புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

இன்னொருத்தி நிகராகுமோ
சமர்ப்பணம்:-

இந்தக் கட்டுரையை நியாயமாக டி.ஆர்.ராஜகுமாரியிடமிருந்து துவங்கினால் தான் தகும்,என் வாழ்வின் வயது மூத்த கவர்ச்சிக்கன்னியும் காதல் நாயகியும் அவரே.கறுப்பு வெள்ளைப் படங்களில் ராஜகுமாரியை எப்போது பார்த்தாலும் எனக்கு மாத்திரம் கலரில் தெரிவார்.முதல் தடவை பார்த்த போதே அந்த வசீகரப் புன்னகயில் நானும் தொலைந்து நாலாய் வகுபட்டேன்.ஆகவே இந்தக் கதாநாயகியர் பற்றிய கட்டுரையை என் இனிய ராஜகுமாரிக்கு சமர்ப்பணம் செய்து விட்டு ஆரம்பிக்கிறேன்.
டிஸ்கி:
ஒருவேளை ஆசிரியர் குழுவில் இருக்கும் யாராவது மேற்கண்ட பாராவை கத்தரி போட்டாலோ நீக்கினாலோ நானும் என் சமூகமும் வெளிநடப்பு செய்துவிடுவோம் என்பதை எச்சரிக்கிறேன்.


இன்னொருத்தி நிகராகுமோ


ஆரம்ப காலத்தில் படா தமாஷாகத் தான் படப்பிடிப்பெல்லாம் நடந்தது.அப்போதெல்லாம் படம் எடுப்பதைப் படபடப்பு என்றே சொல்லத் தக்க அளவிற்கு எக்கச்சக்க முரணும் நகையுமாய்த் தான் படப்பிடிப்பெல்லாம் நடக்கும்.நாடகக் கம்பெனிகளின் நவ ட்யூன் வெர்ஷனாகவே சினிமா பார்க்கப் பட்டது.கதை இசை நடிக நடிகையர் இத்யாதிகளில் பெரும்பான்மை அப்படியே நாடகக் கணக்கில் இருந்து திரைப்படக் கணக்கிற்கு மாற்றி எழுதப்பட்டது.கம்பெனி ஆர்டிஸ்டுகள் தான் இங்கும் இருந்தார்கள்.முதல் பத்து பதினைந்து வருடங்கள் ஒரே பக்திப் படங்களாகவும் அறிந்த கதைகளின் இன்னுமோர் வெர்ஷனாகவே படங்கள் எடுக்கப் பட்டமையால் அப்படி ஒன்றும் காதலில் திளைத்துவிடவில்லை.தமிழில் ஆரம்ப கால சினிமாக்களில் ஆங்கொன்றும் இங்கொன்றுமாகவே காதல் காட்சிகள் இடம்பெற்றன.அவற்றுக்கு தனியே சென்ஸார் போர்டெல்லாம் தேவையே இல்லாமல் கம்பெனியாரே கதை இலாகா என்ற பேரில் சகட்டு மேனிக்குக் கதைக்கும் காட்சிக்கும் கத்திரி போட்டு ஒரே பக்தி மணம் கமழப் படங்களை சுட்டுத் தள்ளினார்கள்.
பாகவதர் என்னா மாதிரி ஹீரோ..?அவருக்குப் போட்டியாக வந்த சின்னப்பா கிட்டப்பா இன்னும் சித்தப்பா பெரியப்பா யாராக இருந்தாலும் எல்லோரின் பாடும் ஒரே பாடாய்த் தான் இருந்தது.நின்றால் அமர்ந்தால் நடந்தால் எல்லாம் பாடல்களைக் கொண்டே சகலரையும் மேய்த்ததொரு காலம்.அதில் பாதி டூயட்டுகள் தான்.இருந்தாலும் நாயகியின் நிழலைத் தெரியாமல் தொட்டு விட்டால் கூட நாற்பது நாற்பத்தைந்து நிஜ ஸாரிகள் கேட்டபடி அடுத்த பாடலுக்குள் செல்வார் ஹீரோ.இப்படி இருந்த போது தான் தேவதாஸ் போன்ற படங்கள் காதலுக்காகவே எடுக்கப் பட்டன.
