புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

எழுதிச் செல்லும் கரங்கள் 4

 

பெயர்க்க முடியாத சொற்கள்

 

பாரேன் என் பாண்டித்யத்தை என்று காண்பிப்பதற்குத் தான் ஒருபுறம் எத்தனை எத்தனை பூடகங்களைச் செய்தாக வேண்டி இருக்கிறது?நிகண்டுகளிலிருந்தும் கலைச் சொற்கள் அகராதியிலிருந்தும் வேணமட்டும் சொற்கூட்டங்களை செட்-அப் செய்துகொண்டு விட்டேனா பார் என்று அமர வேண்டியது.எழும் போது குறைந்த பட்சம் ஓரிரு கவிதைகளாவது தேறாமற் போனால் யார் காப்பது தமிழ் கூறும் நல்லுலகத்தை?ஒரு கவிஞன் பெட்ரோல் பங்கைப் போன்றவனாய் இருக்க வேண்டும்.வர வர வாகனங்களின் தேவைக்கேற்ப திரவத்தை நிரப்பி வழியனுப்பி சலிக்காமல் சேவை செய்யும் பெட்ரோல் நிரப்புகிற அதே மனிதன் தான் கவிஞனும்.எப்படித்தான் எண்ணிக்கை கொள்ளாத கவிதைகளை செய்துவிட முடிகிறதோ,ஆயிரக்கணக்கான கவிதைகளை எழுதிக் கொண்டே இருப்பவர்கள் ஒருபுறம்.எழுத வந்து மொத்தமே ஏழரை இல்லையில்லை ஏழேகால் கவிதைகள் எழுதிவிட்டுத் தன்னை உட்பக்கமாகச் சொறிந்து கொண்டிருக்கும் அலாதி இலக்கிய கர்த்தர்கள் மறுபுறம் எழுதுவதெல்லாம் கவிதை என்று சுயத்திலிருந்து ப்ரியத்தை எடுத்துக் கோர்த்துப் பண்ணும் காதல் பீறிடும் கவிச்சித்தர்கள் மூன்றாம் புறம்.எல்லாவற்றையும் நிராகரித்து ஆனந்திக்கும் சர்வதேசப் பேயோட்டிகள் இன்னொரு பக்கம் என களை கட்டுகிறது கவிதை

இதில் கவிதை நூல்களை விமர்சிக்கிற கூட்டங்களுக்கு எப்போதாவது போக நேரும் போது மனசு விட்டுப் போய்விடுகிறது.தமிழில் சில அன்னியரெமோக்கள் படுத்துகிற பாடு சொல்லொணாத் துயர் தருவது.இதென்னடா இது..?ஸார்வாள் தமிழிலேயே ஸ்பீக்ஸ் செவண்டி எய்த் லாங்குவேஜாக இருக்கிறதே,நமக்கொன்றும் புரியவில்லையே என்று பார்த்தால் எனக்கு அருகாமையில் அமர்ந்திருந்தவர் சுகர் நீங்கிப் பிர்ஷரும் அற்ற பெருமான் போல சம்ப்ரமமாகப் புன்னகை ஒன்றை உதிர்த்த படி இருந்தார்.கண்களைத் திறந்து தூங்குவதில் வல்லவர் போலத் தோன்றியது.கேட்கவில்லை.அவர் தூக்கத்தை கலைத்த பாவம் நம் கணக்கில் சேர்வானேன் என அமைதி காத்துத் திரும்புவது சூட்சுமம்.

மொழி என்ற பேரில் தமிழில் மாத்திரமல்ல சகல மொழிகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற செய்கைகளை யாராவது தீஸீஸ் செய்தால் சுவாரசியமாக மாத்திரம் அல்ல ஒரு துப்பறியும் படத்துக்கான கண்டெண்டை எல்லாம் மிஞ்சுகிற அளவுக்குத் திடுக்கிடும் பல திருப்பங்களைக் கொண்டதாகவும் இருக்கும்.இதன் பின்னே இருக்கக் கூடிய மாபெரும் வெளியை யாருமே பொருட்படுத்துவதில்லை.ஒவ்வொரு மொழியிலும் அந்தந்த மொழியை வளர்க்கிறேன் பேர்வழி என்று செலவழிக்கப் படுகிற தொகை நினைத்துப் பார்க்க முடியாதது.பன்னாட்டு சாத்திரங்கள் எட்ஸெட்ரா எல்லாம் எல்லா மொழிகளிலுமே பெயர்க்கப்படுவது வரவேற்புக்குரிய ஒன்று தான்.நமுட்டுச் சிரிப்போடு காசு பார்ப்பதையே குறியாகக் கொண்டு ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் சொல்வார்களே அதைப் போல முதல்தரம் மூத்ததரம் எல்லாம் இங்கே சல்லிசாய்க் கிடக்க நாலாந்தர பண்டங்களை சிறந்ததென்று சொல்லிப் பெயர்த்துக் கொண்டும் விலைப்படுத்திக் கொண்டும் இருப்பது ஒலிகுறைக்கப் பட்டுச் செய்யப்படுகிற வஞ்சகம்.கதறினாலும் சரி வெளியே கேட்காது.

