புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

 

கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்…


இன்றைக்குக் கலக்கிக் கொண்டிருக்கிறது ஊடகங்களையும் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வயிறுகளையும் தொலை பேசித்துறை ஸ்பெக்ட்ரம் ஊழல்.எந்த நாளிதழை எடுத்தாலும் (ஓரிரு வருடங்களுக்கு முன்) செல்பேசி நிறுவனங்கள் படிக்கிறவர் கண்ணைப்பிடித்து இழுக்காத குறையாக “வாங்கினா தான் விடுவோம்”என்ற செல்லமிரட்டல்களை விடுத்துக்கொண்டிருந்தன.பத்து இலக்க நம்பர்கள் நமக்கெல்லாம் இன்னுமொரு அடையாளமாக தசமப் பெயர்களாக மாறிப் போயின. செல்லிடப் பேசிகளால் உலகம் உள்ளங்கைகளுக்குள் சுருங்கியது நிஜம்.

ஒவ்வொரு வசதிக்கு பின்னாலும் தொல்லைகள் வந்தே தீரும் என்ற சுவாமி.சத்ய புருடானந்தாவின் டாக்குக்கேற்ப செல்பேசிகளால் எண்ணற்ற தொந்தரவுகளையும் அடைந்தான் சப்ஸ்க்ரைபன்.என்றபோதும் செங்கல் கருங்கல் செல்பேசிகளின் முதலாவது சுதந்திரப்போர் முடிவுக்கு வந்தது.இன்றைக்கு நாளொரு கம்பெனிகள் பொழுதொரு மாடல்கள் என குழம்பித் தவிக்கிறான் இன்பத்தில் திளைக்கிறான்.காது வீங்கிக்கிடக்கிறான் சப்ஸ்க்ரைபன்.

ஆனால்….சற்று முன் ரீவைண்ட் செய்து நோக்கினோமென்றால்,நோக்கியாக்களுக்கு முந்தைய காலமொன்று இருந்தது.1996 ஆமாண்டு வரை இந்தியாவில் செல்லுலர் கிடையாது.ஆனாலும் முழுதாக நிலைபெற 1997 ஆமாண்டு ஆனது.2000வரை போகப்பொருளாக பார்க்கப்பட்டது.அதன் பின் ஜீஎஸெம் தொழில் நுட்பத்துக்கு இணையாக சீடீஎம்ஏ வந்தது.பிறகு ஒவ்வொரு கம்பெனியாக உள்நுழைந்து இன்றைக்கு தலைவால் புரியாத செவிமிருகமாய்த் திகழ்கிறது செல்பேசி.

ஆங்…அந்த ரீவைண்ட்…1995 வரைக்கும் கண்கண்ட தெய்வம் “டாட்” என்றழைக்கப்படுகிற தொலைபேசித்துறை மட்டும் தான் ஒற்றைக்கடவுள்.எனது பால்ய நினைவுகளில் வீதிக்கு ஒரு ஃபோன் இருந்தது.பிறகு இரண்டு அல்லது மூன்று வீடுகள் ஃபோனுடன் இருந்தால் அது பெரும்பெருமிதம்.செல்வந்தம்.நானறிய என் அம்மா(ஆசிரியையாய்ப் பணிபுரிந்தவர்)”கொட்டியா கிடக்கு..?ஃபோன் வெச்சுக்கிறதுக்கு இது ஒண்ணும் பங்களா இல்லை…நாம ஒண்ணும் ஜமீன் வம்சம் இல்லை.தெரிஞ்சுக்க..”என்று ரொம்ப முன்னால் இல்லை 1994 ஆமாண்டு என்னிடம் கடிந்துகொண்டதை நினைத்துப் பார்த்தால் சிரிப்பாக வருகிறது.

முதன் முதலில் திருநகர் வீட்டுக்கு வரும் முன்பு மதுரை கோ.புதூரில் வாடகை வீட்டில் குடியிருந்தோம்.அங்கே எங்களுக்கு எதிர்வீட்டில் இருந்த ராமசாமி என்பவரது தெலுங்குபேசும் தமிழும் பேசும் குடும்பத்தினர் காட்டிய அன்பு மறக்கவியலாதது.ஆத்திர அவசரத்துக்கு கூட இல்லை அபூர்வத்துக்கு பேசுவதற்கு அவர் வீட்டு தொலைபேசி எண்ணைத் தான் சொந்த பந்தர்களிடம் கொடுத்திருந்தோம்.முகம் சுளிக்காமல் வந்து அழைப்பார்கள்.பேசிவிட்டு வருவோம்.

