புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

வசனமே சந்த்ர பிம்பமே….


இதை மட்டுமா இழந்தோம்…? 8 வசனமே சந்த்ர பிம்பமே….

இல்லை.எழுத்துப் பிழை எல்லாம் கிடையாது.வசனம் தான் இந்த முறை விஷயபிரதானம்.வசனம் என்றாலே தமிழ் சினிமா துவங்கிய காலகட்டத்தில் பாடல்களுக்கு நடுவே மூச்சுத் திணறிக்கொண்டிருந்த சொற்ப உரையாடல்களை அதற்கடுத்த தலைமுறை புதியவர்களால் மீட்டு பாடல்களை ஓட ஓட விரட்டிப் படம் பார்க்கிறவர்களின் மாயத்தனிமைக்குள் புகுந்து கொண்ட வசனங்களின் ஆரம்பக் காலம் நினைவுக்கு வரலாம்.

வசனம் சில அல்ல பல படங்களை ஓடச்செய்திருக்கிறது.வெற்றிகரத்துக்கு எது காரணமென்றாலும் ஒரு அந்திமம் வரும் வரை அந்தக் காரணத்தை உயர்த்திப் பிடிக்கிறது மனிதகூட்டத்தின் வழக்கம் தான்.அந்த வகையில் அண்ணா,மு.கருணாநிதி, திருவாரூர் தங்கராசு,ஆரூர்தாஸ், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், சோ.ராமசாமி, ஆர்.செல்வராஜ், லியாகத் அலிகான், விசு,கே.பாலச்சந்தர், அனந்து,கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், க்ரேசி. மோஹன்,  சுஜாதா,பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், துவங்கி சமீபகாலங்களில் கலக்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கும் பாஸ்கர் சக்தி வரை வசனங்களுக்காக கவனிக்கப் பட்டவர்கள்,அதற்காக கொண்டாடப்பட்டவர்கள் தனித்த பாராட்டுக்களைப் பெற்றவர்கள் அனேகர்.

இப்பதிவு வசனகர்த்தாக்கள் நம்மை மகிழ்வித்த சப்தசங்கீத இடைவெளியில் குரல்களுக்கும் சம்பாஷணைகளுக்கும் நடுவே வசனங்கள் கோலோச்சிய காலம் ஒன்றை சரியாகச்சொல்வதானால் 1997 வரைக்குமான காலகட்டம் வரை அனுபவித்து வந்திருக்கிறோம். வெளியே தெரியாமல் விடைபெற்றுவிட்ட எத்தனையோ சந்தோஷங்களில் தலையாயதான வசன கேசட்டுக்களுக்கான நிழல் வணக்கம் இப்பதிவின் நோக்கம்.

தூயமரியன்னை மேல் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த பொழுது.சரியாக சொல்வதானால் 1990.எவ்வளவு ஆச்சரியப்பட்டாலும் விடை தெரியாத கேள்வியாக எப்படிப் பாஸ் ஆனான் இந்தப் பேரறிஞன் என்று எல்லோரும் என் வெற்றியில் அதிர்ந்திருந்த நேரம்.விடுமுறைக் காலமென்றாலும் கூட அதனைப் பொருட்படுத்தாது அருட்தந்தையும் எங்கள் தலைமை யாசிரியருமான திருமிகு.ஹென்றி அவர்கள் அவசராவசரமாக என் கையில் டீசீ எனப்படுகிற மாற்றுச்சான்றிதழைத் திணித்து தண்ணீர் அருந்தி தாகசாந்தி அடைந்து கொண்டார்.

இன்னமும் நினைவில் மாறாதது மதிப்பெண் சான்றிதழ் டீசீ வகையறாக்களை என்னோடு வந்து என் சிற்றப்பர் வாங்கிக்கொண்டார்.அவரும் நானும் பஸ்டாப்பில் வெகுநேரம் காத்திருக்க நேரிட்டது.ஒரு கடையில் டீயும் வடையும் வாங்கித்தந்தார்.என் சிற்றப்பா என் மேல் உள்ள பிரியத்தையே அறிவுரைகளாக மட்டுமே காண்பித்து என்னை வெறுக்க வைப்பார்.சில நூறுமுறைகள் அவர் மீது கொண்ட வெறுப்பினால் தற்கொலை மற்றும் கொலை முயல்வுகளை மானசீகமாய் செய்யுமளவுக்கு அறிவுரைகள் இருக்கும்..அன்றைக்கும் அப்படி ஆரம்பிக்க பார்த்தார்.ஆனால் டீக்கடையின் ஸ்பீக்கரில் இருந்து இரண்டு நட்சத்திர தெய்வங்கள் என்னைக் காப்பாற்றினர்.

