புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

3 பொய்யும் புத்தகமும்

எழுதிச் செல்லும் கரங்கள்

3 பொய்யும் புத்தகமும்

புத்தகங்களுக்கும் மனிதனுக்குமான உறவு அலாதியானது. இந்த வாக்கியமே சற்றுப் பாசாங்காகத் தோன்றுகிறது. இப்படி ஆரம்பிப்போம். புத்தகங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவாடல் பல்வேறு விதவினோதங்களைக் கொண்டது. ஒன்றுக்கொன்று முரண்பட்ட குணமுகடுகளை அடைவதும் மீள்வதுமாகக் கால்களால் தத்திச் செல்லும் ஒரு பறவையைப் போல, புத்தக மனிதன் வினோதம் பொழிகிறான்.

பால்யகால சகாக்களில் ஒருவன் கதிர் என்கிற கதிரவன். பொய்களின் ரயில்வண்டியை ஓட்டுவதில் சமர்த்தன். 'தட்டில் சோறு போட்டுத் தானே அருந்தத் தெரியாது' என்கிற அளவில் குழந்தையாகவே பார்க்கப் பட்ட பிராயத்தில் உடனோடிய உடனாடி கதிர்.

முதல் பொய் மட்டும்தான் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரும். ஒரு படத்தில் ரஜினிகாந்த் சொல்வது போல, முதல் பொய் மாத்திரம்தான் தாய்ப் பொய். மற்றதெல்லாம் அதன் குட்டிகள். எதையாவது சொல்வான். "எப்டி சொல்றே?" என்றால், "புஸ்தகத்துல படிச்சேன்" என்பான். "என்ன புஸ்தகம்?" என்று மடக்கினால் அதற்கொரு பெயர் வைப்பான். "எழுதினது ஆராக்கும்?" என்றால் அவரை உற்பத்தி செய்து உயிர்ப்பிப்பான்.

தன் அப்பாவிடமே இப்படிச் சொல்லப் போக, "டூப் விடாதிங்க சார். இப்படி ஒரு புக்கு எங்க கெடச்சிது?" என அப்பா கேட்க, என்னைக் காட்டி, "இவன் குடுத்தான்" என்று என்னைச் சேர்த்துக் கொண்டான். பம்பரத்தில் ஆக்கர், கோஸ் முதலானவற்றை எனக்குக் கற்பித்த குரு என்பதால் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டேன். வெளியே வந்ததும் சன்னமான குரலில், "நா எங்கடா குடுத்தேன்?" எனக் கேட்க, "குடுத்தது ரமேஷ். அவங்கூட சேரக்கூடாதுன்னு எங்கப்பா சொல்லியிருக்காரு. ஸோ அதுனால" என்றான்.

பிறிதொரு நாளில் என்னால் சொல்லப்பட்டு, அந்தப் புத்தகத்தின் பால் ஈர்க்கப்பட்டு, என்னை சாட்சி வைத்துக் கொண்டே, அந்தப் புத்தகத்தைத் தனக்குத் தருமாறு ரமேஷ் கேட்க, "எங்கருக்குன்னு தெரில. தேடிப் பாக்கறேன். கெடச்சா தரேன்" என்று முடித்துக் கொண்டான். இப்போது நானாகப்பட்ட நான் அவனை ஏறெடுத்ததும், தன் பொய்யின் ரயிலைத் திறம்பட ஓட்டக் கூடிய எஞ்சின் ட்ரைவரான கதிர், "அன்னிக்கு நா உங்கிட்ட சொன்னது லூர்துநகர்ல இருக்கற வேற ரமேஷ். ஒனக்கு அவன தெரியாது" என்றான்.

ஒரு பொய்யுரைத்துத் தன்னைத் தற்காத்துக் கொள்ள, அதே பொய்யை ஒரு மந்திரத்தைப் போலக் கைக்கொண்டவன் கதிர். அம்ச சாரம் என்னவெனில், கதிர் விவரித்த, அவன் மாத்திரமே படித்த, அந்த இல்லாத நபரொருவர் எழுதிய அந்தப் புத்தகத்தின் விள்ளல் அத்துனை சுவையாக இருந்தது.

