புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

1 பழைய புத்தகங்கள்

எழுதிச் செல்லும் கரங்கள் 1

பழைய புத்தகங்கள்

புத்தகம் என்பது ஒற்றைச் சொல்.அதனுள் விரியும் உலகம் தனித்த அற்புதம்.என் வாழ்வில் அதிகதிகம் நேசித்த பொருள் புத்தகம் என்பதைத் தாண்டித் தீராத நெடுங்காலக் காதல் புத்தகத்தின் மீதானது .மதுரையில் ந்யூ சினிமா என்றொரு தியேட்டர் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகாமையில் அமைந்திருந்தது.இல்லாமற் போன ஆயிரம் தியேட்டர்களில் ஒன்றான ந்யூ சினிமாவின் தலவரலாற்றில் புத்தகங்களுக்கென்று பெரிய பங்கு உண்டு.மதுரையின் பழைய புஸ்தகக் கடைகள் பெரும்பாலும் அந்த தியேட்டரைச் சுற்றித் தான் அமைந்திருந்தன.இப்போது அந்தத் தியேட்டர் இல்லை அதன் எதிர்ப்பக்கம் வரிசையாகப் பல கடைகள் பழைய புத்தகங்களை வணிகம் செய்கின்றன.வெளியே இருந்து பார்த்தால் எல்லாமே புத்தகக் கடைகளாகத் தான் தெரியும் என்றாலும் பல கடைகள் கல்விநூல்களுக்கானவை.அவற்றுக்குள்ளேயே பள்ளிப் புத்தகங்களுக்கென்றும் கல்லூரிக்கென்றும் பொறியியல் உள்ளிட்ட சிறப்புப் படிப்புக்கென்றெல்லாம் தனித்தனிக் கடைகள் உண்டு.பலவூர் பேருந்துகளின் வரிசையில் ஆங்காங்கே தென்படும் ஒன்றிரண்டு பேருந்துகளை மாத்திரம் கண் மிளிரப் பார்ப்பது உண்டல்லவா..?தேடலின் பூர்த்தி தரும் ஒளிர்தல் அலாதியானது.அப்படியான கடைகளில் வாசிப்புக்கான புத்தகங்களை கையாள்கிற கடைகளுக்கென்று தனித்த இடக்குறிப்புகள் உண்டு.

