புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

நினைத்தாலே இனிக்கும் - 4

4 அயர்ன் ஸ்டிக்கர்ஸ் 

அதாகப்பட்டது, சினிமா ரசனை என்பது தியாகம். ஒட்டு மொத்த சினிமாவில், இன்னாரைப் பிடிக்கும், இன்னாரைப் பிடிக்காது என்றெல்லாம் வகைப்படுத்திக் கொள்வது ஒரு பாவனை. பிடிக்காது என்று அறிவித்த ஒரு நடிகரது படத்தைக் கண்மூடிப் பார்ப்பது ஒரு தவம். திரையைத்தாண்டி அதற்கு முன்னும் பின்னுமாய் அதை எண்ணி எண்ணிக் களித்தது என்பது வகைமையற்ற கொண்டாட்டம்.

சித்தப்பா சிவாஜி ரசிகர். அப்பா எம்ஜிஆர் பக்தர். அயித்தான் ஒருவர் ஜெமினி கணேசப் பிரியர். இதில், ஜெமினி ந்யூட்ரல் என்று அறிக. சிவாஜி எம்ஜிஆர் ரசிக ரைவல்ரி ஏகப் பிரசித்தம். சிவாஜியை அழுமூஞ்சி என்பார் அப்பா. எம்ஜிஆருக்கு அழத்தெரியாது என்பார் சித்தப்பா. ஜெமினி கணேசனுக்கு அழத் தெரியுமா தெரியாதா என்று சொல்லாமல் மௌனம் காத்து நடையைக் கட்டுவார் அயித்தான். 'காயத்ரி' படத்தில் கணேஷாக நடித்த ஜெய்சங்கர், பிற்பாடுகளில் 'ப்ரியா' படத்தில் ரஜினி கணேஷாக நடித்தபிறகு, 'முரட்டுக் காளை' படத்தில் அதே ரஜினிக்குத்தான் வில்லன் ஆனார். மதுரை சிவம் தேட்டரில் 'முரட்டுக் காளை' படம் ரிலீசான போது, புஜபலம் பொருந்திய ஜெய் ரசிகர்களும், புதிய ரஜினி ரசிகர்களும் விதவிதமாக மோதிக் கொண்டது வரலாறு.

அறிக, நினைவில் சிவம் தேட்டருள்ள மிருகம் நான். 'சூரியன்' தொடங்கி 'சபாஷ் பாபு' வரை பல படங்கள் பார்த்த தேட்டர் சிவம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கது சேதி தரும் என்று திரிந்திருக்கிறேன். தற்போது அதன் உடன்பிறந்த மினிக்குட்டியான சக்தி (ஏசி) மட்டும் இயங்குகிறது. சிவத்தை மாடிஃபை செய்து பேங்க்கு பண்ணி விட்டிருக்கிறார்கள். அதிலே எனக்கு ஒரு ஓரத்தில் அழுகாச்சி தான். ஒரு தடவை அங்கே ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, டோக்கனைத் தொலைத்துவிட்டேன். எல்லா வண்டியும் போனாத்தான் தருவேன் என்று செக்குரிட்டி பிடிவாதம் பிடிக்க, காத்திருந்த பொழுதில் அவரை ஃப்ரெண்டு பண்ணிக் கொண்டு, சிரித்தபடி வண்டியை எடுத்து வந்தேன்

றிய வேண்டியது அந்தத் தேட்டரில் நெடுநாளைக்கு 'முரட்டுக் காளை' படத்துக்கு ஜெய் ரசிகர்கள் வழங்கிய பிடிவாத ஷீல்டு ஃபோட்டோ ஃப்ரேம் ஒன்றைக் கண்ணுற்று இருந்திருக்கிறேன். பிறகு 'தாய் வீடு', 'பாயும் புலி' போன்ற படங்களில் ஜெய் பல வேடங்கள் ஏற்றார். 'தளபதி' படத்தில் ஜெய் அரவிந்த்சுவாமியின் அப்பாவாக நடித்தார். 'அருணாச்சலம்' படத்தில் "அருணாஜலம், அருணாஜலம்" என்பார், வேடிக்கையாக இருக்கும். 'அருணாச்சலம்' திரைப்படத்தின் போது, நாங்கள் ரஜினி ரசிகர்கள் பெருகியிருந்தோம், ஜெய் ரசிகர்கள் அருகியிருந்தார்கள்.