“சேர்ந்தே இருப்பது…இது கொஸ்டீன்…என் சித்தப்பாவும் அறுவையுரையும்..இது நான் நினைத்துக்கொண்டது.அறுவைக்கு…ஸ்கூல்..ரசனைக்கு…சினிமாத்தேட்டர்…”

தருமியும் சிவனும் சிவாஜி நாகேஷ் குரலில் வழிந்துகொண்டிருந்தார்கள். விதி படத்தின் கோர்ட் சீன் வசனங்கள் எப்போதும் வானொலிகளிலும் டீக்கடைகளிலும் கேட்டுக்கேட்டு சலிக்காத இன்பம்.ஜெய்சங்கரும் சுஜாதாவும் பூர்ணிமாவும் மோகனும் நல்ல கெட்டவர்களாக மக்கள் மனதுகளில் மனப்பாடம் ஆனார்கள்.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் வருகிற நாகேஷின் கதாபாத்திரமான வைத்தி மறக்கவியலாத வசன நாயகன்.டெசிபல் அதிகமாய் வைக்கப்பட்ட திருப்பரங்குன்றத்து 16கால் மண்டபத்துக்கு அருகே இருக்கிற தெய்வானை டீக்கடையில் எப்போதுமே நாகேஷ் நகைச்சுவை வசனங்கள் வழியுமருவியாக வசீகரித்தது.

கரகாட்டக்காரன் படத்தின் வாழைப்பழக் காமெடியாகட்டும்,கல்யாணப்பரிசு படத்தில் வரும் டூப்படிக்க விடமாட்டேங்கறானே…டணால் தங்கவேலு ஆகட்டும்…தேன் நிலவு வைஜயந்தி ஜெமினி வசனங்களாகட்டும்,கந்தன் கருணை திருவிளையாடல் வசனங்களாகட்டும்..ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இடம் ஒவ்வொரு தருணங்கள் இருந்தது.

“எத்தனை தடவை கங்கையில் குளிச்சாலும் தீராது.எத்தனை கங்கையில் குளிச்சாலும் தீராது…”"கல்யாணமாகாத பொண்ணு கர்வமா இருந்தா தப்பில்ல.கர்ப்பமா இருந்தா தான் தப்பு”"சட்டைல என்ன பூனை…?பொம்மை சார்….அதுல என்ன பெருமை…?கெட் அவுட்…”என்று தில்லுமுல்லு படத்தில் சீறுவதாகட்டும்…”ஏண்டா…பாவி…மாபாவி…உனக்கெல்லாம் ஒண்ணுமே வராதா…?துச்சா…?”என்னும் மன்மதலீலை மேனேஜராகட்டும்…கே பாலச்சந்தரின் வசனக் கட்டுமான உலகம் விசாலமானது.வெகு நாட்கள் அரசாண்டது.

புயல்கள் பல.எஸ்.ஏ.சந்திரசேகரின் பல படங்கள் வசனத்துக்கானவை என்றால் டீராஜேந்தர் தனித்த ரசிகக் கூட்டத்துக்கு சொந்தமானவராயிருந்தார்.பாக்யராஜ் அப்படியே. ஆனால் வசன மகா விசுவைத் தனியாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

“மீனாட்சி…”என்றோ “உமா..”என்றோ சற்று ஆணித்தரக் குரலில் விசு அழைத்துக் கொண்டிருப்பார்.என் வேலைகளை விட்டு விட்டு அந்த வசனப் பகுதியை முழுவதுமாகக் கேட்ட பிறகு தான் நகர்வேன்.மிக முக்கியமான ஹிட் மணல்கயிறு.”என்னது…காது…கேக்காதா.?”என்று அலறும் எஸ்.வீ,சேகர் எப்போதும் சிரிப்பை வரவழைப்பார்.

வசனங்களுக்கென்றே ஓடிய பல படங்களின் வசன கேசட்டுக்கள் கட்டிப்பறந்தன. கோயில்களுக்கு அருகாமைக் கடைகளில் சாமிபடங்கள் வசனங்கள் மட்டுமே பாடல்களின் மாற்றாந்தாயாய் மன்னிக்கப்பட்டன.டூப்படிக்க விடமாட்டேங்கறானே…?என்னும் கல்யாணப்பரிசு தங்கவேலுவும் ஐயம் செல் ல பா என்று உதடு படாமல் பேசி மகிழ்வித்த நாகேஷும் தாட்சாயணி…நில்…என்று உலுக்கின சிவாஜியின் திருவிளையாடலும் பொறுத்தது போதும் பொங்கி எழு என்ற மனோகராவும் சபாஷ் சரியான போட்டி என்ற வீரப்பாவும் என்னைக் கோபப்படுத்திப் பார்த்தா….என்று மொழியை அழுத்தமாய் உச்சரித்த அசோகனும்…மிஸ்டர் பில்லா…என்னைத் தவிர…ஐம் இண்டர்போல் ஆஃபீசர் கோகுல்நாத் என்று தமிங்கிலீஷ் பேசிய மேஜர் சுந்தர்ராஜனும் என வசனங்களுக்காகவே தனித்தனியான ஆளுமைகள் கொடி கட்டிப்பறந்தனர்.

