புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

கிருஷ்ணனின் காதலிகள்

உறக்கம் என்று சொல்ல முடியாதுஅரைகுறையாக நினைவும் மறதியுமாகப் பாதிக்கனாவில் புரண்டு கொண்டிருந்தபோது விக்னேஷிடமிருந்து ஃபோன்.எடுத்ததும் "கிருஷ்ணன் ஸார் இன் ஐஸியூ" என்றான்.வெளாடாத என்ற என் பதிலை அலட்சியம் செய்த விக்னேஷ் அதன் பின் சொல்ல முற்பட்ட எதுவும் என் மனதில் பதியவில்லை.இரேன் தண்ணி குடிச்சிட்டு வரேன் என்றேன்.லைனிலேயே இருந்தான்.இருப்பான் எனத் தெரியும்.அந்த அறையின் வாஸ்துவையும் உள்ளிருக்கும் வஸ்துக்களையும் மறுதடவை கோரியபடியே இருளில் நகர்ந்த் ஸ்விட்ச்சை ஒற்றி ஃப்ரிட்ஜ் வேண்டாமென யூ டர்ன் அடித்து சாப்பாட்டு மேசை மீது ஸ்டைலாக இருந்த கண்ணாடி ஜாரை அப்படியே சரித்துக் கொண்டேன்.தண்ணீர் எதுவுமற்ற எல்லாமாக உள்ளிறங்கிற்று.

கிருஷ்ணன் ஸாரை உடனே பார்க்கவேண்டும் போல இருந்தது.அவருக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது என்று மனசு துடித்தது.ஒன்றும் ஆகாது என்று இன்னொரு குரல் உள்ளே ஒலித்தது.நாங்கள் நாலுஐந்து பேர் திக்கெஸ்ட் நண்பர்கள்.எல்லோருமே ஒரே அலுவலகத்தில் ட்ரெய்ன் ஆகி இன்றைக்கு வெவ்வேறு ஸ்தலங்களை நிர்வகிப்பவர்கள்.எங்களது தொழில்குரு கிருஷ்ணன்,நான் பாலு விக்னேஷ் லெனின் நால்வரும் கிட்டத் தட்ட பத்து ஆண்டுகள் அவருக்குக் கீழே வேலை பார்த்தோம்..கற்றுக்கொடுப்பதில் வஞ்சனை இல்லாத மனிதன்.தனக்கென்று எந்த வித்தையையும் வைத்துக் கொள்ளாதவனே சிறந்த ஆசிரியனாக முடியும்.கிருஷ்ணன் அப்படியானவர்.ஒரு சிற்பத்தின் உப உறுப்புக்களைப் போல எங்களை வடித்தார்.இன்றைக்கு கம்பெனியில் நாங்கள் வைத்தது தான் சட்டம்.
"என்ன சொல்றாங்கப்பா.." பலவீனமானேன்.

"தெர்ல மச்சான்.பாத்ரூமிலேர்ந்து வர்ற வழியில விழுந்திட்டாராம்.உடனே பக்கத்துல இருக்கிற சின்ன ஹாஸ்பிடலுக்குக் கூட்டிப் போயிருக்காங்க.அங்கேருந்து மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலுக்கு போய்ச் சேரும் போது நேத்து நைட் பத்தரையாச்சாம்.48 அவர்ஸ் தாண்டினால் தான் எதும் சொல்ல முடியும்னு தே டோல்ட்."
"கிருஷ்ணன் ஸாரோட பசங்க வந்துட்டாங்களா..?"
":அதிர்ஷ்டவசமா ரெண்டு பேரும் ஃபேமிலியோட வெகேஷனுக்கு வந்தப்ப தான் இவருக்கு இப்டி ஆயிட்ச்சி." நீ கெளம்பி ஆஸ்பத்திரிக்கு வா..பாலு ஃபோனை பிக் பண்லை.முடிஞ்சா அவனுக்கு பேசு." என்று வைத்தான் விக்னேஷ்

உறைந்த நிலையில் இருந்தேன்.கிருஷ்ணன் ஸார் சிறுவயதிலேயே மனைவியை இழந்தவர்.அதையும் ஒரு தகவலாகவே பகிர்ந்து தாண்டிச் செல்பவர்.எதற்குமே கலங்காதவர் நத்திங் இஸ் டேஞ்சரஸ் தான் அஸ் என்பார்.ஒரு சிம்மம் போலவே அலுவலகத்தில் உலவுவார்.தானிட்ட கட்டளை முடிந்த கணம் வேறு நபராக மாறுவார்.

