புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

ஞாபக நதி 12

அன்னியத்தின் கூடாரம்

நிலா நிழல் சுஜாதா எழுதிய கிரிக்கெட் பின்னணியிலான நாவல்.அதன் முன்னுரையில் சின்ன வயதிலிருந்து விலகி வெளிப்பட்டு சட்டென்று ஒரு கணத்தில் பெரியவர்களின் உலகத்தில் நாமெல்லாரும் புகுத்தப்படுவதைப் பற்றி எழுதி இருப்பார்.எல்லோருக்குமே அப்படியானதொரு நிகழ்வு சின்னதோ பெரிதோ ஒரு சரிவு அப்படியான பெரியவர்களின் உலகத்தினுள் அழைத்துச் செல்கிறபடி நிகழும்.எனக்கு எப்போது அந்த நுழைதல் நிகழ்ந்தது..?

அக்கா திருமணமாகி அத்தானோடு லண்டன் சென்றாள்.சுபஸ்ய சீக்கிரம்.அக்கா கருவுற்றிருக்கிறாள் என சேதி வந்தது..நான் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் விட்டு எங்கே செல்வேன்..?எனவே அம்மா மாத்திரம் கிளம்பி லண்டன் செல்வதாக ஏற்பாடானது.நம் நிலமென்றால் கூட மாட ஓடியோடிப் பார்த்துப் பலதும் செய்திருக்கமுடியும்.லண்டன் அன்னியத்தின் கூடாரம்.எது முடியுமோ அதுவே சிறப்பு.அம்மா ஸ்வெட்டர் ப்ளேஸர் பருப்புப் பொடி ஊறுகாய் சகிதம் தன் முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டாள்.

தனியே தன்னந்தனியே உழன்றேன்.போஜனப் ப்ரியனான நான் உபவாச நாயகனானேன்.அம்மா என்றவொருத்தி உடனிருக்கையில் எத்தனை முறை ஹோட்டலில் சாப்பிட்டாலும் ருசித்தது.ஆனால் இனி ஆறு மாசத்துக்கு ஓட்டல் தான் என்றான பிறகு இனித்ததெல்லாம் கசந்தது.திருநகர் அண்ணா பார்க் அருகாமையில் ஒரு ஜோஸ்யர் கம் சமையல் விற்பன்னர் (என்ன டிசைனோ) வீட்டில் நித்யம் இரண்டு வேளை சாப்பிடுவதாக ஏற்பாடு இரண்டே வாரங்களில் ஒவ்வாமற் போயிற்று.

காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி என்று மறுபடி கண்பார்த்துக் கையில் கிட்டியதை எல்லாம் புசித்தபடி திரிந்தேன்.அரைப்பசியும் குறைக்கஞ்சியுமென வாழ்க்கை எனும் வண்டியைத் தாறுமாறாக ஓட்டிக்கொண்டிருந்தேன்.எனக்கே என்னைப் பார்க்க அழாச்சி அழாச்சியாக வந்தது.காலை உணவு பிரச்சினையே இல்லை.எங்கு வேண்டுமானாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடிந்தது.மதியம் மீல்ஸூம் இரவு டின்னரும் தான் செட் ஆகாமல் தவித்தேன்.

திருநகர் ஒன்றாவது ஸ்டாப்பில் பாண்டியன் என்றொரு ஓட்டல் காண்பதற்கு சாதாரணமாக இருக்கும்.என்றபோதும் வீட்டுப் பதத்தில் ருசியாக இருக்கும்.அந்த ஒரு ஓட்டலில் தான் வாரத்துக்கு நாலு தடவை சாப்பிட்டாலும் அலுக்கவும் செய்யாது உடம்புக்கும் ஒத்துவரும்.ஆனாலும் மனசு சரியான உட்கொளல் வாய்க்காமலேயே ஏக்கத்தில் தவித்தது.ருசிமாற்றுக்குச் செல்வதற்கு இடமில்லை.

ஒரு நாள் வாடிய மதியத்தைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றாற் போல் மூஞ்சி சிறுத்து சாரா ஸ்கூல் பகுதியில் எங்கேயாவது லெமன் சாத வகையறாக்கள் கிடைக்காதா என்று ஏங்கினபடி திரிந்து கொண்டிருந்தேன்.இலக்கில்லாப் பயணங்களின் கனம் சொல்லி மாளாதது.உள்ளுறையும் உயிர் பயணிக்கிற உடம்பையும் வாகனத்தையும் கிளைத்தோடுகிற சாலைகளையும் சேர்த்து மானசீகத்தினுள் சுமக்கத் தலைப்படுவது அழுத்தும் மகாகனம்.

