புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

நிறமேற்றப் பட்ட புகைப்படம்

1 உங்கள் எழுத்தின் மீதான விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இங்கே விமர்சனமென்பது ஒரு கலையாக ஒரு துறையாக முன்பிருந்தது.தற்போது பெரும்பாலும் முன்தீர்மானங்களுடனான அதிர்ச்சி அளிப்பானாகவோ அல்லது இறுகப் பொத்திய பற்களுக்குப் பின்னே மறைத்துக் கொண்டு சொல்ல மறுக்கும் மாபெரிய தொடர் மௌனமாகவோ இருக்கிறது.

என் என்பதல்ல இரண்டாயிரத்துக்குப் பின் எழுத வந்த பலர்மீதும் இந்தப் பாரபட்சத்தின் சாம்பல் படர்வதாகவே சொல்வேன்.இங்கே இருத்தலும் நகர்தலும் மாபெரிய சுமையாகத் திரிக்கப் பட்டிருக்கிறது.இன்னும் சீனியர்களின் ராகிங் முடிவடையவில்லை.

என் மீது வைக்கப்படுகிற விமர்சனம் என்பது நான் பயணித்து வந்த பாதையின் மீதான விமர்சனம்.நான் படித்த புத்தகங்கள் நான் பயணித்த இடங்கள் போலவே நான் கடந்து வந்த வாழ்வின் கணங்கள் மீதான விமர்சனம்.இவற்றின் பின்புலத்தில் பெரிய திட்டமும் ஒவ்வாமையும் வெறுப்பும் தொனிப்பதைக் கண்ணுற முடிகிறது.நான் என்ன பேசவேண்டும் என்பதிலிருந்து துவங்கி என் ஆழ்ந்த பிடிமானங்களை நான் பற்றிக் கொண்டிருக்கிற வேர்களை சதா சர்வகாலமும் மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளாக ஏன் நிர்ப்பந்தங்களாகத் தான் இத்தகைய விமர்சனங்களைப் புரிந்துகொள்ளவேண்டி இருக்கிறது.இதன் அவலச்சுவை யாதெனில் இத்தகைய எந்த மாறுதல்களையும் ஒருவராலும் தன் சுயத்தின் மீதான வன்முறையாகத் தான் கருதமுடியுமே தவிர பூர்த்தி செய்ய முடியாத கோரிக்கை தான் அது.இங்கே விமர்சனம் எனும் பெயரில் ஆளுமையைச் சிதைப்பது தான் நடந்து வருகிறது.

2 இலக்கியம் என்றால் என்ன..?என்ன நடந்து கொண்டிருக்கிறது..?

இந்தக் கேள்விக்கு எல்லாரிடமும் ஒரு கருத்தை வாங்கி விட வேண்டியது.பிற்பாடு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து வைத்து எரித்து விட வேண்டியது.பிறகு எஞ்சும் பாருங்கள் அதெல்லாம் மாத்திரமே இலக்கியம்.
இலக்கியம் என்றால் என்ன என்று ஆரம்பிக்கக் கூடிய விவரணைகள் அலுப்பூட்டுகின்றன.இங்கே தனித்த ஆளுமைகள் இருந்தார்கள்.இப்போதும் இருக்கிறார்கள்.இருவேறு காலங்களுக்கு இடையிலான மாற்றங்கள் தான் இங்கே பேச வேண்டியதாகின்றது.இணையம் என்பது அறிவியல் வளர்ச்சியின் ஒரு வீக்கம்.அது எல்லாவற்றுக்குமான மாற்று என்பது ஏற்புடையதல்ல.ஆனால் ஒரு போரால் அழிகிற நிலம் போலப் பழமை மெல்ல அழிவடைந்து வருகிறது.காகிதத்தின் விலை அச்சிடும் செலவு தொடங்கி விற்பனை செய்து வாசிப்பவர் கரங்களுக்குச் சென்று அடையும் வரையிலான பழைய மெதடாலஜி மெல்ல செல்வாக்கிழக்கிறது.இன்னொரு புறம் இணையதளங்கள் அச்சு இதழ்களுக்கான மாற்றாக மாறுவதற்கான நிர்ப்பந்தத்தை சூழல் திணிக்கிறது.அரசியல் காரணங்கள் என்று போராடினாலும் சரி யதார்த்தம் என்று தெளிந்து அமைதியானாலும் சரி.இன்னும் வெகு சில வருடங்களில் காகிதப் பத்திரிகைகள் அழியத் தான் போகின்றன.முன்பிருந்த சிறு பத்திரிகை பெரும்பத்திரிகை என்பதெல்லாம் இனி எத்தனை பேர் படித்தார்கள் என்ற கணிதப் புள்ளிவிவரங்களாக மாறும்.வேடிக்கை என்னவென்றால் குமுதம் தான் தமிழ்ப்பத்திரிகைகளில் நம்பர் ஒன் அல்லது விகடன் தான் நம்பர் ஒன் என்பதை அளக்க ஏபீஸி என்றொரு அமைப்பு அதைக் கண்காணித்து முடிவு சொல்கிறது.இதே போலத் தான் டீவீ நிகழ்ச்சிகளுக்கு டீஆர்பி ரேட்டிங் என்பது என்றாலும் இவ்விரண்டும் ஒன்றல்ல.கலாச்சார அந்தஸ்து எங்கனம் டீவீ நிகழ்ச்சி ஒன்றுக்கும் காகிதப் பத்திரிகை ஒன்றுக்கும் வெவ்வேறோ அப்படியாகத் தான் இந்த ரேட்டிங் மெதடாலஜியும் வெவ்வேறு.ஆனால் இனிச் சமீபத்திலிருக்கும் எதிர்காலத்தில் டீவீ மற்றும் பத்திரிகை இரண்டுமே அவற்றின் வடிவங்களில் சின்னதும் பெரியதுமாக அழிந்து இணையம் என்ற ஒரு பொது ஓடுபாதையில் சங்கமிக்கையில் அவற்றுக்கிடையிலான ரேடிங் மெதடாலஜி ஒருவேளை ஒரே ஒரு ஒற்றையாக மாற நேரலாம்.இது ஒரு ஊழி காலத்துக்கு முந்தைய பதற்றமாகத் தான் பார்க்கிறேன்.இங்கே இருப்பவர்கள் இருக்கிற எல்லாவ்ற்றையும் எப்படிப் பகிர்ந்துகொள்வது என்றும் தன் தலையில் எத்தனை பெரிய மூட்டையை சுமக்க முடியும் என்பதையும் எண்ணிப் பதறுகிறார்கள்.தன்னால் சுமக்க முடியாத செல்வங்களைச் சுமப்பதற்கான உபதலைகளை தயாரிக்க முற்படுகிறார்கள்.அல்லது வேறு யாரும் எதையுமே தலையில் சுமக்கிறார்களா என்பதை இன்னும் ஆத்திரமாகக் கண்ணுறுகிறார்கள்.இது டெக்னாலஜி ஏற்படுத்தி இருக்கும் பதற்றம்.
அப்படி மாறினால் இப்போதிருக்கும் சூழல் என்ற வார்த்தையே முதலில் இருக்குமா என்பது தெரியாது,ஒன்று மட்டும் உறுதியாய்த் தெரிகிறது.என்ன செய்தாலும் கைவிடப் படாத யுத்தங்கள் சில இருக்கத் தான் செய்யும்.இந்த உலகம் அழிந்தாலும் கூட அந்த யுத்தங்கள் தப்பிப் பிழைக்கும்.அவற்றில் ஒன்று தான் எது இலக்கியம் என்பது துவங்கி எது சரி எது ஏற்புடையது எது ஒவ்வாது என்ற பெயர்களிலெல்லாம் நிகழ்த்தக் கூடிய யுத்தங்கள் தொடர்கதை.முடிவதற்கில்லை.

