புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

2017 அவ்விடத்து விசேஷங்கள்

1 முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போழ்

இதனை இயக்கியது ஜிபு ஜேகப்.இசைத்தவர்கள் பிஜிபால் மற்றும் எம்.ஜெயச்சந்திரன்.

மோகன்லால் மீனா  அனூப் மேனன் சூரஜ் வெஞ்ஞிரமூது மற்றும் பலரோடு தோன்றிய ஒரு நடுத்தர வயதுக்காரனின் ஊசலாட்டங்களை அழகான கவிதை போலச் சித்தரித்தது இந்தப் படம்.இதன் ஆங்கிலக் கேப்ஷன் மை ஒய்ஃப் இஸ் மை லைஃப் என்றது.மோகன்லாலை ஏற்கனவே பிடித்தவர்களுக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தந்திருத்தமாய்ப் பிடிக்கும்.அந்த அளவுக்கு உன்னச்சன் என்ற பாத்திரமாகவே மாறினார்.செல்ஃபோனும் வாட்ஸப்பும் இன்னபிறவெல்லாமும் நவ வாழ்வுகளில் கணவன் மனைவி எனும் உறவு நிறுவனத்தின் உள்ளும் புறத்தேயும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற மாற்றங்கள் நடுக்கங்கள் இன்னபிறவற்றை எல்லாம் தொட்டுத் தகர்பித்த படம் முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போழ்.

2 ஜோமோண்டே சுவிசேஷங்கள்

எளிய குடும்பக் கதை.தகப்பனுக்கும் கடைசி மகனுக்கும் இடையிலான சொல்லிக் கொள்ளாத உறவுப்பிணை.தன் தந்தைக்காக ஒரு யூ டர்ன் அடித்து தப்பாகிப் போன குடும்பத்தின் கதையைத் திருத்தி எழுத முயலும் மகன் ஜோமோனாக மம்முட்டிபுத்ரன் துல்கர் சல்மான் நடித்த இந்தப் படம் ஒரு அழகான கவிதை.முகேஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னொஸண்ட் மனோபாலா மற்றும் சொல்லப் பட வேண்டிய ஒருவர் ஜேகப் கிரஹரி.வித்யாசாகரின் இசையில் மூன்று பாடல்கள்.அவற்றில் இந்த வருடத்தின் வருடல் https://www.youtube.com/watch?v=UGDXiZMvcRA நோக்கி நோக்கி நோக்கி நின்னு காத்துக் காத்துக் காத்து நின்னு...கேளுங்கள் வருடப்படும்.

படம் முடியும் கணங்கள் கண்கள் பனிக்க அந்த ஊர் விக்ரமன் படம் மாதிரியான ஐஸ்க்ரீம் வருடலாய் நெடுங்கால மழையாய்த் தனிக்கும்.பேரழகு

3. அங்கமாலி டைரிஸ்

முற்றிலும் புதிய முகங்களோடு எடுக்கப்பட்ட அங்கமாலி டைரிஸ் இந்த ஆண்டின் முக்கிய மலையாளப் படங்களில் ஒன்று.ஞாபகமொழிதல் திரைவரிசையில் அங்கமாலி டைரிஸ் கச்சிதமான திரைமொழியோடு ஈர்த்தது.பலசரங்களாய்ப் பிரிந்து இணையும் திரைக்கதை குழப்பமற்ற சொலல் முறை ஆகியவற்றுக்கான நேர்த்தியான உதாரணமாக இந்தப் படத்தை மாற்றிற்று.நாயகத் தோன்றல் ஆண்டனி வர்கீஸ் மாத்திரமல்ல...ராஜன் மற்றும் ரவியாக தோன்றிய டிட்டோவில்சன் சரத்குமார் இருவரும் தவிர்க்க முடியாத ஆளுமைகள்.பிரசாந்த் பிள்ளையின் பின்னணி இசையும் கிரிஷின் ஒளிப்பதிவும் கூடவே இந்தப் படத்தை தனியொரு மனவர்ணத்தில் நம்முள் நிகழ்த்தின.நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் எழுதிய திரைக்கதையை இயக்கியவர் லிஜோ ஜோஸ் பெளிசேரி.

