புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

எப்படி மறப்பேனடி?


இதை மட்டுமா இழந்தோம்? 7 எப்படி மறப்பேனடி?

சுஜாதா உட்பட எழுத்தாளர்கள் மாத நாவல்களின் பொற்காலத்தை அரசாண்ட மன்னர்கள்.மாதாமாதம் வெளியான நாவல்களில் பல இன்றைக்குக் கைவிடப்பெற்றன.இன்னமும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் நாவல்கள் இங்கே சொற்பமே.ஆனால் துப்பறியும் நாவல்களுக்கென்று ஒரு பொற்காலம் இருந்தது தமிழகத்தில்,சந்தித்திராத சந்திக்க முடியாத கதாபாத்திரங்களை நேசத்திற்குரியவர்களாக மாற்றிக்கொண்ட மாயவித்தை எழுத்தின் மூலம் நிகழ்ந்தது.அந்த மாயமனிதர்களில் சிலரைப்பற்றின பதிவு இது.

முதன்முதலில் தேவனின் துப்பறியும் சாம்பு,சீஐடி சந்துரு போன்ற கேரக்டர்கள் மக்கள் மனதில் ஆணியடித்துக்கொண்டனர்.பின் வந்த தமிழ்வாணன் தன் பேரிலும் சங்கர்லால் என்ற கற்பனைப் பாத்திரத்திலும் மாறி மாறி துப்பறியும் கதைகளை படைத்தார்.அவரது வாரிசுகள் பதிப்புத் துறைசார்ந்து இயங்கினாலும் அந்தக் கதா பாத்திரங்களைக் கைவிட்டே நகர்ந்தனர்.

தேவிபாலாவின் லதா-பிரசன்னா,சுஜாதாவின் கணெஷ்-வசந்த் மற்றும் உதவி கமிஷணர் ராஜேந்திரன்,ராஜேந்திரக்குமாரின் ராஜா-ஜென்னி,சுபாவின் நரேந்திரன்-வைஜயந்தி-ஜான்சுந்தர்-அனிதா-ராம்தாஸ்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ்-அவரது மனைவி மற்றும் இணை பாத்திரங்களாக செல்வா-முருகேசன்-என சுபாவின் கூட்டம் பெரியது.

மாத நாவல்களின் உளவியல் என்ன..?மாதநாவல்கள் விறுவிறுப்பை பிரதானமாக கொண்டு இயங்கின.படிக்கிறவர்களின் வாழ்வியலுக்குச் சற்றும் சம்மந்தமற்ற ஆனால் அவர்கள் மனவெளியோடு நெருக்கமாக வாசிக்கிறவர்களை உணர்ந்து உலவச்செய்த நிகழ்வோட்டங்களைப் பின்புலமாகக் கொண்டு இயங்கின.குற்றங்களும் கொலைகளும் செய்தித்தாளில் படிக்கையிலும் கேள்விப்படுகையிலும் மேலதிகமாக தமக்கே நடக்கையிலும் கூட அவை தருகிற உணர்வு பயம்மிக்கது.ஆனால் குற்றச்செயல்களை விவரணையோடு அவிழ்த்து அதைச்செய்தவன் மற்றும் கண்டுபிடிக்கிற அரசுத்தரப்பு ஆகிய இரண்டு இணைச்சாலைகளிலும் சற்றேறக்குறைய நிஜத்துக்கு அருகாமைப் பயணமொன்றை வாசகனுக்கு ஏற்படுத்தித் தந்ததன் மூலமாக துப்பறியும் கதைகள் வெற்றிபெற்றன.மக்களுக்குக் குற்றங்கள் பற்றிக் கற்றல் விருப்பமில்லை.கேட்டல் விருப்பமானது.நல்லவன் வாழ்வான் என்ற தத்துவமே கடைசியில் வெல்லும் என்பது முன் தீர்மானமாக இருந்தபோதிலும் யார் என்ன எப்படி என்பனவற்றை மாற்றிக்கொண்டு விதவிதமான சூழல்களில் கதைகளை பெரிதும் விரும்பினர்.