தே பகுதியில் அடைக்கப்பட்டிருக்கும் கடைகளின் முன் ப்ளாட்ஃபார்மில் கிடைத்த ஷீட் அல்லது துணி இவற்றை விரித்து திடீர்க்கடைகள் உருவாகும்.நிரந்தரக் கடைகள் கிடைக்காதவர்கள் அவ்வப்போது தோன்றுவார்கள்.அவர்களுக்கென்று தனி வாடிக்கையாளர்கள் இருந்தார்கள்.இப்போதும் சனி மற்றும் ஞாயிறு மாத்திரம் பூட்டியிருக்கிற வங்கிக் கிளை அல்லது அரசு அலுவலகங்களின் வாசலில் இரண்டொரு கடைகள் திறக்கப் படும்.அப்படியான கடைகளை நடத்துகிறவர்கள் நிரந்தரக் கடைக்காரர்களைப் போலக் கறார் கெடுபிடிகளோடு இருக்க மாட்டார்கள் என்பது இன்னொரு சூட்சுமம்.         
இப்போதெல்லாம் அப்படி இருப்பதில்லை என் பால்ய நாட்களில் அப்பாவுடன் அந்தப் பகுதியைக் கடக்கும்போது இயல்பாக காணக்கிடைக்கிற விளையாட்டுப் பற்றிய பத்திரிகைகளைக் கேட்டு நச்சரிப்பேன்.என் வாழ்வின் ஆரம்ப ஆதர்சங்களில் கபில்தேவையும் ரஜினிகாந்தையும் ஒரே பெட்டிக்குள் போட்டு அவ்வப்போது யாராவது ஒருவரை வெளியே எடுக்கிற சித்துப்பித்தனாய்த் தான் இருந்திருக்கிறேன்.அப்பா என்னை அப்படியான பழைய கடை ஒன்றில் அமரவைத்துவிட்டு கடைக்காரரிடம் என்னை ஒப்படைப்பார்.SPORTS STAR SPORTS WORLD விளையாட்டுப் புத்தக பண்டல்களில் இருந்து எனக்குத் தேவையானவர்களின் பெரிய படங்கள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டின் வெற்றிகரமான வியர்வைக் கணங்களின் உறைந்த பிம்பங்கள் மேலதிகமாய் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் ஸ்கோர் ஷீட் உள்ளிட்ட விவரங்கள் ஆகியவற்றைப் பார்த்துப் பார்த்து எதை விடுத்து எதை அடைவது என்று கடினமான தேர்வை எழுதித் தேர்வேன்.
அதே கடைகளில் எனக்குத் தேவையான புத்தகங்கள் என் வாசிப்பின் மடைமாறி வேறான பிற்பாடும் கிடைத்தன.நான் மாறி வளர்ந்து மீசை அரும்புகிறவனாகத் தனியாக வந்து போக ஆரம்பித்த போது அந்தக் கடைகளை நடத்தி வந்த சிலர் மாறினார்கள்.இறந்தார்கள்.வேறு தொழிலுக்குச் சென்றார்கள்.எஞ்சியவர்கள் தூசி படர்ந்த சித்திரப் பாத்திரங்களைப் போல் வயதானார்கள்.என்னை மிக அன்பாக நடத்தினார்கள்.

ழைய புத்தகக் கடைக்கும் ஒருவனுக்குமான உறவு விசித்திரமானது.உலகில் பழைய என்றான எதற்கும் மதிப்பில்லாமற் போவது அதன் இரண்டாம் வாழ்வின் துவக்கம்.அதன் பின் அவை செல்லுபடியாகிற தலங்களில் ஏற்படுகிற மாற்றங்கள் புலனாகும்.அந்த இடங்களில் முன்பிருந்தாற் போன்ற அதே மதிப்பும் செல்லத் தக்க நிறைவாழ்வும் தொடர்வது நிச்சயம்.அதன் பிற்பாடு இன்னும் சில தனித்த இடங்களில் தோற்றம் அழிந்த பிற்பாடு பயன்பாடு வேறான பிறகும் அவற்றுக்கான போக்கும் வரவும் இருக்கும்.நான் பழைய புத்தகக் கடைகளில் மாத்திரமல்ல பழைய பேப்பர் கடைகளிலும் புத்தகங்கள் வாங்கி இருக்கிறேன்.என்னைப் பொறுத்தவரை அது இன்னொரு கடை.அவ்வளவு தான்.எங்கிருந்தாலும் வருக என்று தான் புத்தகங்களைக் கொள்ள முடிகிறது.
புத்தகங்களும் புதிய நண்பர்களைப் போலத் தான் நம் வாழ்க்கையினுள் நுழைகின்றன.பின் மெல்ல நமக்கு உயிரருகாமை வரை நகர்கின்றன.அதன் பின்னரும் நம் அகத்தினுள் ஒரு நல்ல இடத்தில் வீற்றிருக்கின்றன.தூரம் சென்றாலும் கூட உயிர்ப்புக் குறையாத இன்னுமொரு மற்றொன்றுகளாகத் தொடர்கின்றன.பழைய புத்தகக் கடைகளுக்குள் நுழையும் போதெல்லாம் எனக்குள் எதோ ஒரு வாத்திய இசை அதிரும்.இங்கே இந்த இடத்தில் எனக்கு என்ன கிடைக்கப் போகிறது..?எதைத் தேடுகிறேன் என்பதே எது கிடைக்கப் போகிறதோ அது என்றான துல்லியவித்யாசத்துடனான தேடல் அல்லவா அது.,.?மகிழ்வலிகளில் தலையாயது மனதை ஆளப் போகும் காதலுக்குரிய முகமும் உடலும் யாருடையது என்று அறிகிறவரையிலான அதே கற்பனாவஸ்தை அல்லவா பழைய புத்தகக் கடைகளின் உள்ளே தேடும் போது ஏற்படுவது..?எந்த விதத்திலும் தொடர்பற்ற புள்ளிகளை இணைப்பதன் மூலமாய் உருவாகக் கூடிய வரைபடம் அது.