 

4.தி க்ரேட் ஃபாதர்

மம்முட்டி ஷ்யாம் ஆர்யா ஸ்னேஹா மற்றும் பலர் நடித்த இதனை இயக்கியவர் ஹனீஃப் அதேனி.இசைத்தவர் கோபி சுந்தர்.குழந்தைகளின் மீதான வன்முறை.தீராத தேடலின் பின்னால் சென்றடையக் கூடிய இறுதிக் கட்டத்தில் வில்லனை வதைத்து அழிக்கும் நாயகன்.குருதியின் மணமும் வலியும் காண்பவர் கண்களுக்கு மாற்றித் தரும் பட்சத்தில் அது திரைப்படத்தின் வெற்றி தான்.அந்த வகையில் இந்தப் படம் மம்முட்டியின் மற்றுமொரு முக்கியமான பாத்திரம் மற்றும் படம்.

5 புத்தன் பணம்

நம்மூர் கொங்கு தமிழ் போல நெல்லைத் தமிழ் போல தனித்தொலிக்கும் மலையாளம் காஸர்கோட்வாசிகளுடையது.அப்படியான காஸர்கோட்டு நித்யானந்த ஷெனாய் எனும் பாத்திரத்தில் மம்முட்டி மிளிர்ந்த படம் புத்தன் பணம்.டீமானிடைசேஷன் எனப்படுகிற 1000 மற்றும் 500 ரூ செல்லாமற் போன அந்த ஒரு இரவில் தொடங்கி நிலைபெறுகிற படத்தின் கதை இரண்டாம் பாகத்தில் ஒரு சின்னப்பையனின் கைக்குச் சென்று சேர்ந்து விடுகிற ஷெனாயின் துப்பாக்கி அதனை அந்தப்பையனிடமிருந்து வலிதராமல் திரும்பப் பெறுவதற்காக முயலும் ஷெனாய்.கூடவே பய்யன் வாழ்வில் ஊடே வரும் வில்லன்ஸ் அவர்களை அதகளம் செய்யும் மம்முட்டி என வழமையான படம் என்றாலும் வசனங்களுக்காகவும் எதிர்பார்க்கத் தேவையற்ற திருப்பங்களுக்காகவும் ரசிக்க வைத்த படம்.மம்முக்கோயா இனியா சித்திக் பைஜூ அபுசலீம் விஜயகுமார் கோட்டயம் நசீர் எனப் பலரும் கவனிக்க வைத்த படம்.முக்கியமாக Swaraj Gramika என்ற பேரிலான அந்தப் பையன்..அவன் கண்கள்.கபடமற்றவனின் கரங்களில் ஒரு துப்பாக்கி.

 

6.ஒரு சினிமாகாரன்

 

ஆல்பியாக வினீத் சீனிவாசன் அவரது காதல் இணையாளாக ரஜிஷா விஜயன்(கண்கள் அல்ல gunகள்) சினிமா அசிஸ்டண்ட் இயக்குனராக எளிமையான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று தன்னாலான அளவுக்கு இயல்பாகப் பரிமளித்திருக்கும் வினீத் மலையாள சினிமாவின் முக்கியஸ்த எதிர்காலர்களில் ஒருவர் என்பதில் ஐயமே இல்லை.சர்ரென்று வரும் ஒரு ட்விஸ்ட் சாமான்ய வாழ்வில் நிகழும் ஒரு கொலை அதன் பின்னால் ஊசலாடும் ஆல்பியின் உயிர் மறுபடி க்ளைமாக்ஸில் நிகழும் ட்விஸ்ட் எல்லாவற்றையும் கொண்டு போய் ஆல்பியின் சினிமாவோடு இணைக்கும் புள்ளி என குறைந்த செலவில் நறுக்கென்று ஒரு த்ரில்லர் ஒரு சினிமாகாரன்.

7 தொண்டி முதலும் திர்சாக்ஷியும்

இதனைத் தமிழில் எடுப்பதாக இருந்தால் பெயருக்கான என் பரிந்துரை ரெண்டு ப்ரஸாதும் ஒரு சங்கிலியும்.

