புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

2 நிழலின் திசை வழி

எழுதிச் செல்லும் கரங்கள்

2 நிழலின் திசை வழி


புத்தகம் வாசித்தல் இன்னமும் கண்டனத்திற்குரியதாக பல வீடுகளில் பார்க்கப்படுவது நம்பக் கனமான நிஜம்.சென்ற காலத்தில் ஏன் பேசமாட்டே அதையும் இதையும் படிக்கிறே இல்லே என்கிற கண்டனம் உரத்த சப்தத்தோடு ஒலித்திருக்கிறது.புத்தகங்களின் பிரதிகளில் பெருவாரி நூலகங்களில் மட்டுமாவது கிடைக்கிற பண்டமாக ஒரு பெரியகாலம் நீந்தி வந்தது.பின்னதான கரையில் வீடுகளுக்குள் புத்தகங்களுக்கான இடம் உருவானது.உலகைச் சுற்றி இன்னமும் அறியப்படாமல் எஞ்சுகிற வினோதங்களுக்குச் சற்றும் குறைந்ததில்லை புத்தகங்களைச் சுற்றிப் பின்னியிருக்கிற விநோதங்கள்.

தான் படிக்கிற புத்தகத்தைத் தனதாக்கிக் கொள்ள மனசுக்குப் பிடித்த வாக்கியங்களை ஆங்காங்கே கோடு போட்டு வைக்கிற ஒருவரை எனக்குத் தெரியும்.தினமும் நாம் கிழித்தெறிகிற காலண்டரில் இடம்பெறுகிற பொன்மொழிகளில் எத்தனை நம் ஞாபகத்தில் நீடிக்கிறது..?இதன் அடியொற்றிப் போனால் பொன்மொழி என்பதே ஒரு கண நேரத் தெறல் புண்ணியத் தலங்களில் கோயிலுக்குச் செல்லும் முன் குளத்தில் கால் கழுவுகிற சம்பிரதாயத்தைப் பூர்த்தி செய்வதற்குள் நம் காலைக் கடித்துத் தன் போக்கில் திரும்பியும் விடுகிற மீனுக்கும் நமக்குமான பந்தம் போன்றவை நம் வாழ்வில் கடக்க நேர்கிற பொன்மொழிகள்.எல்லோருக்குமே எல்லாமுமே என்பதல்ல,ஞாபகத்தில் சதா ஆர்ப்பரிக்கிற கனவில் தன்னிஷ்டத்துக்கு வந்து திரும்புகிற பெரும் பிடிவாத மீன்களும் உண்டென்பது அறிக.

என் வாழ்வின் ஆதர்ஸப் பொன்மொழி எது என ஏடெடுத்துப் பார்த்தால் கிட்டுவது  BURN YOUR BRIDGES புத்தகங்களுக்குப் பின்னால் உலவக் கூடிய உளவியல் சுவாரஸ்யமானது.தான் படிக்காத புத்தகம் ஒன்றை படித்ததாக பாவனை செய்வது தான் உலகின் அறிவார்ந்த அவஸ்தை எனலாமல்லவா?சற்றே பின் நோக்கினால் தேர்வுக்கூடத்தில் கண்காணிப்பாளர் அங்கும் இங்கும் உலாத்துவார்.எல்லாக் கேள்விகளுக்கும் விடை தெரிந்தாற் போலவே தன் உடல்மொழியை அமைத்துக் கொள்ளும் சிலரை நம்மில் பலரும் கண்டிருப்போம்.முகமெங்கும் பென்ஸிலால் தட்டிக் கொள்வதும் தலையில் கொட்டிக் கொள்வதும் சதா இல்லா மந்திரங்களை உச்சரித்தவண்ணம் வர மறுக்கும் விடைச்சொற்களுக்காகக் கடும் பிரயத்தனத்தை முகமெலாம் தேக்குவதும் சட்டென்று எதோ ஒரு சதுக்கபூதம் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தாற் போன்ற திருப்தியுடன் தலையைக் கவிழ்த்தி விட்ட இடத்திலிருந்து மறுபடி எழுதத் துடிப்பதும் ஆக ஒரு பொய்யைத் தன்னிலிருந்து அகழ்த்தி யாருமற்ற வெளியில் படர்த்தி அதன் நிழலைத் தானும் மெய்யென்று நம்பத் தலைப்படுகிற பதின்பருவத்தின் ஆகச்சிறந்த பாவனை அது.ஒருமுறையாவது வாழ்வில் இப்படி வாசிக்காத புத்தகத்தை படித்துவிட்டதாய்க் காட்டிக்கொண்டவன் பிடிபடாது போனாலுங்கூட மறுபடி அந்தப் பொய்யின் திசைவழி தலை வைத்துப் படுக்க மாட்டான்.அதையும் மீறிச் சிலர் தொடருவார்களேயானால் அது அரிதிலும் அரிது தான்.

