புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

நினைத்தாலே இனிக்கும் 1

கொசுபத்தி சுத்துது.வளையம் வளையமா வருது.அப்ப எனக்கு பதினஞ்சு வயசு.மதுரை திருநகர்ல எங்க வீடு.நான் படிச்ச பள்ளி அங்கேருந்து பத்து கிலோ மீட்டர்.தீபாவளிக்கு பல படங்கள் வருதுன்றது வெறும் செய்தி.அதுல என் தலைவர் ரஜினி நடிச்ச தளபதி படம் வருதுன்றது தான் ஈர்ப்பே.யார் யாரையோ பிடிச்சி மதுரை தலைமை மன்றத்துலேருந்து ஸ்பெஷல் ஷோ அதாவது தீபாவளி காலை ஷோ டோக்கன்ஸ் ரெண்டு வாங்கிட்டோம்.நானும் உற்ற நண்பன் மார்லன் பிராண்டோவும் முதல் ஷோ பார்த்தமா..? அடுத்த நாளுக்கு அடுத்த நாள் அதாவது 7ஆம்தேதி ஸ்கூல் திறந்தது.தீபாவளிக்கு எப்டி ஸார் 3 நாள் லீவு போதும்..?பத்தாதில்லே..?சின்னப் பய்யன் எனக்குத் தெரிந்த இந்த விசயத்தை அவ்ளாம்பெரிய ஸ்கூலுக்குப் புரியாமற் போனது விந்தை.நான் வழக்கம் போல ஸ்கூலுக்குப் போகாமல் வ்யாழக் கெழமை காலைல மறுபடிக்கா மதுரை அம்பிகை தியேட்டருக்குப் போய் தலைவனை அடுத்த தடவை தரிசிக்க வரிசையில நின்னதை என் வாத்தி ஜேம்ஸ் பார்த்துட்டாப்டி.அவர் என்னைப் பார்த்ததையும் நா பாக்கல.

ஸ்கூல் என்பது ஒரு நிறுவனம்.அதும் பெரிய நிறுவனம்.நான் ஒரு சின்னப் பய்யன்.அதும் ரொம்ப சின்னப் பய்யன்.அப்பத்தான் மீசய் மொளை பருவம்.ஏரியாவுக்குள்ளே ஒரு மாதிரி ஃபார்ம் ஆயிட்டிருந்த காலகட்டம்.இது தான் பேக்ட்ராப்.இப்பத்திக்கி திரைல தெரிஞ்ச ரஜினியே எல்லா திசைகளாகவும் வானமா பூமியா வருங்காலமா இன்னபிறவா எல்லாம் தெரிஞ்சுட்டிருந்த காலத்ல ஒரு சின்னப் பய்யனை ஸ்கூல்ல நொழஞ்சும் நொழயாமலும் ஜேம்ஸ் உள்பட பல வாத்தியார்கள் சிலபல கம்புகள் குச்சிகள் கொண்டு அடிச்சார்கள்.சார் என்றாலே அடிச்சார் என்று தான் ஞாபகம் வருதி.என் ஜாதக விசேஷம் அதி.


ஸ்கூல் வாழ்க்கையில இவ்ளோ அடி உதைகளைத் தாங்கிக் கொண்டு மறுபடி மறுபடி அந்த ஒரு நவம்பர் மாசம் மட்டும் பத்து முறைக்கு மேல் கைக்காஸ் செலவழிச்சி தலைவனைத் திரும்பத் திரும்பப் பார்த்தேன்.என்னோடு பல தியாகிகள் உண்டு.பேர்கள் மறந்து போனது வரலாற்று சோகம்.அதிலயும் செயிண்ட்மேரீஸ் காம்ப்ளக்ஸில் டீக்கடையில் மாஸ்டராக இருந்த நாகராஜன் அவரது அஜிஸ்டண்டு நண்டு என்கிற மூர்த்தி இருவரும் மகாபக்தர்கள்.நண்டு தன் வலது கையில் ராஜபந்தா ரஜினி என்று பச்சை குத்தி இருப்பான்.அது தலைவரோட பற்பலாயிரம் நாமகரணங்கள்ல ஒன்று என்பதை பிறகு அறிந்தேன்.