"வாங்கடா பசங்களா இன்னிக்கு ரொம்ப உழைச்சிட்டம் லெட் அஸ் ஹேவ் சம்திங்.." என்று கண்ணடிப்பார்.
கம்பெனி அவரை வழிபட்டது.தன்னோடு பிறக்காத சகோதரனாகவே அவரை எம்டி நினைத்தார்.அத்தனை கோடி பணம் போட்ட முதலாளியை சர்வ சகஜமாய்ப் பேர் சொல்லி மூல்தானி என்று விளிப்பார் ரமேஷ் மூல்தானி பதிலுக்கு அண்ணா எனப் பம்முவார். அப்படி ஒரு ஆளுமை கிருஷ்ணன்.

காரை ஆஸ்பத்திரி ராட்சஸங்களைத் தாண்டி ஏங்கோ தூரத்தில் பார்க் செய்துவிட்டுக் கடனே என்று நடந்து ரிசப்ஷன் வந்து சேர்ந்தேன்.வரிசையாய் இருந்த இரும்பு நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்து கண்களை மூடினேன்.தூக்கம் மாதிரி ஏதோ ஒன்றின் மிச்சம் இன்னமும் தேவையாய் இருந்தது.லெனின் என் தோளைத் தொட்டான்.சட்டென்று விழித்தவன் வந்தியா என்றேன்.
"இஸ் ஹீ இன் கிரிடிகல் ஸ்டேஜ்..?" என்றான்.எனக்கு சொல்லப்பட்டவைகளை அவனிடம் பகிர்ந்தேன்.பெரு மூச்சொன்றை விட்டவன் "ஜாலியான ஆளு! இல்ல?" .அந்தக் குரலுக்குள் சின்ன நிலையாமையின் இழத்தல் தொனித்தது.

கிருஷ்ணன் என்றாலே அவரது வயதுக்கும் உருவத்துக்கும் வாழ்க்கைக்கும் எந்தவிதமான சம்மந்தமுமே இல்லாத அவரது காதல் கதைகள் தான் யாருக்கும் நினைவுக்கு வரும்..ஒவ்வொரு பருவத்தையும் ஒரு காதல் கதை கொண்டு நிறைப்பார். ஒவ்வொரு டூர் அல்லது ட்ரெய்னிங் தலைமை அலுவலகத்திற்கு இன்ஸ்பெக்சன் என தன் வேலையின் எல்லா திருப்பங்களையும் ஒரு தேவதையைக் கொண்டு அலங்கரிப்பார் கிருஷ்ணன்.சிக்கலில்லாத காதல் கதைகள் அவை.பெரிய ட்விஸ்ட் ஏதும் இருக்காது.கிருஷ்ணனைப் பார்த்ததும் ஃப்ளாட் ஆகி இருப்பார்கள்.அவர் வந்து நுழைவதற்காகவே அதுகாறும் தத்தமது வாழ்க்கைகளை வாழ்ந்து வந்திருப்பார்கள்.இவரைப் பார்த்த மாத்திரத்தில் நாதா என்று பின்னாலேயே வந்து அவர் காலிரண்டையும் பற்றி என்னையும் என் காதலையும் ஏற்றுக்கொள்ளுங்களேன் என்று கதறுவார்கள்.

இவர் ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொல்லி விடுவார் "இந்த பாரம்மா நான் ஒரு ஜாலி டைப்.என்னை நீ பொஸசிவ்னெஸ் என்கிற கயிறு கொண்டு அடக்கமுடியாது.நான் அதற்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டேன்.எனக்கு நிறைய ஸ்னேகிதிகள் இருக்கிறார்கள்.ஆனால் நீ மாத்திரம் தான் என் காதலி.இதை வேணுமானால் சத்தியம் செய்கிறேன்.." என்பார்.அதை தேவ வாக்காக கடவுளின் குரலாக ஏந்திக் கொண்டு உடனே நம்பி விடுவார்கள்.அவரை விரோதிக்க மாட்டார்கள்.தங்களுடைய கதாபாத்திரத் தோன்றல் முடிந்ததும் சமர்த்தாகக் கிளம்பித் திரைக்குப் பின் காணாமற் போகும் நாடக உப பாத்திரங்களாகவே மறைவார்கள்.ஒருத்தி கூட அவரை சட்டையைப் பற்றி நியாயம் கேட்க மாட்டாள்.இருந்தால் தானே கேட்பாள் என்பான் விக்னேஷ்.எங்களால் நம்ப முடியாத அதே நேரம் ஆட்சேபிக்க முடியாத கதைகள் அவை.ஒவ்வொரு கதையையும் கிருஷ்ணன் விவரிக்கிற அழகே தனி.