வந்தாரய்யா ஜெமினிகணேசன்.அவர் தான் முதல் காதல் மன்னன்.காதலிக்க்ச் சொல்லி சம்பளமும் தரப்பட்ட உலக மகாக் காதலன்.ஜெமினியைப் படங்களில் பார்க்கும் போது நமக்கே ஒரு கணம் ஜல்லி புரளும் என்னா மாதிரி ஸ்மைல்டா இது என்று.அப்படிக் காதலிப்பார்.
ஜெமினி காலத்தில் தான் ஆங்காங்கே காதல் காட்சிகளில் சரி...நீ காதலன் நீ காதலி ரெண்டு பேரும் கொஞ்சமா நெருங்கி நிக்கிறாப்ல நிக்கலாம்.தப்பில்லை என்று அனுமதிக்கப்பட்டார்கள்.அப்போதே சிலபல பாடல்களில் தன்னாலன அளவு காதலின் கரைகளை அதிகரித்துத் தர எவ்வளவோ முயன்றிருப்பார் ஜெமினி.
அவர் தான் என்றில்லை.சிவாஜி எம்ஜி.ஆர் தொடங்கி முத்துராமன் ஜெய் வரைக்கும் காதல் காட்சிகள் என்றாலே ஒரு டிப்பிக்கலான கோணத்தில் நின்ற இடத்தில் இருந்து கோணிச் சாய்ந்தபடி தனக்கு வழங்கப்பட்ட நாயகியை நெருங்கினாற் போல் அதிகபட்சம் அவளது கன்னம் லேசாய் டச் பண்ணிக்கிறேன் என்ற அளவுக்கு விழுந்து விடாமல் நிற்பார்கள்.இதுவே காதல் கை கூடுதல் கல்யாணம் நிச்சயமாதல் அல்லது காணாமற் போய் பிரிந்த இருவர் மறுபடி சேர்தல் இன்ன பிற இத்யாதிகளின் போதெல்லாம் பார்த்தால் அதே ஜோடி இருவரும் நம்மைப் பார்த்து இவரது லெஃப்ட் கன்னம் இஸ் ஈக்வல் டு நாயகியின் ரைட்டுக் கன்னம் என்ற அளவில் உராயும்.அந்த நேரத்தில் ஏதோ ரெய்டு வரும் ஸீபீஐ அதிகாரிகள் ஃபோன் வயரைத் தேடி அறுத்து செல்போனைப் பிடுங்கி சுச்சாப் செய்வார்கள் அல்லவா அப்படி தங்களைத் தாங்களே சுச்சாப் செய்து கொண்டு கரெக்டாகக் கண்ணை மூடிக்கொள்வார்கள்.என்ன பேசுது என்று இருவருக்குமே தெரியாது.
மாலினி...மாலினி என்று நாயகன் பிதற்ற
கண்ணன் கண்ணன் என்று நாயகி அரற்ற அந்த இடமே ஒரு ஐஸீயூவின் நனவிலி வார்டு போலக் காட்சி அளிக்கும்.எதுவுமே நடந்திருக்காது.தன் காதலை இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லி ஒப்புக் கொண்டதன் விளைவே அந்த கோமாம்னீஷியக்கண்மூடல் ட்ராமா.
இதற்கடுத்து அதே காதல் அச்சுப்பிச்சு ஜோடியை என்ன செய்வதென்று ஒரு உபாயம் வைத்திருப்பார் டைரடக்கர்.பர்ஸைத் தூக்கிக் கொண்டு ஓடுகிற கவுண்டமணி போல திடீரென்று ஏதாவதொரு மலைஸ்தலத்தின் புல்மேனியில் குடுகுடுவென்று ஓடுவார் டைட் சுடிதார் அணிந்த அதே நாயகிமாலினி.உடனே ஏரியா ஏட்டைய்யாவைப் போலப் பின்னாலேயே துரத்திக் கொண்டு ஓடுவார் கண்ண நாயகன்.செமத்தியாய் ஒரு பாடல் தொடங்கும்.முடிந்த வரைக்கும் தள்ளித் தள்ளி நின்றபடியே டான்ஸ் போல கைகால்களைத் தூக்கி இங்குமங்கும் நடந்தும் திரும்பியும் கன்னம் வைத்து கன்னத்துப் பவுடரைக் கவர்ந்தும் கிடைத்த இடங்களில் கண்களை மூடித் திறந்தும் காஜி பண்ணி விட்டுத் தான் காதலைக் கன்ஃபார்ம் செய்து கொண்டபடி அடுத்த காட்சிக்குள் திரும்புவார்கள்.ரஜினி கமலின் ஆரம்ப காலம் வரைக்கும் இப்படித் தான் நடந்தது.
