புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

நினைத்தாலே இனிக்கும் 2

கமலமோகன யுத்தம்

"மோகன் தான்யா காதல் மன்னன்" எனச் சொன்னான் ஜீவன். குட்டியின் உதடுகள் துடித்தன. முகம் ஒரு விசித்திரமான பண்டம். அதன் உபபாகங்கள் தங்களுக்குள் விட்டுக் கொடுத்து வாழ்பவை. கண் துடிக்கும்போது, தும்மல் வராது. மீறிச் சிலமுறை வந்தால் அத்தோடு கண்துடிப்பு நின்று போகும். ஜலதோஷம் வந்தால், கண்ணெல்லாம் பொங்கும் காது அரிக்கும். இதற்கு மேல், வேண்டாம். இது ஒன்றும் சயின்ஸ் தொடர் கிடையாது. 'எங்கே ஊதிக் காட்டு, பழவாசனை வருதா?' என்று பார்ப்பீர்கள்.
ஜீவன் பேரே ரஜினி ஜீவன். ரஜினிக்குத்தான் ஈவேன் என்று தன் ஜீவனை சட்டை ஜோபியில் வைத்துக் கொண்டு திரிந்த ஜீவன். ரஜினியே குரலை மாற்றி, "என்னப்பா பெரிய ரஜினி?" என்று கேட்கிறார் என வைத்துக் கொள்வோம். தன் நெற்றியாலேயே அவரை முட்டி அரைக் கிலோமீட்டர் கூட்டிக் கொண்டு போய்விட்டுத்தான் பார்ப்பான். தனக்கு வரப்போகிற மனைவி தன்னைப் போலவே ரஜினி ரசிகையாக இருக்க வேண்டும் என்பது அவனது கட்டளை. அன்னாளுக்குக் கமலைப் பிடிக்கவே கூடாது என்பதே சாசனம். கமலா, கமல்ராஜ், கமலி என்றெல்லாம் பேர் இருந்தால் அந்த இடத்தில் கூட நிற்க மாட்டான். நெடுநாட்களுக்குப் பிறகுதான் ஒன்று கண்டுபிடித்தோம், ரஜினியை ரசிப்பது இஸ் ஈக்வல் டூ கமலை வெறுப்பது என்று சிறப்பர்த்தம் பண்ணி வைத்திருக்கிறான் பயல்.
நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட இருவரும் சேர்ந்து நடித்த படங்களில் கமல் மட்டும் வரும் காட்சிகளில் கண்களை மூடிக் கொள்வான். இருவரும் தோன்றும் ஃப்ரேம்களில் அரைக் கண்ணால் ரஜினியை மட்டும் பார்ப்பான். மேலும் அறிக, ஒரு பஸ் பிரயாணத்தின் போது, சலங்கை ஒலி படம் ஒளிபரப்பப்பட்டதை எதிர்த்து ட்ரைவரின் காதோரம் நின்று கொண்டு, "ஐம்பது ரூபாய் லஞ்சம் தருகிறேன், இந்தப் படத்தை மாற்றிவிட்டு எதாவது ரஜினி படம் போடுங்கள்" என்று கோரிக்கை விடுத்து, அந்தக் கமல் வெறிய ட்ரைவரால் நடுவழியில் பஸ்ஸிலிருந்து தெனாலி எலிச்சத்தம் கமல்முத்தமாக மாறி பஸ்ஸிலிருந்து இறக்கிவிடப் படுவாரே அதுபோலவே இறக்கி விடப்பட்டு, 'என்னடா பொல்லாத வாழ்க்கே?' என்று ப்ளாக் அண்டு ஒயிட்டில் அந்தப் பாடலைப் பாடியபடியே வீடு வந்து சேர்ந்தான்.
தான் நம்ப விரும்பிய உலகத்தை எங்களை நம்பச் சொல்லி நிர்ப்பந்தப் படுத்தினான் ஜீவன். சாம்பிளுக்கு  :
1."நடிப்பது என்றாலே கமலைப் பொறுத்தவரையில் அழுவதுதான்."
2. குடிச்சிட்டு ஆடுறது பெரிய்ய விசயமாய்யா..?குடிக்கிறதே ஆடுறதுக்குத் தான்.எதுவுமே கத்துக்காம குடிச்சதும் கன்னாபின்னான்னு ஆடுறான் பார்..அவன் தான்யா சல்பான்ஸ்...அதை விட்டுட்டு பரத நாட்டியம் கத்துக்கிட்டவரு குடிச்சிட்டு அதை ஆடுறது என்னா பெரிய்ய மேட்டரு..?போய்யா வேற எங்காச்சும் போயி சொல்லு என்னா..?