ஊர் திரும்பிய பிறகு வரக் கூடிய சனிக்கிழமை மதியானம் சாப்பிட்டு விட்டு வெளியேறுவது எங்களது வழக்கம்.மனசு இளகிய ஒரு பரவச அயர்ச்சியில் இருக்கும் போது தான் ஆரம்பிப்பார்."லீட்ரே.." லெனினை மாத்திரம் பேர் சொல்லிக் கூப்பிட மாட்டார்.லீட்ரே தான்.அதில் ஒரு அமர்த்தல் இருக்கும்.மற்றவர்களை சகட்டு மேனிக்கு வாடா போடா தான்.
"லீட்ரே....ஜெய்ப்பூர்ல நாலு நாள் இண்டர்னேஷனல் ட்ரெய்னிங்.சீனாக்காரன் முழுசா என் மண்டையை நக்கிட்டான்.வழியே இல்லை தண்ணியைப் போட்டுறலாம்னு ஓட்டல் ரூம்லேருந்து எறங்கி ரிசப்ஷனுக்கு வர்றேன்.அவன் இந்தில என் தலைல குண்டைத் தூக்கிப் போடுறான்.ஸாரி ஸார் ஹமாரா ஹோடல் மே பார் நஹிஹே...அட நாசமாப் போறவனேன்னு தலைல கை வச்சிட்டு உக்கார்றேன்.சரி ஊருக்குள்ளே எதுனா சாராயக்கடை கிடைக்காதயா பூடும்னு எறங்கி நடக்கிறேன். மார்க்கெட்டைப் பார்த்ததும் பழைய பொருளெல்லாம் விக்கிற ஒரு கடை.சும்மா உள்ளே போயி பார்க்கலாம்னு போறேன்.நான் என்னிக்கு இந்த கடைகளுக்குள்ளே எல்லாம் போயிருக்கிறேன்..?போயி இலக்கில்லாம சுத்திட்டு இருக்கனா...எனக்குப் பக்கத்துல ரெண்டு குரல் ரெண்டும் பெண்குரல்.அதும் தமிழ்ல பேசிக்குது.விலை அதிகம்னு திட்டுறா அம்மா காரி.வேணவே வேணும்னு அடம் பிடிக்கிது பொண் கொழந்தை.நா அமைதியா நிக்கிறேன்.கிட்டத் தட்ட கெளம்ப போறாங்க.நா கூப்டுறேன்.இங்க வாங்கன்னு தமிழ்ல கூப்டதும் அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.நா ஒரு பிள்ளையார் பொம்மையை எட்த்து கடைக்காரன் கிட்டே எவ்ளோன்னு கேக்கறேன்.நாலாயிரம் ரூபான்றான்.சரி எனக்கு அதோட இந்த சின்ன பொம்மையை ஃப்ரீயா தரணும்னு கேட்கிறேன்.அவன் அரை மனசா தர்றாப்ல தந்துர்றான்..அதை வாங்கி அந்தக் கொழந்தை கிட்டே இந்தா வெச்சிக்கனு கொடுக்கிறேன்.

ஒரு காஃபி சாப்டலாம் வாங்கன்னு கூப்டுறா அந்த லேடி.நாங்க அதுக்கப்பறம் அரைமணி நேரம் பேசிட்டு ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சிகிட்டு கெளம்பும் போது அந்த பொம்மைக்குண்டான பணத்தை எங்கையில திணிக்கிறா.நான் வேணாம்னு சொல்லச்சொல்ல அவ கேட்கலை.அதுக்கப்பறம் அந்த ஊர்ல நா இருந்த மூணு நாளும் தினமும் சந்திச்சோம்.நெறைய்ய பேசிக்கிட்டோம்.நான் சென்னை வந்து சேர்ந்தபோது விமான ட்ராவல் நேரத்ல பத்து முறை அவ ஃபோன் செய்திருக்கா.மிஸ்ட் கால்ஸ் பார்த்துட்டு கூப்டேன்.என்னன்னு கேட்டேன்.படார்னு ஐ லவ் யூன்னு சொல்லிட்டா.எனக்கு மறுத்துப் பழக்கமில்லை.என்னோட கண்டிஷன்ஸ் பத்தி பேசினப்போ அவளுக்கு ஆட்சேபணை இல்லைன்னா.நானும் சரின்னுட்டேன்.வீ ஆர் இன் லவ் ஃபார் தி பாஸ்ட் த்ரீ டேய்ஸ்."

