில் தர்மதுரை என்ற பேரிலான டாக்டரைத் தேடிவரும் காட்சி கவிதை.அதுவும் ராஜேஷ் பேசிக்கொண்டே இருக்கையில் குனிந்து அவர் காலைத் தொட்டு வணங்கும் தர்மன்..அவன் தன் மாணவன் தான் என்பதை உணர்ந்து நெக்குருகும் ராஜேஷ்.இந்தக் காட்சியின் பின்பாதி வசனமேதுமற்ற விஷூவல் சிற்பம்.


படத்தின் பெரும்பாதி நாஸ்டால்ஜியாவைப் பேசுவதாகவே ஒரு நதியின் வளைதல்களோடு போவது அழகு.காமக்காப்பட்டி அன்புச்செல்வியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நடிகை என்பதே மறந்து போகிற அளவுக்கு அறியாமையின் பேரழகை நம் கண்களின் முன் மெய்ப்பிப்பது அற்புதம்.சின்னச் சின்ன குணவித்யாசங்களின் மூலமாக அந்தப் பாத்திரம் சென்று முடியக் கூடிய தற்கொலை முடிவை முன்னமே மிக மென்மையாக ஒரு சாம்பல் நிழலைப் போல உணர்த்தியபடியே வருகிறார் இயக்குனர்.தர்மனின் தோள்களில் சரிந்து தன் எதிர்காலம் குறித்துக் கலங்கும் காட்சியின் பின் புலம் திசைகளற்ற வனவெளியாய் விரிவது அதற்கடுத்தாற் போல் அவளுக்கு நகர்வதற்குத் திசையும் எடுப்பதற்கு முடிவும் விஞ்சி இருக்கவில்லை என்பதை நனவிலி மனதினுள் ஊசிமருந்தைப் போலச் செருகித் தருகிறது.தூங்குகிற பேதையாகவே ஐஸ்வர்யாவின் மரணக்காட்சி பூர்த்தியடைகிறது.அங்கே தர்மதுரையின் உடன்பிறந்தவர்களின் பேராசையும் ஒரு மத்யவர்க்கக் குடும்பம் திருமணம் என்கிற ஒன்றைக் கொண்டு முடிந்தவரை பொருளாதார ரீதியாக மேடேறிவிடுகிற கண்மூடித் தனமான ஆத்திரமும் தன்னோடு வாழவேண்டியவளைக் கொன்றுவிட்டதில் சிதைந்து நொறுங்குகிற தர்மதுரை தானொரு டாக்டர் என்பதை மறக்கிறான்.கற்று வந்த கல்வியைப் புறந்தள்ளி உடனிருந்தே கொன்ற தன் உடன்பிறந்தவர்களைத் தானும் தன்னாலான அளவு சின்னாபின்னமாக்குவது என்கிற வேறு வழியற்ற வழியில் தள்ளாடுகிறான்.அவர்களைக் கொல்வதோ அழிப்பதோ அவனது கம்பீர காலத்து நோக்கமாக இருந்திருக்குமேயானால் அதற்குத் தேவைப்படுவது ஒற்றை நிமிடம் தான்.ஆனாலும் படித்த படிப்பும் தன் வாழ்க்கை சின்னாபின்னமானதன் அதிர்ச்சி மறுபுறமுமாய் உட்புறம் கலைந்து பலவீனமாகிற தர்மதுரை மேலும் தன்னை நெகிழ்த்திக் கொண்டு பலவீனமாக்கிக் கொள்ளும் விருப்பமற்ற வாழ்தல் வழியைத் தேர்வெடுக்கவே குடியின் பிடிக்குச் செல்கிறான்.இனியும் இருந்தால் உடன்பிறந்தவர்கள் கொன்றுவிடுவார்கள் என்ற கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.வெளியேறும் போது தானறியாமல் வீட்டின் மானத்துக்கு பாத்திரமான பெருந்தொகை ஒன்றைக் கையோடு கொண்டு செல்கிறான்.ஏற்கனவே அவனை வெறுக்கும் வீடு அவனைக் கூடுதல் வெறியோடு தேடியலைகிறது.    