அதுவும் ஜிவாஜியார் ஏற்கனவே ஒரு பெண்ணைக் காதலித்திருப்பார்.அவருக்குப் பிறந்த அவருடைய ஓன் மகன் அவரது வீட்டிலேயே பணியாளர் ஆவார்.அங்கே வேலைபார்க்கும் இன்னொரு பணியாளர் அலையஸ் ட்ரைவர் ராஜர் சுந்தர் மேஜர் மகளான பாரதியை காதலிப்பார்.அது தெரிந்ததும் முதலில் சிவக்குமார டெஸிக்னேசனுக்காக அந்தக் காதலை கடுமையாக எதிர்ப்பார் சிவாஜியார்.பிற்பாடு அவர் தன் மகனுமான பணியாளனுமான சிவக்குமாருமானவர் மீது பாரதி கொண்ட காதல் மெய்யாலுமே மெய்யான உண்மைக்காதல் என்பதை சிலபல கொஷ்டீன்களுக்குப் பிற்பாடு தெரிந்து கொண்டு ஓக்கே..நீங்க லவ்விக்கலாம் என்று சம்மதிப்பார்.இந்த முடிவறிவித்தல் வரைக்கும் எண்ணெய்க் கம்பெனி கலெக்சன் ஏஜண்டு போலப் பலவிதமான முகபாவங்களோடு பக்கத்தில் பரிதவிக்கிற சிவக்குமாரர் ஹப்பாடி என்று நிம்மஹதி அடைவார்.              
தியாகச்செம்மல் அக்காஸ் அண்ணன்ஸ் தன் தம்பி தங்கைஸைப் படிக்க வைத்து கலியாணம் செய்து வைத்து ஜீவன் பீமா பாலிஸிகளைக் கையில் தந்தபடி தியாக நடை நடந்தார்கள்.சில சமயங்களில் அக்காஸ் லவ்விய அதே அறியாவாலிபனைத் தங்கையும் லவ்வி அவளே திருமணமும் செய்து கொண்ட ஸாரி நா பாஸ் ஆயிட்டேன் காதஸ்களும் திரைகடந்தன.     
அப்புறம் கண்டுபிடிக்கப் பட்டது தான் பூ டு புய்ப்பம் வெர்சன் டூபாயிண்ட்டூ.
அதாகப்பட்டது...நாயகி அம்பிகாவின் லிஸ்பிக் உதட்டைத் தன் கைவிரலால் பற்றுவார் கமலகாஷநாயகர் அதை லேசாக சுண்டியபடியே புன்னகைத்தபடியே மிக நெருக்கமாகப் போகும் போது ஒரு சூரியகாந்திப் பூ க்ளோசப்பில் உருவாகும்.இப்போது அம்பிகாவானவர் உதடுகளைத் துடைத்தபடியே ச்சீ என்றபடி கமலரிடமிருந்து நகர்ந்து செல்ல முற்படுவார்,.அப்போது அவரது கையை விடாமல் பற்றுவார் ஹீரோ..உடனே பாட்டுத் தான்..இதொரு விதம் என்றால் தன்னைக் கடத்தியவனையே காதலித்துத் தன் அப்பாஸ் சித்தப்பாஸைப் போட்டுத் தள்ளுவதற்குத் தன்னாலான எல்ப் இத்யாதிகளைச் செய்து கொடுக்க ஆரம்பித்தாள் தமிழ்க் கதா நாயகி.
சந்திக்கவே முடியாத மந்திரி மகள்ஸ் பெரும் தொழில் அதிபர் மகள்ஸ் ஆகியவர்களை ஜஸ்ட் லைக் தட் அழுக்கு பனியன் நாயகன் கரெக்ட் செய்தான்.நிஜ வாழ்வில் இதையே ட்ரை செய்த பலரும் பலவிதங்களில் தாக்கப்பட்டுத் தூக்கப்பட்டார்கள்.பிற்பாடு கொஞ்சம் இவை மாறின.