சுஜாதாவின் நைலான் கயிறு.ஒரு உன்னதமான நாவல்.அதில்வருகிற கிருஷ்ணன் பாத்திரம் மறக்கவியலாதது.ஒரு நியாயமான காரணத்துக்காக செய்யப்பட்ட கொலையை கண்டுபிடிக்காமலேயே பணி ஓய்வு பெறப்போவதை தாங்கவியலாத ஒரு அதிகாரி சுயசிரமத்தில் அந்தக் கொலைகாரனைக் கண்டுபிடித்ததையும்,அவன் செயலின் நியாயத்தை போற்றி அவனைக் காட்டிக்கொடுக்காமல் திரும்பியதையும் ஒரு காலகட்டமே புதியதொரு அதிர்வோடு விரும்பி ஏற்றுக்கொண்டது.

சுஜாதா’வின் கணேஷ் மற்றும் வசந்த்.இருவரும் வழக்கறிஞர்கள்.கணிதத்தில் ஏ மற்றும் ஏ டேஷ் என்று சொல்வது போல் இருவரின் குணாதிசயங்களும்.கணேஷ் சீனியர்.வசந்த் ஜூனியர்.இருவருமே அதிபயங்கர அறிவுஜீவிகள்.கணேஷ் பொறுப்பானவன். பொறுமையானவன். வசந்த் அவசரக்குடுக்கை,அதீதகுணாம்சன்.கணேஷ் கண்ணியமானவன்.வசந்த் குறும்பன். இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்.சுஜாதாவின் உளவியல் இரண்டாய் வகுபட்டு அவர் யாராக இருந்தாரோ அது கணேஷின் பெரும்பான்மைக் குணங்களாகவும் அவர் யாராக இல்லாமல் பிறரிடம் எதையெல்லாம் ரசித்தாரோ அவையெல்லாம் வசந்தின் குணக்குறியீடுகளாகவும் அமைத்துக்கொண்டார்.

இதுபோன்ற தொடர்பாத்திரங்கள் எழுத்தாளனை விட அவன் படைக்கிற பாத்திரங்களை மனதுக்கு நெருக்கமாய் உணரச்செய்தன.அவர்களது சிரஞ்சீவித்தனத்தின் மீது வாசகன் கொள்கிற நம்பிக்கை அவர்களை வெற்றிகரமானவர்களாக்கியது.சாவின் விளிம்புகளுக்கு சென்று மீள்வதை,உச்சகட்டமான இடரேற்பதை,குறும்பை,சவாலை எதிர்கொள்வதை இன்னபிறவற்றை அக்கதாபாத்திரங்கள் தொடர்ச்சியாக வெவ்வேறு கதைகளில் வெவ்வேறு சூழல்களில் செய்துகாண்பிப்பதை விரும்பினர்.மேற்கத்திய சினிமாக்களில் ஜேம்ஸ்பாண்ட்,எழுத்துக்களில் ஷெர்லக் ஹோம்ஸ் என இவ்வுத்தி பெற்ற வெற்றி இந்திய சினிமாக்களில் வெற்றிபெறவில்லை என்றே சொல்லமுடியும்.ஆனால் தமிழ்த் துப்பறியும் பாத்திரங்கள் வெற்றிகரமாக இயங்கினர்.

சமகாலத்தில் அறிமுகமாகி இன்றைக்கு வரை மாத நாவல் உலகத்தில் தீவிரமாய் இயங்கிக்கொண்டிருக்கும் ராஜேஷ்குமார் தன் துப்பறியும் உலகங்களை வேறாகப் படைத்தார்.விவேக் யாராலும் வீழ்த்தவியலாத போலீஸ் அதிகாரி.அதுவும் ஸ்பெஷல் பிரான்ச் அதிகாரி.துணை நிற்பவர் இன்ஸ்பெக்டர் கோகுல் நாத்.நியாயப்படி கோகுல்நாத் இந்நேரம் தமிழக டீஜீபி ஆகியிருக்க வேண்டியவர்.என்றென்றும் இன்ஸ்பெக்டராகவே அவரிருப்பது ராஜேஷ்குமாரிடம் அவருக்கு பதவிஉயர்வு கிட்டாததால்.இன்றைக்கு விஷ்ணு என்ற உதவி வாலிப அதிகாரி தென்படும் ராஜேஷ்குமாரின் கிரைம் நாவல்களில் சப் இன்ஸ்பெக்டர் அவினாஷ்,நவநீத கிருஷ்ணன் கூட நிரந்தரரே.