ள்ளி என்னை ரஜினி என்ற பேர் சொல்லித் துன்புறுத்தியது மெல்ல அந்த ஏரியாவில் புகையாய்க் கசிந்து பரவியது.ஒரு சிறு வட்டாரத்துக்கு நான் அதனாலேயே அறிமுகமானேன்.என் மீது பலரும் கரிசனம் காட்டினார்கள்.படிப்பு முடியுமட்டும் பல்லைக் கடி என்று புத்தி சொன்ன சிலரிடம் நான் படிக்கிறதே ரஜினியைத் தான்.ரஜினி கிட்டத் தான் என்று சிரித்தேன்.இன்னும் என்னை இறுக்கமாய்க் கட்டிக் கொண்டார்கள்.

நாகராஜனும் ஒரு புனிதவதர் தான்.தளபதி படம் வருவதற்கு மூன்று தினங்களுக்கு முன்பாகவே தன் தலையை ஸ்பெஷலாக அலங்கரித்துக் கொண்டார்.சவுரி முடி கொண்டு ஜப்பானிய சமூராய்களுக்குக் கோபம் வராத வண்ணம் ஒரளவு சுமாராய் அதே போன்ற கொண்டை நடுவாந்திரம் ஒரு மரக்குச்சி ஆகியவற்றை செருகிக் கொண்டு இப்டியும் அப்டியும் லாத்துவார்.எங்களுக்கெல்லாம் அவரைப் பார்க்கும் போது சாட்ஷாத் அந்த ரஜினியே எங்கள் முன்பாக லாத்தினாற் போலத் தோன்றும்.போஸ்டரில் இருந்து இறங்கி வந்த பகவானே என்றெல்லாம் உணர்ச்சி பெருக்கில் கத்தினோம்.அவர் அதற்கு பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்.படம் வரும் வரைக்கும் அதிர்ந்து பேசமாட்டார்.அதிகம் சிரிக்கக் கூட சுய தடா மற்றும் சொந்தப் பொடா ஆகியவற்றை விதித்துக் கொண்டிருந்தார்.காரணம் கொண்டை அவிழ்ந்து விட்டால் மறுபடி சமூராய் மேக்கப் செட் செய்வதற்கு ரெண்டு மணி நேரம் ஆவும்.அதனால் தான் அத்தனை ஜாக்ரதை.

டம் வந்து கொஞ்ச நாள் அப்படியே தான் திரிந்தார் நாகராஜன்.அப்புறம் சவுரிக் கொண்டை இத்யாதிகளைக் களைந்து விட்டார்.இரண்டு பக்கம் நெற்றியை வழித்துக் கொண்டு செயற்கையாகத் தன் மண்டை அமைப்பை ரஜினி போலவே மாற்றிக் கொண்டு நடுவாந்திர உச்சி எடுத்துக் கொண்டார்.தூரத்தில் பார்க்கும் போது தலைவரின் சாயல் கொண்ட இருள் நிழலாய்ப் பொங்கி ஒரு உருவம் மிதந்து வந்தாற் போலத் தெரிவார்.அப்போது அவரைப் போலப் பலரும் இருந்தார்கள்.அவர்களைப் போல அவரும் இருந்தார்.

சென்னைக்கு அரும்பாடுபட்டு சென்று தவமிருந்து தலைமை மன்றத்தின் கடிதம் இத்யாதிகளைக் கொண்டெல்லாம் முயன்று தலைவரோடு ஒரு ஃபோட்டோ எடுத்து வந்து தன் வீட்டில் மாட்டின பிறகே அடங்கினார் நாகராஜன்.அவரது ஏரியா முழுவதும் அவரது மதிப்பு சட்டென்று உயர்ந்தது.மன்னன் படத்து தோற்றத்தில் தலைவர் இருப்பதைப் பிற்பாடு உணர்ந்து கொண்டோம்.


ழெட்டு வருடங்கள் நாகராஜன் மாஸ்டரைப் பார்க்கவே இல்லை.ஏனோ தொடர்பு விட்டுப் போயிற்று.நான் வேறு ஸ்கூல் படிப்பை முடித்து திருநகர் ஸ்கூல் அப்புறம் காலேஜ் என்றெல்லாம் வந்த பிறகு ஒரு நாள் அவரை மறுபடி அரசரடியில் வைத்துப் பார்த்தேன்.என்ன இங்கிட்டு என்றதற்கு ஒன்றும் சொல்லாமல் தன் பேக்ட்ராப்பில் இருந்த முத்து படப் போஸ்டரைக் காண்பித்தார்.

