புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

ஞாபக நதி 3

பெயர் பெறும் தருணங்கள்


பெயர்கள் அழகானவை.ஒவ்வொருவரும் தனக்கான பெயர்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டால் எத்தனை நன்றாக இருக்கும்?பெறுகிற குழந்தைகள் மீதான முதல் அதிகாரமாகவே பெற்றவர்கள் பெயர் சூட்டுதலைச் செய்கிறார்கள்.என் பெயரின் எழுத்துரு வரிசையில் விடுபட்டுப் போன ஹெச் என்கிற ஒரு எழுத்துக்காக சிறுவயதுகளில் அம்மாவிடம் பலதடவை சண்டையிட்டிருக்கிறேன்.அலுத்து
ப் போன அம்மா சொல்வாள் நீ பெரியவனாகி கெஸட்ல ஹெச் சேர்த்து உன் பேரை மாத்திக்க தம்பி.என்னைத் திட்டாதே."என் பெயர் ஒரு எழுத்துக் குறைவாகவே எனக்கு இனித்தது எனலாம்.

நான் படித்த செயிண்ட் மேரீஸ் பள்ளியில் தமிழய்யா ஒருவர் ஒவ்வொரு மாணவனிடமும் வருடத்தின் முதல் வகுப்பில் பெயர்களைச் சொல்லக் கேட்பார்.உன் பெயருக்கான காரணம் என்ன..?உன் பெயரை உனக்குப் பிடிக்குமா..?அதை உனக்கு வைத்ததன் பின்னணி என்ன உன் பெயரின் அர்த்தம் என்ன..?உன் பெயரிலேயே உனக்கு வேறு யாராவது நண்பர்கள் இருக்கிறார்களா என விதவிதமாய்க் கேட்பார்.அதனை ஒரு உளப்பூர்வ சிகிச்சையாகவே உணர்ந்தேன்.புதிய வகுப்பை ஒரு ஆசிரியர் வேறெந்த வழிகளை விட இப்படிப் பேசி பேசவைப்பதன் மூலமாய் நன்றாக நெகிழ்த்த முடியும்.அதுவும் ஆசிரியர்கள் மீது பலவித ஒவ்வாமைகளுடனான பேரச்ச காலம் அது.என்னைப் போன்ற அறிவியலும் கணிதமும் சுட்டெரித்தாலும் கைவராத சுமார் படிப்பு குமார்களுக்குத் தமிழ் வேண்டப்பட்ட தெய்வம்.தமிழய்யா தேவதை.அவரிடம் நான் வேறொரு பெயரை வைத்துக் கொள்வதாகக் கூறியதை நினைவில் இருத்தி அந்த வருடம் முழுவதும் அதைக் கொண்டே என்னை அழைத்தார்.அதனாலேயே அவரை எனக்கு மிகவும் பிடித்தது

பின்னாளில்  எழுத்தை என் வாழ்வழியாகத் தேர்வெடுப்பேன் என்றோ எனக்கென்று ஒரு பெயரைச் சூடிக் கொள்வேன் என்றோ சூசகமாய்க் கூட தெரிந்திடாத ஒரு காலகட்டம் அது. என்னை வேற்றுப் பெயர் சொல்லி அழைத்த போதெல்லாம் ஏதோ ஒரு பழைய ஆடையைக் கழற்றிவிட்டுப் புத்தாடையை அணிந்து கொண்டாற் போலவே உணர்ந்தேன்.இன்றைக்கு என் புனைப்பெயர் அளவுக்குச் சூட்டிய பெயர் மீதும் குன்றாத காதல் இருக்கிறது.என்ன இருந்தாலும் என் பெயரல்லவா அது..?
நிற்க.வாலிபதேசத்துக்குள் செல்லலாம்.எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதை எதில் கடைப் பிடித்தோமோ இல்லையோ ஒவ்வொருவருக்கும் ஒன்று இரண்டல்ல நாலைந்து பட்டப் பெயர்கள் வழங்கப்பட்டன.இதன் பின்னால் இயங்கிய மனோநிலை விசேசமானது.சின்ன வயதில் ஒரு பட்டப் பெயரை சுமக்க நேர்ந்து அந்தப் பெயரிலிருந்து விட்டு விடுதலையாக வழியின்றி வேறொரு அல்லது சில புதிய பெயர்களின் பின்னே மறைந்து கொண்டவர்கள் அனேகம்.தனக்கு வழங்கப்பட்ட பெயரைத் தண்டிக்க வழியின்றிக் கண்ணிற் படுவோர்க்கெல்லாம் தானும் பெயர் சூட்டி மகிழ்வது இன்னொரு ரகம்.மொத்தத்தில் எல்லோரும் எல்லோருக்கும் வழங்கித் துன்புற்று இன்புற்ற வினோதமே பட்டப் பெயர்கள்.