இதை விடக் கொடுமை நுனிப் புல் மேய்வது.இவர்களை எளிதில் கண்டறியலாம்.கல்கியோட பொன்னியின் செல்வன்ல என்றாலும் சரி அன்னா கரீனினாவுல என்றாலும் சரி முதலில் தனக்கும் தெரிந்ததைக் கொண்டு சமாளித்துப் பார்க்கும் இத்தகையோர் கொஞ்ச நேரத்தில் வராத பஸ்ஸூக்காக ஓடிப் பறப்பார்கள்.தனது நூலகத்தின் அத்தனைப் புத்தகங்களையும் படித்து முடிப்பதென்பது கடவுளுக்கே அசாத்தியம்.அப்படி இருக்கையில் எதற்குப் பொய்யை அணியவேண்டும் உண்மை தெரியவேண்டும்.?

அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்கள் ஒருவனது மனதின் முகவரியாகவே பார்க்கப்படுவது உலகம் பற்றி வைத்திருக்கிற வழமைகளில் ஒன்று.அலமாரியின் ஒரு தட்டையாவது புத்தகங்களுக்காக ஒதுக்கி வைத்திருப்பவர்கள் அவர்தம் வாழ்விடத்துக்கு வந்துசெல்கிற யாருடைய மனதிலும் மிக மெல்லிய உயரமொன்றில் ஏற்றி வைக்கப்படுகிறார்கள்.ஒரு மனிதன் வாங்குகிற பரிசளிக்கிற பரிந்துரைக்கிற வெறுக்கிற தொலைக்கிற தேடுகிற காத்திருக்கிற பரிதவிக்கிற அத்தனையுமாக புத்தகம் எனும் வஸ்துவுக்குப் பிற்பாடு தான் காதல் என்பது கூட வரிசையில் வரும்.நான் சொல்லவில்லை.சரித்திரத்தின் உட்பொருள்.

நல்ல உயர்ந்த தோலினால் ஆன cover மேலதிக அட்டையை நாலைந்து சைஸ்களில் செய்து வைத்திருப்பார் நண்பர் ஒருவர்.அதாவது இந்த உயிர்மை சைஸ் மற்றும் பழைய கல்கி சைஸ் பழைய கணையாழி சைஸ் என.மிக நெருங்கிய சிலர் தவிர வேறு யாருக்கும் தன் புத்தகங்களை இரவல் தராத அவர் அப்படித் தர நேர்கையில் தன் புத்தகங்களுக்கு லெதராடை அணிவிக்கத் தான் மேற்படி கவர்கள்.மீசையைப் பார்த்ததுமே காவல் அதிகாரி மீது ஒரு பயம் உருவாகும் அல்லவா..?அதைப் போல நம் கையில் தரும் போதே அதனை அவர்வசம் திருப்பும் வரையிலான பொறுப்பை உணர்த்தி விடும் அந்த மேற்தோல்.தன்னிடம் இருக்கும் பல்லாயிரம் புத்தகங்களை எண்ணிட்டு ஏட்டிலுமிட்டு பராமரிப்பது ஒரு கலை.சிறுவயதிலிருந்தே அதனைப் பின்பற்றி வருபவன் என்பதால் எனக்கு அதன் வலி தெரியும்.