3 எது இலக்கியத் தரம்..?அல்லது எதெல்லாம் இலக்கியம் இல்லை..?

மக்களுக்கு நெருக்கமான எதுவும் இலக்கியமே.மக்களைப் பண்படுத்திச் சமைக்கிற எதுவும் இலக்கியமே ஏற்கனவே வாழ்ந்த வாழ்க்கை வரலாறு.இனி வரப் போவது எதிர்காலம்.கழிந்து கொண்டிருக்கிற தருணம் என்பது மெய்ப்பாடு.இந்த மூன்றையும் ஒன்றாக்கிப் பிரதிபலிக்கிற விசாரிக்கிற எள்ளுகிற தண்டிக்கிற பாராட்டுகிற வினவுதல்கள் எல்லாமே இலக்கியம் தான்.இது இலக்கியம் இல்லை என்று சொல்பவர்களைப் பாருங்கள்.அவர்கள் எல்லாரும் தங்களுக்குள் அட்ஜஸ்ட் செய்துகொள்கிற இலக்கியப் போலீஸ்கள்.இதெல்லாம் தான் இலக்கியம்.இவனெல்லாம் மாத்திரம் தான் எழுத்தாளன் என்று சதா சர்டிபிகேட்டுகளை வழங்கிக் கொண்டே இருக்கிற குருபீடங்கள்.இங்கே குருமார்கள் அடிக்கடி மாறுவார்கள்.குருவின் தன்மை மாறாது.எல்லாருமே இப்படி என்றோ எல்லா குருமார்களுமே இப்படி என்றோ சாட்டவில்லை.இப்படியானவர்கள் தான் இல்லாத இலக்கிய போலீஸ் ஸ்டேஷன் ஒன்றை நிறுவிக் கொண்டே இருப்பார்கள்.உதாரணமாக சொல்வதனால் எனக்கும் தஸ்தாயவ்ஸ்கியைப் பிடிக்கிறது உங்களுக்கும் தஸ்தாயவ்ஸ்கியைப் பிடிக்கிறது.எனக்கு சாண்டில்யனைப் பிடிக்கிறது உங்களுக்கு சாண்டில்யவைப் பிடிக்கவில்லை என்றால் உங்கள் தஸ்தாயவ்ஸ்கியைக் கொண்டு என் தஸ்தாயவ்ஸ்கியை சமன் செய்துவிட்டு சாண்டில்யனை நேரடியாக அடித்து வீழ்த்துவதை தங்கள் கையிலிருக்கும் இலக்கியச்சாட்டையைப் பயன்படுத்துவது தான் சூட்சுமம்.சாண்டில்யன் என்ற பேருக்கு முன்னால் நீங்கள் போர்ஹேஸ் மார்க்வேஸ் தொடங்கி எத்தனை உலக இலக்கியங்களைப் படைத்தவர்களைக் கொண்டு நீங்கள் நனைந்து வந்த நதியை முன் நிறுத்தினாலும் சரி.அத்தனையையும் தகர்த்து விட்டு சாண்டில்யனை எப்படி சொல்வே என்று தான் ஆரம்பிப்பார்கள்.ஆக சாண்டில்யன் மெயின்ஸ்ட்ரீம் எழுத்தாளர் என்பதில் தொடங்கி அவரது பிரபலம் அவர் அடைந்த வாசகமறுமொழிகள் மேலும் அவரது மொழி உள்ளிட்ட பலவற்றையும் எள்ளுவதும் குறை கூறுவதும் நடக்கிறது.சாண்டில்யன் என்ற பேருக்கு பதிலாக சுஜாதா என்று வைத்துக் கொள்ளுங்கள்.இவர்களுக்கு எழுதுகிறவன் யாரென்று அடுத்த தெருவில் இருப்பவனுக்குத் தெரியவே கூடாது என்ற உள் ஆழ வக்ரம் விமர்சனம் என்ற பேரில் வெளிவரும்.நிராகரித்தலைத் தத்தமது இலக்கிய அந்தஸ்தாக முன் நிறுத்திக் கொள்வது இங்கே ஒரு பாவனை.என்ன படித்திருக்கிறாய்..?என்ற கேள்வியிலிருந்து தொடங்கும் டெம்ப்ளேட்கள் சுவாரசியமானவை.ஆனால் இது புனிதம் இதை நீ ஏற்றே ஆகவேண்டும் என்பதெல்லாம் ஜல்லியடிக்கிறதல்லவா..?நீ எதெல்லாம் படிக்கலை தெரியுமா..?மொதல்ல அதெல்லாம் படி என்று பிடிவாதமாக சிலபஸ் தந்து கொண்டே இருக்கிறார்கள்.இதெல்லாம் படிச்சிட்டேன் என்று சொன்னால் நீ அதை ஏன் படிச்சே..?அவனைப் படிச்சிருக்கக் கூடாது என்று சொல்லித் துரத்துவார்கள். இயல்பாக மலரும் ஒரு பூவைப் போன்றது ஒவ்வொருவருக்கும் வாய்க்கிற வாசக அனுபவம் என்பது.அதைத் தடி கொண்டு அடித்துக் காயப்படுத்திக் கொண்டே இருப்பது தான் இலக்கியத்தைப் பாதுகாப்பது என்று திரியும் பலர் இங்குண்டு.சுருக்கமாய்ச் சொல்வதானால் அவரவர் சக்திக்கேற்ப இலக்கிய ஏட்டையாக்கள் முதல் டீஜீ வரை இலக்கியத்திலும் உண்டு.சுஜாதாவாவது சுந்தரராமசாமியாவது நகுலன் பிரமிள் யாராவது ஒருத்தர் எழுந்து வந்து இவர்களைக் கண்டிக்கவோ ஆட்சேபிக்கவோ முடியாது என்ற நிதர்சனத்தைக் கைக்கொண்டு யாரும் எந்த அபத்தத்தையும் முன்வைத்துவிட முடியும் என்பது மாயை மாத்திரமல்ல.சீக்கும் கூட என்பேன்.