உடல்ரீதியான குறைபாடுகளைக் கொண்டு ஒருவரை கேலி செய்வதன் பின்னே குற்ற உணர்வேதும் இல்லாதிருந்த அரைவேக்காட்டுக் காலம் அது.அதனைத் தாண்டிப் பல பெயர்கள் ஏன் வழங்கப்பட்டன என்றே தெரியாமல் வழங்கப்பட்டன.அவற்றைப் பல்கலைக்கழகம் தந்த வெகுமானமாகவே கருதி வைத்துக் கொண்டே அலைந்தவர்களும் உண்டு.இன்னமும் அலைபவர்களும் இருக்கிறார்கள்.

தொண்ணூறுகளில் திரைப்படங்களில் கவுண்டமணி தன்னிஷ்டத்துக்குப் புதிது புதிதான பேர்களைச் செந்திலுக்குச் சூட்டி மகிழ்ந்தது ஒரு கூடுதல் தகவல்.பலரும் தாங்கள் அதையே செய்கையில் அதைச் சரியென்றே அடிமன ஆழத்தில் நம்பினார்கள்."அவன் எனக்குப் பேர் வச்சான்ல..அதான் நான் உனக்கு வக்கிறேன்" என்று எந்தக் கோடுதியிலும் செல்லாத ப்ரஸ்தாபங்களை மொழிந்தார்கள்.தன்னைத் துரத்தும் பெயரிலிருந்து தப்பிப்பதற்கு வழியின்றி குறிப்பிட்ட இடங்களுக்கு வருவதையே நிறுத்திக் கொண்டவர்களும் உண்டு.எந்த மொழியென்றே அறியவியலாத சொற்களெல்லாம் புழக்கத்தில் இருக்கும்.கல்குண்டன் இட்லிக்கண்ணன் பூனைக்குட்டி லாரிவண்டு கொசுவிரட்டி பெரியபானை என்பதெல்லாம் பெயர்கள்.இதில் மறக்க முடியாத இரண்டு பேர்களின் பின்னதான ஞாபகங்களை இங்கே அகழ விருப்பம்.

.நாலாவது ஸ்டாப்பில் எம்.எல்.ஏ வீட்டுக்கு சைடில் இருக்கும் வெண்மணி காஃபி பார் ஒரு காலத்தில் எங்களது கூடுகை நம்பர் ஒன்.அங்கே அசம்பிள் ஆன பிற்பாடு அண்ணா பார்க் எதிரே மாயா ம்யூசிக்கல்ஸூக்குப் போவோம்.இதான் தினசரி நகர்தல்கள்.எங்கள் வழக்கமான கூட்டம் மொத்தம் பத்துப் பன்னிரெண்டு பேர் வரை உண்டென்றாலும் எல்லா நேரமும் யாராவது ஐந்து பேர் மினிமம் சந்தித்துக் கொள்வோம்.சிலபலர் மாறி மாறி வருவார்கள்.

