புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

நினைத்தாலே இனிக்கும் 3

வேற்றுமையில் ஒற்றுமை
.

ரஜினியை ரசிக்க வேண்டும் என்றால் கமலைத் திட்ட வேண்டும் என்றே சொல்லிக் கொடுக்கப் பட்டிருந்தோம். இந்த லட்சணத்தில், அவர்களும் அப்படியே ரஜினியைத் திட்டினார்கள். ஒருவன் தன்னை ரஜினி ரசிகன் என்று அடையாளப்படுத்திக் கொண்டு ஏரியாவில் உள்ள பிற ரஜினி ரசிகர்களைத் தேடித் தேடிப் போய் சிநேகிப்பான். மன்றத்தில் சேர்த்துக் கொள்ளப்படாதவர்களின் மன்றமாகத்தான் நாங்கள் அன்று இருந்தோம். அதாவது எலிஜிபிலிட்டி க்ரைடீரியா.

ஆனாலும், எங்கள் சக்திக்கு எங்களது உலகத்தில் நாங்கள்தானே டான்? பில்லா பாண்டி, ரஜினி காளி, ரஜினி காசி, ரஜினி பாலா வரிசையில் பேருக்கு முன்னால் ரஜினி சேர்த்துச் சொல்லுவது ஒரு வகை விசுவாசம். வீட்டில் வைவார்கள் என்று நாங்கள் வெறும் ரவி, வெறும் மணி, வெறும் விஜி ஆகியோரும் கூட இருந்தோம். இதில், ஐந்தாவது ஸ்டாப்பில் மாணிக்கம் என்பவரது சைக்கிள் கடை இருந்தது. அந்த சைக்கிள் கடையில் வேலை பார்த்த மாரி ஒரு புதிய மன்றம் ஒன்றை ஆரம்பிக்க முயன்றதாகக் கேள்விப்பட்டோம். பதினைந்தரை வயது என்றாலும் பதினாறரை வயது என்று சொல்லி, திக்கித்திக்கிப் பதினேழாக்கி அதில் மெம்பராக மாறினேன். என்னோடு எங்கள் ஏரியாவைச் சேர்ந்த பாலா மற்றும் சரவணன் (அறிக - ரஜினி பாலா, ரஜினி சரவணன்) ஆகிய அண்ணன் தம்பிகள் மெம்பரானார்கள். இருவருமே கொத்தனார் வேலைக்குச் சென்று வந்தார்கள். என்னைப் போன்ற அன் எம்ப்ளாய்டு ஸ்டூடண்டுகளுக்கு மத்தியில், தினமும் முப்பத்தைந்தும், ஐம்பத்தைந்தும் சம்பளம் வாங்கும் சிநேகிதர்கள் நட்பு எத்தனை பவித்ரமானது


இதில் ஒரு பிரச்சினை பாருங்கள். பாலா என்கிற உயிரினம் வாழ்வது சரவணனுக்குப் பிடிக்காது. சரவணன் வாழ்வது பாலாவுக்கு அறவே பிடிக்காது. இருவரும் என்னை இரண்டால் வகுக்கப் பெரிதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஞாயிற்றுக் கிழமை கம்பல்ஸரி லீவு. மற்ற நாட்களிலெல்லாம் மண்ணும் தூசியுமாய் வேலை பார்த்துவிட்டு வருகிறவர்கள் அன்று ஒரு நாள் தினுசு தினுசாய் உடையணிந்து காலையிலொரு படம், மதியம் தூக்கம், மாலையிலொரு படம் என்று வாழ்வைக் குதூகலிப்பார்கள். என்னால் கொத்தனார் வேலை பார்க்க முடியாது என்பதால் நான் என் படிப்பைக் கஷ்டப்பட்டுக் கண்டின்யூ செய்தேன்.

அவர்களது போட்டா போட்டியில் கொஞ்சம் நான் நன்றாக மஞ்சக்குளித்தேன். காலை ஷோவுக்கு டவுன் தேட்டரில் ஒரு ரஜினி படத்தைப் பார்த்துவிட்டு பாலாவுக்குப் பிரியாவிடை தருவேன். மாலை சரவணனுடன் லோக்கல் தேட்டரில் இன்னொரு படம் பார்ப்பேன். இப்படியாகச் சென்று கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில்தான் அந்த ரஜினி மன்றம் நுழைந்தது. இது ஒரு புறம் இருக்க, சென்ற அத்தியாயத்தின் இறுதியில் "மாஸ் பார்த்துவிடலாமா?" என்று கேட்ட அந்த அத்தியாயத்துக்குப் போகலாம் வாருங்கள்.