இன்னமும் எஸ்.வீ.சேகர்,க்ரேசிமோகன் ஆகிய இரண்டு பேரின் நாடகங்களுக்கென்று வசன உலகில் தனி மரியாதை இருந்தது.அவர்களது நாடகங்களுக்கு இணைச்சாலையில் மௌலி,சோ போன்றோருடைய நாடக வசனங்கள் இருந்தன. ஞாயிற்றுக்கிழமைகளின் மத்தியானங்களில் வானொலியில் என்ன படம் என்பதை யோசித்துக்கொண்டே அரைமணி நேரம் கேட்டுவிட்டு நாமொன்று நினைக்க அது வேறொரு படமாயிருக்கும் அத்தனை குரல்மயக்கமான நினைவுகள் நிஜம்.ஞாயிற்றுக்கிழமைகளுக்கென்றே நகைச்சுவை கேசட்டுக்களை முன் தினமே எடுத்துவைத்த காலமொன்றும் இருந்தது.

முப்பத்தாறு மொட்டைகளின் அட்டகாசங்கள்.கொலைவெறிகுமாரனின் கதை போன்ற திடுக் தலைப்புக்களில் வெளியாகக் கூடிய கேசட்டுக்கள் கலக்கலாக இருக்கும்..ஏன் கொலை பண்ணான்னு கடைசி சீன் வரைக்கும் தெரியாது.அதுக்கப்புறமும் தெரியாது…பித்தவாந்திகளுக்கு மத்தியில் ரத்தவாந்தியை வரவழைக்கும் மர்மப்படம் என்றெல்லாம் பின்னி எடுத்திருப்பார்கள். மயில்சாமி,மூர்த்தி-கோபி,சின்னிஜயந்த் போன்றோரின் கேசட்டுகள் அவற்றுக்கென்ற தனி இடங்களை உருவாக்கியிருந்தது உண்மை.பின்னாளில் வந்த “தமிழ்ப்படம்” படத்துக்கு முன்னோடி சோ.ராமசாமியின் சரஸ்வதியின் செல்வன் என்ற நாடகம் என்றால் அதை யாராலும் மறுக்கமுடியாது.”வில்லன் ஜெயராஜ் நெத்தில வெச்சு சுடறான்.ஆனா குறிதப்பிடுது…..மூஞ்சில இருக்கிற மச்சத்தால ஹீரோவை யாராலும் கண்டுபிடிக்க முடியலை…”சில உதாரண ஞாபகங்கள்.

உள்ளத்தை அள்ளித்தா வரைக்குமான தமிழ் சினிமாவின் மெகா ஹிட்களின் வசன கேசட்டுக்களை சேகரித்ததும்…மிக முக்கியமாக கவுண்டமணி யின் குரல் பார்க்கையில் தருகிறதற்குக் குறையாத செவியின்பத்தையும் தந்ததையும் குறிப்பிடவேண்டும்.நடிகன் உள்ளிட்ட சத்யராஜுடனான காமெடி வசனங்கள் புண்பட்ட நெஞ்சங்களைப் புன்னகைக்க வைத்தன.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் என்ற விகடனில் சுகபோதானந்தா வசீகரித்து மாபெரிய வெற்றி அடைந்த புத்தகம் வசன கேசட்டாக நிழல்கள் ரவியின் குரலில் வெளியாகி சக்கைப்போடு போட்டதை மறக்க முடியாது.

வசனங்களால் வாழ்ந்த பலர் இன்றைக்கு வசனங்களாக மட்டும் வாழ்ந்து கொண்டி ருக்கின்றனர்.அந்தக் குரல்நாயகர்கள் இன்னமும் நம்மை நிகழ்காலப் பரபரப்புக்களின் பொய்வெம்மையில் இருந்து மீட்டெடுக்கிற மந்திரங்களை தமக்குள் புதைத்தபடி மௌனச்சிறைகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.குரல்களைத் தொலைத்து விட்ட ஒரு சமூகமாக நம்மை மாற்றிக்கொண்டிருக்கிறோம்.சர்வம் வீடியோ மயம் என்று.

இதை மட்டுமா இழந்தோம்..?

அகில இந்திய வானொலியை,அதன் பல்வேறு சமூக அக்கறையுள்ள நிகழ்ச்சிகளை,தூர்தர்ஷனின் ஆரம்பங்களை…அதன் பல்பரிமாண அக்கறையை,எல்லா ஆரம்பங்களும் சாதாரணமானவை ஆனாலும் புனிதமானவை.எல்லாக் கைவிடுதல்களிலும் பேரிழப்புகள் பலவீனமான இசையாய்த் தம்மை மாற்றிக்கொண்டு விட்டன.அவற்றின் சிதைவுகள் நமக்கு மட்டுமல்ல,தொடர் சந்ததிகளுக்கும் இழப்புக்களே.வளர்ச்சிக்கு நாம் கொடுக்கிற விலைகள்,விதைக்கும் கனிக்குமான கொள்முதல் வித்தியாசங்கள்.

தொடர்ந்து பேசுவோம்

அன்போடு

ஆத்மார்த்தி