இங்கே தான் இயக்குனர் தன் திரைப்படத்தை ஒரு கவிதையாகவே வார்க்கத் தொடங்குகிறார்.தான் படித்த கல்லூரிக்குப் போகிற தர்மதுரை தன்னை பெரிதும் காதலித்த ஒருத்தி தற்போது உயிரோடே இல்லை என்பதை அறிந்து இன்னொரு முறை உடைகிறான்.அங்கே இருந்து தோழி தமன்னாவைச் சந்திக்கச் செல்வதுடன் அவனது வாழ்வின் நதியலைதல் நிறைவடைந்து வாழ்க்கை ஒரு அருவி போலப் பெருக்கெடுக்க ஆரம்பிக்கிறது.இந்தக் கடைசி எபிஸோடை தென்காசிப் பகுதியில் காட்சிப் படுத்தி இருப்பது இன்னும் அழகு.

தமன்னாவுக்கும் சேதுபதிக்கும் இடையிலான நட்பு இரண்டு இழந்தவர்களுக்கு இடையிலான வேறு வழியற்ற பற்றுதலாகப் பெருக்கெடுப்பது அழகியலின் உச்சம்.தன் வாழ்க்கையில் அதுவரை உச்சரிக்காத ஒரு சொல்லாடலை உதிர்க்கிறாள் அந்தத் தோழி...இப்பத் தான் செக்யூர்டா ஃபீல் பண்றேன் என..இந்த இடத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசியிருந்தாலும் வீணாகி இருக்கும்.சீனுராமசாமி தானே தன் பாத்திரங்களின் ஆன்மாவிலிருந்து வசனங்களைச் செதுக்கி இருப்பதற்கு இந்த ஒரு காட்சி உதாரணம்.


மூன்றாம் பாலினச் சொந்தங்கள் மீது மழை போல் பொழியவேண்டிய பேரன்பை வெளிக்காட்டுகிற காட்சிகள் கதைக்குள் கதையாக கரங்களைச் சப்தமாக ஒலிக்க வைக்கின்றன.படத்தின் இடையே போகிற போக்கில் டாக்டர் தர்மதுரை ஒரு குழந்தையிடம் சொல்வார்..புரோட்டால்லாம் ரொம்ப சாப்பிடக் கூடாது என்று.பீட்ஸாக்களுக்கும் பர்கர்களுக்கும் தங்களை ஒப்புக்கொடுத்து சந்தோஷமாய தங்கள் நிலத்தின் வாழ்வியலுக்குள் ஆயிரமாயிரம் சமரசங்களை அனுமதித்துக் கொண்டிருக்கிற இன்றைய காலகட்டத்தில் இப்படி யோசிக்கிற ஒரு திரைப்படம் எத்தனை பெரிய ஆறுதல்..?

படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பாலுமகேந்திராவின் அதே டச்சோடு பூர்த்தியடைகிறது.உறுத்தாத ஒளிப்பதிவும் யுவன் ஷங்கர் ராஜாவின் பக்குவமான இசையும் படத்தின் மதிப்பை அதிகரிக்கின்றன.எம்.எஸ்.பாஸ்கரின் பரிமாணம் விருதுகளுக்குத் தகுதியானது.


சீனுராமசாமியின் மனிதர்கள் அசலானவர்கள்.அவர் சொல்ல விரும்புகிற கதைகள் பெரும் ட்விஸ்ட்களோ தாட் பூட் சம்பவங்களோ கொஞ்சமும் இல்லாத நேர்மையானவை.மனதுக்கு அருகாமையில் உணர்வதற்குரிய ஒரு கதை.காகிதத்தில் எழுதிய ஈரமனசைத் தன்னாலான அளவு செல்லுலாய்டில் பெயர்த்திருக்கும் கலைநேர்மை.தர்மதுரை..அன்பும் காதலும் நட்பும் மனிதத்தின் வேறு மூன்று சொற்கள் என்பதை நிரூபித்திருக்கும் திரைப்படம்.

தவறாமல் பார்க்க வேண்டிய அற்புதம்.