காதல் திருமணத்திற்கு அடுத்து மனைவியுடன் புதுக்குடித்தனத்துக்குள் புகும் வழியில் ஒரு ப்ரஸாதும் அவனுடைய மனைவியும் சூரஜ் வெஞ்ஞிரமூது மற்றும் நிமிஷா சஜயன் இருவரும் பயணிக்கிற பஸ்ஸில் பின் சீட்டில் அமர்கிற சங்கிலித் திருடன் ப்ரஸாத் ஃபகத் ஃபாஸில் தூக்கக் கலக்கத்தில் இருக்கும் நிமிஷாவின் கழுத்திலிருக்கும் அவர்களது ஒரே சொத்தான தங்கச் சங்கிலியை அபேஸ் செய்து தன் வாயினுள் இட்டுக் கொள்கிறான்.பஸ் நிறுத்தப்படுகிறது.போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று புகார் தருகிறார்கள்.விசாரணை நடக்கிறது.அடுத்து வருகிற இரண்டு தினங்களில் ஸ்டேஷன் தம்பதியினர் மற்றும் அந்தத் திருடன் ஆகியோரிடையே நிகழ்கிற சம்பவங்களே திரைக்கதை.

இந்த வருடத்தின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று இது.சூரஜ் ஃபகத் மற்றும் நிமிஷா மூவரும அதிரிபுதிரி பர்ஃபார்மன்ஸ்..மேலும் ஏட்டய்யாவாக வரும் கேடீ சுதாகரன் ஒரு கில்லி.

படம் முடியும் போது எதாவதொரு கனம் மனசை அழுத்தியதென்றால் நீங்கள் ஒரு சாமான்ய நல்லவர்.

 

8.வெளிப்பாடிண்டே புஸ்தகம்

 

அதான் ஸாரே ஜிமிக்கி கம்மல் கண்டம் கடந்தொலித்ததல்லவா..?அந்தப் பாடலைத் தனதே கொண்டது இந்தப் படமே.மோகன் லால் அனூப் மேனன் சலீம்குமார் அப்பானி சரத் ப்ரியங்கா குமார் மற்றும் பலர் நடித்த இதனை இயக்கியவர் லால் ஜோஸ்.இசைத்தவர் ஷான் ரஹ்மான்.

எண்டம்மேடே ஜிமிக்கி கம்மல் நம்ம ஊரின் இரண்டு பாடல்களை மிக அழகாய்ச் சேர்மானம் செய்யப்பட்ட பாடலாக்கும்

செல்ஃபி புள்ள செல்ஃபி புள்ள பாடல் மேலோட்டமாய்க் கேட்கும்போது புரிந்து விடுகிறது.ஆனாலும் இதன் தொடர்ந்த மையக் கட்டுமானம் வேறொரு பாடல்.அதையுமிதையும் இணைத்து இருப்பது புத்திசாலித் தனம்.அந்தப் பாடலின் டெம்போவை சற்றே அதிகரித்திருப்பது ஆல்டரேஷன்ஸ் ஆஃப் அவ்விடே.

மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தின் கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை பாடலையும் செல்ஃபி புள்ளையையும் ஒரே பாத்ரத்துல குல்ஃபி பண்ணிய பாட்டுத் தான் எண்டம்மேடே ஜிமிக்கி கம்மல்.

https://www.youtube.com/watch?v=FXiaIH49oAU

ஒரு கொலை நடக்கிறது.கொல்லப்பட்டவனின் கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதையைத் திரைப்படமாக அந்த மனிதனின் பெருமுயல்வால் தோற்றுவிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள் எடுக்கிறார்கள்.கொல்லப்பட்ட விஸ்வனாக நடிக்கத் தேர்வாகிறவர் தற்போதையை கல்லூரி வைஸ் பிரின்ஸ்பல் ஃபாதர் மைகேல் இடுகிலா.கல்லூரி நல நிதிக்காக நிஜமான திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கலாம் எனும் போதே படம் ஜிவ் மற்றும் விர்றென்றாகிறது.கொல்லப்பட்டவனின் ஆன்மா தன் பாத்திரத்தில் நடிப்பவரின் மூலமாகப் பேச முயலும் மொழிதலே வெளிப்பாடிண்டே புஸ்தகம்.மோகன்லால் அடக்கி வாசித்திருக்கும் படம்.சர்வதேசங்களிலும் ஜிமிக்கி கம்மல் ஸ்கோர் செய்து தந்துவிட்டது.அதனைத் தவிர சிற்சில பற்பல காட்சிகளும் மௌனங்களும் வசனங்களும் அழகு.,குறிப்பாக வெயில் படத்தில் தங்கம் என்ற பேரில் காணாமற் போன ப்ரியங்கா நாயரை இந்தப் படத்தில் ஜெயந்தியாக காண நேர்ந்தது சுகசந்தோஷம்.

