புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

5 யாருடைய பாடல்?

எழுதிச் செல்லும் கரங்கள்

5 யாருடைய பாடல்?

 

ஏன் இத்தனை புத்தகப் பித்து.குளிக்கையிலோ சாப்பிடும் போதோ அல்லது கிளர்ச்சியான ஒரு காதல் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதோ ஒரு செல் அழைப்பு வருகிறது.ம்ம்..சரி வரேன்.ஓகே என்று சிக்கனமான வார்த்தைகளைப் பேசிவிட்டுக் கிளம்புகிறேன்.ஒரு புதிய காதலியுடனான களவுக் காண் பொழுதுக்குச் சற்றும் குறைவானதில்லை அந்தப் பயணம்.ஓரிடத்தில் வாகனத்தைப் பார்க் செய்துவிட்டு மெல்ல நடக்கிறேன்.திரும்பத் திரும்பப் பார்த்துக் கொள்கிறேன்.என்னை யாரும் கவனித்துப் பின் தொடரவில்லை என்பது எனக்குத் தெரியும்.எனக்குத் தான் தெரியாது.

அங்கே காத்திருக்கும் ஒருவன் புன்முறுவலுடன் என்னைக் கைபிடித்து வரவேற்கிறான்.எனக்காகத் தான் அவன் அந்த நாள் முழுவதும் காத்திருந்தான் அது எனக்கும் தெரியும்.நான் அவனை வேண்டுமென்றே சில மணித்துளிகள் காத்திருக்கச் செய்வேன்.அவன் என்னைப் பல மாதங்கள் ஏன் சிற்சில வருடங்கள் கூடக் காக்க வைப்பவன்.இதென்ன முரண்?இது தான் நிஜம்.அவன் ஒரு பழைய புத்தக வியாபாரி.என் அத்யந்த சினேகிதன்.என் அறிவாற்றங்கரையில் தன் தோணிகளைக் கொண்டு எனக்காக நீர்கிழிப்பவன்.அப்படி இருக்கையில் அவனை நானேன் காக்கச் செய்ய வேண்டும்..?வேறென்ன செய்வது?அவன் என்னைக் காக்க வைக்கவில்லை.உண்மையில் என்னைக் காக்க வைப்பவை புத்தகங்கள்.அவற்றை என்னால் பழிவாங்க இயலாது.அதனால் அவற்றின் மீதான வஞ்சவஞ்சகங்களை பாவம் அந்த வியாபாரி மீது காட்டியாக வேண்டி இருக்கிறது.இது காகிதக் காதலின் இன்னுமோர் ஆபரணம்.

நான் சென்றடைந்தது அவனது புத்தக விற்பனைக் கடை.அங்கே பெரும்பாலான புத்தகங்கள் நான் ஏற்கனவே கண்களால் வருடிக் கைகளால் தழுவியவை.அங்கிருந்து நாங்கள் போனது குடோவ்ன் எனப்படுகிற சேர்மானக்கூடம்.அங்கே அப்போது வந்து சேர்ந்திருந்த பொதிகளை ஒவ்வொன்றாக அவிழ்த்துக் காட்டினான்.ஒரு மாதத்துக்கு முன்பு தான் நண்பர் ஒருவரின் ப்ரத்யேக சேகரம் ஒன்றிலிருந்து சினிமா புஸ்தகங்களை நகலெடுப்பதற்காகத் தேடிச் சலித்த போது வினோதமான நுண்பூச்சிகள் மூக்கைச் சுற்றி ஒவ்வாமை நேர்த்திப் பத்து நாட்கள் முகம் ஒரு பழம்தாங்கி போல் ஆனது.இன்னும் கடுப்பை ஏற்றுகிற விதமாக நான் தொடமாட்டேன்.தள்ளி இருந்தே பார்த்துக்கிறேன் என்று அடிக்கடி என் மகன் வேறு வந்து பார்த்து விட்டுப் போனது தான்.ஒரு நாளைக்குப் பத்திருபது முறைகள் வந்து பார்த்துச் செல்வதை ஒரு வழக்கப் பழக்கமாக வைத்துக் கொண்டான்.நான் என் பழம் எப்போது மறுபடி காய்த்துப் பூத்துக் காணாது போகும் என்று உள் ஏக்கம் ஏங்கினேன்.