இந்த நேரத்தில், ரஜினிக்கு ஈக்வல் டுவாக கேப்டன் மன்றங்கள் இருந்தன. எம்ஜிஆருக்குப் பிறகு நூறாவது திரைப்படம் வெற்றிகரமாக ஓடிய ஒரே நடிகர் என்கிற பெருமையைப் பெற்ற எங்களூர்க்காரர் விஜயகாந்தை ரஜினி மன்றத்தில் இருந்து கொண்டே மறைமுகமாக, இலுமினாட்டி சாமியாராக நான் ரசித்துக் கொண்டிருந்தேன். என்னைக் கேட்டால் நான் ரஜினி ரசிகன் என்றுதான் சொல்வேன். ஆனால், விஜயகாந்த நடித்த எல்லாப் படங்களுக்கும் செல்வேன். விஜயகாந்த நடித்த படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்க்காவிட்டால் எனக்குக் கரங்கள் நடுங்கும், முடி நட்டுக்குத்தாய் நிற்கும். சிலோன் காலனியில் வசித்த ஜெகஜீவன் எனும் பய்யன் விஜயகாந்தின் மாபெரும் ரசிகன், வெறிகொண்ட பக்தன். அவனோடு சேர்ந்து மெல்ல மெல்ல நான் கேப்டன் பால் ஈர்க்கப் பட்டேன்.

அதில் பாருங்கள், கேப்டன் நடித்த 'மாநகரக் காவல்' திரைப்படத்தை முதல் இருபத்தைந்து நாட்களில் இருபத்து மூன்று முறை பார்த்த பெருமையுடையவன் நான். மதுரையில் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கும் ஞாபகத் தேட்டர்களில் ஒன்றான 'சென்ட்ரல்' தேட்டரில் அந்தப் படம் வெளியானது. நான் அதிகதிகம் என் வாழ்வில் ஆதர்சித்த படங்களில் 'மாநகரக் காவ'லும் ஒன்று. மேலும், பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருந்த தேட்டர் என்பதால்,பொடி நடையாய் வந்து போவதற்கு உதவியது. தேவையில்லாமல் பள்ளிக்கூடம் போவதற்குப் பதிலாய், இது போதுமானதாக இருந்தது.அந்தத் திரைப்படத்தின் முக்கிய சீன்களின் பின்னணி இசையை இன்றும் என் வாயாலேயே வாசித்துக் காட்டும் அளவுக்கு சீன் பை சீன் இந்தப் படத்தின் காட்சிகளை ஒப்பிக்கும் நிகழ்ச்சி ஒன்றை டிஸ்கவரி புக் பேலஸில் யாராவது ஏற்பாடு செய்தால், வந்து செய்துகாட்டும் அளவுக்கு மாநகரக் காவலை எனக்குப் பிடிக்கும். ஐ ஆம் வெரி வெல் வெர்ஸ்டு இன் திஸ் ஃபிலிம். இது ஒரு உலகப் படத்தின் ஒன்றுவிட்ட தம்பி என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. இந்தப் படத்தில் நாஸர் கதாபாத்திரம் அலாதியானது. உலகளவில், கதாநாயகனுக்கு இவ்வளவு கவுன்டர் பன்ச் கொடுத்த இன்னொரு கதாபாத்திரம் இல்லை எனலாம்.

ஒரு சாம்பிளுக்கு, கேப்டன் பேர் சுபாஷ். அவர் கஸ்டப்பட்டு ராபின் என்கிற ஆனந்த்ராஜைப் பிடிப்பார். அவரை வாரண்டோடு வந்து அழைத்துச் செல்லும் டெல்லி போலீஸ். சற்று நேரத்தில் வந்து இறங்குவார்கள் நாஸர் அண்ட் கோ. "ராபின் எங்க?" என்பார் நாஸர். "டெல்லி போலீஸ்கிட்ட ஒப்படைச்சிட்டோம்" என்பார் விகல்பமில்லாத கேப்டன். "அப்ப நாங்க யாரு?" என்பார் நாஸர். சற்று நேரத்தில், "ராபின் கிடைக்காம நீங்க எங்கயும் போக முடியாது" என்று கிட்டத்தட்ட சுபாஷைக் கைது செய்வார் நாஸர். இந்த இடத்தில் க்ளோஸ் அப்பில் விஜயகாந்த் முகத்தைக் காட்டும்போது இண்டர்வெல் ஆகும். குச்சி பஜ்ஜியெல்லாம் தின்றுவிட்டுத் திரும்ப வந்தால், விட்ட இடத்திலிருந்து படம் தொடங்குமல்லவா? டெல்லி ஐஜி முன் காரசாரமாக மோதிக் கொள்வார்கள் நாஸரும் விஜயகாந்தும். "தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடாங்கறதக் கொள்கையாக் கொண்டு வாழ்றவன் நானு" என்பார் சுபாஷ். (இந்த இடத்தில் கவுன்டர் பன்ச்சைக் கவனியுங்கள். "உன் கொள்க என்னன்னு நாங்க கேக்கல. ராபின் எங்க?" என்பார் நாஸர். ஒருவழியாக எல்லாக் கெட்டவர்களையும் அழித்து, ஒழித்த பிறகு நாட்டின் பிரதமரான நடிகை லட்சுமி, "நீங்க இங்கயே டெல்லிலயே வேல பாக்கலாமே" என ரெக்கொஸ்ட் செய்து கேட்கும்போது, "நோ நெக்ஸ்டு போயிங்ல ஐ அம் கோயிங்க் டு மதர் கண்டிரி சென்னை" என்று சொல்லி நம்மைப் பார்த்துப் புன்னகைத்தபடி படத்தை முடிப்பார் கேப்டன். பிரதமர் கேட்டாலும் கேக்கலையாம். ஹ்ம்.