நான் அப்போது தான் குருதிப்புனல் படத்தை மதி தியேட்டரில் பார்த்து விட்டு வந்து கொண்டிருந்தேன்.உடன் கமலுக்காக உசுரையே கொடுக்கும் என் ஏரியா புள்ளாண்டான் குட்டி என்கிற சண்முகம் வேறு.நாகராஜன் மாஸ்டரை உடனே கட் செய்து விடுவதே உசிதம் என்று சரி மாஸ்டர் அப்பறம் சந்திக்கலாம் என்றேன்.

ன்னய்யா ரொம்ப நா கழிச்சி சந்திக்கிறம் ஓடுறே என்றார்.நான் இல்ல மாஸ்டர் வீட்ல விருந்தாளிங்க என்றெல்லாம் உளறினேன்.இருய்யா போகலாம் என்றவர் டீக்கடைக்கு நகர்த்திவந்தார்.எங்களுக்கு காஃபி சொன்னவர் தானொரு பீடியைப் பற்ற வைத்தார்.

"குருதிப் புனல் எப்டி இருக்கு?" என்றார்.

எனக்கு முந்திக் கொண்டு குட்டி "நம்மவர் கலக்கிட்டாப்டி" என்றான்.அப்போதெல்லாம் உலக நாயகன் என்று சொல்வதில்லை.நம்மவர் தான் அவருடைய ஆஸ்தான விளித்தல்.

ம்ம்ம் என்ற மாஸ்டர் அர்ஜூன் கேரக்டர் எப்டி என்றார்.

நான் உடனே அய்யோ எதையோ சுத்துறாப்ளயே என்று நல்லா இருந்திச்சி மாஸ்டர் என்றேன்.

நானும் பார்த்தேன்.பார்த்ததுமே தோணுச்சி...அர்ஜூனோட ஸ்லாங்கு கண்ணை மூடிட்டு கேட்டா தலைவரோட ஸ்லாங்கு மாதிரியே இருக்கும் தெரியும்ல..?கமலும் ரஜினியும் சேர்ந்து நடிக்கறதில்லைன்னு ஆனப்புறம் இப்டி சில விசயங்கள் பண்ணுறதுக்கு பின்னாடி வேற அர்த்தங்கள் உண்டுல்ல என்றார்.

எனக்கு ஆமோதிக்கலாம் எனத் தோன்றியது

குட்டி கேட்டான் ரெண்டு பேரும் கர்னாடகான்றதால சொல்றீங்களா என்றான்

அப்டி இல்லை குட்டி...மோகன் முரளி எல்லாரும் கூடத் தான் கர்நாடகா..விஷயம் அது இல்லை.தமிழைப் பேசுற ஸ்டைல் தலைவர் மாதிரியே அர்ஜூன் தான் பேசுறாப்ல...இல்லையா..?என்றவர் சர்ரென்று டீயை உறிஞ்சினார்.

பிற்பாடு முதல்வன் படத்தில் ரஜினி நோ சொன்ன பிற்பாடு அர்ஜூன் அந்தப் பாத்திரத்தை ஏற்றபோது எனக்கே இது தோன்றியது.

அப்போதைக்கு குருதிப் புனல் படத்தை மாஸ்டர் பார்த்துவிட்டார் என்பதே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.காட்டிக் கொள்ளவில்லை

உங்களுக்கு படம் பிடிச்சிதா என்றேன்.

நாசர் தான்யா கெளப்பிட்டாப்டி..என்றவர் முறைக்க ஆரம்பித்த குட்டியிடம் அட கோவத்தப் பாரு...கமல் படத்ல தான்யா இப்டி கேரக்டரெல்லாம் வாய்க்கும்...சரி வரேன்யா என்றார்.

சற்று தூரம் தன் ஒடிசல் உடம்பைத் தூக்கிக் கொண்டு நகர்ந்தவரின் முதுகில் கேட்டேன்

மாஸ்டர் நண்டு எப்டி இருக்கான்..?

திரும்பாமலேயே சொன்னார்

ம்ப்ச்.,...ஆறு மாசம் முந்தி செத்துட்டான்யா...ஊர்ல பாம்பு கடிச்சிட்டிதாம்..எனக்கே ரொம்ப நா களிச்சி தான் சொன்னாங்கிய...நீ பரவால்லை நாபகம் வச்சிக் கேக்குறே என்றவாறே நடந்தார்.

ராஜபந்தா ரஜினி என்ற வாக்கியம் எனக்குள் ததும்பிற்று.ஏனோ கண்கள் துளிர்த்தன.

தொடரலாம்
அன்போடு

ஆத்மார்த்தி

Last Updated (Thursday, 04 January 2018 05:28)