4 எழுத்துலகம் எப்படி இருக்கு..?எழுத்தாளன் வாசகன் இந்த இரண்டு நிலைகளில் எதை சிறப்பானதாகக் கருதுகிறீர்கள்.

முதலில் இந்த இரண்டும் இருவேறு நிலைகளல்ல...காதலும் காமமும் போன்று இரண்டுக்குமிடையே மிக நுட்பமான உட்பிணைப்பு இருக்கிறதல்லவா..?எல்லாருமே வாசகர்கள் தான் என்பதே ஒரு க்ளிஷே.வாசகன் என்பது ஒரு நிலைப்பாடு.ரசனை சார்ந்த பொறுப்பு.வாரக்கடைசில நாளிதழின் இணைப்பை மிக்சர் கொறித்துக் கொண்டே வாசித்து விட்டு திங்கட்கிழமை காலை வேலைக்குத் திரும்பிச் செல்லும் எல்லாருமே வாசகர்களா.?இன்னும் நேராகக் கேட்டால் நாளிதழ் படிப்பவர்கள் அனைவரும் வாசகர்களா..எனக் கேட்டால் இதற்கு ஆமாம் என்றும் இல்லை என்றும் இரண்டு பதில்கள் வரும்.இரட்டைத் தன்மை இல்லை பன்முகத் தன்மை தான் ரசனையோட அற்புதமே.

ரசனையின் பால் ஒருங்கிணைபவர்கள் தங்களது ரசனையை உன்னதம் என நிறுவத் தலைப்படுவதும் பிறவற்றை நிராகரிப்பதும் காலங்காலமா இருந்திட்டு வருது.ஆனால் அதனுள் போலிகளின் வருகை தான் ஆபத்தானது.நீ எழுத்தாளனே இல்லை.நீ எழுதுறதெல்லாம் கவிதையே இல்லை.இதைச் சொல்றவர் யார்னு பார்க்கலை.என்ன முறைமைல சொல்றீங்கன்னு கேட்க முற்பட்டா அதெல்லாம் தெரியாது.நீ கவிஞனாகவே முடியாது.;ஏன்னு மற்றவர்களிடம் கேட்டுத் தெரிஞ்சுக்கோ என்று அவசரமாக் கிளம்பப் பார்க்கிறார்.இதை பகடியாக் கடந்து போறது ஒரு வழி.அப்பறமா எடுத்து யோசிச்சா இங்க எல்லாரும் பேசிட்டிருக்காங்கன்னு புரிஞ்சுக்க முடியுது.ரேடியோவைப் பார்த்துப் பேசினாலோ டீவீயைப்பார்த்துப் பேசினாலோ அது உள் நிகழ்வுகளில் பங்கெடுக்கிறவங்களுக்குக் கேட்குமா..?எழுத்தாளனைப் பார்த்து எல்லாருமே பேச முற்படுறாங்க.அவங்களாப் பேசுறாங்களா மற்றவங்க சொல்லிப் பேசுறாங்களான்றது ரகசியம்.வாயேன் தொடர்ந்து பேசலாம் என்று அழைத்தால் பலமற்று உடனே காலாவதியாகக் கூடிய பலரும் ரகசியக் கூட்டமா செயல்படுறதுக்குப் பேர் தான் இலக்கியம்னா...அந்த நான்சென்ஸ் எனக்குத் தேவையில்லைன்னு தான் சொல்வேன்.    மற்றபடி எழுத்துலகம் ஆரோக்கியமா இருக்கு.எழுத்தின் வலி தெரிஞ்ச யாரும் யாரையும் வார்த்தைகளால் காயப்படுத்துவதை ஏற்பதே இல்லை.

5 சிறுபத்திரிக்கை உலகம் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது.?

நீங்கள் ஒரு பிசினஸ் ஆரம்பிக்க முடியும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்..?நன்றாக ஓடக்கூடிய வருவாய் வரக் கூடிய ஒன்றைத் தானே..?விற்காது என்ற ஒன்றைத் தொடங்கி விட்டு நட்டம் அடைந்தேன் என்று குமைந்துகொண்டே இருந்தால் அதை உங்கள் வீட்டார் ஏற்பார்களா..?உன்னை யார் இதை நடத்தச் சொன்னது எனக் கேட்பார்கள் அல்லவா..?இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

உங்கள் நண்பர்களும் நீங்களும் சேர்ந்து ஆளுக்குக் கொஞ்சம் பொருளை இட்டு ஆத்ம திருப்திக்காக ஒரு செயலை ஒரு தொண்டைச் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.அங்கே நீங்கள் நட்டம் அடையவே முடியாதல்லவா.?இழப்பதும் நிகழாதல்லவா..?சிறுபத்திரிகை என்பது ஒரு தொண்டாக ஆன்மாவிலிருந்து செய்யப்பட வேண்டிய ஒரு கூட்டு மற்றும் தனி முயல்வு.அதனைச் செய்பவர்களைப் பொறுத்து அதன் பின்னே இருந்து குரல்கள் எழும்.சிறுபத்திரிகையை எதிர்பார்ப்போடு வணிகவியாபாரமாக மட்டும் தான் துவங்கக் கூடாது என்பது இல்லை.எந்த விதமான எதிர்பார்ப்போடும் கூட அவை நடத்தப்படக் கூடாது என்பதே என் புரிதல்.தமிழில் பல சிறுபத்திரிகைகள் ஆன்மதிருப்திக்காக நடத்தப்படுபவையே.அவற்றுக்கு நடுவே சிற்சில விலக்கங்களும் இருக்கலாம்.