ரசனை என்னும் சொல் எத்தனை அலாதியானதோ அத்தனைக்கத்தனை ஆராயத் தக்கதும்.சிறுவயதில் பிக்ஃபன் என்றோர் பபுள்கம் அதோடு ஒரு சின்னப் பேப்பர் வரும்.ஆறு ரன் நாலு ரன் என்றெல்லாம் அச்சிடப்பட்டிருக்கும்.அவற்றை வெறி கொண்டு சேர்த்தவர்களில் அடியேன் ஒருவன்.பிற்பாடு சேகர சன்னிதானத்தின் மூலவர்கள் மாறிக்கொண்டே இருந்தார்கள்.சேகரித்தல் அப்படியே தொடர்கிறது.நெடுங்காலத் தீர்மானம் புத்தகங்களின் பின்னால் அலைவது.எதைத் தேடி இந்த முன் இரவில் இங்கே குடோவ்னில் நின்றுகொண்டிருக்கிறேன் எனத் தெரியவில்லை.ஆனாலும் இரயிலில் ஏறி அமர்கிற கணங்களுக்கு ஒப்பான இன்பதுன்ப அவஸ்தைக் கணம் அது.என்ன கிடைக்கும் எனத் தெரியாது.என்னவாவது கிடைக்கும் என்று தேடுவது.

கைவிடப் பட்ட புத்தகங்கள் அங்கே மலைபோலக் குவிந்திருந்தன.வரலாறு தமிழ் மொழி இலக்கணம் ஒப்பிலக்கியம் எனப் பல்வேறு தலைப்புகளில் இருந்த புத்தகங்களில் இருந்து எனக்கெனக் காத்திருந்த நூற்றிருபது நூல்கள் மாத்திரம் எடுத்துக் கொண்டு பேரம் பேசிப் பொய்யாய் அழுது காசைக் கொடுத்துக் காரிலேற்றி வீட்டின் உள்ளே அவற்றை அனுமதிக்காமல் வாசல்புறத்திலேயே மூட்டையை வைத்தாயிற்று.அடுத்த இரண்டு தினங்கள் சிரமேற்கொண்டு அவற்றை எடுத்து அட்டைகளைப் பிய்த்து பூச்சிகளை வடிகட்டித் தட்டிக் கொட்டி வெயிலில் காட்டி ரப்பர் பேண்டு அணிவித்து நேரே பைண்ட் செய்பவரிடம் கொண்டு சேர்ப்பித்து அடுத்த ஐந்தாவது நாள் அத்தனையும் யூனிஃபார்ம் அணிந்த குழந்தைகளாக சமர்த்தாக உள்ளே நுழைந்து எதாஸ்தானம் ஏகின.

மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள்
முதற்பதிப்பு 2009 தொகுப்பு ச.முருகபூபதி பாரதி புத்தகாலய வெளியீடு.

பாஸ்கரதாஸ் மதுர கவி என்றும் மதுரைக்கவி என்றெல்லாமும் அன்போடு அழைக்கப்பட்டவர்.கவிதாமேன்மைக்காகப் பலராலும் சிலாகிக்கப் படுகிறவர்.பாடல்களுக்கான பிரதான காலத்தின் இறுதித் திரை பிம்பங்களில் அவருமொருவர்.நேராய்ச் சொல்வதானால் சினிமாவுக்கு முன்னும் பின்னுமான திரிசங்குக் காலத்தில் கோலோச்சிய மாபெருங்கவிகளில் ஒருவர்.இவரது 34 வருடங்களின் டைரி எனப்படுகிற நாட்குறிப்பை அவரது பெயரனும் நாடகமுனைவருமாகிய ச.முருகபூபதி தொகுத்துள்ளார்.முன் பழைய காலம் ஒரு மூத்த கதைசொல்லியைப் போலாகி இந்த டைரியின் பக்கங்களிலெல்லாம் நடந்தும் நகர்ந்தும் சிரித்தும் முறைத்தும் அழுதும் அரற்றியும் பேசியும் மௌனித்தும் கைபிடித்து நம்மை எல்லாம் அழைத்துச் செல்கிறது.காலத்தின் கணக்குகள் எதுவும் அறியாத ஒரு கலைஞனின் தினசரி நகர்வுகளின் ஊடாக நம்மால் வரைந்து கொள்ள முடிகிற  சித்திரம் உன்னதமானது.இன்னும் நூறு வருடங்களுக்கு அப்பால் என்ற சொற்றொடரே ஐஸ்க்ரீம்தீயாய்க் கொதித்துக் குளிர்கிறது.இந்த நூலின் புனைவற்ற நிஜங்கள் ஒரு முழுமையான புனைவின் வாசிப்பின்பத்தை நமக்குள் நிகழ்த்துவது தான் காலம் என்னும் பழுப்பு நிறக் கண்களை உடைய முதியவனின் சமர்த்து.