முன் பழைய தள்ளி நின்று கொஞ்சல்ஸ் எல்லாம் இல்லாமல் கொஞ்சம் சீரியஸாகவே காதலிக்க ட்ரை பண்ணும் போது கூடவே நாற்பத்தேழு க்ரூப் டான்சியர் விடாமல் கெக்கே பிக்கே என்று சிரித்தபடி தங்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா யூனிஃபார்மோடு குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் காதலிக்கிற இருவருக்கும் பந்தோபஸ்து தந்து கொண்டிருப்பார்கள்.
தலைவர் ராமராஜர் கனகாவோடு தன்னாலான அளவுக்கு சாமுத்ரிகா பட்டுக்களை அணிந்து கொண்டு வயற்காடுகளில் ஓடியாடிக் காதலித்தது அடுத்த காலம்.இந்தக் காலத்தில் தான் பெரிய சைஸ் டீவீ ஃப்ரிட்ஜூ ஆரஞ்சு முத்துச்சிப்பி கொய்யாக்காய் பல கலர் ஆப்பிளைத் திறந்து கொண்டு க்ரூப் டான்ஸர்கள் வெளியே வரும் சைன்ஸ் ஃபிக்சன் காதல் காட்சிகள் படமாக்கப் பட்டன.காதலை ஏற்றுக்கொள்ளச் சொல்லி அழுது தவித்து தாடி மேல் தாடி வளர்த்து விடாமல் அரற்றி நீ காதலிக்கலேன்னா எனக்கு வேற வழியே இல்லை ப்ளீஸ் என்று கதறிக் கதறி எல்லாம் காதலித்த நாயகர்கள் கடைசியில் சில சமயங்களில் காதலித்த நாயகியை கைபிடிக்காமலும் போனார்கள்.ராதா...ராஜா..என்னை ஞாபகம் இருக்கா..?இப்பிடிக் கேட்குறது என்னையே எனக்கு மறந்திடுச்சின்னு சொல்றதைத் தவிர வேற வழியே இல்லை..எப்பிடி இருக்கே..?எங்கே இருக்கேன்..?ஏதோ இருக்கேன்..உயிரோட பிணமா என்றெல்லாம் டயலாக்குகள் பேசி காதலித்தார்கள்.
காதல்னா என்னான்னு தெரியுமா தெரியுமா என்று எக்கச்சக்கமான டெஃபனிஷன்கள் வந்து கொண்டே இருந்தன.இதான் காதல் இதான் உண்மைக் காதல்..காதலை வாழவைக்கிறதுக்காக வேற வழியில்லாத பாபும் சீதாவும் தங்களோட உயிரையே தியாகம் செய்துட்டாங்க இப்பவும் அந்த மலைப்பாறாய்ல கார்த்திக் ரம்யான்னு அழியாம இருக்கிறது நிறைவேறாத நம்ம காதலோட சாட்சியம் என்றெல்லாம் உருகினார்கள்.இந்த ஜென்மத்துல தான் நம்மால ஒண்ணு சேரமுடியலை.அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா அதுலயாச்சும் நாம ஒரே ஜாதியில ஃபாரீன்ல பொறக்கலாம் என்றெல்லாம் சைன்ஸ் ஃபிக்சன் சொல்யூசன்களுடன் உயிர்த்தியாகம் செய்தார்கள்.நடு நடுவே நூற்றுச் சொச்ச உதடு கட் அவுட்டுகளுக்கு மத்தியில் ட்ரீம்ஸில் பாட்டுப் பாடினார்கள்.