சிறுபத்திரிகை என்பது ஒரு மனோநிலை.அதனை நடத்துகிற ஒரு அல்லது சிலர் முன்வைக்கக் கூடிய கருத்தாக்கங்கள்.அதே நபர்கள் காலகாலத்துக்கும் தாங்கள் முன்வைத்த கருத்துக்களில் இருந்து வழுவாமல் இருக்க வேண்டும் என்பதல்ல.நியதி என்னவெனில் தாங்கள் முன் வைக்கக் கூடிய கருத்தாக்கங்களில் ஏற்படுகிற மாற்றங்கள் வரை அவற்றுக்கான தார்மீகத்தை ஏற்க வேண்டும் என்பதே.இங்கே சிலர் தங்கள் கையால் கன்னத்தில் லேசாக அடிப்பதை ஒரு சலுகையாகச் சிலரது எழுத்துகள் மீது அணுகுகிறார்கள்.பிறர் மீது பாய்ச்சுவதற்கான சூட்டுக்கோலை அடுப்பில் பழுக்கக் காய்ச்சியும் வைத்திருக்கிறார்கள்.அலறல் சப்தம் அவர்களுக்கு இனிக்கிறது.இங்கே குழுவாதமும் சார்புகளும் தான் இலக்கியத்தில் காலகாலமாய்த் தொடர்ந்து வருகிற துன்பியல் உள்ளடக்கம்.

கலை எதையும் எதிர்க்கும்.கலையையும் என்ற வாதத்துக்கேற்ப இப்படியானவர்களையும் இதே வழியில் உருவாகக் கூடிய இன்னொரு மற்றொரு சில பல சிறுபத்திரிகைகள் தான் ஆட்சேபிப்பதிலிருந்து எதிராடுவது வரைக்கும் எல்லாம் செய்யும்.இதுவும் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது.

6 எல்லோரையும் எல்லாவற்றையும் பாராட்டுவது தான் உங்கள் இலக்கியத் தராசா..?இது சரியாக வருமா..?

ஒரு நிமிடம் இருங்கள்.தாராளமாக பரீட்சை வையுங்கள்.ஒரு பொது இடத்தில் பூட்டி வைத்து எப்படி யுனிவர்சிட்டி பரீட்சைகள் நடத்தப்படுகின்றனவோ அதே முறைமையில் வினாத் தாட்களைத் தந்து நேரம் கொடுத்து வெள்ளைத் தாட்களைப் பிடுங்கிச் சென்று திருத்தி மதிப்பெண் வழங்குங்கள்.அதன் அடிப்படையில் வெற்றிகரங்களையும் தோல்விகரங்களையும் அவதானியுங்கள்.வெற்றுத் தாட்களைத் தந்து விட்டு மந்திர எழுத்துக்கள் படி என்று சொல்கிற கோமாளிகளை என்ன செய்வீர்கள்..?எதுவுமே ஒத்து வராது என்பது சாக்காடல்ல.அது வடிவம்.அது தான் இங்கே அமைப்பு.இங்கே யார் வேண்டுமானாலும் எழுந்து என்ன வேண்டுமானாலும் பேசலாம்.சரியான உதாரணம் சொல்வதானால் நமது பாராளுமன்ற சட்டசபைகளின் ஒழுங்கற்ற தினம் ஒன்றின் கலவரக் காட்சியைக் கண்முன் கொண்டு வாருங்கள்.அங்கே அது விலக்கு.இங்கே அது தான் டிசைன்.இதில் யாரும் தப்பவே முடியாது.நான் என் கண்களைக் கொண்டு மலர்களை அவற்றின் மகரந்தத்தை அவற்றை மலரச்செய்கிற அற்புதத்தைக் கண்டுவிட முடியும் என்று நம்புகிறேன்.கண்டுகொண்டும் இருக்கிறேன்.

அற்பமாவது

அற்புதமாவது

கண்களனையது காட்சி

என்ற எனதொரு வரி நான் உணர்ந்து எழுதியது.இங்கே அறிவிக்க உதவியாயிருக்கிறது.

நான் எழுத வந்த தினம் முதற்கொண்டு தினமும் உன்னதங்களைத் தேடிக் கொண்டே இருக்கிறேன்.பாராட்டுவது வேறு அன்பாயிருப்பது வேறு.நான் பாராட்டுவதன் மூலமாக ஒருவரைச் சென்றடைவதை நம்பவில்லை.என்னை மிகவும் புரிந்துகொண்டவர்கள் என் வாழ்வில் பலகாலம் நீடிப்பவர்கள் என் கருத்துக்களோடு தொடர்ந்து முரண்பட்டு வருபவர்களாகவும் இருப்பது தற்செயலல்ல.,முரண்பாடுகளின் தொகுப்புத் தான் வாழ்தல்.உடன்பட்டவர்களோடு மட்டும் தான் வாழ்வேன் என்பது நம் வாழ்வை தியானக் கூடமாக மாற்றிவிடாதா..?வாழ்வென்பது பந்தயக் களமல்லவா..?

நான் வியக்கிறேன்.ரசிக்கிறேன்.இன்னமும் எனக்குள் உயிரோடு இருக்கும் வாசகன் என்ற மனிதனை நான் துன்புறுத்துவதில்லை.அவன் தான் அவ்வப்போது நானாகிறவன்.நான் என முழுவதுமாக ஒரு எழுத்தாளன் சாத்தியமே இல்லை அல்லவா..?அதனால் என் கண்கள் என் காட்சி இடையில் வராதீர்கள்.இது தொடர்படமாக்கல்.