எத்தனை வயசு என்று கேட்ட பாலுவை நாங்கள் அத்தனை பேரும் வெறுப்பின் பார்வையைப் பார்த்தோம்.நாப்பதுக்குள்ளே இருக்கும் என்றவர் எழுந்து கை அலம்பப் போனார்.
"இது எனக்குத் தெரிஞ்சு இருபதாவது லவ்டா...கெழவன் கிட்டே எனக்குப் பிடிக்காதது இது ஒண்ணு தான்" என்றான் விக்னேஷ்."வந்துறப் போறார்டா...!"என்று கடிந்து கொண்டான் பாலு".நீ நம்புறாப்லயே நடிக்கிற.." என்று ஆவேசப்பட்டான் லெனின்.
"வேணம்னா நீ எதுத்து பேசிப் பாரேன் நிச்சயமா எனக்கென்ன பயமா..?இதென்ன நம்ம வேலைல இன்க்ளூட் ஆகுதா என்ன..?பாஸ் சொல்ற கேவலமான பொய்களை எல்லாம் நம்பணும்னு விதியா என்ன..?" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்துவிட்டார்.
மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு சொன்னீங்களே ட்ரெய்ன்ல மதுரையிலேருந்து வர்றச்ச பழக்கம்.அப்பறம் ஃபோன்ல ரெண்டு வாரம் தொடர்ந்து பேசிட்டிருந்தப்ப லவ் யூ சொல்லிச்சின்னு அது பேரென்ன.?
"தேவகி.." என்றவர் கூர்மையாகப் பார்த்தார்.இப்ப ஜெய்ப்பூர்ல மீட் பண்ணவ பேர் "மானஸி..போதுமா..?"
"வாழ்றான்யா கெழவன் என்று முணுமுணுத்தான் பாலு.அதைக் கவனிக்காதவர் போலத் தன் கார் சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் சிம்மம்.
"உனக்கு என்ன ட்யூட் பொறாமையா..?" என்றான் லெனின்.
"அட இல்லப்பா அவரு வயசுக்கு மீறி கதை வுட்றார்னு தோணுதுல்.நாமல்லாம் அவரோட ஸபார்டினேட்ஸ்ங்குறதால ஒரு வன்முறை மாதிரி தன் காதல் பொய்களை நம்ம மேல திணிக்கிறாரில்ல..?நாம கேட்டமா.?இதுக்கு மேல என்ன நடந்தது..? காதலோட நெக்ஸ்ட் பரிமாணம் என்னனு கேட்கமுடியுமா..?நம்ம சும்மா இருக்கம்றதால கெழம் கதையா சொல்லிட்டிருக்குது.ஒண்ணு ரெண்டுன்னா பரவால்ல..வர்ஷத்துக்கு ஒண்ணுவீதம் எனக்கே ஏழு கதை சொல்லிருப்பார். உங்ககிட்டல்லாம் சொன்னதை எல்லாம் கூட்டினா..?விரல் பத்தாதுல்ல..?என்றவனை கூர்மையாகப் பார்த்த என்னிடம் அடேய் எண்றதுக்கு சொன்னேண்டா என்றான்.எல்லாரும் சிரித்தோம்.

விக்னேஷா....மேலதிகாரின்றது ஒரு பக்கம்.நமக்கு பலதும் கத்துக்கொடுக்கிற குருவும் அவருதான்.இதென்ன கொசுக்கடி மாதிரி தானே..?சின்ன வயசுலயே மனைவியை இழந்திட்டாரு.தனியா ரெண்டு பசங்களை வளர்த்திட்டு வரார்.அவரால யார்க்குமே நன்மை மாத்திரம் தான்.இதுக்கு நடுவில அவர் சொல்ற லவ் ஸ்டோரீஸை கேட்டுக்குறதுனால என்ன பெரிசா துன்பப் பட்டுறப் போறே..?ஒரு சின்ன அட்ஜஸ்ட்மெண்டாவே இருந்துட்டுப் போகட்டுமே..சந்தோஷமா செய்யேன்.
கேட்டுக்குறதா ப்ரச்சினை..?அதை நம்புறமான்னு பார்க்குறாரே..?அத்தனையும் நம்புறது தானே கஷ்டமா இருக்கு
டே மச்சான் விக்னேஷூக்கு நம்ம சிங்கத்து மேல பொறாமைடா என்றான் லெனின்.அவனை பாவனையாய்க் குத்துபவனைப் போல வந்தான் விக்னேஷ்.