3.  குட்டை charector  என்று சொல்லி (அப்பு கமலைத் திட்டுகிறாராம்) ஆனந்தப்பட்டுக் கொள்ளுவது.
ஜீவனைப் பொறுத்தவரை நடிப்பது என்பது மோசடி. நடனம் என்பது அலப்பரை செய்வது. சற்று நெருக்கமான காதல் காட்சிகள் ஆபாசம். கமல் என்பவர் தடை செய்யப்படவேண்டிய ஒரு ப்ராடக்ட். அவன் உலகம் ரஜினியால் மாத்திரமே ஆகியது. இப்படியாப்பட்ட ஜீவனுக்கு ஒருவன் வில்லனாக வேண்டுமென்றால் அவன் எப்படியாப்பட்டவனாக இருக்க வேண்டும்? தட் ஈஸ் மிஸ்டர் குட்டி. லாஸ்ட் அத்தியாயத்தில் பார்த்தோமே அதே குட்டிதான். நகரத்தின் இருவேறு ஸ்பெஷலிஸ்டுகள், இருவேறு ப்ரிஸ்க்ரிப்ஷன் பேடுகளில் "குட்டி இருக்குமிடத்துக்குப் போகாதே, குட்டியைப் பார்க்காதே, குட்டியோடு பேசாதே" என்று ஒருவரும், "ஜீவன் இருக்குமிடத்துக்குப் போகாதே, ஜீவனைப் பார்க்காதே, ஜீவனோடு பேசாதே" என்று இன்னொருவரும் எழுதித் தத்தமது கையொப்பங்களை இட்டார்கள். அந்த அளவுக்கு இருவரும் சந்திக்கிற காட்சிகளில் திரிபுறங்களும் நடுங்கும்.
அப்படிப்பட்ட இருவரும் வேண்டுமென்றே ஒருவரை ஒருவர் தேடி வந்து அடித்துக் கொள்வார்கள். அன்றைக்கு 'இந்த நாள் இனிய நாள்' கொஸ்டினைக் கேட்டது ஜீவன். "காதல் மன்னன்னா அது மோகன் தான்யா" என்றதும் "அத ஜெமினி கணேசன் ரசிகங்கிட்டப் போய்ச் சொல்லுய்யா, ஏன் எங்கிட்ட சொல்ற?" என்றான் குட்டி. பார்த்து எழுதும்போதே அவன் விட்ட தப்பைத் தான் மட்டும் திருத்திக் கொளுகிறாற்போல். தவறைச் சரி செய்து கொண்ட ஜீவன், "காதல் இளவரசன் மோகன் தான்யா" என்றான். அடுத்துவந்த முதல் ஏழெட்டு நிமிடங்கள் இருவரும் ஆபாசமாய் சர்வ லோகத்தையும் திட்டிக் கொண்டார்கள். மோகன், கமல் இருவருடைய ஹேர் ஸ்டைலும் ஒரே மாதிரி இருக்கிற படங்களைக் குறிப்பிடுவதில் தொடங்கி, 'யாருக்குப் பெண் ரசிகைகள் அதிகம்' என்பது வரைக்கும் எதெதோ திசைகளிலெல்லாம் சென்று வந்து மோகனைப் பற்றிய ஒரு நீண்ட அறிக்கையைச் சமர்ப்பித்து முடித்தபிறகு, தர்மத்தின் தலைவன் படத்தில் ஞாபக மறதிக்காரராக ரஜினி நடித்திருப்பதைக் குட்டி குறை சொல்ல, பதிலுக்கு குணா படத்தில் கையில் லட்டுவை வைத்துக் கொண்டு சுகர் பேஷண்ட் போலக் கமல் ஆடுவதை ஜீவன் நக்கலடிக்க, சைக்கிளைப் பெடலிக்கொண்டே ஏறி அமரும் உயரம் தனக்கில்லாவிட்டாலும், பெடலிக்கொண்டே அங்கு வந்து சேர்ந்த மாரி, "பர்மா காலனி ராஜா தேட்டர்ல இன்னிலேருந்து இளமை ஊஞ்சலாடுகிறது. மாஸ் பாத்துருவோமாய்யா?" என்றான் நேராக. குட்டி கமல் ஸ்டைலிலும், ஜீவன் ரஜினி ஸ்டைலிலும் புன்னகைத்துக் கொண்டார்கள். மாஸ் பார்ப்பது என்பது கிட்டத்தட்ட ஒரு எம்மெல்லே எம்பி தேர்தல் போலத்தான் என்பதைக்  கூறிக்கொண்டு, அடுத்த அத்தியாயத்தில் அதைப் பார்க்கலாம் எனச் சொல்லிக் கொண்டு,
தொடரலாம்,
அன்போடு,
ஆத்மார்த்தி.

Last Updated (Sunday, 07 January 2018 15:08)