தொலைந்த குழந்தையின் தோன்றல் குறித்த ரகசியமாய்த் தன் கற்பனையில் உதித்த ஒரு விஷயத்தை வேறொருவர்பால் ஏற்றி, இந்த உலகில் இல்லாத புத்தகம் ஒன்றை எழுத விழைந்தான் கதிர். கோருவாரற்ற பொக்கிஷமாய், மண்மூடிப் புதையலாய், இருத்தகே அழுகலாய் மாறிக் கரைந்து உருகிப் போயிற்று கதிர் எனும் கற்பனாவாதியின் அந்தக் கதை.

ஒரு திரைப்படம் பற்றி நாம் கேள்வியுறுவதற்கும், ஒரு புத்தகம் பற்றி நாம் பரிந்துரைக்கப்படுவதற்குமான வித்தியாசம் முக்கியமானது. புத்தகம் தன்னை அறிவித்த கணத்திலிருந்து முழுவதுமாய் முடித்து ஒரு ஞாபகமாகும்வரை பெரும் நச்சரிப்பாக உள்ளே தேங்குகிறது. எழுதினாலொழிய மாற்றற்ற மாசறு பொன்.

படித்தவர் திளைத்த அனுபவம் ஒரு விள்ளலென வந்து உதித்த கணம் தொட்டு அந்தப் புத்தகத்தை முழுவதுமாய் வாசித்து நமக்குச் சொன்னவரின் கருத்தை ஏற்றோ மறுத்தோ சற்றுப் பிசகியோ நம் கருத்து ஒன்றை உருவாக்கி அந்தப் புத்தகம் குறித்த பிரயாணத்தைச் சமன் செய்த பிற்பாடே அமைதியுறுமாம் புத்தகப் பித்தெனும் பேய். சற்றே யோசிக்கலாம்.

பெரும்பாலும் விரித்து உரைக்கப்பட்ட கதை கொண்ட சினிமாவை உடனே தேடிச் சென்று பார்ப்பவர் சொற்பமே. இந்த ஒப்புமை தரவிறக்கக் காலத்தில் எளிதாய்த் தோன்றலாம், எண்பதுகள், தொண்ணூறுகளில் புத்தகம் கூடக் கிட்டும். சினிமா தூர சொப்பனம். தற்போது குறிச்சொற்களுக்கு மயங்காத படமே இல்லை. கூகுள் எனும் கிளி எடுத்துத் தராத சீட்டே இல்லை.

பைண்டு செய்வது முன்னைப் பொழுதின் பழக்கம். எப்போதாவது அபூர்வமாய்ப் பழைய பைண்டிங் சேகரிப்புகளில் உத்தேசமேதுமில்லாத புதையல் வரத்து ஒன்று சிக்கும். அப்படிப் பல புத்தகங்கள் என் வாழ்வில் நுழைந்திருக்கின்றன. தேடலற்ற விட்டேற்றித் தவம் போலத்தான் பழைய புஸ்தகக் கடைகளை அணுகுவேன்.

மூன்று புத்தகங்கள்

(1) தீராப்பகல் யுவன் கவிதைகள் காலச்சுவடு வெளியீடு ரூ 425

யாரோ தபலா, மிருதங்கம், குழல், மேண்டலின் என்று கூடவே வந்து ஃப்யூஷன் பரிமாறினாற்போல், காதலுக்கு முன் தோன்றிய முதல் தரிசனம் போலவே, மௌனத்தின் சொற்களை இனங்கண்டு அவற்றுடன் சதா தன் மனசைப் புழங்கச் செய்துகொண்டிருக்கக் கூடிய யுவன் சந்திரசேகரின் 'தீராப் பகல்' இதுவரையிலான அவரது கவிதைகளின் முழுமைத் தொகுதியாக வெளிவந்துள்ளது. வழக்கமான பாதையொன்றில் எப்போதாவது நேர்கிற வித்தியாசம் போல் இயல்பின் சின்னஞ்சிறிய விலக்கங்களைக் கவிதைப் படுத்துவது யுவனின் கைவரம். நித்தியத்தின் நுட்பங்களை அந்தரங்கமானதொரு இருளின் நின்றபடி சன்னமான குரலில் தனக்குத்தானே மொழிந்துகொண்டு எப்போதாவது புன்னகைக்கிற முதுமைப் பிறழ்வை முன்பே ஊகிக்கிற சூத்திரம் போன்ற தன்னந்தனித்தல்கள் யுவன் கவிதைகள்.