உறவுக்காரர்களில் ஒருவர் புத்தகத்தை வாங்கிச் செல்லும் நண்பர்களின் முழுமுகவரியை நோட்டு ஒன்றில் எழுதிக் கொள்வார்.சைடில் என்னென்ன புத்தகங்கள் எனவும் பதிவார்.சொன்ன நேரத்தில் திரும்பத் தரா விட்டால் அவர் எடுக்கிற நடவடிக்கையே அலாதி.ஐயன்மீர் இப்பவும் தாங்கள் என்னிடம் கடனாகப் பெற்ற தொகை ரூபாய் டேஷ்டேஷ் ஐ இன்னும் ஒரு வார காலத்திற்குள் என்னிடம் திருப்பித் தந்து கடனை முடித்துக் கொள்ள வேண்டியது.தவறினால் மேற்சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.கனஜோராக FOR SEAL எல்லாம் வைத்துக் கையொப்பமிட்டு ஒரு அஞ்சலட்டையை வீட்டு முகவரிக்கு அனுப்பிவைப்பார்.இதனைப் பார்த்ததும் அலறிக் கொண்டு புத்தகத்தைத் திருப்புவார்கள்.இனி உன் சங்காத்தமே வாணாம் என்று துண்டித்துக் கொண்டவர்களும் உண்டு.இதையும் தாண்டிப் புனிதமானவர்கள் இல்லாமலா இருப்பர்..? எல்லாவற்றுக்கும் ஈடு கொடுத்துத் தன் புத்தகங்களை மீட்கும் சுந்தரபாண்டியனாகவே அவர் இருந்தார்.

தன் பல படைப்புக்களில் புத்தகத்தை ஒரு பாத்திரமாகவே ஆக்கியவர் சுஜாதா.நிர்வாண நகரத்தில் நாயகன் சிவராஜ் ப்ளாட்ஃபாரக் கடையில் அன்றோடு பறிபோன தனது சமீபத்திய தாற்காலிக வேலையின் சம்பளம் மொத்தத்தையும் புத்தகங்களாக வாங்குவதாய் அழகாகக் காட்சிப் படுத்துவார்."அவன் புத்தகங்கள் அவனது மூளையின் கதம்பத்தைப் பிரதிபலித்தன" என்கிற சொல்லாடல் சாட்சியநீட்சி.மேலும் ஒரு குற்றம் நாவலில் வில்லபாத்திரர் வாசிக்கிற புத்தகங்கள் கணேஷையும் நம்மையும் ஒருங்கே அயர்த்தும்.எல்டொராடோ சிறுகதையில் பரத்தின் அப்பா தன்னை அழைத்துப் போய்விடும்படி வேண்டுகோள் வைப்பார்.சரிப்பா என்றதும் எனக்கு சில புஸ்தகங்கள் வாசிச்சுக் காமிப்பியா எனக் கேட்பார்.கனவுத் தொழிற்சாலையில் அந்தஸ்து உயர்த்தப்பட்ட நட்சத்திர வாழ்வின் ஒளிப்புகழுக்கு எதிர்சீராக மத்யம வாழ்வின் பெரிய இழத்தலாகவே வாசிக்கமுடியாமற் போன புத்தகங்களை எண்ணி நாயகபாத்திரம் மருகும்.மேகத்தைத் துரத்தினவன் கதையில் மையப்பாத்திரம் அன்பழகன் ஒரு உறவிலி.கல்விக்கூடம் மறுக்கப்பட்டபோதிலும் வாழ்வின் கசப்பிருளை பாரதியார் கவிதைகளை மீண்டும்மீண்டும் வாசித்துக் கடப்பவனாகத் தோன்றச் செய்திருப்பார்.என் இனிய இயந்திரா ஜீனோ முணுக்கென்றால் புத்தகம் படிக்கும்.தன் பல கதைகளில் படர்க்கை மனிதர்களை பத்திரிக்கைகளில் இருந்து தேவைத்தாட்களைப் பிரித்தெடுத்து பைண்ட் செய்து சொந்த புத்தகங்களை உண்டுபண்ணும் தமிழ்சமூகத்தின் ஒரு பெருங்காலப் பழக்கத்தை பகடி செய்து எள்ளுவதை தொடர்செயல்பாடெனவே வைத்திருந்தார் சுஜாதா.அந்த ஒன்றை மட்டும் இன்றளவும் என்னால் கடைபிடிக்க முடியவில்லை.இதழ்களாய் மொத்தமொத்தமாய்ப் புத்தகங்களைப் பராமரிக்க இடம் அறுகையில் என்னதான் செய்வதாம் வாத்தியாரே..?சுஜாதா தன் படைப்புகளின் வழி சுட்டிச் சென்ற புத்தகங்கள் எனக்குள் ஒரு சுவாரசிய அத்யந்தத்தை நிகழ்த்தித் தந்தன.மேலும் அவற்றின் அடியொற்றி நானாய்ச் சென்று சேர்ந்த காகிதவனம் மேலதிக செல்வசேகரம்.