காகிதம்

எழுதியவர் வெ.இறையன்பு இ.ஆ.ப 
என்.சி.பி.ஹெச் வெளியீடு விலை ரூ 50

காகிதம் என்ற தலைப்பே ஈர்க்கிறது.எழுதியவர் இறையன்பு.கேட்கவா வேண்டும்..?மிகச் சுருக்கமாக அதே நேரம் தீர்க்கமாகக் காகிதத்தைப் பற்றிய அழகான நூலாக இதனைத் தந்திருக்கிறார்.காகிதத்தின் வரலாற்றில் தொடங்கி இந்த நிமிடம் வரைக்குமான நதியோட்டமாக இந்த நூல் இருப்பது அழகு.காகிதத்தை எப்படிப் பயன்படுத்தவேண்டும் எப்படி வீணாக்கக் கூடாது எவ்வாறு போற்ற வேண்டும் எனப் பல கிளைத்தல்களுடன் செல்கிறது இந்த நூல்.

"எங்களோடு படித்த ஒரு மாணவன் மிகவும் பயபக்தியோடு இருந்ததால் அவன் படுத்துக் கொண்டிருக்கும் போது வேண்டுமென்றே எங்கள் பாடப்புத்தகத்தை அவன் காலில் வைத்துவிட்டு ஓடுவோம்.அதைத் தொட்டுக் கும்பிடுவதற்காக எங்களை அவன் துரத்துவான்."

காகிதத்தைக் கண்டுபிடித்தது ஒரு திருநங்கை எனும் உண்மையை இந்த நூலின் இறுதிப் பாராவில் வைக்கிறார் இறையன்பு.எல்லோருக்குமான எளிய நூல்கள் ஒரு மொழியின் செல்வம் என்றால் தகும்.அந்த அளவில்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட் வெளியீடாக வந்திருக்கும் காகிதம் விலை ரூ 50 முழுவதும் வண்ணத்தில் எல்லோருக்குமான புத்தகங்களின் வரிசையில் இடம்பெறுகிறது. வாசிக்க வேண்டிய நூல்

எக்ஸ்டசி

கட்டுரைகள்

எழுதியவர் சரவணன் சந்திரன்

தொகுப்பு இளங்கோவன் முத்தையா

தமிழின் சமீபத்திய எழுத்தாளர் வரவுகளில் முக்கியமான பெயர் சரவணன் சந்திரன்.ஒருங்கே தனது புனைவுகளுக்காகவும் அ-புனைவுகளுக்காகவும் குறிப்பிட வேண்டியவராகிறார்.இன்றைய வேலிகளற்ற உலகத்தின் அலைதல் மனோநிலையைப் பிரதிபலிக்கிற கட்டுரைகளை அழகாகத் தொகுத்து நூலாக்கி இருப்பது சிறப்பு.காலத்தின் ஊடுபாவுகளை சம்பவங்களைக் கொண்டு அடுக்கியபடியும் கலைத்தபடியும் செல்வது கட்டுரைகளின் பொதுத் தன்மையாகிறது.வாசிக்கிறவர்களுக்குத் தெரிந்ததும் பகுதி தெரியாததுமான உண்மைகளை அவற்றின் படர்க்கை பதிவுகளின் மூலமாக அபிப்ராய நிர்ப்பந்தங்கள் எதுவும் இன்றி ஒரு நடுவாந்திர நம்பகத்தை ஏற்படுத்தியபடி செல்கிற கட்டுரைகள் இவை.கற்பித்துப் பண்படுத்தித் தீர்க்கமான அறிதல் புரிதல்களை நிகழ்த்தி இவையெல்லாம் அல்லாது ஒரு பயண நேரத்து அரட்டையின் வாயிலாக இயல்பாக ஏற்படச் சாத்தியமாகும் சன்னமேதமையை முன் நிறுத்திகிற இக்கட்டுரைகள் தமிழின் புதுவரவுகள்.