9 ஷெர்லக் டாம்ஸ்

ராஃபி ஷஃபி சகோதரர்களில் ஷஃபி தமிழில் மஜா என்ற படத்தை இயக்கியவர்.அவரது சமீபத்திய படம் ஷெர்லக் டோம்ஸ்.ஒரு முழுமையான அங்கதத் திரைப்படம்.தமிழில் எப்போதாவது நேர்த்தப் படுகிற வகையறா படம்.அங்கே கேரளத்தில் அடிக்கடி.

இரண்டு ட்ராக்குகள்.தனக்குள் மறைந்திருக்கும் ஷெர்லக் ஹோம்ஸை உலகத்திற்கு வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் தாம்ஸ் பீ.எல்.அவன் மீது ரொம்பவே ப்ரியமாக இருக்கும் வாத்தி சுகுணன் (கலாபவன் சாஜன் த்ரிஷ்யத்தில் கான்ஸ்டபிள் சகதேவனாக வருவாரே) மசால் தோசையெல்லாம் வாங்கித் தந்து டாம்ஸை அழைத்துச் சென்று திரும்பினால் பணப்பையைக் காணம்.பழி டாம்ஸ் மீது விழுகிறது.தன் நேர்மையை அவன் நிரூபிக்கையில் சுகுணன் மாஸ்டரின் லீலை ஒன்றும் சேர்த்து வெளிப்பட அவருக்கு வேலை போகிறது டைவர்ஸ் ஆகிறது.பரமக் குடியர் ஆகிறார்.இதற்கிடையே டாம்ஸை அவர் சபிக்கிறார்.நீ என்ன ஆவே பார் என்று அவரது சாபம் அவனை துரத்துகிறது.

அடுத்த ட்ராக் வேறொரு பரீட்சை சம்பவத்தினால் படிப்பு பாதியில் நிற்க சலீம் கோஷ்டியுடனான சகவாசம் நேர்கிற டாம்ஸ் விடாமல் படிக்கிறான்.எஸ்.ஐ ஆக வேண்டும் என்ற அவனது கனவு உடைகிறது.அப்பாவின் வற்புறுத்தலால் ஐபீ.எஸ் ஆகலாம் என்று பரீட்சை எழுதி ஐ.ஆர்.எஸ் அதாவது இந்திய வருவாய்த் துறையில் அதிகாரி ஆகிறான்.திருமணம் ஆகிறது.வருபவள் நீ என்னைத் தொடணும்னா 60லட்சம் பாலன்ஸ் ஒரு 4 பெட்ரூம் ப்ளாட்டு எல்லாம் கொண்டா இல்லாட்டி கெளம்பு என்று அவனை நிர்பந்திக்கிறாள்.மண வாழ்வு கசக்கிறது.அவளது புரிதலின்மை அவன் வேலையில் முக்கியமான ஒரு ரெய்டில் சொதப்பி டாம்ஸ் வேலை சஸ்பெண்ட் ஆகிறது.வாழ்க்கை அந்தரத்தில் ஆடுகிறது.

தாமஸூக்கு வாழ்க்கை வெறுக்கிறது.தற்கொலை முடிவை நோக்கிப் போகிறான்.இதன் பின் தான் செகண்ட் ஹால்ஃப்.

அதாவது நான் சொல்லி இருக்கும் அதே கதை தான்.துன்பத்தினூடான நகைச்சுவை என்பது எப்போதுமே கத்தி மீது நடக்கும் அபாய ஆட்டம்.அது ஷாஃபிக்கும் இக்கதையை எழுதிய குழுமத்துக்கும் கைவந்த கலையாயிருக்கிறது.நெடு நாட்களுக்குப் பின்னால் மனசு விட்டுச் சிரித்து சப்தமாய்க் கத்தி எஞ்சாய் செய்தது இந்தப் படம் தான்.

உறுத்தாத இசையும் ஒளிப்பதிவும் இரண்டு இடங்களில் நல்ல வருடலாய் வந்து செல்லும் பாடல்களும் இதம்.பிஜூ மேனன் மீது வாஞ்சையும் ப்ரியமும் ஏற்படும் அளவுக்கு முற்று முதலான நல் நடிப்பு.அடிபொலி ஸாரே...