சுஜாதாவின் நீட்சியாக சுபா மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் இருவரும் நுழைந்து வெற்றிகரமான எழுத்தாளர்களாக மாறின நேரம் அவர்கள் தமது தொடர்பாத்திரங்களை சுஜாதாவின் கணேஷ் வசந்தின் சாயலில் இருந்து வேறுபடுத்திக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது.சுபா ஒரு தனி குற்ற உலகத்தையே படைத்தனர்.அவர்களது இருள் உலகமும் அவர்களது தனித்த செந்தமிழ் கதைசொல்லலும் இன்றைக்கும் மறக்கவியலாத தூண்டில்கயிறு போன்ற எத்தனையோ கதைகளை நினைவுகளுக்குள் நிறுத்துகின்றன.

ராம்தாஸ் என்பவர் அடிக்கடி பைப் பிடிப்பார்.அவருக்கு அந்த பைப்பை பற்றவைப்பதே பெருங்கவலை கடத்தல்காரர்களையும் கொலைகாரர்களையும் கொடூரமானவர்களையும் கண்டுபிடிக்க சொல்லி காணாமற்போன தன் மகளை மகனை அல்லது பொருளை கண்டறிந்து தரச்சொல்லி காவல்துறையையும் நம்பாதவர்கள் ராம்தாசின் ஈகிள்ஸ் ஐ துப்பறியும் நிறுவனத்துக்கு வருவார்கள்.

அவர் காரியஸ்தர் அல்ல.கட்டிக்கொண்டு வா என்பவர்.வெட்டிக்கொணர்வது வேறு படை.நரேந்திரன்-வைஜந்தி (காதலிணை) துப்பறியும் ஜோடி.ஜான்சுந்தர்-அனிதா(காதலிணை)இன்னுமொரு ஜோடி.கருணாகரன் என்ற ஒரு கேரக்டர் அனியாயமாய் செத்துப்போய்விட்டார்.அந்த அலுவலக ரிசப்ஷனிஸ்ட்,மீரா ஜூனியர் என்றொரு நாய்கூட எல்லா நாவல்களிலும் இடம் பெறும் தொடர் சைடு கேரக்டரே.இன்ஸ்பெக்டர் பால்ராஜ் அதிகமாய் சிகரட் பிடிப்பவர்.எப்போதுமே ட்ரான்ச்ஃபர் ஆகாமல் இவர்கள் ஏரியாவிலேயே சுற்றுகிறவர்.அவர் மனைவி ரோஸ்லினுக்கு பயப்படுகிறவர்.

இந்த பாத்திரங்கள் வராத கதைகளுக்கென்றே பலகீனமான இன்னுமொரு துப்பறியும் நிறுவனம் உண்டு.அதில் செல்வா என்னும் காலில் லேசாய் அடிபட்ட பழைய பட்டாளத்தான் ஹீரோ என்றால் உடனே திரியும் அசிஸ்டெண்ட் பேர் முருகேசன் அவனது சென்னைக் கொடுந்தமிழ் ஏகபிரசித்தம்.சசிதரன் என்னும் ஈஎஸ்பி கேரக்டரும் கூட சுபாவின் தொடர் பாத்திரமே.