ழைய புத்தகக் கடை என்பது ஒரு வணிகநிலையம் மாத்திரமல்ல.அது ஒரு திருத்தலம்.ஒரு மனிதனுக்குள்ளே எதோ ஒரு புதிய திறப்பை உருவாக்கித் தருகிற மனந்திருத்தகம்.என் வாழ்வில் நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருக்கிற சொற்ப விடயங்களில் பழைய புத்தகக் கடைகளுக்குச் செல்வது ஒன்று.காலம் அதிகமானால் கரங்கள் நடுங்குகிற அளவுக்குப் பித்ததிகம் புத்தகம்.எதிர்பாராமல் எதாவதொன்று மாட்டும்."ஹா என்றொரு அயர்ச்சி தோன்றும்".பல நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிற புத்தகம் இன்னும் கிடைக்காமல் ஆட்டம் காண்பிக்கும் அதே நேரம் வேறொரு தேடா தெய்வம் கண்முன் தோன்றிப் புன் சிரிக்கும்.அப்படிப் பல புத்தகங்கள் என் வாழ்வில் அடைந்திருக்கிறேன்.
புத்தம் புதிய புத்தகக் கடைகளுக்கு எப்போதும் செல்வது ப்ரியமான ஒன்று என்றாலும் கூட எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரின் நண்பர்களிடம் நான் கேட்கிற முதல் கேள்விகளில் முக்கியமானது அந்த ஊரின் ஆகச்சிறந்த பழைய புத்தகக் கடை எது என்பதாக இருக்கும். அந்த நண்பரால் அங்கே என்னை அழைத்துச் செல்வது இயலாது போனால் ஆன மட்டும் அங்கே நானாகச் சென்று திரும்புகிற வரைக்குமான வழிக்குறிப்புகள் பற்றியதாகவும் இருக்கும்.இவற்றைத் தாண்டி ஒருவேளை அன்னியப் புது ஊர்களில் நான் தங்க நேர்ந்தால் நண்பர்களற்ற ஊரில் நான் ஆட்டோ ஒட்டுகிறவர்களை சினேகித்துக் கொள்வேன்.திரைப்படங்களில் பலவாரியான குற்றபந்தங்களுடன் பலமுறை காயப்படுத்தப் பட்ட சீருடை உத்யோகக் குழுமங்களில் ஆட்டோ டிரைவர்கள் முதன்மையானவர்கள்.உண்மையில் அவர்களில் கிட்டத் தட்ட எல்லோருமே உழைத்தலின் பின்னதான பிழைத்தலுக்காக அடுத்தவர்களைச் சுமந்து கொண்டு பயணிக்கிறவர்கள் பிறர் பயணிப்பதற்காகப் பரபரத்த சாலைகளில் .மிகுந்த  இடர்கொண்ட வாகனத்தைத் தங்கள் உயிரையும் உட்படுத்தியவாறு சதா அலைந்து திரிபவர்கள்.வாழ்க்கையில் நன்கு அறிந்த நாற்பது சாலைகளுக்குள் எப்போதும் பயணித்துக் கொண்டே இருப்பது சமூகத்தினுள்ளே பிழைத்தலின் நிமித்தம் ஒருவர் கைக்கொள்கிற சிறைவாசத்துக்கு ஒப்பானது தான்.இத்தனைக்கும் மீறி ஆட்டோ சாரதிகளில் பலரும் அற்புதமான சரிதங்களின் உபபாத்திரங்கள் மாத்திரமல்ல அவரவர் காதையின் நாயகர்களும் கூட.