"எங்கே போறே..?"தெய்வம் மனுஷ்ய ரூபேண.கேபிள் கோபி என்னைத் தன் பெரிய புன்னகையுடன் நிறுத்தினான்.அலுத்துக் கொண்டேன்.
"அம்மா ஊருக்குப் போயிருக்காங்க கோபி.சரியான ஏற்பாடில்லாம தெருத்தெருவா சுத்துறேன்.." என்றேன்.
"நீ ஒரு கல்யாணம் செய்துக்க ததா" என்றான் நக்கலாக.
"யோவ்..நா லவ் பண்ற பொண்ணு டாக்டர்.அதுக்கு சமைக்கத் தெரியும்னாலும் எங்கே நேரம் இருக்கப் போகுது..?ரெண்டு பேருக்கும் சேர்த்து நான் சமைக்கக் கத்துக்கலாம்னு இருக்கேன்" என்று சோகையாய் சிரித்தேன்.
டீ சாப்பிடுவம் என்று கடை நோக்கினோம்.

கோபிக்குத் தெரிந்த நாராயணன் என்பவரை ஃபோன் செய்து அழைத்தான்.வந்தவர் வீட்டளவில் மெஸ் நடத்துபவர்.என் வீட்டுக்கே தினமும் மதிய உணவைத் தர ஒப்புக்கொண்டார்.இப்படியான ராஜ ஏற்பாட்டைப் போகிற போக்கில் செய்து கொடுத்த கோபி என் கண்ணுக்குத் தேவ தூதனாகவும் நாராயணன் சாட்சாத் அந்த நாராயணனாகவுமே தோன்றினர்.தினமும் பகல் ஒரு மணிக்கு என் வீட்டுக்கே நாராயணன் ஒரு ஃபுல் மீல்ஸை எடுப்பு சாப்பாடாகத் தரத் தொடங்கினார்.என் வாழ்வின் கறுப்பு வெள்ளை பக்கங்களெல்லாம் கலராகின.எருமைகளும் யானைகளும் பசியில் பிளிறிக் கொண்டிருந்தன அல்லவா..?அவற்றின் சப்தங்கள் அற்றுப் போய் மறுபடி பட்டாம்பூச்சிகள் பறக்கலாயின.நாராயணன் நளபாகனாய் இருந்தார்.ருசி மட்டுமல்ல.அதனை ஒழுங்காகவும் அமைப்பாகவும் கட்டிக் கொணர்வதிலேயே வித்யாசம் தெரியும்.உப்பு உறைப்பெல்லாம் அத்தனை கச்சிதமாக இருக்கும்.அம்மா ஃபோன் செய்யும் போது "அவசரமெல்லாம் ஒண்ணுமில்லை.ஒரு வருசம் அக்கா கூட இருந்துட்டு மெதுவா வா" என்னும் அளவுக்கு உடலில் திமிர்த்தனம் கூடிப் போயிருந்தது.சர்வம் நாராயண புண்ணியம்.அம்மா வந்து சேரும் வரை அந்த ஏற்பாட்டைக் கடைப்பிடித்தேன்.பின்னரும் எனது இஞ்சினியரிங் கல்லூரி நண்பர்கள் மூன்று பேருக்கு நாராயணன் தினசரி சாப்பாடு தருவதற்கான ஆர்டரைப் பெற்றுத் தந்தேன்.

டி.எம்.எஸ்.பாடல்கள் என்றாலே நாராயணனுக்கு உயிர்.நான் அவரைக் கிண்டல் செய்வதற்குக் கிடைத்த வாய்ப்பாக அதனைப் பயன்படுத்திக் கொண்டேன்.
"என்னங்க நீங்க உங்காளுன்றதால தூக்கி வச்சி கொண்டாடுறீங்களா..? எஸ்.பீ.பாலசு
ப்ரமணியம் ஜேசுதாஸ்லாம் தான் இப்ப ட்ரெண்டு" என்பேன்.முதலில் இப்படி கம்பேர் செய்வதே தவறு என்பதை உணராத வயது எனக்கு.நாராயணன் எதுவுமே பேசாமல் என் கையில் ஒரு சில கேஸட்டுக்களைத் தந்து "இதை எல்லாம் கேட்டுட்டு சொல்லுங்க.டீ.எம்.எஸ் ஒரு அற்புதம் ரவீ.அவர் எங்காளுன்றது எங்களுக்குப் பெருமை தான்.அதை விட அவர் நம்மாளு.நம்ம எல்லாருக்குமான ஒருத்தர்.அதை உணராம பேசக்கூடாது"என்றார்.அம்மா ஊரில் இல்லாத அந்த ஒரு வருட காலத்தில் தான் என் வாழ்வின் அனேக டீ.எம்.எஸ்.பாடல்களை கேட்டு அவருக்குப் பெரிய ரசிகனாகவே மாறினேன்.பலமுறை டீ.எம்.எஸ் பற்றிய என் கருத்தாக்கங்களை மாற்றியதற்காக நாராயணனுக்கு நன்றி சொன்னேன்.நாராயணனுக்கு பிற்பாடு நான் என் ப்ரியமான டீ.எம்.எஸ் பாடல்களைத் தந்து சிலாகித்ததும் நடந்தது.அதே டீஎம்.எஸ் என் வாழ்வினுள் வந்தது இதே கதையின் வேறொரு அத்தியாயம்.