தொலை பேசிகள் இருமுனையும் கூர் தீட்டப்பட்ட கத்திகளாய் இருந்தன.மத்யமர் குடும்பங்கள் அன்றைக்கு முழுவதுமாக தொலைபேசியை வாடகை கட்டி வைத்துக்கொள்ள இயலவில்லை.. ஆங்காங்கே தன் வசதிக்காக வைத்திருக்கிற வீடுகள் அக்கம்பக்கத்தினர் தொலைபேசி என்ற ஒரே விஷயத்துக்காகவே நெருக்கமானதும் இறுக்கமானதும் சண்டையிட்டதும் சமாதானமானதும் உண்டு.தொலைபேசிகள் ஏழை பணக்காரர் இருவர்க்கத்துக்கிடையிலான மத்யமர் குடும்பங்களை வெகு வெளிச்சமாக அடையாளப்படுத்திக் காட்டின.அழைப்புக்கள் வரும்.ஆனால் யாரையாவது அழைப்பதற்கு பூத்கள் என்று சொல்லப்படுகிற தொலைபேசி வாடகை நிலையங்களுக்கு தேடிச் சென்றாக வேண்டும்.காதல் முதல் குழந்தைப்பேறு வரை கடன் முதல் மரணங்கள் வரை தொலைபேசிகள் மட்டும் புழக்க்த்தில் இருந்த காலகட்டம் வேறாகவும் இன்றைய காலகட்டம் வேறாகவும் என இரண்டு வெவ்வேறு உளவியல் தேசங்களுக்குப் பயணித்தது யதார்த்தம்.

பி.பி. கால்கள் ஸ்னேகத்தை நட்பை வளர்த்து உடைத்தன.எஸ்,டீ.டி எனப்படுகிற தொலை தூர அழைப்புக்கள் பணந்தின்னிக்கழுகுகளாய்த் திகழ்ந்தன.இன்றைக்கு எஸ்.டீ.டி,-ட்ரங்க் கால்கள் பழைய கறுப்புவெள்ளைக் காலத்தில் லைட்னிங் கால்கள் எல்லாமும் மன ம்யூசியங்களுக்குள் சிறைப்பட்டு விட்டன.இன்றும் நிலைத்து விளையாடுவது ஐ.எஸ்.டீ எனப்படுகிற அயல் தேசங்களுக்கான அழைத்தல்கள் தான்.அவையும் இணைய அழைப்புக்கள் அழைப்பு அட்டைகள் என பல்நிலைத் தாக்குதல்களினால் தத்தமது பனியன் கிழிந்துபோய்ப் பலவீனமாய் இருக்கின்றன.இந்தக் கட்டுரை எழுதி முடிக்கிற நேரம் உலகமெங்கும் லோக்கல் கால்களாக மாறினால் ஆச்சர்யமேதும் வராது.

காலர் ஐடி எனப்படுகிற பேசுவது யார் எனத்தெரிந்துகொள்ளும் வசதி வந்ததையே வாய்பிளந்து பார்த்த காலம் அது.அதற்கு முன் தொலைபேசிகள் பெரும் உளவியல் நெருக்கடிகளைப் பலருக்கும் கொடுத்தன.வெறுப்பை உமிழ்கிறவர்கள் சக மனிதரைக் கத்தவிடுவதற்கு செய்ததெல்லாம் அவரது தொலைபேசி எண்ணை அறிந்துகொண்டு இன்னொரு முனையில் இருந்து அழைத்து விட்டு ஒரு அல்லது சில ரிங்-மணிச்சப்தங்களுக்குள் அந்த அழைப்புக்களைத் துண்டித்துவிடுவது தான்.சிம்பிள்.ஒரு முறை இருமுறை அல்ல.இப்படிப் பலமுறை செய்து தன் வீட்டு ஃபோன் வயரால் தூக்குமாட்டிக்கொள்ள முயன்றவர்கள் அனேகர்.

நான் கூட என் வாத்தியார் ஒருவரை வீழ்த்தியிருக்கிறேன்.பாதி சட்டையை இன் செய்துகொண்டு மீதியை வெளியே விட்டுக்கொண்டு பள்ளிக்கு வரும் அளவுக்கு அவரைக் கொணர்வதற்கு நான் செய்ததெல்லாம் நள்ளிரவு நேரங்களில் அவருக்கு அழைத்து அழைப்பை உடனே துண்டிக்கிறது மட்டும் தான்.ஒரு நாள் அல்ல.பல நாள்.ஒருமுறை அல்ல.பலமுறை.பல தெருக்களுக்குச்சென்று பல பூத்களில் இருந்து இதனை செய்ததும் உண்டு ஞாயிற்றுக்கிழமை பகல்களில்.பிறகு அவரை அரைமனிதராய்ப் பார்த்த பின் தான் நிறுத்தினோம்.(பன்மை தான்.நான் மட்டும் செய்தால் மாட்டிக்கொள்வேன் என்பதால் மதுரையின் மங்கீஸ் படை மொத்தம் 8 பேர் தொடர்ந்து இதனை பல முனைகளிலிருந்தும் செய்தோம்.)