மொழி என்பது ஒரு துறை என்கிற உணர்தலே இங்கே இல்லாத போது அதன் பின்னே இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய பெருந்திட்டக் காரர்களின் எத்தனங்களும் புழங்கிக் கொண்டிருக்கிற பிரமாண்டமான செல்வந்தமும் உருவாக்கப் படுகிற சித்திரங்களும் தொடர்ந்து வெளித் தெரியாமல் நிகழ்ந்து கொண்டிருக்கிற வஞ்சகம் என்பதே மெய்.இன்னும் விவரமாய்ச் சொல்வதானால் நம் யாருக்கும் தெரியாமல் நம் கணக்குகளிலெல்லாம் பெரும்பணம் வந்தும் போயும் இருப்பதாகக் கொண்டால் அதை அறிய நேர்கையில் எப்படி இருக்கும்..?மொழி மாஃபியாக்கள் உள்ளூர் தொடங்கி உலக நாடுகள் வரைக்கும் இருக்கிறார்கள்.நாமெல்லாரும் மேய்ப்பர் அற்ற ஆடுகள் கணக்கில் தான் வருகிறோம்.

ஆதங்கம் சொற்களின் வழியே ததும்பி வழிந்து மறுபடி அவற்றினுள்ளேயே நிரம்ப வல்லது.இதெல்லாம் ஒரு தினத்தில் சரியாவது சாத்தியமல்ல.இருக்கைகளில் அமர்கிறவர்களின் கூட்டு மனசாட்சி என்றைக்குச் சத்தியத்தின் பால் திரும்புகிறதோ அப்போது தொடங்கும் நன்னீர்மழை.

அல்ஃபான்ஸினா ஸ்டார்னி கடலின் மகள் என்று அழைப்பதற்கான தகுதி கொண்ட கவிதாயினி.அர்ஜெண்டினா தன்னுள் ஒருத்தியாகவே கருதுகிற ஸ்டார்னி பிறந்தது ஸ்விட்ஸர்லாந்தில்.தன் பதினாறு வயதில் அரங்கக் கலைஞராக நாடெங்கும் சென்ற ஸ்டார்னி ஒரு கட்டத்தில் ஃப்யூனர்ஸ் அயர்ஸ் சென்று அங்கே வாழ ஆரம்பிக்கிறார்.அவரது மகன் அலேஸாண்ட்ரோ பிறக்கிறான்.அறியப்பட்ட பத்திரிக்கையாளராக உருவெடுக்கிற ஸ்டார்னி தன் பெண்ணியவாதக் கூற்றுகளுக்காகப் பெரிதும் போற்றப் பட்டவர்.பயணங்களின் மீது எப்போதும் ஆர்வம் கொண்டவரான ஸ்டார்னி உருகுவே உள்பட சில தேசங்களில் குறுகிய காலங்கள் வாழ்ந்து பயணித்தவர்.மார்பகப் புற்று நோயால் அவதிப்பட்ட ஸ்டார்னி தன் 46 ஆவது வயதில் கடலை நோக்கி நடந்து சென்று கடலுள் மூழ்கி இறந்தார் என்பது அவரது இறப்பைப் பற்றிய பதிவு.ஆனாலும் அர்ஜெண்டீனியர்கள் அவர் கடலோடு கலந்தவர் என்ற பொருளில் ஸ்டார்னியின் மரணத்தை மிகவும் கவிதாபூர்வமாகவே கருதிவருகின்றனர்.பல்வேறு பரிசுகளை அடைந்தவரான ஸ்டார்னியின் வாழ்க்கை பல கலைவடிவங்களிலும் தொடர்ந்து பிரதியெடுக்கப் பட்டு வருகிறது.இவரது பல கவிதைகள் கடலில் மூழ்குவது பற்றியதாகவே இருந்ததும் அவரது வாழ்வின் முடிவு நோக்கிப் பல காலமாகவே அவர் நடந்துசென்று கொண்டிருந்ததான சித்திரத்தை ஏற்படுத்துகிறது.