"ஒரு நாள் நானும் அண்ணனை மாதிரி பெரியவனாயிடுவேன்" என்று விளம்பரத்தின் அதே போலி குழந்தைக் குரலில் பாடினான் பாலு.இன்னும் மேலும் அதிகதிகமாய் முறைத்தான் விக்னேஷ்.

எல்லாரும் வந்து ஒருவழியாக எந்தத் தளம் எங்கே சென்று பார்ப்பது எனக் கிளம்பினோம்.எங்களை அடையாளம் கண்டவாறே வந்து கையைப் பற்றிக் கொண்டான் கிருஷ்ணன் ஸாரின் மூத்த மகன் அபினவ்.".தேங்க்ஸ் ஃபார் கமிங் அப்பா ரொம்ப சந்தோஷப் படுவார்"..சம்பிரதாயத்துக்/ஃஸ்கு உண்டான மென்மையாய்க் கைகுலுக்கிவிட்டு "இன்னும் கொஞ்சம் நீட்ஸ் பார்க்கவேண்டி இருக்கு.தப்பா எடுத்துக்காதீங்க" என்றவாறே கிளம்பினான். "எம்.டி மூல்தானி வர்றாப்ளயாம்.இன்னும் ஒன் அவர் ஆகும் போல.நம்ம யாரெல்லாம் இருக்கம்னு கேட்டார்.நா சொல்லி இருக்கேன்.நாமல்லாரும் அதுவரைக்கும் இருந்தாகணும்"என்றவாறே வந்து சேர்ந்தான் பாலு.வருடங்கள் லேசாய்க் கசக்கி இருந்தாலும் எங்களின் ஞாபகங்கள் இன்னமும் கம்பீரமாய்த் தான் இருந்தன.
பாலுவைப் பார்த்ததும் கொஞ்சம் சப்தமாக சிரித்தான் லெனின்.இவன் ஒருத்தண்டா என்றவாறே அடுத்த ஸீட்டில் அமர்ந்தான் பாலு."இல்ல மச்சி...நாலஞ்சு வர்ஷத்துக்கு மின்னாடி அவ பேரென்ன பெங்களூர் ஆஃபீஸ்லேருந்து நம்ம ஆஃபீஸூக்கு மாத்தி வந்தாளே ஸ்டெல்லா..அந்த வாக்கியத்தை பூர்த்தி செய்யாமல் சிரித்தான்.இது ஆஸ்பத்திரிடா என்ற பாலுவின் முகத்தில் கடுகு வெடித்தது.

சரியான டக் அவுட் மச்சான்...பல்பு வாங்குனான் துப்பறியும் பாலு.வழக்கம் போலவே கிருஷ்ணன் ஸார் ஸ்டெல்லா தன்னை லவ் பண்றதா சொல்றாரு.பாலு காண்டாவுறான்.காரணம் என்ன.?காலமெல்லாம் காதல் வாழ்கன்னு பாலு அவளைப் பார்த்ததுலேருந்து அவ மேல லவ்வா இருக்கிறான்.அவளும் பாலுவுக்கு ரிபோர்ட் செய்தாகணும்.அப்படி ஒரு அமைப்பு.பாலுவைத் தாண்டி தான் கிருஷ்ணசிங்கமே.பட் ஆனா நடந்தது வேற..வழக்கம் போல ஸ்டெல்லா தன்னை லவ் பண்றதா சொல்றாப்டி சிங்கம்.
பாலு ஒண்ணுமே சொல்லாம சீக்கிரமே சாப்டு முடிச்சிட்டு தன்னோட கேபினுக்குப் போயி ஸ்டெல்லா இங்க வான்னு கூப்டறான்.வந்தவ கிட்டே மூஞ்சிக்கு நேரா சிரிக்கிறான் சப்தமாகவே சிரிக்கிறான் என்னடா கேட்டான் என்ற விக்னேஷிடம் இர்றா...என்ன கேட்டிருக்கணும்..?நீ இந்த மாதிரி நம்ம பாஸ் அதான் கிருஷ்ணன் ஸாரை லவ்வுறியா அப்டின்னு கேட்டிருக்கணும் இல்லியா..?அதை விட்டுட்டு என் மொபைல் ஆஃப் ஆயிட்டுது.உன்னுத தான்னு கேட்டிருக்கான்.அவளும் தந்திருக்கா.அதை எடுத்து பேசற சாக்கில எதாச்சும் மெசேஜ் வந்திருக்கான்னு சுதி சுத்தமா பத்து நிமிஷம் ஆராய்ச்சி எல்லாம் முடிச்சிட்டு வெளில போயி இந்தா உன் ஃபோன் அப்டின்னு குடுக்க ஸொல்லோ அவ தேங்க்ஸ் ஸார் அப்டின்னு சொல்லிட்டே தன் கைல இருந்த தன்னோட அழகான குட்டி பெர்ஸனல் மொபைல்ல தன் பேச்சை கண்டின்யூ பண்ணிருக்கா.மூஞ்சி தொங்கிடிச்சி நம்ம பாலுவுக்கு.

