புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

ராணி என்றால் ராணி

ராணியொருவள்
ராணி என்றே அறியப்பட்டவள்.
அவளது இயற்பெயர்
எவருக்கும் நினைவிலில்லை.
யாருமறியாத அவள் முன் கதை
தன் வீட்டு வாசலில் கோலமிடப்
புள்ளி வைத்ததற்கும் கோலமிட்டதற்கும்
இடையிலான கணங்களில்
நகர்வலம் வந்த
மத்திம வயது ராஜாவின் கண் பட்டு
ராணியாக மாற்றப்பட்டாள்.

ராணியான பின்
அவளுக்குமூன்று பணிகள் இருந்தன.
ஒன்று
ராஜசபையை அலங்கரிப்பது.
இரண்டு
ராஜாவின் குறிப்பறிந்து புன்னகைப்பது.
மூன்றாவது
ராஜாவின் இருக்கைகளிலும்
படுக்கைகளிலும்
இடதுபுறங்களை நிரப்புவது.

துர்க்கனவொன்று,
கண்டதிலிருந்து ஏழாம் நாள்
ராஜாவின் மரணமாக பலித்தது.
ராஜாவற்ற
ராணியானாள்
ராணி.

ஆட்சிப்பொறுப்பேற்ற ராணி
அடிமைப் பெண்கள் அனைவரையும்
விடுதலை செய்யும்
ஆணை ஒன்றைப் பிறப்பித்தாள்.
ராஜாவின்
அந்தப்புரம் வெடிகொண்டு
தகர்க்கப்பட்டது.
அங்கே அழகான
மழலையர் பள்ளி ஏற்படுத்தப் பட்டது.


ராணியைப் போல்
எந்த ராஜாவும் இருந்ததில்லை
எனப் புகழாரங்கள் சூட்டப்பட்டன.
"ராணி என்றால் ராணி" என்று கொண்டாடினர்.

ராணிக்கு வயது எழுபதானது..
அவளொரு தினம் நகர்வலம் சென்றாள்.
ஒரு இளைஞன்
தன்வீட்டு வாசலில்
கோலமிடுவதற்கான புள்ளிகளை
வைத்துக்கொண்டிருக்கையில்
ராணியின்
கண்களில் பட்டான்.

அந்தப்புரமொன்றை
ஏற்படுத்தி அவனை
ஆண்ராணியாக
மாற்றினாள்
ராணி.

Last Updated (Thursday, 16 February 2017 15:57)