ன் புதிய நண்பராக மாற வாய்க்கிற சஞ்சாரத்தில் ஒரு ஆட்டோக்காரரை சவாரிக்கு அமர்த்தும் போதே ஒரு முழுப் பயணத்திலும் எனக்கு எந்த அவசரமும் இல்லை என்பதை முதலில் சொல்லித் தொடங்குவேன்.ஆட்டோ சாரதிகள் மாத்திரமல்ல.நம் வாழ்க்கைக்குள் நுழையத் தலைப்படுகிற யாரிடமும் துவக்கத்தில் நாம் உரையாடுகிற ஆதி உரையாடல்கள் இன்றியமையாதவை.அவற்றை நேர்த்தியாகக் கொண்டு செல்வது மாத்திரம் நம் வேலை.மற்றவை தானாய் நன்கு நிகழ்ந்தேறும்.பழைய புத்தகக் கடைகளுக்கு என்னை அழைத்துச் செல்லச் சொல்வேன்.திரும்பி வரும் போது இத்தினி புஸ்தகமும் படிக்க நேரமிருக்குதா ஸார் என்று தொடங்குவார் அந்த மனிதர்.அதற்கான பதிலுக்குள் நாங்கள் நண்பர்களாகி இருப்போம்.புறப்பட்ட அதே விடுதி முன்புறம் என்னை இறக்கி விட்டதோடு புத்தகக் கட்டை அறைவரை கொண்டுவந்து தந்து செல்வார் புதிய நண்பர்.

ரு முறை மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து நான் ஏறி அமர்ந்த ஆட்டோ ஒன்றிலிருந்து பாதிப் பயணத்தில் நான் இறங்கிக் கொண்டு அனுப்பி விட்ட பிற்பாடு தான் கவனித்தேன் அன்றைக்கு நான் வாங்கிய பழைய புத்தகக் கட்டு ஒன்றை அங்கேயே விட்டுவிட்டதை.ஸ்டாண்டில் அமர்த்திக் கொள்ளாமல் வழியில் அகப்பட்ட ஆட்டோவில் ஏறியது வேறு நினைவுக்கு வந்தது.அந்த இரவு முழுவதும் உறக்கம் இல்லை.அன்றைக்குக் கிடைத்த அதே புத்தகங்கள் இன்னொரு முறை அப்படியே கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பது வேறு நினைவில் இடறிற்று.கண்கள் பொங்க மறுதினம் சரி வேறு புத்தகங்களை அகப்படுவதை வாங்கலாம் என்று வழக்கமாகச் செல்லும் பாண்டியன் கடைக்குப் போனதுமே நேத்து வாங்கிட்டுப் போன புத்தகங்களை ஆட்டோவிலயே வச்சிட்டு மறந்துபோயி இறங்கிட்டீங்களா ரவீ.,.?ஆட்டோக்காரருக்கு உங்க விபரம் எதும் தெரியாம இங்க வந்து ஒவ்வொரு கடையா விசாரிச்சாரு.நான் வித்தது தான்னு தெரிஞ்சதும் மறுபடி நீங்க வரும்போது குடுத்துரச் சொல்லித் தந்துட்டுப் போனாரு என்று கொடுத்தார்.நான் யூகிக்காத ஒரு கதையின் பூர்த்தியாக அந்தத் தருணம் நிகழ்ந்தது.அதன் பின் அதே ஆட்டோக்காரரை இன்னொரு முறை சந்திக்க வேண்டும் என்று நெடு நாட்கள் அவர் முக அடையாளங்களை ஒவ்வொரு ஆட்டோ சாரதியின் முகத்திலும் தேடித் தோற்றேன்.பின் மெல்ல மங்கிச் செல்லரித்த பழைய புகைப்படத்தின் மூதாதை ஒருவரைப் போல் ஞாபகமாக மாத்திரம் எனக்குள் எஞ்சலானார் அவர்.இனி அவரைச் சந்தித்தாலும் அவராக என்னை அடையாளம் கண்டாலொழிய அவர் தான் அந்த சகசஞ்சாரி என்பது எனக்குத் தெரியவராது.ஒரு முறை தோன்றும் கடவுளுடனான ஆட்டோ பயணத்தில் மனித சாட்சியம் என் பயணம்.