கிழக்கு பதிப்பக வெளியீடு ரூ 250

கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்

வெய்யில்
மணல் வீடு வெளியீடு
ரூ 80

எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே என்ற அழகான தொல்காப்பிய வாக்கியத்தோடு இந்தப் புத்தகம் நம்மை வாசிக்க ஆரம்பிக்கிறது.முதல் வாசிப்பில் மிகக் கடுமையானவை போன்ற தோற்றத்தைப் பெருவாரிக் கவிதைகள் ஏற்படுத்துகின்றன. என்றாலும் ஆழ்ந்த மௌனத்தோடு இவற்றில் மறுபடி பயணிக்கையில் பல்வேறு வெளிச்சங்களைத் திறந்து தருகின்றன.தமிழில் கவிஞர்கள் பெருத்து விட்ட இந்தக் காலத்தில் கவிதைகள் குறுகியும் இருப்பது சொல்ல வேண்டிய விஷயம் தானே?வெய்யில் தன் கவிதைகளுக்கு ஒப்பனை செய்யவில்லை.உள்ளவற்றை அப்படியே அனுமதிப்பதில் ஒரு கவிஞனின் பெரும் மனப்போராட்டம் கலந்திருக்கிறது.கருணையே இல்லாமல் தன்னை அணுகுவது கவிதைகளுக்கு உயிர்பாய்ச்சுகிறது.

ஆனாலும்  வெப்பமடங்காத அந்திச் சாலையில்
என்னையறியாமல் என் நா அந்தப் பாடலை ஏன் பாடுகிறது
அந்த ராகத்திற்கு இந்த மனம் ஏன் அலைகிறது
உண்மையைச் சொல்லுங்கள்
அது தோற்றுப் போகிறவர்களின் பாடலா அப்பா?

வெய்யிலின் சொற்கள் நாம் நன்று அறிந்தவை தான்.அவை நம்முடைய மனங்களிலும் விம்முகிறவை தான்.நம்மால் கேட்கமுடியாமற் போகிற தருணங்களைக் கண்டறிந்து சாட்சியப் படுத்துகிற வெய்யிலின் கவிதைகள் நமக்கான வழக்காடல்களும் கூட.

டெல்மீரா அகஸ்தினி (October 24, 1886 - July 6, 1914), 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப லத்தீன் அமெரிக்க கவிசொல்லிகளில் முதன்மையானவர்.பிறப்பால் உருகுவேயைச் சேர்ந்த அகஸ்தினி 27 வருடங்களே மண்ணில் வாழ்ந்தார்.ஆண் மையவாதப் பிடிவாத காலங்களில் அவற்றைத் தகர்க்கிற நெஞ்சுரப் படைப்பாளிகளில் ஒருவராகக் கொண்டாடப் படுகிற பெண்ணியவாதப் படைப்பாளுமை அகஸ்தினி.திருமண பந்தத்தை ஒரே மாதத்தில் முரண்பட்டுப் பின் மணமுறிவு மேற்கொண்ட அகஸ்தினி தன் முன்னாள் கணவனால் இருமுறை சுடப்பட்டு உயிரை இழந்தார்.அகஸ்தினியைக் கொன்றபடி தானும் தற்கொலை செய்து கொண்டான் ஜோவ் ரேயாஸ்.

ஓவியத்திலும் இசையிலும் பெரும் ஈடுபாடு கொண்டவரான அகஸ்தினியின் கவிதைகள் அவருடைய வாழ்வெனும் கலயத்தில் அவர் விட்டுச் சென்ற சொற்கொடைகள்.அவற்றில் முக்கியமான இரு கவிதைகள் இங்கே தென்றல் சிவக்குமாரின் மொழி பெயர்ப்பில் நமக்காக.

1  I live, I die, I burn, I drown

I live, I die, I burn, I drown

I endure at once chill and cold

Life is at once too soft and too hard

I have sore troubles mingled with joys

Suddenly I laugh and at the same time cry

And in pleasure many a grief endure

My happiness wanes and yet it lasts unchanged

All at once I dry up and grow green

Thus I suffer love's inconstancies

And when I think the pain is most intense

Without thinking, it is gone again.