ஜெகஜீவன் செமை விஜயகாந்த் ரசிகன்.விஜயகாந்த் நடிச்ச முதல் படமான தூரத்து இடிமுழக்கம் இனிக்கும் இளமை ரேஞ்சுப் படங்களைக் கூட விடாம ரெண்டிரண்டு தடவை பார்ப்பான்.அவனோட உலகத்ல விஜயகாந்த் மாத்திரம் தான் இருந்தார்..எனக்கு ரஜினி.

அயர்ன் ஸ்டிக்கர் என்றொரு வஸ்து.இன்றைய தலைமுறை எல்லாத் துறைகளிலும் தன்னிறைவான வளர்தலுக்குப் பிந்தைய காலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறதல்லவா..?எங்கள் பால்யம் அப்போது தான் தொழிற்புரட்சிகள் நிகழ்ந்து வளர்ச்சி வகையறாக்கள் நேர்ந்து கொண்டிருந்த காலம்.நினைத்ததை எல்லாம் அச்சிட்டு மகிழும் இந்த இணையகாலம் அல்ல அது.அன்றைக்கு அயர்ன் ஸ்டிக்கர் என்பது எங்கள் க்ரியேட்டிவிடி மற்றும் விசுவாசம் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைக்கிற புள்ளியாகத் திகழ்ந்தது

அயர்ன் ஸ்டிக்கர்ஸ் சல்லிசு விலைகளில் கிடைக்கும்.ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் கார்த்திக் குஷ்பூ போன்ற நட்சத்திரங்களின் முகங்கள் க்ளோஸ் அப்களில் கிடைக்கும்.அல்லது அவர்களது அப்போதைய சமீபத்திய படங்களின் சிலபல போஸ்கள் கொடுத்தபடி எழுந்து நிற்கும் வீற்றிருத்தல் ஸ்டிக்கர்ஸ் ஆக அவை இருக்கும்.அதிசயப்பிறவியில் பச்சை பனியன் கறுப்பு பேண்ட் அணிந்து கையில் கதாயுதத்துடன் கோபப்பார்வை நோக்கும் ரஜினி ஸ்டிக்கர் அவ்வளவு பிரபலம்

சுருக்கி வரைக அயர்ன் ஸ்டிக்கர்

அயர்ன் ஸ்டிக்கர் என்பது சாதா ஸ்டிக்கர் அல்ல.அது விஸ்வாசத்தின் தீட்சை.அதை குறைந்த விலை கொடுத்து வாங்கிவரவேண்டும்.பிறகு வெள்ளை சட்டை அதாவது அனேகமாக யூனிஃபார்ம் சட்டையின் பாக்கெட்டு இருக்குமல்லவா நெஞ்சகமே கோயில் எனும் ஸ்தல அருகாமையில் அங்கே தலைகீழாக வைத்து அயர்ன் செய்யும் இஸ்திரிக்காரரிடம் கொடுத்தால் அவர் சூடான அயர்ன் பாக்ஸை வைத்து சற்று நேரத்தில் நன்றாக இழுப்பார்.அந்த இழுவையோடு ஸ்டிக்கர் தலைகீழ் உரிந்து விடும்.அதைத் தூக்கி போட்டால் சட்டையில் தலைவர் பாக்கெட்டில் பதியனாகி இருப்பார்.

பாருங்கள் வெள்ளை சட்டை என்றாலே அனேகமாக யூனிஃபார்ம் தான்.நினைத்த நட்சத்திரங்களின் நற்படங்களை அவரவர்க்குப் பிடித்த மாத்திரத்தில் சட்டையில் அயர்ன் ஸ்டிக்கர் மூலமாகப் பச்சை குத்தினாற் போல் தாங்கித் திரிய அனுமதித்தார்களா கொடியவர்கள்..?இல்லையே...சிறார்களைக் கறார் என்று பிடித்துக் கண்திருகிக் கடைந்தெடுப்பதே அவர்களது வேலை.அதாங்க கொடியவர்கள் என்றால் பள்ளிக்கூடம்ஸில் இருக்கும் வாத்தியார்ஸ்...பாதிரியார்ஸ்...தொடங்கிப் பீட்டீ மாஸ்டர்ஸ் ப்யூன்ஸ் வரைக்குமான அதிகார பயங்கரர்கள் அத்தனை பேரும் தான்.அவர்கள் என்ன செய்வார்கள்..?அதான் பய்யன்கள்..கனவில் வந்து ரஜினி கோச்சுப்பாரா மாட்டாரா..?விசுவாசத்தைக் காட்டாவிட்டால் அது விஷவாசம் ஆகாதா..?ஸோ இதற்கு ஒரு உபாயம் கண்டறிந்தார் ஸார் அவர்கள்.அதாவது நான் தான் இங்கே சொல்லப்பட்டிருக்கும் ஸார் அவர்கள் என்பதை அறிக.