ஏழாவது ஸ்டாப் திரும்புகிற இடத்தில் முதல் வீடு அச்சமுத்தம்மன் கோயில் பூசாரியின் வீடு அறியப்பட்ட ஒரு லேண்ட்மார்க்.ஒரு நாள் அந்தப் பக்கமாய் ஸ்கூட்டியில் திரும்பப் போகையில் பாண்டி அண்ணன் அங்கே நின்றுகொண்டிருந்தார்.அந்த வீட்டின் சூழ்நிலை என்னவோ செய்தது
"என்னண்ணே..?" என்றேன்
"ரவீ...பரணியண்ணனோட அம்மா எறந்துட்டாங்க."என்றார்.உள்ளே அந்தப் பெண்மணி தன் இறுதி உறக்கத்தில் தெரிந்தார்.
"என்னண்ணே செய்யணும்?" என்றேன்.
"இன்னும் தாழ்ந்த ஸ்தாயியில் டே தம்பி நா இங்க இருந்தாகணும்.இந்தப் பணத்தை கொண்டு போயி உங்க அண்ணிட்ட குடுத்திட்டு வந்துரு"என்றவாறே பார்ஸல் ஒன்றைத் தந்தார்.அவ்வண்ணமே நான் சென்று திரும்பினேன்.அங்கே சென்ற போது அந்த வீட்டின் சூழல் மாறி இருந்தது.ஆட்கள் கணிசமாக குழுமி இருந்தனர்.நானும் மரியாதைக்கு அவர்களோடு அமர்ந்தேன்.பக்கத்தில் அண்ணன் சோகமே உருவாக யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார்.அந்த மனிதர் இவரிடம் "கட்டாயமா..அவர் வராமலா..?வந்திட்டிருக்கார்" என்றார்.
நான் "யாருணே.." என்றேன்
"டீஎம்.எஸ்ஸூம் பரணியோட அப்பாவும் க்ளாஸ்மேட்ஸ்.சென்னையில இவங்க குடியிருந்தது டீஎம்.எஸ் வீட்ல தானாம்.ரெண்டு பேரும் ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ்".என்றார்.

தன் பாடல்களின் வழி என்னைக் கவர்ந்த ஒரு பிரபலத்தைப் பார்க்கப் போவது கரும்பின் சாற்றைக் கலயத்தில் ஏந்தினாற் போல இனித்தது.மனசுக்குள் ஜாலி.முகத்தில் வரவழைத்துக் கொண்ட சோகம்.அது ஒரு துஷ்டி வீடு என்பதோ ஒரு குடும்பம் அதன் தலைவியை இழந்திருக்கிறது என்பதோ என் கவனத்தில் இல்லை. நேற்றைக்கும் இன்றைக்கும் இடையில் என்ன மாதிரியான பிளவுகளை ஒரு நெருக்கமான உறவின் இல்லாமை நேர்த்திவிடும் என்ற துளி உணர்தலும் இல்லாமல் "எனக்கு என்னப்பா...டீ.எம்.எஸ் வரார்.பார்த்துட்டு கெளம்புவம்" என்கிற மனோபாவத்தில் அங்கே அமர்ந்திருந்தேன்.

தூரத்தில் கார் வந்து நிற்கிறது.மெல்ல இறங்குகிறார் பாடல்களின் அரசன்.தோளில் அவரது வழக்கமான அடையாளமான பட்டுத் துண்டு.வெண்ணிற ஜிப்பா.தன் முகத்தை லேசாய்த் துடைத்துக் கொண்டவராய் வீட்டினுள்ளே நுழைந்தபடியே தன் ஒப்பிலாக் குரலில் பாடினார்.