எங்களைத் தவிர வேறே யார் வந்தாலும் சரி அவர்களை மானுட ஜென்மாந்திரமாகவே கருதமாட்டோம்.வீம்புக்கு முறைக்க வேறு செய்வோம்.ஒரு சிலர் புதிதாக வீடு மாறி எங்கள் ஏரியாவுக்கு வந்து வெண்மணிக்கு வரத் தொடங்கினால் அவர்களை எப்படியாவது வரவிடாமற் செய்வது எங்களில் இரண்டொருவருக்கு தலையாய வேலையாய் இருக்கும்.அதையும் மீறி எங்களில் யாராவது புதிய நபரிடம் பேசி சகஜமாகி விட்டால் அவ்வளவுதான்.சாமிகுத்தம் ரேஞ்சுக்கு விசாரணை எல்லாம் நடக்கும்.அஷோக் தான் தீர்ப்பு சொல்வான்.தீர்ப்பை நாங்கள் இரண்டொருவர் இன்ப்ளூயன்ஸ் பண்ணுவதும் நடக்கும்.

அப்படி புதிதாக வரத் தொடங்கின ஒருவர் அவர் பேர் என்னவோ க்ருஷ்ணன். எப்போதுமே விதவிதமான தொப்பிகளை வைத்துக் கொண்டு வரத் தொடங்க மூர்த்தி என்பவன் அவரைக் காட்டி டே மாம்ஸூ இந்தாளு பாடி பில்டர்யா என்றான்.அவரது கெச்சலான வெடவெட தேகத்தையும் தலைக்குப் பொருந்தாத தொப்பியையும் பார்த்து அவருக்கு பாடி பில்டர் என வைத்தான்.வைத்த கணத்திலேயே அந்தப் பெயரிலிருந்த பில்டர் விலகிக் கொள்ள அவர் பாடி என்றானார்.அவர் வரும் போதும் போகும் போதும் எல்லாம் அவர் காதுப்படாது எங்களிடம் பாடி பாடி என்றே கிசுகிசுத்தான் மூர்த்தி.அவனுக்கு என்ன வேண்டுதலோ விடாமல் செய்தான்.எங்களுக்கும் அவர் பெயர் பாடி என்றே ஆனது.எதிர்பாராத ட்விஸ்ட் ஆக  நாங்கள் வராமற் போன ஒரு மழை தினத்தில் அஷோக்கும் பாடி என்கிற கிருஷ்ணனும் நிறையப் பேசி நன்றாக நெருங்கி ஃப்ரெண்டூஸ் ஆகி விட்டது தான்.

படங்களில் வருகிறாற் போல் அடுத்த நாள் சர்வ வல்லமையுடன் எங்கள் ஜமாவில் நடுநாயகராய் அவரும் வீற்றிருக்க மூர்த்திக்கு மானப் பிரச்சினையாகி இன்னும் பலமாக அவரைப் பாடி என்றே அழைக்க ஆரம்பித்தான்.என்ன ஒன்று இப்போது வெறும் பாடி அல்ல.பாடி ஸார். மரியாதை முக்கியமல்லவா..?பாடி ஸார் வந்தாரு..பாடி ஸார் கெளம்பிட்டாரு..இது பாடி ஸாருட்ட தரவேண்டிய கவர்..என்றெல்லாம் பாடி-பாடி அழைத்தோம்.அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டு "பாடி ஸார் இருக்காரா..?" எனக் கேட்டால் அவரது அம்மா கிஷ்ணா உன் ஃப்ரெண்டு வந்திருக்கார் வாயேன் என்று அழைப்பார்.பாடிஸார் பெயர் கிருஷ்ணன் என்பதே எங்கள் புரிதல்.பாடி இஸ் ஃபர்ஸ்ட்..அவரும் அதை தனக்கு வழங்கப்பட்ட முதுகலைப் பட்டமாகவே எடுத்துக் கொண்டார்.