தொலைபேசிகள் மறக்க இயலாதவை.மூன்று இலக்கங்களில் ஆரம்பித்து இன்றைக்கு மதுரை 7 சென்னை 8 இலக்க எண்கள் வரை பார்த்தாயிற்று.ஒவ்வொரு முன் எண் கூடும்போதும் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறி இருக்கிறது..?என்பதை நினைத்தால் வெகுவான ஆச்சர்யம் மனதில் இழையோடுகிறது.ஒரு எண்ணைப் பல இடங்களில் குறித்து வைப்பதில் துவங்கி வீடுகளில் பழைய காலண்டர் அட்டைகளில் ஃபோன் எண்கள் எழுதித் தொங்கவிடப் பட்டிருக்கும். இன்றைக்கு பல ஆயிரம் எண்களைச் செரித்து வைத்துக்கொள்வதற்கு செல்ஃபோன்கள் வந்து விட்டன.அதன் மாயமூலைகளுக்குள் ஒளிந்துகொள்கின்றன பேர்கள் ஊர்கள் மற்றும் எண்கள் எல்லாமும்.

காதல்கோட்டை படத்தை இன்றைக்கு பார்த்தால் சட்டைப்பையில் செல்ஃபோன் அரிக்கிறது.திரிசூலம் படத்தில் சிவப்பு ஃபோன் தொங்கிக்கொண்டிருக்க அதனைத் தொட்டெடுக்க கீழே தரையில் கிடக்கிற கேஆர் விஜயா தவழ்ந்து தவழ்ந்து சென்றுகொண்டிருப்பார்.இந்தப் பக்கம் வயர் குறித்த கவலை ஏதுமே படாமல் நான் ஷங்கரோட அப்பா பேசறேன்”என்று சொன்ன சிவாஜி சுமதி சுமதி என்று திரும்ப திரும்ப அழைத்தபடியே வீடுமுழுக்க அந்த ஃபோனைத் தூக்கிக்கொண்டு நடைபோடுவார்.நமக்கு நியாயமாக வரவேண்டிய அழுகையுணர்வுக்கு பதிலாக சிரிப்பு வரும். காரணம்…தொலைதொடர்பு வளர்ச்சி.

மூணு மணி அடித்ததும் அலுவலகத்துக்கு வருகிற அழைப்புக்களை எல்லாம் தான் ஏற்பாடு செய்திருந்த போன் அழைப்புக்கள் என நினைத்து ரஜினி தவிக்கிற தவிப்பும் அது புரியாமல் தேங்காய்ஸ்ரீனிவாசன் அலட்சியமாக அவரைக் கையாள்வதும் தில்லுமுல்லு படத்தின் ஒரு ரஸமான காட்சி.”

மழையும் நீயே வெய்யிலும் நீயே என்ற அழகன் பாடல் ஒரு இரவு முழுக்க மம்மூட்டியும் பானுப்பிரியாவும் கைகளில் ஃபோன் ரிசீவரைத் தாங்கியபடியே லவ்விக்கொண்டிருப்பார்கள்.மறு நாள் விடிவதை கேபீ தூர்தர்ஷனின் ஸ்டார்ட் ம்யூசிக்கை காண்பித்து விளக்கிய இடம் இன்றைக்கு நினைத்தால் எவ்வளவு அன்னியமாக இருக்கிறது..? அன்பு என்றொரு படத்தில் வடிவேலு ஒரு முழு ஃபோன் கால் முழுவதிலும் ஆங்க்..என்று பல குரல்களில் இழுத்துக்கொண்டே இருப்பாரே ஒழிய எதிர்முனையில் இருக்கிறவர் அவரை ஒரு வார்த்தை கூட பேசவிடமாட்டார்.அதுவும் தொலைபேசியை வைத்து எடுக்கப்பட்ட வித்யாசமான காட்சி.