இன்னுமோர் காதலின் உச்சபட்ச சுவாரசியமாக கேப்டர் முதலான தியாகப் பரம்பரையினரின் காதல் சேர்த்து வைத்தல் படங்கள் வெளியாகின.டைட் க்ளோஸ் அப்பில் குருதி கொப்பளிக்கிற கண்களை மாறி மாறிக் காட்டி வில்லன்ஸ் உடன் சண்டையிட்டுத் தன் இன்னுயிரை ஈந்தபடியே ஒரே ஒரு ஒல்லிப்பிச்சான் காதல் ஜோடியை சேர்த்து வைத்தபடி இருபத்தியாறு இருபத்தேழு படங்களில் ஒவ்வொரு ஈரோவும் செத்துப் போய்க் காதலை வாழை வைத்தார்கள்.வாழை பூத்துக் குலுங்கியது.கேப்டர் அதில் ஒரு பங்கு மேலே போய் ஒரு விரலை சங்கு சக்கரம் இல்லாமலே உயர்த்தியபடி காதல்னா என்னான்னு தெரியுமாடா என்று வில்லனைக் கட்டி வைத்து அடித்து புரியவைத்தார்.குத்துயிரும் குலையுயிருமாய்ப் போன அந்த வில்லன் அனேகமாய் மன்சூரலிகான் என்னைய ஏன்யா அடிச்சுக் கொன்னே என்று கண் கிறங்கப் பார்த்தபடி இதுவேற நாந்தெரிஞ்சுகிட்டு இனிமே என்னடா பண்ணப் போறேன் என்று பரிதாபமாய்ச் செத்தார்கள்.அதையும் நரகாசுரனைக் கொன்ற ப்ளூபாடிக் கிருஷ்ணரைப் போல ஊர் மத்தியில் நடந்து வர அதே ஈரோவை வாழ்த்தியபடி ஃபியர்லெஸ் ஈரோயினும் ஈரோவும் நீங்க நானூத்திப் பத்து வருசம் நல்லா இருக்கணும் என்று பாடியாடிக் காதலித்துக் கொண்டார்கள்.காவல் அதிகாரிகளில் ஒரே ஒரு சரத்குமாரர் நல்லவராய்க் காதல் சோடியைத் தன் மற்றும் தன் பெஞ்சாதி உசிர்களை எல்லாம் தானம் செய்து சேர்த்து வைத்த படங்களும் வெளியாகின.காதல் தப்பித் தப்பிப் பிழைத்தது.
அப்புறம் வந்த அஜீத் விஜய் அறிமுக காலத்திலிருந்து இன்றைய சிவகார்த்திகேயர் காலக் காதல் வரைக்கும் எப்படி புதுமையா எடுக்கறது என்றே ஒவ்வொரு மேக்கரும் தன் மற்றும் உதவியாளர்களின் மண்டைகளைப் பிய்த்துக் கொண்டு பிய்த்துக் கொண்டு உருவாக்கின பற்பல காதல் காட்சிகள் மனங்களைக் கவர்ந்தன.
அதில் அவளை எனக்கு ஏன் பிடிக்கும் தெரீமா மச்சி என்று கூடவே சுற்றும் நண்பவாழைகளை விடாமல் அறுத்துக் கொன்றார்கள்.அதற்குச் சொல்லப் படுகிற காரணங்கள் எதுவும் அதே கேரக்டருக்கு அந்த ஒரு காட்சி தாண்டி அதே படத்திலேயே ஒரு தடவை கூட அனுமதிக்காத அளவுக்கு லூலுல்லாய் காரணிகளாகச் சொல்லித் தள்ளினார்கள்.நாயகி அறிமுகக் காட்சிகளின் போது மாத்திரம் அவளை தனியாக வொண்டர்ஃபுல் என்று கொண்டாடத் தக்க அளவில் அறிமுகம் செய்து விட்டு அதன் பின்னர் மெல்ல மெல்ல அழுக்குப் பிச்சானாக்கி ஏய்...நான் சொல்றதை மட்டும் கேக்குறே நீ..?சரியா என்று நாயகபாத்திரம் முற்றிலுமாகக் கம்ப்ரெஸ் செய்தவண்ணம் இருந்தன.ஆணாதிக்க கதைகளில் பெண்கள் மாடர்னாக அடிமைப் படுத்தப் படுவது தொடர்ந்தது.கூட இருக்கிற நண்பர்களிடம் அவ எப்பிடீ இருப்பா தெரியுமா என்றதற்கடுத்து அவளை எனக்கு எவ்ளோ பிடிக்கும் தெரீமா மச்சீ என்று உருகுவான் நாயகன் அதில் பத்தில் ஒருபங்கு கூட அந்த நாயகி பாத்திரத்திடம் காட்டுகிற இன்னொரு காட்சி இருக்கவே இராது என்பது தான் சோகமே...