லயோலா கல்லூரியின் அரசியல் விஞ்ஞானத் துறை பேராசிரியர்கள் எடுக்கக்கூடிய மாதிரி கருத்துகணிப்புகளுக்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்றாலும் இது ஒரு விதமான சாம்ப்ளிங் சர்வே தான். ராஜா தேட்டர், பர்மா காலனி என்றழைக்கப்பட்ட திருவள்ளுவர் நகரில் அமைந்திருந்தது. அது ஒரு டெண்டு கொட்டாய். அங்கே இளமை ஊஞ்சலாடுகிறது படத்துக்கு நாங்கள் சரியாக மூன்றும் மூன்றும் ஆறு பேர் சென்றோம். மூன்று ரஜினி ரசிகர்கள் மூன்று கமல் ரசிகர்கள் என்பதறிக. இந்த மூன்று பேருமே எலெக்சன் அதிகாரிகள், தேர்தல் நடத்துபவர்காள். ஆகவே எங்களுக்கு ஓட்டு கிடையாது.

கேண்டீன் பக்கம் நின்று கொள்வோம். இண்டர்வல் நடக்கும் அந்தப் பத்துப் பன்னிரண்டு நிமிடமும் எங்களுக்குத் தெரிந்தவர்களை இனங்கண்டு அவர்கள் ரஜினி ரசிகரா, கமல் ரசிகரா என்று ஆளாளுக்கு எண்ணுவோம். சந்தேகம் இருந்தால் அவரிடமே கேட்போம், "அண்ணே ரஜினிதானே பிடிக்கும்?" என்று. தலையாட்டிவிட்டுச் சென்றால் ஒரு ஓட்டு. இல்லாவிட்டால் செல்லாத ஓட்டு. அதே போலத்தான் கமலுக்கும் நடக்கும். ரஜினி ஓட்டை கமல் தேர்தல் அதிகாரியும், கமல் ஓட்டை ரஜினி தேர்தல் அதிகாரியும் எண்ணிக் கொள்வோம். தமிழக அளவில் நடத்தப்பட்ட நியாயமான தேர்தல்களில் அதுவும் ஒன்று என்பதை இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. எம் ஜி ஆர், சிவாஜி ரசிகர் என்று எங்களுக்குத் தோன்றும் ஏஜ் க்ரூப்பிடம் கேட்கவே மாட்டோம்.

ஆனால், எங்களை வெறுப்பேற்றுவதற்கென்றே "ப்ரூஸ் லீ ரசிகர்" என்று சொல்லிச் சென்றவர்களை மனதார வெறுப்போம். "என் டி ராமாராவ் ரசிகர்"என்று சொன்ன ஒருவரை அப்போதைக்குச் செல்லாத ஓட்டாக்கி வேறொரு தினம் பஞ்சர் ஒட்ட வந்தபோது, "இன்னிக்கு கட லீவு" என்று திறந்திருந்த கடையிலிருந்தே சொன்னான் மாரி. ஒருவரை ஒருவர் "டா" என விளித்துக் கொள்ள மாட்டோம்.

"ஏய்யா பஞ்சர் ஒட்ட வேண்டிதுதானய்யா?" எனக் கேட்டதற்கு மாரி சொன்னான், "அன்னிக்கி மாஸ் கேட்டப்ப நக்கலக் குடுத்துச்சுல்ல இது?" என்று. "ரஜினி ரசிகன்னா மக்களுக்கு ஹெல்ப் பண்ணனும்யா" என்றான் மணி. "நான் ராமராவ் ரசிகன்" என்றான் அதே குரலில் மாரி. எல்லோரும் சிரித்தோம்.இரண்டு பக்கமும் தலா இருபது கோல்கள் போட்ட நிலையில், இருபத்து ஒராவது கோலுக்கு வழியே இல்லாமல், டை பிரேக்கரில் மாஸ் கேட்பதை நிறுத்திவிட்டு, இப்பத்திக்கு ரஜினியும் கமலும் சமம் என்று சமரசம் செய்து கொண்டோம். காரணம் சிம்பிள். இண்டர்வல் முடிந்து நெடுநேரம் கேண்டீன் ஏரியாவில் நிற்பதற்குத் தேட்டர் நிர்வாகம் அனுமதிக்காமல் எங்களைக் களவாணிப் பயல்கள் என்று சந்தேகக் கண் கொண்டு பார்த்தது. எதிர்காலத்தில் நாங்கல்லாம் எம்மெல்லே ஆகி உங்கள என்ன பண்றோம் பார் என்று மனசுக்குள் கறுவிக் கொண்டு, ஆறு எம்மெல்லேக்களும் ஒற்றுமையாக மறுபடி தேட்டருக்குள் புகுந்தோம்.அவர்களுக்கே தெரியாமல் எங்களது எலக்சன்களில் சில முறை ரஜினியும் சில முறை கமலும் வென்றிருக்கிறார்கள். எல்லாக் கூத்தும் ஞாயிற்றுக் கிழமைதான்.