அல்ஃபான்ஸினா ஸ்டார்னியின் புகழ்பெற்ற ஒரு கவிதை the moment ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்கள் Marion Freeman and Mary Crow ஆங்கிலம் வழி தமிழில் இதனை மொழிபெயர்த்திருப்பவர் தென்றல் சிவக்குமார்.1934இல் எழுதப்பட்டது இந்தக்கவிதை.

 

தருணம்.

கைவிடப்பட்டு என் காலடியில் வீழ்ந்து கிடக்கிறது
சாம்பல் நிற எலும்புகளாலான ஒரு நகரம்.

எலும்புக் குவியல்கள்
அகழிகளால் பிரிக்கப்பட்டுள்ளன,
தெருக்கள்
அவற்றால் வகுபட்டு,
அவற்றாலேயே ஒழுங்கும் ஏற்றமும் பெறுகின்றன.
இருபது லட்சம் மனிதர்களால் நிறைந்திருக்கும் நகரத்தில்,
என்னிடம் அன்பு செய்ய எனக்கென்று ஒரு மனிதனும் இல்லை.

நகரத்தை விடவும்
சாம்பல் நிறம் அடர்ந்த வானம்
என் மேல் கவிந்திருக்கிறது,
என் வாழ்க்கையைக் கைக்கொள்கிறது,
என் ரத்த நாளங்களை அடைக்கிறது,
என் குரலை அணைக்கிறது...

எனினும்,
என்னைத் தப்பவிடாத
ஒரு சுழற்காற்றைப் போல,
இந்த உலகம்,
திரும்பிச் சுழல்கிறது ஒரு சமன் புள்ளியில் :
என் இதயம்.

வாழ்தலின் உடைபடும் குமிழித் தன்மையைத் தன் கவிதைகளெங்கும் உலவச் செய்த ஸ்டார்னி பெரு நகரத்தின் பரபரப்பினூடே வாழ்தலின் ஒவ்வாமையைத் தன் எழுத்துகளின் வழியே சாட்சியப் படுத்திய முக்கியமான கவிஞர்.

ஆவதென்ன சொல்

மலரின் இருப்பு மணத்தைச் சொல்லுகையில்
மரத்தின் அசைவு காற்றைச் சொல்லுகையில்
பறவையின் பாடல் இசையைச் சொல்லுகையில்
வாலின் அசைவு வாஞ்சையைச் சொல்லுகையில்
சொல்லால் ஆவதென்ன சொல் அமிர்தா

அடிக்கடி விடுப்பில் செல்லுகிறவனின் காரணங்கள் கூச்சம் மிகுந்தவனின் சொல்லொணாத் தயக்கம்  பொருந்தாமை மிகுந்த இருப்பின் மீதான ஏக்கம் என ரவிசுப்ரமணியனின் கண்கள் வழி காணக் கிடைக்கிற கவிதைகள் அலாதியானவை.எப்போதும் கைவிடுவதற்கு முந்தைய கணத்து மிடறு விழுங்குதலோடு மௌனத்தை மாத்திரம் துணை செய்தபடி நகர்ந்து இடம் நீங்குகிற சன்னமான குரலுடைய ஒருவன் கவிஞனாகவும் இருந்துவிடுவதன் உக்கிரம் மிகுந்தவை இக்கவிதைகள்.காப்பாற்றுவதற்கும் இழப்பதற்கும் ஏதுமற்ற ஞாபகங்களைத் தன்னால் ஆன அளவுக்கு அடுத்த காலத்திற்கான சாட்சியத்தின் பேரேட்டில் இடம்பெறச் செய்து ஆசுவாசம் கொள்கிற சொற்சங்கதிகள் இக்கவிதைகள்.இன்னொரு விதத்தில் சொல்வதானால் மறந்து போன பாடலின் சொற்களுக்குப் பதிலாகத் தத்தகாரம் கொண்டு பூர்த்தி செய்தபடி சைக்கிளின் முன் சக்கரத்தோடு சமரசம் பேசியவாறே சாலையில் அலைகிற சந்தோஷமான இன்னொருவனின் இசை மிகுந்த வெயில் நேரத்து உடனிருத்தலாகவும் இதே கவிதைகளில் சில விரிவது ஒழுங்கறுதலின் ஒழுங்கை முன்வைத்தபடி நிகழ்கிற பூரணம்.ஒப்பனை முகங்கள் தொட்டு விதானத்துச் சித்திரம் வரைக்குமான காலம் இக்கவிதைகளில் கொஞ்சமும் பிசகாமல் வழிந்தோடும் அர்த்தநதி.