மன்மதலீலை படமே ஃபோன் தான்.அதுவும் ராங் நம்பர் தான் அதன்விஷயமே.இன்னுமொரு படம் அரங்கேற்றவேளை.அந்தப் படத்தில் ஒரு கிராஸ்டாக்கை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொண்டு பிரபு மற்றும் குழுமம் பணம் சம்பாதிக்கப்பார்ப்பது இன்றைக்கும் ரசிக்க முடிகிறது.

சதிலீலாவதி படத்தில் ஃப்ளைட் டிக்கெட் கேட்டு ரமேஷ் அரவிந்த் தன் பழைய நண்பி பாகீரதிக்கு மீண்டும் மீண்டும் ஃபோன் செய்வது அசட்டழகு என்றால் மறக்க முடியாத இன்னுமொரு ஃபோன் படம் சூரியன்.உன்னை நினைத்து படத்தில் ஜோதிடத்திலகம் மெய் மெய்யப்பன் சார்லியும் சங்கீதகலாநிதி ஆர்.சுந்தர்ராஜனும் ஃபோனில் செய்கிற அட்டகாசங்கள் ஒருவகை என்றால் புதுப்புது அர்த்தங்கள் படத்தின் ஜனகராஜ் செய்வது வேறு அதகளம்.

வந்தார் சூரியன் கவுண்டமணி.ஃபோனை எடுத்து இஷ்ட நம்பர்களை சுழற்றி உடனே நான் டெல்லி போணும்.இதை பத்தி நான் நாளைக்கே மினிஸ்டர் கிட்டே பேசறேன்.எனக்கு ஃப்ளைட் புக் பண்ணுங்க…”என்றெல்லாம் அளந்துகொண்டிருக்கையில் பசி நாராயணன் மற்றும் ஓமக்குச்சி இருவரின் முகபாவங்கள் அற்புதம்.அந்த சம்பாஷணை முழுக்க முடிந்தபின்னும் கொஞ்சம் அந்த இருவரிடமும் அளக்க,அதற்கு பசி நாராயணன் “போன் வயர் பிஞ்சு மூணு நாளாச்சு”என்பார். அதற்கும் அசராத கவுண்டமணி “அரச்சியல்ல இதெல்ல்லாம் சாதாரணமப்பா….”என்பார்.சிவப்பு வண்ண தொலைபேசி “தேமே” என்று இருக்கும்.

நதி எங்கே கிளம்புகிறது…?என்று கேட்கையில் சீடன் என்னென்னவோ பதில் சொல்ல அவற்றையெல்லாம் மறுதலித்த குரு சொன்னாராம்.நதி எங்கே கிளம்புகிறது..?இறந்த காலத்தின் ஏதோ ஒரு நிகழ்காலத்தில் துவங்குகிறது” என்று.மேலோட்டமாகப் பார்த்தால் இன்றைக்கு தொலைபேசி நம்வீட்டு மூலைகளில் விருப்ப ஓய்வு பெற்று ஒதுங்கி ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றன.அவற்றின் பிரதான காலம் ஒன்று இருந்தது.கோலோச்சிய காலம் என்பதனை விடவும் தனக்கென்றே தனித்த எத்தனை கோடி சம்பாஷணைகளை கையாண்டிருக்கின்றது தொலைபேசிகள் என்பதை நினைக்கையில் இதை மட்டுமா இழந்தோம் என்று நெஞ்சம் விம்முகிறது.

1995ஆமாண்டு.நான் கல்லூரி மாணவன்.யதேச்சையாக கிடைத்த ஒரு ராங்க் கால் இணைப்பில் ஒருத்தி எனக்கு அறிமுகமானாள்.அவள் என்னிடம் கேட்டதற்கு என்பெயரை ரமணி எனச்சொல்லியிருந்தேன்.ஏதோ ஒரு முன் ஜாக்கிரதைக்கு.கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அவளாகவே என் எண்ணுக்கு ஃபோன் செய்வாள்.ஒரு நாளைக்கு 10 நிமிடத்தில் இருந்து சில மணி நேரங்கள் வரைக்கும் பேசியிருக்கிறோம்.பிறகு மெல்ல அந்த தொலைபேசி ஸ்னேகம் நின்று அறுந்து போனது.ஆனால் எப்போதாவது யாராவது யாரிடமாவது ரமணி என்று சொல்கையிலெல்லாம் அவள் ஞாபகம் லேசாக எட்டிப்பார்த்துப் பல் காட்டிவிட்டு மறையும்.அவள் தன் பேரை ஷைலஜா என்று சொல்லி அறிமுகமாயிருந்தாள்.அது அவளது உண்மையான பேராகவே இருந்திருக்கக் கூடும்.


இன்னமும் பேசுவோம்

தோழமையோடு

ஆத்மார்த்தி