விரைதல்

சற்று முன்
லாரிச் சக்கரத்தில்
அரைபட்டது ஒரு பன்றி.
திரியும் பன்றிகளும்
விரையும் வண்டிகளும்
மலிந்த ஊரில்
விபத்துகள் அதிசயமா
தவிர
இல்லாது போனவற்றுக்
கெல்லாம் நின்று வருந்த
அவகாசமற்ற
அவசர வாழ்க்கை
எனது.என்ன,
சற்று முன்னுக்குச்
சற்று முன்
நிர்ணயம் பெறாத
புதிர்க்கணங்களொன்றில்
விரைந்து கொண்டிருந்தோம்
அது மரணத்தை
நான் போஸ்டாபீஸை
நோக்கி.


2.சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள்


டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு. விலை ரூ330.

"மூக்குத்தி குத்தியிருக்கிறவங்களாலே கவிதை எழுத முடியாது"
சுகந்தியின் முழுமையான படைப்புகள் அவரது கவிதைகள் சிறுகதைகள் டைரி பதிவுகள் அவர் எழுத்தைக் குறித்த பதிவுகள் எல்லாமும் இதில் அடக்கம்.தமிழின் உன்னதமான கவிதை மனங்களில் ஒன்று சுகந்தியினுடையது.இலக்கிய விரும்பிகள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

3. கேள்வியும் நானே பதிலும் நானே


வெ.இறையன்பு

தினத்தந்தி வெளியீடு ரூ180

தன்னை அகழ்ந்து தன்னாலான பதில்களைத் தர விழைவது இறையன்பு எழுப்புகிற கேள்விகளின் பிரதியுபகாரம்.
தத்துவார்த்தங்களை எளிதாக்கித் தருவது எல்லாராலும் ஆகாத ஒன்று.இறையன்புவின் எழுத்துவன்மை அதனை சாத்தியம் செய்கிறது.

ஒருவரின் அடையாளம் என்பது என்ன..?


அடையாளமற்றுப் போவதே சரியான அடையாளம்
அவர்களையே உலகம் நினைவில் வைத்துப் போற்றுகிறது.புத்தர் கபீர் போன்றவர்கள் அப்படிப்பட்டவர்களே.!திசை பற்றிய எள்ளலென்றைச் சுமந்தபடி அங்குமிங்கும் அலைகிற தன்னுளிப் பறவை ஒன்றின் தோன்றல்களைப் போல் எப்போதாவது எதையாவது யாராவது எழுதி வைக்கிறார்கள். முகப்புத்தகத்தில் அப்படிச் சமீபத்தில் இடறிய விழி நிலைத்தகவல் ஒன்று

https://www.facebook.com/pallavi.s.75/posts/463015284098306

என்ன காரணமென்று தெரியவில்லை சில நேரங்களில் இப்படித்தான் ஆகிவிடுகிறது
மனம் சொல்வதை மூளையும் மூளையின் ஓலத்தை மனதும் செவிமடுப்பதில்லை இதன் பெயர்தான் பித்துநிலையா எனவும் தெரியவில்லை
இதை அவ்வளவு எளிதில் கடக்கவும் முடியவில்லை
திடீரென அனைத்தின் மீதும் அனைவரின் மீதும் அளப்பரிய அன்பு பொங்கிப் பிரவாகிக்கிறது
பல நேரங்களில் மனம் மிகவும் மூர்க்கமாகிறது
இதிலிருந்து நான் எப்படித் தப்பிக்க முதல் நாள் இரவின் கொண்டாட்டம் மனமெங்கும் வியாபிக்கத் துவங்கிய நொடியில் ஏதோ ஒன்று அனைத்து குதூகலத்தையும் துள்ளலையும் சட்டென்று வடியச் செய்கிறது அதிலிருந்து தப்புவதற்கு திசை தெரியாமல் எல்லோரிடத்திலும் சினங்கொள்ள வைக்கிறது
பிடிக்கிறதோ இல்லையோ அதிக ஒலியில் பாடல்களை கேட்கச் செய்கிறது இது பித்து நிலையைக் காட்டிலும் கடினம் இந்நிலை எனக்கு அறவே வேண்டாம் மாற்றாக தன்னிலை மறக்கச் செய்யும் ஓர் அழகிய காதல் வேண்டும்!


பல்லவிக்கு இன்னும் எழுத எழுதக் கைவரும் என்பது ஆரூடம் அல்ல, கட்டியம்.