நீ இல்லாத மாளிகையைப் பார் மகளே பார்...
உன் நிழலில்லாமல் வாடுவதைப் பார் மகளே பார்...
தாய் படுத்த படுக்கையினைப் பார் மகளே பார் அவள்
தங்கமுகம் கருகுவதைப் பார் மகளே பார்..


அந்த இடமே அதிர்கிறது.மிகத் துல்லியமான சின்னதோர் ஊறுமற்ற நிசப்தத்தின் பிடியில் ஆழ்கிறது.தேர்ந்த மந்திரவாதி ஒருவன் தன் கை நுனியிலிருக்கிற மந்திரக்கோலால் தடவியவுடன் அதுகாறும் வரலாற்றின் தன் பிடிமானம் அத்தனையையும் இழந்து அவன் பின்னால் செல்லத் தலைப்படுகிற ஒருவனைப் போல அங்கே இருந்த அத்தனை பேருடைய மனசுகளையும் அந்தப் பாடல் ஒரு கயிற்றைப் போல் இறுக்கிக் கட்டியது.

தந்தை வாழ்வு முடிந்து போனால்
தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை...
தாயின் வாழ்வு மறைந்து போனால்
தந்தைக்கென்று யாருமில்லை....


இந்த வரிகளைப் பாடும் போது அங்கே இருந்தபலரும் இதற்கு மேல் தாங்குவதற்கில்லை என்றபடி உடைந்து அழுதனர்.அந்த இடத்தில் பொத்திக் கிடந்த அத்தனை துக்கத்தையும் அவர் குரலின் அடிநாதம் அகழ்த்தியதை உணர்ந்து சிலிர்த்தேன்."என் கண்களிலா நீர்?" நானே அறியாத ஒரு கணத்தில் இதனை சாத்தியம் செய்தது யார்..? டீஎம்சவுந்தரராஜன் என்கிற அந்தக் கலைஞன் எத்தனை அசலாகத் தன் ஆன்மாவிலிருந்து ஒரு அஞ்சலியை அந்த ராஜேஸ்வரி எனும் அம்மாளுக்குச் செலுத்தி விட்டார்?இதை விட நுட்பமாக ஒரு அஞ்சலியை இந்த உலகம் தோன்றியதிலிருந்து யாராவது செய்திருக்க முடியுமா..?

ராஜேஸ்வரி அம்மாவின் உடல் அவர் வாழ்ந்த வீட்டை விட்டு நீங்கிச் செல்லும் வரைக்கும் பித்தர்களைப் போல் நீல்சனும் நானும் அங்கே வந்திருந்த பலரும் அமர்ந்திருந்தோம்.சௌராஷ்ட்ரர்கள் வாழ வந்த வேற்றினத்தார்.அவர்களுக்குத் தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரியாது என்கிற கற்பிதங்களை எல்லாம் தன் மந்திரக் குரலால் உடைத்தெறிந்தவர் டீ.எம்.எஸ்.அவர் அளவுக்குத் தமிழை ஓங்கியும் ஆழ்ந்தும் சிறப்பித்த வேறொருவர் இல்லை.இதெல்லாம் இருக்கட்டும்

எல்லாவற்றுக்கும் மேலாக தனக்கும் தான் காணவந்த குடும்பத்திற்கும் தாய்மொழியான சௌராஷ்ட்ர மொழியில் அன்பும் ஆதரவுமாய் ஆறேழு வார்த்தைகளை ஆதுரமாய்ப் பேசிவிட்டு துக்கம் கேட்க வந்த கடன் தீர்ந்தது என்று புறப்பட்டுப் போயிருந்தால் யாரும் கோபித்திருப்பார்களா என்ன..?தன் மனதிலிருந்து எவ்வித செயற்கைத் தன்மையும் இன்றித் தன் அடிமனதிலிருந்து ஒரு பாடலை எடுத்துப் பாடித் தனக்கும் அந்தக் குடும்பத்துக்குமான உறவின் பிணைப்பை அன்பெனும் உன்னதத்தை வெளிப்படுத்திய அந்த மாமேதை ஒரு பிரபலப் பாடகராக அங்கே வந்தவர் என் வாழ்வில் எனக்குக் கிடைத்த ஆசான்களில் ஒருவராகவே அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டார்.பெரியவர்களின் உலகத்திற்குள் என்னைத் தன் கரம்பற்றி அழைத்துச் சென்றவர் குரலரசன் டீ.எம்.சவுந்தரராஜன்.

எல்லோர்க்குமா வாய்க்கும் இப்படி ஒரு பாக்கியம்.?

தொடரலாம்
அன்போடு
ஆத்மார்த்தி