Then when I feel my joys certain

And my hour of greatest delight arrived

I find my pain beginning all over once again.

Delmira Agustini

நான் வாழ்கிறேன், இறக்கிறேன், பற்றியெரிகிறேன், மூழ்குகிறேன்.

ஒரே சமயத்தின் வெப்பத்துக்கும் குளுமைக்கும் தாக்குப்பிடிக்கிறேன்

ஒரே வாழ்க்கை அதி மென்மையாகவும் பெருங்கடினமாகவும் இருக்கிறது.

மகிழ்ச்சியுடன் கலந்திருக்கும் பெருந்தொந்தரவுகள் என்னிடமிருக்கின்றன.

திடீரென்று சிரிப்பேன், அப்போதே அழுவேன்

ஒவ்வொரு மகிழ்வுக்குள்ளும் பலப்பல துக்கங்களைத் தாங்குகிறேன்

மறைந்து கொண்டிருந்தாலும், மாறாதிருக்கிறது என் மகிழ்ச்சி

உலர்ந்து கொண்டிருந்தாலும் வளர் பசுமையும் கொள்கிறேன் நான்.

அன்பின் சமன் குலைவால் இவ்வாறு நான் துன்புறுகிறேன்

வலியின் உச்சம் இதுதான் என்று நினைக்கையில்

எதுவும் நினைக்காமல் வலி மறைகிறது.

பின்னர், மகிழ்ச்சி நிச்சயம் என்றும்

ஆகச் சிறந்த மகிழ் தருணம் வந்துவிட்டதென்றும் உணர்கையில்,

ஆதியிலிருந்து தொடங்குகிறது என் வலி.

2 Nocturno (Nocturne ) - Poem by Delmira Agustini

Outside the night, dressed in tragedy, sighs

Like an enormous widow fastened to my windowpane.

My room...

By a wondrous miracle of light and fire

My room is a grotto of gold and precious gems:

With a moss so smooth, so deep its tapestries,

And it is vivid and hot, so sweet I believe

I am inside a heart...

My bed there in white, is white and vaporous

Like a flower of innocence.

Like the froth of vice!

This night brings insomnia;

There are black nights, black, which bring forth

One rose of sun...

On these black and clear nights I do not sleep.

And I love you, Winter!

I imagine you are old,

I imagine you are wise,

With a divine body of beating marble

Which drags the weight of Time like a regal cloak...

Winter, I love you and I am the spring...

I blush, you snow:

Because you know it all,

Because I dream it all...

We love each other like this!...

On my bed all in white,

So white and vaporous like the flower of innocence,

Like the froth of vice,

Winter, Winter, Winter,

We fall in a cluster of roses and lilies!

இரவின் இசை

துயரத்தை உடுத்திக்கொண்டு பெருமூச்செறிகிறது

வெளியிலிருக்கும் இரவு

என் சாளரக் கதவோடு இணைந்திருக்கும்

மகத்தான விதவையைப் போல

என் அறை...

ஒளியும் நெருப்புமாக வியப்பூட்டும் அதிசயமாய்த்

தங்கமும், விலையுயர் கற்களும் நிரம்பிய குகை போலாகிறது என் அறை:

மென் பாசியும், ஆழ் திரைச்சீலைகளும், தெளிவும், வெப்பமும்,

எத்தனை இனிமையெனில்

நான் ஓர் இதயத்தினுள் இருப்பதாய்

என்னால் நம்ப முடிகிறது...

வெண்ணிறத்துப் படுக்கை எனது, வெண்மையாக நீராவியாக

தூய்மையின் பூவைப் போல.

கயமையின் நுரையைப் போல!

இவ்விரவு தூக்கமின்மையத் தருவிக்கிறது;

இரவுகள் கருமையாயிருக்கின்றன, நுரைக்கும் கருமை

சூரியன் எனும் ரோஜா எழும்வரை...

இக்கரிய தெள்ளிய இரவுகளில் நான் உறங்குவதில்லை.

குளிர்பருவமே, உன்னை நான் நேசிக்கிறேன்!