சலீம் சுனில் பாபு விஜயராகவன் மாலி கண்ணாமலி கோட்டயம் நஸீர் மற்றும் ஹரீஷ் பெருமுண்ணா சுரேஷ் கிருஷ்ணா என சிறிதும் பெரிதுமாய் எல்லோருமே உணர்ந்து தந்திருக்கும் பங்கேற்பு ரசம்.

படத்தின் கடைசி பத்து நிமிடம் அழகான ட்விஸ்ட்.

10 ராமலீலா

எல்லோரும் திட்டிக்கொண்டிருந்த ஒரு கிழமையில் இந்தப் படம் வெளியானது.திலீப் நடித்த இது ஓடவே ஓடாது என்றார்கள்.அடிபொலி.கேரளத்து ரிக்கார்டுகளைக் கிழித்தது.திலீப் ஏற்றிருக்கக் கூடிய வக்கீல் ராமனுண்ணி கதாபாத்திரம் தன்னை மெய்ப்பித்துக் காட்டுகிற ஒரு இளைய அரசியல்வாதியின் கதை.அரசியல் த்ரில்லர்கள் கேரளத்தில் அவ்வப்போது கிட்டும்.நம் ஊரில் ரொம்ப ரேர்.

மறைத்து வைக்கப்பட்டிருக்கிற கேமிராக்கள் என்று இரண்டாவது பகுதி ஆரம்பிக்கும் போது போச்சு படம் அவுட்டோ என்று டவுட்டே வருகிறது.ஆனால் அதையே புத்திசாலித்தனமாகத் தன் படத்தின் பெருவெற்றிக்குக் காரணமாக்கிக் கொண்டிருப்பது இயக்குனர் அருண்கோபியுடைய சாமர்த்தியம்.இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ கலாபவன் ஷாஜன்.இப்படி ஒரு நடிகர் வேறெங்கும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதிரிபுதிரி பர்ஃபார்மன்ஸ்..மேலும் எல்லாக் கவிதைகளை விடவும் அழகான தேன் நிறத்துத் தேவதை பிரயாகா மார்ட்டின்(இவருக்குத் தான் இப்போது ரசிகன் ஆகி இருக்கிறேன்.முந்தைய அத்தனை நட்சத்திரங்களையும் ப்ளர் ஆக்கிய ஒரே ஒரு ஸ்டாருட்டி......மிடுக்கி..!)
ஒரு முழு நீள எண்டர்டெய்னர் இந்தப் படம்.பெருந்திரையில் காணவாய்த்தோர் பேறுபெற்றோர்.சிறுதிரையென்றாலும் பரவாயில்லை கண்டு களித்து உண்டு உய்க்கட்டும் சினிமே ரசிக பட்டாளம்.அல்லே..,பின்னே?


11 ஆடம்ஜான்

ப்ரித்விராஜ் நடித்த ஆடம்ஜான் அவரது ஒற்றை பங்கேற்பில் படம் மொத்தத்தையும் தூக்கி நிறுத்தி இருப்பார்.துன்பத்தின் கவிதை இந்தப் படத்தின் நிறைவுக்கணம் கண்கலங்கும்.ஐரோப்பிய சாலைகளும் நகரங்களும் பனி பொழியும் காட்சிகளுமாய் வேறோர் லோகத்தில் நிகழும் கதையாக ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது மைனஸ்.
எதிர்பார்க்கக் கூடிய ட்விஸ்ட் அவிழ்ந்த பிற்பாடு படம் ரொம்ப மெதுவாக நகரத் தொடங்கிவிடுகிறது.என்றாலும் ப்ருதிவியின் நடிப்பு அபாரம்.

மற்றபடிக்கு

விமானம்     C/O சாய்ராபானு    வில்லன்    புள்ளிக்காரன் ஸ்டாரா   
பறவா    அச்சயன்ஸ்    கோதா   சத்யா    எஸ்ரா

ஆகியனவும் பார்க்கலாம்.பார்த்தே ஆகவேண்டும் என்பதற்கு அடுத்த சாய்ஸ்.

Last Updated (Tuesday, 02 January 2018 13:11)