மொழி பொதுவானது என்றபோதிலும் சொற்கள் தனித்தவை.நாம் தான் நம் உரையாடல்களின் ஒரு பகுதியை உருவாக்குகிறோம்.அதன் இன்னொரு பகுதிக்கும் நாமே பொறுப்பேற்க நேர்வது தற்செயலல்ல.அதுவே மொழியின் அழகு.மொழியின் கட்டுமானம்.மொழி தன்னை ஆள்பவர்களைத் தானாள வல்லது.அது ஒரு குறளி.நீங்கள் உபயோகிக்கிற சொற்களுக்கெல்லாம் நீங்கள் கைகட்ட நேரிடும் என்பது சதா மனதின் உள்ளே ஆர்ப்பரிக்கும் வேதக்கூற்று.

து கவிதைகளின் காலம்.இரண்டு பேர் சந்தித்துக் கொண்டால் என்ன செய்றீங்க என்ற கேள்விக்கு அடுத்து என்ன தொகுப்பு போட்டிருக்கீங்க என்று தான் கேட்டுக் கொள்கிறார்கள்.காகிதமற்ற தேர்வுக்களம் போலப் பெருகிப் பிரவகித்திருக்கும் இணையம் என்னும் மாயவெளி செய்து தந்திருக்கக் கூடிய உசிதம் இது.எழுதுவதெல்லாமும் கவிதையாகி விடுவதில்லை என்றபோதும் அவரவர் தொகுப்பு அவரவர் கவிதை என்ற அளவில் எல்லாமே கவிதைகளாய்த் தான் நம்பப் படுகின்றன.இன்னொரு புறம் புதியவர்களின் எழுதுகோல்கள் சதா ஆர்ப்பரிக்கிற கோபக்கார அலைகளின் விடாப்பிடிவாதத்தோடு முன் நிற்கின்றன.
தானாகத்

தன் இரையைத்
தேடிக் கொள்ளும்
பறவையின் அலகுகளில்
சற்று
கனம் மிகுந்திருப்பதில்

உங்களுக்கு
என்ன ஆச்சர்யம்
இருக்கிறது


சோஃபியா ஃபெலிக்ஸ் எழுதி பூவரசி வெளியீடாக வந்திருக்கும் கனலி எனும் தொகுதியில் இந்தக் கவிதை இடம்பெறுகிறது.நேரடியான அயர்த்துதல் எப்போதாவது நிகழும் வசீகரம்.முகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் பந்தைப் பதற்றம் ஏதுமின்றிக் கோட்டுக்கு அந்தப்புறம் அனுப்பி விட்டுத் தன் கரத்தை வான் நோக்கி உயர்த்துகிற அனாயாசம் இந்தக்கவிதையின் உள் ஆழத்தில் எங்கேயோ எட்டிப்பார்க்கும் மௌனத்தின் எள்ளல் எனலாம்.
அமெரிக்க வாழ் தமிழரான கீதா சந்திராவின் முகப்புத்தகப் பக்கம் நான் அவ்வப்போது எட்டிப் பார்ப்பது வழக்கம்.தொழில்முறை ஆடிட்டரான கீதாசந்திராவுக்குள் ஒரு ஒச்சமற்ற எழுத்துக்காரி இருப்பதை அவ்வப்போது அவரிடமும் தெரியப்படுத்தி இருக்கிறேன்.பாவனை அற்ற மேதமை மற்றும் அறிதலுடன் கூடிய அறியாமை ஆகியவை எழுத்தில் காணக்கிடைப்பது அபூர்வம்.அப்படியான எழுத்து கீதா சந்திராவினுடையது.தன் நித்யப்பாட்டின் இரயில்பயணங்களைத் தன்னை அகழ்கிற மனவெட்டியாகவே மாற்றி கீதா சந்திரா தொடர்ந்து பதிவிட்டு வருகிற இரயிலில் கிறுக்கியது என்ற சீரீஸ் அலாதியானது.இவரது முகப்புத்தகப் பக்கம் https://www.facebook.com/geetha.chandra ஒரு சின்ன விள்ளல் கீதாவின் எழுத்தின் வசீகரம் பகிரும்.