ரவி சுப்ரமணியன்
விதானத்துச் சித்திரம்
போதிவனம் வெளியீடு
(98414-50437)
விலை ரூ 100


கப்பலில் வந்த நகரம் என்ற சிறுகதைத் தொகுப்பின் ஒரு கதை நினைவில் இடறிக் கொண்டே இருக்கிறது.காமுத்துரை எளிய நேரடியான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்.தமிழின் சிறுகதை உத்திகளில் இப்படியான நேர் சொலல் முறைக்கென்று தனி இடம் உண்டு.கதை இதுதான்.எழுதப்பட்ட காலம் 1983.

அவன் ஒரு டெய்லர்.ஊருக்குள் தன் வீட்டோடு வாசலில் சின்னதாய் தையற்கடை வைத்திருப்பவன்.உடன் ஒத்தாசைக்கு ஒரு சின்னவனை வேலைக்கு வைத்துக் கொள்வதைக் கூட அனுமதிக்காத வாழ்வு அவனுடையது.வருகிற வருமானம் அவனுக்கே பற்றாது.இதில் உதவியாளனுக்குத் தர வரும்படி வேண்டாமா..?வாழ்வின் அனர்த்தங்களில் வறுமை என்பது பேருரு.அன்றைக்குக் காலையிலேயே ஒருவர் வந்து தன் சட்டையின் ஆல்டரேஷன் செய்து கொள்கிறார்.அவர் அந்த ஊர் மந்தையில் கடை வைத்திருப்பவர்.இவனுக்கு வாழ்வின் முக்கியத் தருணங்களில் பல உதவிகளைச் செய்தவர்.அதனால் பணமெல்லாம் வேண்டாம் என்று பெரிதாய்ப் பேசி அனுப்பி விடுகிறான்.தந்திருந்தால் ஒரு ரூபாய் தந்திருக்க வேண்டும் அவர்.அதைக் கொண்டு எதுவும் பெரிதாய் மாற்ற முடியாதென்றாலும் ஒரு நாள் போழ்து செல்லும்.சற்றைக்கெல்லாம் அடடா அந்தப் பணத்தை வாங்கி இருக்கலாமே என்ற ஊசலாட்டத்தில் தன் கடையை விட்டுவிட்டு அவரது கடைமுன் மந்தையில் நின்றுகொண்டு எப்படிக் கேட்பது என்று முன்னும் பின்னுமாய்த் தனக்குள் அவஸ்தை கொண்டு ஆடுகிறான்.இது தான் கதை.இதன் முடிவில் வேறு வழியில்லை என விறுவிறுவென்று அவர் கடையை நோக்கிச் செல்கிறான் என்பதுடன் நிறைகிறது.

சிந்தித்தால் சிறு நகரங்களெங்கும் ரெடிமேட் எனும் ஆயத்த ஆடையகங்கள் பெருகத் தொடங்கி சின்னஞ்சிறு தையற்கலைஞர்களின் வாழ்வில் நேரடியாக குண்டு வீசியதும் அதே காலகட்டம் தான் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.வேலைவாய்ப்பு என்ற அளவில் ரெடிமேட் ப்ராண்டிங்குகளால் அவர்களுக்கு பாதிப்பில்லை என்று தோன்றினாலும் ஒரு செடியைப் பிடுங்கி வேறிடத்தில் நடுவது போல் விருப்பமில்லாத மடைமாற்றமாய்த் தான் எல்லாமும் நிகழ்ந்தன.

இப்போதெல்லாம்

குற்றம் என்னும் காகத்தை
காமத்தைத் தன் பெயராகச் சூடிய புறாவை
வேங்கையை
மீனை
இப்போதெல்லாம்
காணவே முடியவில்லை

புது எழுத்து வெளியீடாக வந்திருக்கும் ஞாபகசீதா விலை ரூ70 ஷங்கர்ராமசுப்ரமணியன்

மேலே இருக்கிற கவிதை முதலில் சாதாரணமாய்த் தோன்றும்.எளிமையை விட உறுதியான ரகசியம் வேறேதும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.இந்தக் கவிதையை மீண்டும் மீண்டும் திறக்கும் போது வெவ்வேறு வண்ணங்களின் விசாலத்தினுள் நம்மை ஆழ்த்துகிறது.சொற்களின் எளிமையே அதன் நீட்சியின் அபாரமாகவும் அபாயமாகவும் விரியத் தலைப்படுகிறது.எது வேங்கை எங்கே அந்த மீன் என்றெல்லாம் தேடும் பொழுது நேரம் போவதே தெரியாமல் ஆழ்கிற செயல்வசீகரத்தின் குமிழிகளில் ஒன்றெனவே எஞ்ச நேர்கிறது.தன்னை நிகழ்த்துதல் கவிதையின் லட்சணம்.இது பரிசுத்த லட்சணக் கவிதை.

 

தொடரலாம்
அன்போடு

ஆத்மார்த்தி