என்னிடமிருப்பதிலேயே மிகப்பழைய புத்தகம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.இந்த உலகின் முதல் அச்சுப்புத்தகம் என்னிடம் வந்து சேரும் வரை மாறுதல் நியமம் தொடர்ந்தாக வேண்டுமல்லவா?என் அம்மா தன் 14ஆம் வயதில் வகுப்பில் முதல்வளாக வந்ததற்காக பரிசளிக்கப்பட்ட KING LEAR புத்தகம் அவ்வப்போது காண நேர்கையில் எல்லாம் அவரது ஒன்பதாம் வகுப்பின் அதே கண்களைத் திறந்து தருகிறது.வேறொரு யாரென்றே அறியாத மரியமார்கரெட் என்னும் 6ஆம் வகுப்பு மாணவிக்கு பேச்சுப் போட்டியில் முதல் பரிசாக ஒரு புத்தகம் வழங்கப்பட்டது  1907இல்.அதன் இரண்டாம் பதிப்பு அது.முதற்பதிப்போ 1903இல் வந்ததாம்.அந்த மரியமார்கரெட் இன்றிருந்தால் 122 வயது.110 வயதாகும் அந்தப் புத்தகம் இன்றுமிருக்கிறது என் வசம்.யாரும் அவரிடம் சொல்லிவிடாதீர்கள்.

சந்திக்க வரும்போதெல்லாம்
மதுமிதா பரிசளிப்பது
கறுங் கிளிகளைத் தான்

எத்தனை முறைதான்
கழுத்தைத் திருகிப் போடுவான்
பச்சைநிறக் காப்பகத்தில்
பொழுதோட்டுபவன்


காலத்தச்சன் எழுதிய இந்தக் கவிதை மலைகள் வெளியீடாக 2014இல் வெளியான அழகான ஆறு என்றான் சித்தார்த்தன் எனும் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.நமக்குத் தெரிந்த உலகத்தை எத்தனை அழகாகத் தன் சொற்கள் கொண்டு கலங்கச் செய்து விடுகிறது இந்தக் கவிதை?சுருக்கமான அதே நேரத்தில் பலகாலம் அதிரவல்லது.ஒரு அழகான கவிதைக்கான லட்சணம் இந்தக் கவிதை.