இதில் ஹைலைட் எதுவென்றால் ஒரு நாள் நாகமலை புதுக்கோட்டையிலிருந்து நண்பன் இளையராஜா வந்திருந்தான் அவனது அக்கா கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுப்பதற்காக நண்பர்கள் பெயர் வரிசையில் அஷோக் ரவி மூர்த்திக்கு அடுத்து பாடி ஸார் என்றே இருந்தது.அந்தக் கல்யாணத்துக்கு டக்-இன் செய்து புதிய தொப்பி சகிதம் எங்களுக்கு முன்பாகவே வந்து மண்டப வாசலில் ஸ்டைலாக நின்று கொண்டிருந்தார் பாடி ஸார்..இப்பத் தான் வரீங்களா...?நான் அப்பமே வந்துட்டனே என்று அதான் பாடி ஸார் என்று பாராட்டியபடியே நுழைந்தோம்.

சாஸ்தா என்பவன் படர்க்கை வினோதன்..தன் பெயர் சாஸ்தா என்பதைக் கூட நேராய்ச் சொல்ல மாட்டான். தன் நெஞ்சைத் தொட்டு "இவர் பேர் சாஸ்தா" என்பான்.எதிரே இருப்பவர் "உங்க பேரைக் கேட்டேங்க" என்றால் "இவர் தான் சொல்றாரு..இவர் பேருதாங்க சாஸ்தா" என மறுபடியும் சொல்வான்.ஒரு வழியாகி விடுவார்கள் தானே..?"சாஸ்தா வர்லை.சாஸ்தாவுக்குத் தெரியாது.சாஸ்தாவால முடியும்.வேற யாராலயும் முடியாது.சாஸ்தாவுக்குப் பயங்கரக் கோபம் வருதாம் என்றெல்லாம் தான் என்கிற அகந்தையை அழி எனப் பெரியவர்கள் சொன்னதைத் தப்பர்த்தம் செய்து கொண்ட சாஸ்தா எப்பொருள் யார் யார் வாய்க் கேட்டாலும் இப்படித் தான் பதில் சொல்வான்.

ப்ளஸ் டூ லீவில் அவன் அப்பா சேர்த்து விட்ட பெயிண்ட் கடையில் முதல் நாள் வேலையின் போது அவன் கஸ்டமர்களோடு பேசும் போதே குபீரென்றான முதலாளி மதியம் உணவு இடைவேளையில் தன்னோடு பேசும் போது சுத்தமாய் மூட் அவுட் ஆகி சாயந்திரம் நாலரை வாக்கில் "தம்பி சாஸ்தா எங்கிட்ட பேசும் போது எங்கிட்டத் தானே பேசணும்..?..என்னைப் பாரு..ஏன் ஒரு மாதிரி பேசுறே..?நான் தானே உன் முதலாளி..?நேராப் பார்த்து நான் தானே கேட்குறேன்..?அதுக்கெல்லாம் ஏன் இப்பிடி பதில் சொல்றே..?ஒரு தடவைன்னா பரவால்ல..ஒவ்வொரு தடவையும்னா எப்பிடி சமாளிக்கிறதுன்னே தெரியலை.நா இன்னிக்கு முழுக்க யோசிச்சேன் தம்பி...நீ இப்பிடித் தான் பேசுவேன்ன்னா..நீ வேற எடத்தைப் பார்த்துக்க..என்னையத் தப்பா நினைக்காத...தலை சுத்துது" என்று கண் மல்க.

""சாஸ்தாவுக்கு ஒரு பிரச்சினையும் இல்லையாம்.அவரு வேற வேலை பார்த்துக்குறாராம்.கெளம்புறேன்னு சொல்றாரு""என்று கிளம்ப

ஐயப்பா என்று கதறினார் முதலாளி.


தொடரலாம்
அன்போடு
ஆத்மார்த்தி