அடுத்த மாசமே ஸ்டெல்லா வேற பிராஞ்சுக்கு மாத்தி போயிட்டா.பாலுவோட காதல் தோத்திடுச்சி..
சும்மா அளக்காதீங்கடா....நம்பாளு பெரிய மன்மதன்...இவரைப் பார்க்குற பொண்ணுக எல்லாம் லவ்விடுமோ..?அதும் அம்பத்தஞ்சு வயசு என்றான் கர்ணகடூரமான முகத்தோடு
"நல்ல மனுஷண்டா..அதும் இப்ப முடியாமக் கெடக்குறார்.இந்த நேரத்ல அவருக்காக ப்ரே பண்ணிக்குவம்.அவரைப் பற்றி நல்ல விஷயங்களை நியாபகம் வெச்சி அதைப் பேசலாமே..?ஏண்டா ரைவல்ரி..?நமக்கெல்லாம் எத்தினி சொல்லிக் கொடுத்திருக்காரு..?"என்றேன் நான்.

நீ சும்மா இர்றா...நாங்கள்லாம் அவருக்கு விரோதமா என்ன.?ஒவ்வொரு மனுஷனுக்குள்ளியும் ஒரு ப்ளாக் ஸ்பாட் ஒரு டார்க் கார்னர் இருந்தே தீரும்.நம்மல்லாம் சின்னப் பசங்க.அவரு என்ன சொன்னாலும் கேட்டுக்கிட்டே ஆகணும்றது நம்ம விதி.அதுனால இஷ்டத்துக்கு விதவிதமா க்ரியேட் செய்த காதல் கதைகளை நம்மட்டல்லாம் சொல்லி சந்தோஷப்பட்டிருக்காரு.இதெல்லாம் பொய்யிதான்.உங்களால என்னடா செய்ய முடியும் அடிமைகளான்ற தொனில..இன்னிக்கு நாமல்லாரும் இண்டிவீஜூவலா வெவ்வேற இடங்களுக்கு ஒசந்திருக்கம்.இப்ப சொல்ல முடியாதில்ல...அதான் அவருகிட்டே பேசவேண்டியதை நமக்குள்ளயாச்சும் பேசிக்கறம்.இதில என்ன தப்பு
தப்பு சொல்லலைடா..இருந்தாலும் ஒரு விஸ்வாசம் வேணுமில்லயா..?

தம்பி...விஸ்வாசம் வேற...நீ என் குரு.உன் காலைக் கூடப் பிடிக்கலாம் தப்பில்லை.பட் ஆனா நம்மளை எல்லாம் ஜெயிச்சாப்ல பல ஆட்டங்களை இவரு கற்பனை பண்ணிக்கிறதை எப்டி ஏத்துக்கிறது.?அதும் நடக்காத மேட்ச்சுகள்ல தோத்துட்டம்னு செர்டிஃபிகேட் குடுத்தா நீ வாங்கிப்பியா.?
டே பாலு...உனக்குள்ளே இன்னம் ஸ்டெல்லா விஷயம் மறக்கலைன்னு நினைக்கிறென்.வாய் வந்தபடியெல்லாம் பேசாத.விட்டுறு என்றேன்.