கதையை விடத் தலைப்பு முக்கியம் என்றார் எனக்குத் தெரிந்த ஆர்வ இலக்கியர் ஒருவர். இது நாவலுக்கும் பொருந்தும்தானே. நேராக மூளைக்குள் தலைப்புகளைக் கொண்டுபோய் அப்ளை செய்வது சுஜாதாவின் வழக்கம். பாரதியின் கவித்துவ வரிகளைத் தன் அத்தனைக் கதைகளுக்கும் கூந்தற்பூக்களைப் போல் சூட்டி மகிழ்வது ரமணிச்சந்திரனின் பழக்கம்.

சமீபத்திய தோன்றல்களில் சரவணன் சந்திரன் ஒரு தலைப்புத் தந்திரன். 'ஐந்து முதலைகளின் கதை', 'ரோலக்ஸ் வாட்ச்', 'பார்பி', 'அஜ்வா', , சர்வதேச ரெஸ்டாரண்டின் பீமபுஷ்டி items ரெசிப்பி போல் தலைப்பைப் பண்ணிப் பண்ணி உருவாக்குவது நாவலை விடக் கஷ்டம் ஸ்வாமி. சரவ் அதில் கெட்டி.

மாத நாவல்கள் உலகத்தில் சூடிய முடி மன்னரான ராஜேஷ்குமார் ஒரு குற்றக் கவி எனலாம். கவிதையும் குற்றமுமாய்க் கலந்து தலைப்பு வைப்பதில் தலைவர் ஒரு ஞானி. என் நண்பன் பரணி எப்போதோ  "ராஜேஷ்குமார் நாவல்களோட தலைப்பையெல்லாம் வரிசையா எழுதி வெச்சு வாசிச்சாலே அயர்ன் டானிக் குடிச்சா மாதிரி இருக்கும்டா" என்றான். நாள் செல்லச் செல்லத் 'தேன் டானிக்' போலவே தலைப்புகள் உருவாகலாயின. தன் கதைகளின் கடலில், தலைப்பு மீன்களை வேணமட்டும் விவசாயம் செய்துகொள்ளுகிறார் போலும்.

இன்னமும் க்ரைம் நாவலின் 'நந்தினி 440 வோல்ட்ஸ்' எனும் முதல் க்ரைம் நாவலை என் பதின்மத்தின் வாசலில் அமர்ந்து படித்துத் திகைத்துக் கொண்டிருக்கும் அந்த நானெனும் சிறுவன் பத்து நாட்களுக்கு முன்புதான் தன் ப்ரியமான ராஜேஷ்குமாரிடம் முதல் முறை செல்பேசினான்.

கிழக்கு பதிப்பகம்
வெளியீடாக 'போக புத்தகம்' வெளியாகியுள்ளது. என்ன மாதிரியான புத்தகம் என்று வகைமைப் படுத்த முடியாத விதவினோத மூடிகளையும், திறப்புகளையும், ஆங்காங்கே வால்வுகளையும், ஸ்விட்சுகளையும், இரும்பு ராடுகளையும் தகடுகளையும் பல்வகை மெட்டல்களையும் வயர்களையும், லீவர்களையும், ஆக்ஸில்களையும், டயர்களையும் மிரர்களையும், டைனமோக்களையும், கெபாஸிட்டர்களையும், இன்ன பிறர்களையும் ஒருங்கே காண வாய்ப்புக் கொண்ட சந்தைக்கு நடுவே தன் அலுவலகத்தை நடத்திவரும் என் உறவினர் ஒருவரைக் காணச் சென்றபோது, அவர் கார் பஞ்சராகி வரத் தாமதமானதால், முழுப் புத்தகத்தையும் அங்கேயே அமர்ந்து படித்து முடித்தேன். போகபுத்தகம் இப்படியான வல்னரபிள் காத்திருத்தல்களின்போது ஒரு சுகானுபவம்.

சமகாலத்தில் மிகுந்த அதிர்ச்சியையும், வியப்பையும் ஒருங்கே ஏற்படுத்திய ஒரு வாக்கியம், அரசியல் நோக்கர் பெருமள் மணி உதிர்த்த, "சித்தர் பரம்பரையில் வந்தவர் கலைஞர்".ஆளைப் பார்த்தால் அமைதியின் திருவுரு போலத் தோற்றமளிக்கிறார்.பேசினால் அதிரிபுதிரி.

தொடரலாம்
அன்போடு

த்மார்த்தி
Last Updated (Wednesday, 01 November 2017 18:55)