காதல் என்றாலே காதல் தோல்விகளும் உண்டு தானே..?தேவதாஸ் உடன் சுற்றும் அந்த நாய்க்குட்டிக்குத் தனி ரசிகர்கள் உண்டல்லவா..?காதலியை தகாத சொல்லால் திட்டி விட்டு அல்லது அடித்து நொறுக்கி விட்டு நேரே நாற்பதாம் நம்பர் கடைக்குச் சென்று மில்லி அடித்து விட்டு அவ என்னைய ஏமாத்திட்டா..அவளோட சேர்ந்து எல்லா பெண்களுமே இப்பிடித் தான் என்ற பொருள் வரும் சோகப்பாடலின் எல்லா வரிகளையும் ஆடி தன்னாலான அளவு தன் சோகத்தை ஆற்றிக் கொண்டு மறுக்கா வா லவ் பண்லாம் என்றோ அல்லது கைக்கு சிக்குகிற வில்லனை அதகளம் பண்ணீய பின்போ எதுவும்மே நடக்காத அளவு ஈ என்று சிரித்தபடி ஈரோவும் ஈரோயினியும் மறுபடி பழைய டூயட்டின் முதல் வரியை இன்னொரு தடவை பாடுகையில் ஃப்ரீஸ் செய்து வணக்கம் அல்லது சுபம் அல்லது எழுந்திரிச்சி போ என்றெல்லாம் எண்டு கார்டுகள் போடப்பட்டன.இதன் மாறி மாறி வந்த வடிவங்கள் இந்த பொண்ணுங்களே இப்பிடித் தான் என்று ஏரியா போலீஸ் ஸ்டெஷனின் அதிகாரி வரைக்கும் அழுது அரவணைத்து பாடலை முடிக்கையில் பாட்டிலை தெருவில் உடைத்து விட்டு சிறந்த குடிகுமாரன் ஆனார்கள்.
நகைச்சுவை நடிகர் நடிகைகளின் காமெடி ட்ராக்குகளில் கொஞ்சமும் வில்லன் நாயகியை காதலிக்கிறாற் போன்ற கதைகளில் நிறையவுமாகக் காதல் கதையின் சகல பாத்திரங்களிலும் குதித்தோடியது.ப்ளீஸ்...நீங்களாவது காதலிக்காதீங்க என்று ஸ்டண்டு நடிகர்களைப் பார்த்துக் காதல் கெஞ்சியது.அவர்களும் அதன் பால் கொண்ட பரிவால் எங்கேடா இருக்கே என்று நாயகனைத் தேடி வந்து அடிவாங்கி ".ஸாரிப்பா..நீயே இவனை சாவடி.." என்று காதலின் வசமே சொல்லிப் போனார்கள்.காதலும் தன்னாலான அளவு சிலபல நாயகர்களைக் கடைசிக் காட்சியில் இறுமித் தும்மி நத்தங்கக்கிச் சாகச் செய்து திருப்திகொண்டது.அதையும் விடாத அதே நடிகர்கள் அடுத்த படங்களில் புகுந்து மறுபடி காதலிக்கத் தொடங்கினார்கள்.
என்றாலும் மிஸ்ஸியம்மா தேவதாஸ் இருவர் உள்ளம் உலகம் சுற்றும் வாலிபன் காதலிக்க நேரமில்லை ஊட்டி வரை உறவு நினைத்தாலே இனிக்கும் அலைகள் ஓய்வதில்லை நாயகன் தளபதி பம்பாய் ஜீன்ஸ் காதல் பருத்திவீரன் 7ஜி ரெயின்போ காலனி சுப்ரமணியபுரம் ராஜாராணி நேற்றுமுன் தினம் வெளியான போகன் வரைக்கும் மனதில் நிலைத்து நீங்காமல் நிரந்தரிக்கிற சொல்லாகக் காதலும் அதன் சாரமும் தங்குவதற்குக் காரணமாகவும் தமிழ் சினிமாவும் அதன் தனித்த காதல் சொல்லும் காட்சிகளும் தான் இருக்கின்றன.வாழ்க காதல்.காதலுடன் வாழ்தல் இனிது.