இவை தவிர நாவல் உலகின் அர்ஜூனாக விளங்குவதும் சுபாவே.அதிகமான எல்லை-ராணுவம்-உளவு-நாட்டுப்பற்று கதைகளும் சுபாவின் நாவல்களில் அனேகம்.பட்டுக்கோட்டை பிரபாகரின் பரத் இவர் ஒரு வழக்கறிஞரே.சுஜாதாவின் கணேஷ் கிட்டத்தட்ட பரத்.துணைக்கு வசந்த் அல்ல..வசந்தா…சாரி சுசீலா.சுசீலா தனது பனியனில் எழுதிவரும் ஆங்கில தமிழ் வாசகங்கள் ரத்த அழுத்தத்தை எகிறச்செய்தன.இன்றைக்கு பலரின் பனியன் அளவுகள் சுசீலாவுக்கு அதை செய்யும்.காலம் மாறிவிட்டாலும் இன்னமும் யூத்தாகவே இருக்கும் ஜோடி.

இவர்களைத் தவிர குற்ற உலகில் தொடர் கேரக்டராக கண்ணபிரான்-மார்ட்டின் மேலும் கிரண்-ராவ் அலெக்ஸ் என பிரபாகரின் சூழல்விவரணை ரசனைக்குரியது.அவரது எண்ணற்ற நாவல்கள் இந்தக் கதாபாத்திரங்களுக்காகவே மீண்டும் மீண்டும் படிக்கச்செய்தன.தயாளன் என்னும் சப் இன்ஸ்பெக்டர் எப்போதுமே அவரது மேலதிகாரி அவரை மதிக்காமல் தவறாக முடிவெடுப்பார் ஆனால் தயாளனே வெல்வார் இறுதியில்.

மாத நாவல்கள் இலக்கியமா இல்லையா என்பதொரு கேள்வி.ஆனால் மாதத்திற்கொரு நாவலாக அவற்றை தொடர்ந்து வாங்கிக்கொண்டிருந்த வாசகர்கள் படித்த நாவலையே மீண்டும் மீண்டும் படித்தனர்.சுஜாதா ஒரு கட்டத்தில் மாத நாவல்களைக் குறை சொன்னார்.என்றாலும் படிக்கிறவர்கள் குறை சொல்லவில்லை.

குற்றம்-விசாரணை-குற்றம்-கண்டுபிடித்தல்-என விதவிதமான குற்றங்களையும் அதனுள்ளிருக்கிற சவாலையும் வாசகர்கள் விரும்பினர்.அதற்காகக் காத்திருந்தனர்.இன்றைக்கு மாத நாவல்கள் அழிந்துவிடவில்லை.ஆனால் அவற்றின் பொன்பொருட்காலம் முடிவடைந்துவிட்டது என்றே சொல்லலாம்.எப்போதடா வரும் என்று காத்திருந்து ஒரு நாவலை குடும்பமொத்தமும் படித்துமுடித்தால் தான் நிம்மதி அடையும்.மேலும் அவற்றை பரிமாறிக்கொள்வதிலும் பரமசுகமிருந்தது.இன்றைக்கு தொலைக்காட்சி உள்ளிட்ட பல முன்னேற்றங்கள் விழுங்கி ஏப்பம் விட்டவற்றில் மிக முக்கியமானதும் ரம்மியமானதும் 80களின் பதின் பருவர்களுக்குக் கிட்டிய நேரமும் காலமும்.அந்தக் காலகட்டத்தின் மிக அழகான காகிதப்பூக்கள் மாத நாவல்கள்.

இதை மட்டுமா இழந்தோம்..?

சுஜாதா என்ற ஒப்பற்ற எழுத்தாளனோடு சேர்ந்து மரித்துப்போன கணேஷையும் வசந்தையும் இனி என்ன செய்து மீட்டெடுக்க என்று எண்ணுகையில் கற்பனைக் கதாபாத்திரங்களுக்கான கண்ணீர்த்துளிகள் வியப்பின் நிலங்களில் நதியாய் ஓடத்துவங்குகின்றன.வாழ்ந்து மரிக்கிற ஒவ்வொரு எழுத்தாளனோடும் உடன்கட்டை ஏறிவிடுகிற மௌனவுலகத்தின் மனன பாத்திரங்கள் நம் உயிருக்குள் எப்போதும் நல்நினைவுகளாய் தங்கியிருப்பது சாகாவரம்.