உனக்கு வயதாகிவிட்டதாகக் கற்பனை செய்கிறேன்,

உனக்கு ஞானமிருப்பதாகக் கற்பனை செய்கிறேன்,

காலத்தின் கனத்தை ஒரு கம்பீரமான அங்கியைப் போல இழுத்துச் செல்லும்

தொய்ந்த, பளிங்கினாலான தெய்வீக உடலுடன்...

குளிர்பருவமே, உன்னை நான் நேசிக்கிறேன், நான் தான் வசந்தம்...

நான் வெட்குகிறேன், நீ பனிப் பொழிகிறாய் :

ஏனெனில் உனக்கு எல்லாம் தெரியும்

ஏனெனில் எனக்கு எல்லாம் கனவே...

நாம் ஒருவரை ஒருவர் இவ்வாறு நேசிக்கிறோம்!

வெள்ளை நிறத்து நீராவி போன்ற, தூய்மையின் பூவைப் போன்ற,

கயமையின் நுரையைப் போன்ற

என் வெண்ணிறப் படுக்கையின் மேல்,

குளிர்பருவமே, குளிர்பருவமே, குளிர்பருவமே

கொத்துக் கொத்தான ரோஜா, அல்லிப்பூக்களின் ஊடாக நாம் விழுகிறோம்!

ஏன் பெரும் கவிஞர்கள் சின்னஞ்சிறு வயதுகளில் இறக்க நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்..?கவிதை பல சமயங்களில் தனக்கென்று சாம்பல் வண்ணத்தையும் சாவின் மணத்தையும் யாருமறியாமல் தம்மோடு பிணைத்தபடியே தான் நிகழ்கிறதா..?வாழ்வாங்கு வாழ்ந்த கவிஞர்களின் பட்டியலை உடனே தயாரித்துப் பல ஆயிரம் பேர்களை எழுதித் தாருங்களேன்.இது அரற்றல் அல்ல.இந்த நேரத்து முணுமுணுப்பு.சில வினாக்களைத் திறந்து பார்ப்பதைவிடவும் அதன் விடைகளை மேலோட்டமாய் யூகித்தபடி நகர்ந்து விடுவது உத்தமம்.அகஸ்தினி மொழிவழி நிகழ்ந்தவர்.கவிதாயினி.

கேரளத்தில் இரண்டு தினங்கள் அலைந்து கொண்டிருந்தேன்.பாஞ்சாலி மேடு என்னுமிடத்தில் என்னோடு வந்தவர்கள் வ்யூ பாயிண்டுக்குச் சென்றுவிட நான் மாத்திரம் அந்தச் சாலையின் ஓரத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவரின் டீக்கடையில் ஒதுங்கினேன்.என்னை ஒரு ட்ரைவர் என்று எண்ணி சகஜமாகப் பேசத் தொடங்கிய கோபாலேட்டன் பல விடயங்களை அருவி போலக் கொட்டியபடி இருந்தார்.மீனாக்ஷி எனும் பெயருக்கு மீன் போன்ற கண்களை உடைய யக்ஷி என்று அவர் சொன்ன அர்த்தத்தை விடவும் ஷண நேரம் அந்த அர்த்தத்தைத் தன் கண்களாலும் முழு முகத்தாலும் அபிநயித்துக் காட்ட முற்பட்டபடி கலைந்தது அற்புதம்.பல பக்கங்கள் எழுத வேண்டிய லஹரி.அங்கே இருந்த ஒரு மணி நேரத்தில் சிறந்த இயக்குனர் ஒருவரின் விருதுகள் பல பெற்ற மலையாளப் படம் ஒன்றைப் பார்த்தாற் போன்ற கலாதிருப்தி எனக்குள் குழைந்தது.விஷயங்களை விடுங்கள்.அவற்றுக்குக் லட்சம் வாசல் கோடி ஜன்னல்.அந்த முதிய தம்பதியினரின் இறுக்கமான வாழ்தல் இருக்கிறதே தங்களது சொற்களுக்கு அவர்கள் அணிவித்திருக்கிற சப்தமெனும் ஆடையின் கீழ்ஸ்தாயி..அடடா...அத்தனையும் அன்பின் தேனடை.


தொடரலாம்
அன்போடு

ஆத்மார்த்தி

Last Updated (Wednesday, 03 January 2018 06:12)