7 எஸ்ரா ஜெமோ சாரு பற்றி

எஸ்.ராமகிருஷ்ணன் சாரு நிவேதிதா மற்றும் ஜெயமோகன் இந்த மூன்று பேருடைய எழுத்துக்களையும் நான் தொடர்ந்து வாசிக்கிறவன்.ஜெயமோகனுடைய எல்லா எழுத்துக்களையும் வாசிக்கலைன்னாலும் கூட அவருடைய ஏழாம் உலகம் பின் தொடரும் நிழலின் குரல் இரவு கன்னியாக்குமரி எல்லாம் மாஸ்டர்பீஸ்.தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர் ஜெயமோகன்.எஸ்.ரா எனக்கு இணக்கமான எழுத்தை எப்போதும் தர்றவர்.அவரோட எழுத்துக்கள் என்னை மற்றவங்களை விட அதிகமா பாதிக்குது.அவரோட கதைப்படுத்துதல் வளமிக்கது.சோர்ந்து விடாத எழுத்துநடை அவருடையது.

சாரு பற்றி ஒரு கட்டுரையே எழுதி இருக்கேன்.சாரு நிவேதிதா எனக்குப் ப்ரியமான மனிதர்.ஐ லவ் சாரு.என் வாழ்க்கையில் நான் நேசிக்கிற நேசிக்க விரும்புகிற மனிதர்களின் பட்டியல்ல சாருவோட பேர் இருக்கு.எப்பவும் இருக்கும்.அவர் என்னைப் பொருட்படுத்தியது நானோ அவரோ உருவாக்காம இயல்பா நடந்தது தான் என் வாழ்க்கையோட பெருமிதமே.சாரு திடீர்னு எங்கயாச்சும் கார்பரேட் கம்பெனி ஒன்றில் போய் ஆலோசகரா சேர்ந்திட்டாலும் நான் அவர் மேல் இதே ப்ரியத்தோடு இருப்பேன்.நாம் எல்லாரையும் தேடுகிறோமா என்ன...?சாரு என்றில்லை மேற்சொன்ன மூன்று ஆளுமைகளின் எழுத்தின் மீதும் எனக்கு விமர்சனங்களும் இருக்கு.எல்லார் மேலயுமே இருந்தாத் தான் அது விமர்சனம்.எதுவும் இல்லாவிட்டால் அது தொண்டு.இது இவங்களைப் பற்றிய பெரும்பான்மை மதிப்பீடு பற்றிய ஒத்து ஒழுகுதல் அல்ல.ஒரு தகர்க்க முடியாத விஷயம் இந்த மூன்று பேரோட எழுத்தோட அளவும் அவங்க அதில் அடஞ்ச தூரமும்.உயரம்னெல்லாம் கவித்துவமாப் பார்க்கிறதை விட்டுட்டு தூரம்னு சொன்னா ப்ராக்டிகலா ஒத்துக்க முடியும்னு சொல்றேன்.நெடிய தூரம் பெருங்காலம் இவ்விரண்டின் தொகை இல்லியா..?இது பாராட்டோ அங்கீகாரமோ இல்லை.உண்மை.அதை ஒத்துக்கிறது தான் ஒரே ஒரு விஷயம்.மறுக்கிறது தன் ப்ரபலத்துக்கான கூச்சல்.


8 மனுஷ்யபுத்திரனின் ஆளா நீங்கள்..?

.

எனக்கு முன்னால் இரண்டு மனுஷ்யபுத்திரன்கள் இருக்கிறார்கள்.டபுள் ஆக்சன் போல.ஒருவருடன் நான் உங்களைப் போலவே வாழ்ந்து கொண்டு வருகிறேன்.அவர் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு.                பதிப்பகம் சார்ந்து எனக்கு உயிர்மையில் என் புத்தகங்கள் வருவது சந்தோஷம்.உயிர்மை எனும் நிறுவனத்தில் எனக்கும் சின்னச்சின்ன பிரச்சினைகள் இருந்திட்டு தான் இருக்கு.இருக்கத் தான் செய்யும்.அதைப் பொதுவில் சொல்வதற்கோ நெருடுவதற்கோ எந்த நிர்ப்பந்தமும் இல்லை எனக்கு.உயிர்மை வேற மனுஷ்யபுத்திரன் வேற என்று பார்க்கவில்லை.அப்டி பார்க்க முடியாதுன்னு தெரியும்.ஆனால் எதாவது முரண்பாடு அல்லது கோபம் என்று வரும்போது எட்டு வருசத்துக்கு முன்னாடி நீ என்னைக் கிள்ளினியே என்று ஆரம்பிப்பது ஜல்லி
இன்னொரு மனுஷ்யபுத்திரன் எனக்குப் ப்ரியமான எழுத்தாளர்களின் வரிசையில் வருபவர்.என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் தொகுப்பை நான் சுஜாதாவின் சொல்வழியே அடைந்தேன்.நான் சுஜாதாவை மிகமிகமிக நேசிப்பவன்.சுஜாதா என்ற பேரில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அசட்டுத் தனமான ஆசையை எனக்குள் பலகாலம் வைத்திருந்தேன்.நான் ரசித்த எழுத்தாளுமைகளின் பட்டியல் மிகப்பெரியது.ஆனால் நான் நேசித்த மனிதர்களின் பட்டியல் மிகவும் குறுகலானது.இந்த உலகம் சொற்களைக் கொண்டு தான் அதிகக் குழப்பங்களைச் செய்து கொண்டே இருக்கிறது.நமக்கு மன்னிப்புக்கும் வருத்தத்துக்கும் வித்யாசம் தெரிவதே இல்லை.தாமதமாய் வந்ததற்கு மன்னிப்பு கேட்பதும் காலை மிதித்து விட்டு வருத்தம் தெரிவிப்பதும் இந்த நிலத்தின் அறிதலுக்குப் பின்னதான அறியாமை.
அப்படிப் பார்த்தால் ஆனந்த விகடன் ஆசிரியர் கண்ணன் அவர்களை ஒரே ஒரு முறை சந்தித்திருக்கிறேன்.அவரிடம் பேசி முடித்த போது ஒரு உறுதி கூறலாக கண்டிப்பாக ஸார் என்றேன்.ஏன் கண்டிப்பாக செய்யணும் ஆத்மார்த்தி நிச்சயமாக செய்யலாமே..போதுமே என்றார்.அன்றைக்கு கடந்து வந்து விட்டாலும் கூட சொற்களின் சொக்கட்டான் எனக்குள் துவங்கியது.பிற்பாடுகளில் சொல்லாடல் என்ற ஒரு பெரும் தொடராக எனக்குள் விரிந்தது.சொற்களின் மூலமாக மொழியை அவதானிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அந்த ஒரு சந்திப்பும் அந்த ஒரு சொல்லும் மாறிற்று.