Geetha Chandra July 24 at 6:07am

#Trainன்றி கிறுக்கியது#1

Madurai to Manhattan

5 வருடங்கள் முன்பு

விசித்திரமாய் இருந்தது உள்ளூரில் பிறந்த வீடு இருந்தாலும் ராகினியுடன் ஹோட்டலில் தங்கியிருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போக முடிவெடுத்தது. கழுத்தை புடைவதலப்பால மூடிண்டு போங்கோ என்ற அம்மாவின் வார்த்தைகளை மறந்து புலராத 5 மணி காலையில் டவுன்ஹால் ரோடு வழியாக ஈரம் சொட்டிய தலையுடன் ராகினியுடன் கை கோர்த்து நடந்த போது சொல்லத்தெரியா நெகிழ்வு.

நடந்து வளர்ந்த தெருக்கள் ,மாட்டின் மணி சத்தம் ,வாசல் தெளிக்கும் வாசனை, சைக்கிள் ரிக்சாவின் பெடல் சத்தம் , காற்றில் மல்லிகை வாசனையுடன் மிதந்து வந்த திருவாசகம் ஓதுவார் சத்தம் , இன்னும் விடியாக் காலையில் சாலையோரம் தார்பாயில் படுத்திருந்த மனிதர்கள் விழிக்கும் சத்தம் , இத்தனையும் கொடுத்த குழைவு அம்மன் முன் நின்ற போது ஏனோ வரவில்லை.

சுவாமி தரிசனம் முடிந்து, ராகினியை நான் பிறந்து வளர்ந்து விடை பெற்ற தெருவின் வழி நடத்தி சென்றேன் . வீடுகளெல்லாம் கடைகளாய் மாறிய துக்கத்துடன் ரொம்பப் பிடித்த மீனாட்சி காபீ அருகே சென்ற போது , என்னை அடையாளம் கண்டு பதறி ஓடி வந்த ரிக் ஷாகார வேலு “அம்மா எப்ப வந்தீங்க ?அய்யா எப்படி இருக்காப்ல” என்று கேட்டதும் சங்கோசமாய் “ நல்லா இருக்கேன் வேலு மீனாட்சி காபீ குடிக்கணும் போல ஆசையா இருக்கு ஆனா கூட்டமா இருக்கே” என்றதும் ஓடிப் போய் பளபளவென்று தேய்த்து பட்டையாய் திருநீறு சார்த்திய பில்டரின் இறங்கிய முதல் டிகாக்ஷன் காபி வாங்கி வந்தார். கொடுத்த காசை வாங்கவில்லை. ராகினி மௌனமாய்த் தான் இருந்தாள். டாப் கழட்டிய ரிகஷாவில் நான் தங்கிய ஹோட்டலில் அவர் இறக்கி விட்டபோது பணம் கொடுக்க முற்பட்டவளை “அட போங்கம்மா நீங்க வேற “ என்று தடுத்து போய் விட்டார். ஏனோ திரும்பி வரத்தெரியாமல் நெடுந்தூரம் தொலைந்து போன தினுசில் நான் மடங்கி அழுததை பார்த்து சென்னையில் வளர்ந்த ராகினி புரியாமலே நின்றாள். மதுரையின் நேசத்தை சொல்லி புரிய வைக்க முடியாது