அதுல ரொம்ப கேர்ஃபுல்லான ஆளு மச்சி நம்ம கிருஷ்ணபரமாத்மா...எத்தினி லவ் ஸ்டோரி சொல்வாரு...எதிலயும் இவரும் சரி அந்த பொண்ணுங்களும் செரி வரம்பு மீற மாட்டாங்கடா...உடம்பு ரீதியான தொடுதல்ல ஆரம்பிச்சி செக்ஸ் வரைக்கும் எதுமே நடக்காதுன்ற மாதிரியே கொண்டுபோயிடுவார் தன்னோட கதைகளை.ஒருதபா நா கேட்டேபுட்டேன்.அதெப்படி ஸ்வாமி நீங்க வேணும்னா பற்றற்று இருக்கலாம்.உங்க மேல காதல்வயப்படுறவங்க அத்தினி பேருமா காமம் வேணாம் தீண்டல் வேணாம்னு இருப்பாங்க..?ஒருத்தர் கூடவா அதும் வேணும்னு கேட்க மாட்டாங்கன்னு கேட்டேன்.

அதுக்கு அவரு..இந்த பார் விக்னேஷ்....உண்மையான காதல்ல காமம் தன்னியல்பா நடக்கும்.பட் அது எப்ப நடக்கும்னு தெரியவே தெரியாது.அதுல சம்மந்தப் படுறவங்க அதை ப்ளான் செய்யாட்டி அது நடக்காமலே கூடப் போகலாம்.இன்னொரு விஷயம்...உண்மையான காதல்ன்றது அன் கண்டிஷனல்..அதுல எதுவுமே நிர்பந்திக்கப்படாது புரியுதா..?
எனக்கென்னவோ தொடர்ந்து காதல் படங்களா கொடுத்திட்டு வர்ற டைரக்டரோட அசிஸ்டெண்ட் டைரக்டர் மாதிரி ஃபீல் ஆச்சி..நம்பவே முடியாததை கெழவன் நம்ப வெச்சிர்றான்.

அவர் கதையையும் அவரே கண்டிரோல் பண்றார் மச்சி...எல்லா பொண்ணுங்களும் அவரை லவ் பண்ணுவாங்க.அவர் அதுக்கெல்லாம் எஸ் சொல்வார்.எல்லாருக்குமே அவருக்கு நெறய காதலிகள் இருக்கறது தெரியும்.பட் யாருமே அவரை அதுக்காக வெறுக்க மாட்டாங்க...ஒவ்வொருத்தருக்கும் அவர் அவங்களுக்கு உண்டான தன்னோட பிரதியாத் தான் தெரிவார்.அதுவே அவங்களுக்கெல்லாம் சம்பூர்ண பரிபூர்ணமா ஆய்டும்.அவங்க யாருமே அவர் கிட்டேருந்து விலகமாட்டாங்க.பட் அவரோட நெருக்கமாவும் வந்து நிக்க மாட்டாங்க.தங்களுக்குத் தரப்பட்ட தூண் பின்னாடி ஒளிஞ்சிப்பாங்க.அவர் அவங்க ஒவ்வொருத்தருக்கும் உண்டான தருணங்கள்ல அவங்களைத் தேடுவார்.அதுக்காகவே காத்திட்டிருந்தாப்ல அவங்களும் மலர்ச்சியா வந்து அவரைத் தழுவிப்பாங்க.இருந்தாலும் கிருஷ்ணனோட காதல் எதுவுமே உடல் சார்ந்ததில்லை.அதை அவர் மாத்திரமில்லை அவரோட காதலிகளும் ஏன் இந்த பிரபஞ்சமுமே புரிஞ்சுக்கிட்டு ஒத்துழைக்கும்...இதெல்லாம் நம்ப முடியும்.பட்...."இழுத்தான் பாலு.
"நம்பமுடியும்ல அப்பறம் என்ன நம்பித் தொலையேன்."என்றேன்
இர்றா விஸ்வாசி...நம்பறதுல ஒரே ஒரு சிக்கல் என்னன்னா..இத்தனையும் இவருக்கு நடக்குறதை நம்ப முடியலை.சாட்சாத் அந்த பகவான் கிருஷ்ணனுக்கு வேணம்னா நடந்திருக்கலாம்."
அவருக்கு நடந்திருந்தாலும் நீ நம்பவா போற..சாட்சி ஆதாரம்லாம் கேட்ப..உங்கிட்டே வந்து நிரூபிக்கணும்னு கண்டிஷன் போடுவே...
ஆணியே பிடுங்க வேணாம் சாமி...நம்மாளு கிருஷ்ணன் சொல்ற இல்யூஷன்லாம் நிஜம்.எனக்கென்னடா..என்றவன் சட்டென முகம் மாறி...ஒண்ணு மாத்திரம் நிஜம்...இந்த வாயி இருக்கே.அது இல்லாட்டி இத்தனாம்பெரிய கம்பெனி எம்டியைவே பேர் சொல்லிக் கூப்பிட முடியுமா..?வாயாடி சிங்கமில்ல..?