சுஜாதா என்ற ஒருவர் இல்லாமற் போயிருந்தாலும் நான் இலக்கியத்தின் சகல மனிதர்களையும் அடைந்திருப்பேன் என்றாலும் எனக்கான அனுபவம் அவர் பெயரைத் தவிர்க்க முடியாமல் விரிவது தான்.ஆத்மாநாம் கலாப்ரியா  கல்யாண்ஜி மனுஷ்யபுத்திரன் விக்கிரமாதித்யன் பசுவய்யா ரவி சுப்ரமணியன் சண்முக சுப்பையா சி,மணி என்று ஆரம்பித்து வைத்தவர் சுஜாதா தான்.அவர் காட்டிய வெளிச்சம் எனக்குள் இன்னமும் மீதமிருக்கிறது என்பது நிஜம்.எதையும் மாற்றிப் பேசுவதற்கு உரிமையற்றதன் பேர் தான் உண்மை என்பது.நான் மனுஷ்யபுத்திரனின் ஆளாகத் தோற்றமளிப்பது குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது..?
மனுஷ்யபுத்திரனுக்காக நான் வக்காலத்து வாங்க வேண்டிய இடத்தில் அந்தத் தேவையில் அவர் இல்லவே இல்லை.மேலும் தன் செல்ஃபியில் தனக்குத் தெரியாமல் இடம்பெறுகிற பேயுரு ஒன்றைப் போலத் திகிலுடன் தான் என்னை அவர் பல சமயங்களில் அணுக நேர்கிறது.உண்மை இவ்வாறு இருக்க அவர் மீதான ஒரு உப எரிச்சலாகவே நீ மனுஷ் ஆளு என்னும் சொல்லாடலும் எழுகிறது.சொல்லிப் போகட்டுமே.எதையும் மறுப்பதற்கில்லை.நான் எத்தனை தான் என்னைப் பொதுவாகக் காட்டிக் கொள்ள முயன்றாலும் அது அபத்தமாகத் தான் போகும்.அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் உயிர்மையின் ஆளாகவும் மனுஷ்யபுத்திரனின் ஆளாகவும் தொடர்ந்து பார்க்கப் படுவதை ரசிக்கிறேன்.

9 மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் குறித்து

பொதுவாக ஒரு விசயம் சொல்கிறேன்.நேற்று முன் தினம் எழுதப்பட்ட கவிதை அது யார் எழுதினாலும் சரி நான் விரும்புவேன்.மனுஷ்யபுத்திரனை வெறுப்பதற்கு ஆயிரம் வாசல்கள் இருக்கும் பட்சத்தில் அதற்கு அவருடைய கவிதையை தேர்ந்தெடுப்பதைத் தான் நான் ஆட்சேபிக்கிறேன்.டிட்ஜிட் ஸ்பின்னர் பற்றிய கவிதையாகட்டும்  பிக்பாஸ் கவிதையாகட்டும் அவர் மீதான பற்றுதலை அதிகரித்துத் தராவிட்டால் அது அவரவர் பிரச்சினை.எல்லோருக்காகவும் எழுதிப் போகிற ஒரு கவிஞனுக்கு அதுவும் அவனுடைய ஒரு கவிதைக்கு மாற்றாக வெறுப்பையா பரிசளிப்பது..?சொல்மலர்கள் கூடவா இல்லை..?இது நோய்மை.

10 சிறுகதை கவிதை நாவல் இவற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்..?என்ன நடந்துகொண்டிருக்கிறது இவற்றில்..?

விடாமல் சிறுகதையை வாழ வைத்துக் கொண்டிருப்பது ஆனந்தவிகடன் மற்றும் விகடன் தடம் மாத்திரமே.அவர்கள் மாத்திரம் இல்லாமற் போயிருந்தால் என்னவாயிருக்கும் என எண்ண முடியாத ஒரு இருள் சூழ்ந்திருக்கிறது.சிறுபத்திரிகைகள் சிறுகதைகளுக்கான பெரும்பரப்பை முன்வைத்தபடி நகர்ந்தாலும் சிறுபத்திரிகைகளின் அரசியல் பெரும்பாலும் கட்டுரைகள் அல்லது கவிதை பின்னர் தான் சிறுகதைக்கான நேரடி வாய்த்தல்கள் நிகழ்வது வடிவம் சார்ந்த பிரச்சினை.ஒரு நாவல் வெளிவரும் வரை ரகசியமாகவே இருக்கிறது சிறுகதைத் தொகுதியைப் பொறுத்தவரை வந்த கதைகளும் வராத கதைகளுமாய் திரட்டி அடுக்கப் படுகின்றன.

சிறுகதை என்பது இடையே ஒரு நூற்றாண்டு கோலோச்சியது உண்மை தான்.என்றாலும் கவிதை இரண்டாயிரமாண்டுகளாகத் தனக்கிருந்த இடத்தை இடையில் பறிகொடுத்திருந்தாலும் கூட மடைமாறிய பெருவெள்ளமாய்த் தற்போது மீவுருக் கொண்டு விரைந்தோடுகிறது.கவிதை தான் புதிய உலகங்களுக்கான பாய்ச்சலை நிகழ்த்த முடியும் என்பது பொருட்படுத்த வேண்டிய ஒரு கருத்துத் தான்.
சிறுகதைளில் பலரும் உருவாகி வந்துகொண்டிருக்கிறார்கள்.தமயந்தியின் சமீபத்திய தொகுப்பான கொன்றோம் அரசியை சிலாகிக்க வேண்டிய ஒரு படைப்பு.தமயந்தியின் மொழி அபாயமிக்க அதிர்வுகளை தன் போக்கில் ஊட்டிச் செல்கிறது.இன்னும் சொல்வதற்குப் பலரும் இருக்கிறார்கள்.சிறுகதையின் கதை மிகப்பெரியது.