அதென்னது என்றால் ஸ்டிக்கரை சின்ன சட்டை என்று கைவிடப்பட்ட சென்ற ஆண்டின் யூனிஃபார்ம் சட்டையின் பாக்கெட்டில் வைத்து ஒரே இழு..அதாவது தலைவர் ரஜினி அங்கே குடியேறி விடுவார் அல்லவா..?சட்டைக்குள் பனியன் அணியவேண்டியதற்குப் பதிலாக இன்னொரு சட்டையாக இதனை அணிவது தான் அந்த உபாயம்.தலைவரை நிஜமாகவே மனசு என்னும் நெஞ்சுக்குள் பொத்தி வைத்திருந்த அந்த நாட்கள்..


ரவை ரவையாக அடித்தார்கள்.வீட்டில் இருந்து ஆள் வரவழைத்து அவர்கள் முன்பாக அடித்து நொறுக்கினார்கள்.ரஜினி படம் சட்டையிலா என்று என் அம்மா துடித்தார்.எனக்குப் புரியாத புதிர் வயது முதிர்ந்த பலரும் ரஜினியை வைத்துப் படம் எனப்படுகிற பெரிய திரைப்படமே தயாரிக்கிறார்களே..என்னை ஏன் இந்தச் சிறுவயதில் ஒரே ஒரு ஓரத்தில் அதும் என் சட்டையில் பாக்கெட்டில் சிறுபடம் எடுக்க ஸாரி வைத்துக் கொள்ள விடமாட்டேன் என்று பெரிய க்ரவ்டே பழியாய்த் துரத்துகிறதே...இதை யாராவது பஞ்சு ஸார் ஏவிஎம்சரவணன் ஸார் அல்லது சங்கிலிமுருகன் ஸாரிடமாவது தெரியப்படுத்தினால் எனக்கு அவர்கள் சப்போர்ட் செய்ய மாட்டார்களா..?இல்லை மாட்டார்கள் என்றான பின் வலுக்கட்டாயமாக என் சட்டைக்குள் இருந்த சட்டைக்குள் இருந்த பாக்கெட்டில் இருந்த ((இருங்க வரேன்ல..?))ரஜினி ஸ்டிக்கரில் இருந்த ரஜினி பாக்கெட்டையே மொத்தமாய்க் கிழித்து தன் அதிகாரத்தை நிர்ணயித்துக் கொண்டார் எட்மாஸ்டர் எனப்படுகிற கொடுங்கோலர்.அவருக்குப் பற்பல துணைக் கோலர்கள் தட் மீன்ஸ் வாத்தியார்ஸ் வேறு துணை நின்றார்கள்.

என் மனசுல அயர்ன் ஸ்டிக்கர்ல இல்லை இல்லை கட் அவுட்ல இருக்கிற தலைவனை உங்களால எதுவும் பண்ண முடியாது..  எனக்கு நானே தனக்குத் தானே மனசுக்குள்ள சப்தமா சொல்லிக்கிட்டேன்..ஒரு பழைய வெள்ளை சட்டையில முதுகுப் பகுதில மாத்திரம் மேல ரெண்டு நடுவுல ஒண்ணு கீழ ரெண்டுன்னு அஞ்சு எடத்ல ரஜினி ஸ்டிக்கரை அயர்ன் பண்ணி வெவ்வேற போஸ்கள்ல தலைவர் படத்தை பதிச்சுக்கிட்டேன். அப்பறமா அந்த சட்டையை மார்லனுக்குக் குடுத்துட்டேன். சனி ஞாயிறுகளில மாத்திரம்.அவன் அதை சந்தோஷமா போட்டுகிட்டான்.

ஸ்கூல்ன்ற வார்த்தையே ஸ்கேல்னு தான் கேட்டுச்சி..ஆனாலும் ரஜினின்ற வார்த்தை ஜீனின்னு கேட்குறது மாத்திரம் நிக்கவே இல்லை.

தொடரலாம்
அன்போடு

ஆத்மார்த்தி


Last Updated (Monday, 15 January 2018 19:28)