முத்தங்கள்
எனக்குப் பிடித்த மொழி.
அவர்களுக்கு நெற்றியிலும்
இவர்களுக்குக் கைகளிலும்
குழந்தைகளுக்குக் கன்னத்திலும்
நண்பனுக்குக் கண்களிலும்
இறைச்சியற்ற முத்தங்கள்


ஒரு நெடிய கவிதையை எழுதிச் செல்லும் கரங்கள் தன்னையறியாமல் கவிதைக்குள் கவிதையொன்றைச் செருகி வைத்தபடி செல்லும்.பெற்ற குழந்தையை அலங்கரிப்பவள் சன்னமலர் ஒன்றை இயல்பாகக் கேசம்பற்றிக்கு நடுவாகச் செருகிப் பார்ப்பாளல்லவா.அதைப் போன்றதே கவிதையால் நெகிழ்ந்து நெகிழ்த்துகிற மனதின் உபகவிதைகளைக் கண்டடைதலும் நிகழும்.தேன்மொழி சதாசிவம்  தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்த நெடுங்கவிதைக்குள் ஒளிந்திருந்தது தான் மேற்காணும் கவிதை.இதன் பூர்த்தியில் வருகிற இறைச்சியற்ற முத்தங்கள் எனும் சொல் ஒரு தேவசெய்தியைப் போலப் பல தடவை மனதுள் ஒலிக்கிறது.தேன்மொழி சதாசிவம் இதுவரை தொகுப்பு ஏதும் வெளியிட்டிருக்கவில்லை என அறிகிறேன்.சுயநடுக்கமற்ற சாட்சியங்களை மனதின் தனித்த அலைதல்களை மற்றும் சொல்ல முடியாத பேரன்பின் விம்மல்களை காத்திருத்தலின் வதங்குதலைத் தொடர்ந்து சாட்சியப்படுத்தி வருகிற கவிதைகள் தேன்மொழி சதாசிவத்தினுடையது.


எதையாவது பெயர்த்து வரச்சொல்லி அனுப்பப் படுகிற அம்பு நுனியல்ல கவிதை.மாறாக எப்போதெனத் தெரியாத கோபமுற்ற யானையின் பாதக் கனம்.இந்த நுட்பத்தை எழுதியெழுதிக் கைக்கொள்வது கவிதை நிகழ்த்துகிற ஆச்சர்யம்.கவிதை பற்றிய ஆருடங்களை நகைத்தவாறே தான் நாளும் புத்தம் புதிய கவிதைகள் உருவாகின்றன.இன்னும் ஒரு வாக்கியம் சொல்வதானால் தன்னுள் கவிதை என்ற ஒன்று இல்லாத மொழிகளும் இந்த உலகத்தில் இருக்கத் தானே செய்கிறது..? மொழியிலூற்றெடுக்கும் கவிதை நம் செல்வந்தம்.

ரொம்ம்பக் கவிதை மட்டும் பேசினால் கடுக்கும்.  https://www.facebook.com/ganesh.bala.714 இந்த முகமனைக்குச் சொந்தக்காரர் கணேஷ்பாலா.எண்பது ஆண்டுகால தமிழ்ப் பத்திரிகை உலகின் ஞாபகங்களைத் தன்னாலான அளவு தன் முகப்புத்தகத்தில் பகிர்ந்து வருகிறார்.வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற தலைப்பில் அந்தக் காலத்தின் ஜோக்குகளை அதே பழைய படங்களோடு பகிர்கிறார்.அடிப்படையில் நகைச்சுவையான எழுத்துத் திறனும் சிறப்பான வரைகலை நுட்பமும் கொண்டவர் சரிதாயணம் 1 சரிதாயணம் 2 என சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.சுற்றத்தைச் சிரிக்கவைத்து நெகிழ்த்துகிற கணெஷ்பாலா.தொடரப்பட வேண்டியவர்.

தொடரலாம்
அன்போடு
ஆத்மார்த்தி

Last Updated (Wednesday, 04 October 2017 12:57)