நாவல்கள் கதையற்ற கதைகளைக் கொண்டு உருவாக்கப் படுகின்றன.பல முரண்துண்டுகளின் ஒட்டவைக்கப் பட்ட கொலாஜ் சித்திரத்தின் வடிவமாய் நாவல் உள்ளுக்குள் பருத்தும் வெடித்தும் இருக்கிறது.முடிவடைந்த காலம் மீதான ஏக்கம் என்பதன் இலக்கிய அந்தஸ்து எப்போதைக்குமானது.இனி அவற்றுள் நாவல் தொலைத்திருக்கும் முந்தைய அதன் வடிவமும் சேர்ந்து விடக் கூடும்.
தமிழின் சமீபத்திய நாவல்களில் சீனிவாசன் நடராஜனின் விடம்பனம் மற்றும் சரவணன் சந்திரனின் ஐந்து முதலைகளின் கதை ஆகியவற்றைச் சொல்ல விருப்பம்.விநாயக முருகனின் ராஜீவ்காந்திசாலை கொடுத்த குளிர்ச்சியை அவரது வலம் தரவில்லை.அரவிந்தனின் பொன்னகரம் பற்றி யாரும் பெரிதாய்ப் பேசவில்லை என்பது எனக்கு வருத்தம்.முக்கியமான நாவல் மாத்திரமல்ல தன்னளவில் நேர்மையான அறிதல்-அறியாமையைத் தக்கவைத்துக் கொண்ட பிரதி என்ற அளவிலும் அதனைச் சொல்ல முற்படுவேன்.பாகீரதியின் மதியம் குறித்துப் பேச நிறைய உண்டு என்றாலும் பா.வெங்கடேசனுடைய மொழிப்பொழிவில் சின்னதொரு ஒவ்வாமையும் எனக்கு நேர்ந்ததென்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.நான் மதுரை எனும் நிலத்தைச் சார்ந்தவன் என்பதால் பா.வெங்கடேசனுடைய மதுரை சார்ந்த சாட்சியங்களை பரவசத்தோடு அணுக முடிகிறது.லட்சுமி சரவணக்குமாரின் உப்பு நாய்கள் மற்றும் நீலப்படம் இரண்டுமே நாவல்களின் சேகரத்தில் முக்கியமானவை.அவரது காட்சிப்படுத்துதல்களும் பாத்திரங்களின் தன்மையில் பெருக்கெடுக்கும் முரண்பட்ட அலட்சியமும் சிறப்பானவை என நம்புகிறேன்.
கவிதைகள் குறித்த என் பார்வைகளை எனது தீராக்கடல் நூலில் விளக்கமாகவே முன் வைத்திருப்பதாக நம்புகிறேன்.என் கவிதை ரசனை நெடிய பட்டியலைக் கொண்டது.கவிதைகளைப் பொறுத்தவரை சமீபத்தில் எழுதப்படுகிற பல கவிதைகள் எளிதில் புறந்தள்ளி விட முடியாததாக இருப்பது தற்செயலல்ல.

சமீபத்தில் நான் வாசித்த தொகுப்புகளில் தேவேந்திரபூபதியின் வாரணாசி தொகுதி என்னை மிகவும் கவர்ந்தது.பழனிவேளின் கஞ்சா மற்றும் நரனின் லாகிரி ஆகியவையும் ரசித்த கவிதைத் தொகுதிகள்.தேவதச்சனின் மர்ம நபர் அலுக்காத கவிதைகளினூடான ஒரு சஞ்சாரம் என்பேன்.

11 பலரும் பல ஆண்டுகளாக ஒரு கவிதை அல்லது ஒரு கதை  கூட எழுதாமல் இருக்கிறார்களே..இத்தனை நெடிய காத்திருத்தல் தகுந்ததா..?

ஒருவரை எழுது என்றோ எழுதாதே என்றோ நிர்ப்பந்திக்கக் கூடாது.தனக்குள் கனிவது தான் எழுத்து.நிச்சயமாக ஒருவனால் எழுதப்பட வேண்டிய ஒரு சொல்லைக் கூடத் தன் அந்தரங்கத்துக்குள் ஒளித்து வைக்கவே முடியாது.பெருவெடிப்புக்கு முந்தைய மௌனம் அர்த்தபூர்வமானது என்பதில் மாற்றுக் கருத்தேது..?தன்னைக் கீறி வெளியேறுவதென்பது கவிதையின் முறை.அது நிகழ வேண்டும்.யாராலும் நிர்ப்பந்திக்க முடியாது.அப்படி மௌனித்திருப்பவர்கள் பலர் மீதும் எனக்குப் பெரும் மரியாதையும் வியப்பும் காத்திருத்தலும் உண்டு.கோணங்கி தொடங்கி செல்மா ப்ர்யதர்ஸன் வரைக்கும் என்னை பெரிதும் வாசிக்கத் தூண்டுகிற எழுத்துக்குச் சொந்தக்காரர்களின் பட்டியல் நெடியது.செல்மா ப்ரியதர்சன் எழுதிய தெய்வத்தைப் புசித்தல் தொகுப்பு ப்ரியமான ஒரு திரைப்படத்தைப் போல அடிக்கடி அதனுள் நுழைவதும் திரும்புவதுமான ஒரு பழகிய ஆட்ட நகர்தலைப் போல என் வாழ்வில் மிக முக்கியமானது.கோணங்கியின் சொற்களால் செய்யப்பட்டவன் தான் நான் என்று நம்புகிறேன்.இன்னும் இணக்கமாய்ச் சொல்வதானால் கோணங்கியின் புனைவுகளுக்காகவும் செல்மாவின் கவித்துவச் சித்திரங்களுக்காகவும் எப்போதும் காத்திருக்கிறேன்.நான் தொலைக்க விரும்பாத புத்தகங்களை எழுதிய வகையில் இவர்களை சிலாகிக்கிறேன்.

12 விருதுகள் குறித்து தங்களது நிலைப்பாடு என்ன..?