பாஸ்கர் என்கிற ரஜினி பாஸ்கர் ஒரு இளம் சைக்கோ. கடைத்தெருவில் எதிர்ப்படும் எதாவது ஒரு அக்கா, யாராவது ஒரு சித்தப்பா என யாரையாவது நிப்பாட்டி, "ஒங்களுக்கு ரஜினிதானே பிடிக்கும்?" எனக் கேட்பான். தாங்கள் எத்தனாம் பெரிய ஸ்டாட்டிஸ்டிகல், ஸ்ட்ராடெஜிகல் சர்வேயின் சிச்சுவேஷனல் மோனோபொலி சேம்பிள் என்பதை அறியாத அவர் "ஆம்" எனத் தலையாட்டிவிட்டுச் செல்வார். அவ்வளவுதான். 234 தொகுதியிலும் ஜெயித்தாற்போல் ஆட ஆரம்பிப்பான். குதிப்பான், கூத்தாடுவான். சக ரஜினி ரசிகர்களுக்கே அவன் மீது கோபம் வருமளவு நடந்து கொள்ளுவான்.கமல் சிவா, கமல் குட்டி, கமல் கிரி ஆகியோரைக் கேட்கவா வேண்டும்? வேறு யாரிடமும் அவர்கள் "கமல் பிடிக்குமா" எனக் கேட்கக் கூடாது. கேட்டால், "அத ஒன் ஏரியால போய்க் கேளு" என்பான். "நானும் இதே ஏரியாதானே" என்றால் "அத ஒன் தெருவுல போய்க் கேளு" எனத் திருத்துவான். "சரி என் தெருவுக்கு வா" என்றால் "ஒன் தெருவுக்கு நான் எதுக்கு வரணும்?" என்பான். பிற்பாடு, யாரேனும் அப்படி முதல் முறை கேட்கும்போது ரஜினி பிடிக்காது என்றோ பதில் சொல்லாமலோ போய்விட்டால், இன்னொருவரைக் கேட்பான். அவனது அராஜகங்களைக் கட்டாயமாக ரஜினியாலேயே ஒப்புக் கொள்ள முடியாது.

கமலைத் தன் இதயக் கமலத்தை வீற்றிருக்கச் செய்த குட்டியும், ரஜினியைத் தன் ரத்த நாளங்களிலெல்லாம் சேமித்து வைத்திருந்த பாஸ்கர் என்கிற பாஸும் ஒரே பைக்கில் "முஸ்தஃபா முஸ்தஃபா" என்று பாடும் ஒரு காட்சியைக் கற்பனை கூட செய்திராத எங்களுக்கு ஒரு நாள் அதைக் காண நேர்ந்தது.ரஜினியையும் கமலையும் பெயராக அல்ல படமாகவே தங்கள் கைகளில் பச்சி குத்திக் கொண்ட அந்த இருவரும் அப்படி மாற என்ன காரணம், எதுவாக இருக்கக் கூடும்? நம்ப முடியாத ஆனால் நம்ப வேண்டிய அந்தக் காரணம் இன்னொரு மூன்றெழுத்து.

இந்த இடத்தில் பலமான ட்ரம்ஸ் இசை ஒலிக்க வெண்டுமெனக் கேட்டுக் கொள்ளப் படுகிறது.

திகிடு திகிடு தும்.

குஷ்பு.தொடரலாம்,
.அன்போடு,
ஆத்மார்த்தி.

Last Updated (Sunday, 14 January 2018 18:07)