5 மாதங்கள் முன்பு

கிட்டத்தட்ட 17 வருடங்கள் நியூயார்க் நகரில் வேலை பார்த்து, ஒரு க்ஷண நேர பித்தத்தில் முடிவெடுத்து அந்த வேலையை விட்டு ,நியுஜெர்செயில் வீட்டுப்பக்கம் 20 நிமிட தூர கார் பயணத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டேன்

5 நாட்கள் முன்பு

பழைய கம்பெனி முக்கியமான உதவி கேட்டிருந்தார்கள். இரண்டு நாட்கள் திரும்ப , வழக்கம் போல் விடியும் முன் எழுந்திருந்து , அவசரமாய் காபி கோப்பை , நியூஸ் பேப்பர் சகிதம் 7.16 ரயிலேறியபோது , 5 மாதங்கள் கழித்து என்னைத் திரும்பவும் பார்த்த அதே கண்டக்டர் முகத்தில் ஆச்சர்யம். நியூயார்கில் கால் வைத்ததும் உடம்பில் ஒரு சிலிர்ப்பு .பத்து தெருக்கள் பைத்தியக்காரத்தனமாய் காதில் ஹெட் போனில் பாட்டுக் கேட்டபடி நடப்பதில் ஒரு குதூகலம். இந்த ரயில் என்னுடையது , இறங்கி என்னை விட வேகமாக நடக்கும் முகம் தெரியா சக மனிதர்கள் என் தோழர்கள். 17 வருடங்களாக நான் சாப்பிடும் salad bar என் வீடு

ஓங்கி வளர்ந்த கட்டிடங்கள் என் கோட்டை. ரோடுகளில் பாடும் ஆடும் மனிதர்கள் என் சகாக்கள். இந்த ரயிலில் நான் பேனாவால் எழுதியதே என் கிறுக்கல்கள்…….. மதுரை கொடுத்த நெகிழ்வை மன்ஹாட்டனால் மட்டுமே திரும்பித் தர முடிந்தது. இனி இவை இல்லை ,சந்தடியற்ற நியூஜெர்சியில் வீட்டருகில் வேலை. கடைசி முறை ரயிலை விட்டு இறங்கிய போது வேலு ரிஃஷாவில் இறக்கி விட்ட போது கவ்விய அதே துக்கம் நெஞ்சை அடைத்தது.

5 நிமிடங்கள் முன்பு

வீட்டைச் சுற்றி நடந்த போது இது வரை கண்ணில் படாத மான்களிடம் ஸ்னேஹமாய் புன்னகைத்தேன். இத்தனை நாட்கள் பழகாத பக்கத்துக்கு வீட்டு தமிழ் பெண் ஊரில் இருந்து வந்த அவள் அம்மாவை அறிமுகப் படுத்தினாள்.

மாமி காதில் வைரம் பளபளக்க பெங்களூரு தமிழில் நமீதா போல் “நீங்கோ தானா அது. யாரோ நைட் இருட்டினப்பறம் வந்தூ காலேல கெளம்பி போறாங்கோன்னு நெனச்சேன்”..

அப்பாடா வேலை மாறி வந்ததில் வீட்டுக்காரருக்காவது நல்ல பெயர் வாங்கி கொடுக்க முடிந்ததே
...


கதைகள் ததும்புகிற வனத்தின் பெயர் தான் வாழ்தல் என்பது.சிறுகதை சொலலின் பல நுட்பங்களை மேற்காணும் மதுரை முதல் மன்ஹாட்டன் வரை என்கிற முகப்புத்தகப் பதிவில் காணக்கிடைப்பதை புத்தம் புதிய எழுத்தின் கரங்களால் நேர்த்த முடிவது மொழியின் வசீகரம் அன்றி வேறேது.?

தொடரலாம்

அன்போடு

ஆத்மார்த்தி