தருகிறார்கள் பெறுகிறார்கள் என்ற இரண்டு சொற்கள் தவிர விருதுகளின் பால் சொல்வதற்கு இன்னுமொரு சொல் இருந்தால் கூட அது ஊழல் என நம்புகிறேன்.விருதுகள் என்பது ரேஷன் கார்டோ ஆதார் கார்டோ அல்ல.வயதைக் காரணம் வைத்து விருது வழங்குவது போன்ற யுவ அபத்தங்கள் இந்த மண்ணில் தான் நடக்கும்.தற்போது எழுதுபவர்களில் 33 வயதாகும் பலருக்கும் இன்னும் இரண்டே வருடங்களுக்குள் வழங்கப் பட்டால் தான் யுவ புரஸ்கார்.இல்லாவிட்டால் வயோதிகபுரஸ்காருக்கான அடுத்த க்யூவில் சென்று நிற்க வேண்டியது தான்.என்ன நான்சென்ஸ் இது..?நான் எழுத ஆரம்பித்தது என் 34 ஆம் வயதில்.இன்னும் சிலர் 35 இல் தான் ஏதோ ஞானக்குளி முடித்துத் தொடங்கவே செய்கிறார்கள்.பாவம்.

13 கேஎன்.செந்தில் நேர்காணல் குறித்து..உங்களது நேர்காணல் ஒன்றில் ஏற்கனவே உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் பட்டியலில் கேஎன்செந்திலின் எழுத்துகள் பிடிக்கும் என சொல்லி இருந்தீர்கள்.

முதலில் என்னைப் பொருட்படுத்திய செந்திலுக்கு நான் நியாயமான நன்றி ஒன்றைச் சொல்ல வேண்டும்.கே.என்.செந்திலின் கதைகள் பதற்றமான நியாயம் கேட்டல்கள்.சென்சேஷனல் க்ளெய்ம்ஸ் என்பதைத் தாண்டி முழுவதுமாக பொருத்தமற்ற நிலம் மற்றும் மனிதர்களோட செயற்கைத் தனம் தொனிக்கக் கூடிய யதார்த்தமற்ற விறுவிறுப்புக் கதைகள் தான் செந்திலின் கதை உலகம்.இதை நான் நிராகரிப்பாக குற்றம் சாட்டலா சொல்லலை.சில பேருக்கு சண்டைக் காட்சிகள் நிரம்பிய படங்கள் பிடிக்கும்.சிலருக்குப் பேய்ப்படங்கள் பிடிக்கும் இல்லையா..?அப்படி செந்திலோட புனைவு உலகம் ஒரு ஃபோட்டோவை எடுத்த பிற்பாடு கணிப்பொறியில் நிறமேற்றப் பட்ட புகைப்படம் ஒன்றைப் போன்ற பிரதிபலிப்புகள் தான்.இன்னும் அவர் சிறுகதை வடிவத்தைத் தாண்டி நாவல் எனும் வடிவத்துக்குள் வரலாமா வேண்டாமா என்று ஊசலாட்டத்தில் நெடுஞ்சிறுகதைகளை எழுதிக் கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.அவர் நாவல் எழுதட்டும்.வர்லாம் வர்லாம் வா என்று அவருக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகளைத் தெரியப்படுத்துகிறேன்.

மற்றபடிக்கு அவர் நேர்காணல் முற்றிலும் வாசகசாலை என்ற அமைப்பின் ஏற்கனவே இறந்துபோன ஒரு இணையதளம் தன்னைப் பிரபலப் படுத்திக் கொள்ள முன் எடுக்கக் கூடிய மலினமான தந்திரங்களில் ஒன்று.தொடர்ந்து திட்டமிட்டுக் கலவரங்களை உண்டு பண்ணுவது அவர்களின் பாணி.அவர்கள் சரமாறியாகக் கையிலெடுக்கக் கூடிய கற்களில் ஒன்று இந்தப் பேட்டியின் முதல் கேள்வி.அதைத் தவிர்த்த பேட்டி அழகானது மாத்திரமல்ல.ஆழமானதும் கூட.அந்தப் பேட்டியின் முதற்கேள்வியைப் பார்க்கையும் மாப்பிள்ள அவருதான்.சட்டை என்னுது என்றாற்போன்ற முன்பின் செருகல்களை உணரமுடியுது.இது செந்தில் வேண்டி விரும்பி நடந்ததா அல்லது அப்படியே உல்டாவா எனத் தெரியலை.எப்படி இருந்தா என்ன..?

ஃபேக் அமைப்புகள் ஒரு சார்புக் குழுக்கள் மெல்ல இலக்கியத்தோட அதாரிடியா முன் வர முயல்வது தான்.இதற்கு மேலும் சொல்ல என்ன இருக்குன்னா இப்படியான தந்திரக் கூட்டங்கள் தனக்குள்ளாகவே பிளந்து அழியும்.வெடிகுண்டு செய்து கொண்டிருக்கும் போது சிதறிப் பலியாகிறவர்களைப் பற்றி ஆங்காங்கே படிப்போமல்லவா அப்படி எடுத்துக் கொள்ளலாம்.

எனக்கு கே.என் செந்தில் மேல் வருத்தமோ கோபமோ கொஞ்சமும் கிடையாது.அவர் என் மீது என் எழுத்துகள் மீது வைத்த விமர்சனங்கள் ஒரு ரெண்டு வரி இருக்குமா..?சாலைகளும் சோலைகளும் வரும் போகும்.இலக்கியத்தில் செந்தில் போன்றவர்களின் நிராகரிப்புக்கும் ஒரு இடமுண்டு என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.விமர்சனம் என்பதன் பின்னே இருக்கக் கூடிய ரெசிப்பி அதாவது தயாரிப்பு முறை தான் கண்டனத்துக்குரியது.
அப்படியான சார்புக்குழுக்களின் தந்திரங்கள் பின்வழியில் ஒரு நாடகத்தை ஓஸீயில் பார்ப்பதைப் போன்ற மலின சுகத்தை வேண்டுமானால் தரலாம்.நீடிக்கவோ நிரந்தரிக்கவோ எதுவுமற்ற கூட்டத்தின் வக்கிரம்.ஏப்ரல் ஒன்றாம் தேதி எனவே ஏமாற்றுவதற்காக செய்தேன் என்ற சாக்கில் மலத்தை அலங்கரித்துப் பொட்டலம் கட்டுவதற்கு ஒப்பானது.

Last Updated (Tuesday, 13 February 2018 19:11)