நேரே எங்களிடம் வந்தார் எம்டி.சரியாகப் பத்து நிமிடங்கள் சீஃப் டாக்டர் ரூமில் அமர்ந்து பேசிவிட்டு எல்லா செலவுகளையும் கம்பெனி ஏற்கும் என்று சொல்லி விட்டு எங்களிடம் ஐ நீட் கிருஷ்ணன் ஸார் ஃபார் அனதர் ஹன்றட் இயர்ஸ்.பக்கத்லயே இருந்து பார்த்துக்கங்க..."என்று டாக் டாக்கென நடந்து காணாமற் போனார்.
"சரிப்பா வாங்க ஒரு காஃபியை குடிச்சிட்டு வந்து மறுபடி மாமாவை வைய்யலாம்.." என்றான் லெனின்.
எதாச்சும் ஒண்ணு ரெண்டு லவ்வர்னாலும் பரவால்லை நம்பித் தொலைச்சிடலாம்.போற எடத்லயெல்லாம் நாதா உங்களைக் கண்டதும் காதல் வயப்பட்டேன் என்று காத்திட்டிருந்ததா பில்ட் அப் செய்றதைத் தான் தாங்க முடியலைன்னேன்.இப்பக் கூட ட்ரீட்மெண்ட் முடிச்சி வர்றச்சே பாரேன்..ஒரு நர்ஸ் என்னை லவ் பண்றேன்னு சொன்னா நானும் சரின்னுட்டேன் அப்டின்னு சொல்றதா இல்லியான்னு பாரு"
லிஃப்டுக்குள் நாங்கள் அத்தனை சப்தமாக சிரித்தது யாருக்கும் கேட்டிராது.இறங்கி ரிசப்ஷனை தாண்டும் போது தான் அவளை கவனித்தேன்.பாப் செய்யப் பட்ட தலைமுடி.எஸ்...அவள் ஸ்டெல்லா.விசும்பி விசும்பி அழுதுகொண்டிருந்தாள்.நான் மெல்ல என் கூட்டத்திலிருந்து வெளிப்பட்டேன்.தனித்தேன்.அதை அறியாமல் மற்ற மூவரும் நடந்து கேண்டீன் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.
ஸ்டெல்லா என்னை கவனிக்கவில்லை.அவளொடு இன்னும் இரண்டு பெண்கள் இருந்தார்கள்.
கண்டிரொல் யுவர் செல்ஃப் ஸ்டெல்லா...ஹீ வில் கம் அப்.....எவ்ரி திங் வில் பீ ஆல்ரைட்."
"மானஸி....எனக்கு கிருஷ்ஷை விட்டா இந்த லைஃப்ல வேற என்ன ஹோப் இருக்கு..?யாருக்காக நா வாழணும்..?"என்றாள்.
அந்த மூன்றாமவள் யாரெனத் தெரியவில்லை.
"எங்களுக்கு மாத்திரம் யார் இருக்கா ஸ்டெல்லா.?ஹீ இஸ் ஒன்லி தி ஹோப் இன் அவ்ர் லைஃப்...எல்லாம் சரியாய்டும் நம்புங்க"
"எவ்ளோ லவ்லி பெர்ஸன் இல்லே..?"என்றாள் நான்ஸி.
மெல்ல நகர்ந்தேன்வாரப்புத்தகத்தின் எல்லாக் கட்டங்களையும் தீர்த்தாற் போல் இருந்தது.கிருஷ்ணனின் குழந்தைச்சிரிப்பு ஒரு கணம் வந்து போனது.நகர்ந்து .கேண்டீனுக்குச் சென்ற போது இன்னும் தீராத ஆத்திரனாய் எதையோ செப்பிக் கொண்டிருந்தான் விக்னேஷ்.
எங்களை விட்டுட்டு நீ மாத்ரம் எங்கடா நகர்வலமா..?என்றான்.
ஒண்ணுமில்லடா
இல்யூஷன் என்று சிரித்தேன்.