புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter


ரெடி…..ஸ்டடி……முடி…

தூயமரியன்னை மேல்நிலைப் பள்ளியில் இருந்து தூய்மையான என்னைத் தூர எறிந்த தூய ஃபாதர்கள்…(சே…எங்கியோ இடிக்குது.சரி இடிக்கட்டும்). ஒரு பள்ளியில் இருந்து 11ஆம் வகுப்புக்கு இன்னோர் பள்ளிக்கு பிடுங்கி நடப்பட்டதில் சில நட்டங்கள் சில லாபங்கள் சில பாவங்கள் சில தர்மங்கள் சில இதுகள் சில அதுகள் இருந்தே தீரும் என்று “கொண்டித்தோப்பு மகாமுனி மங்க் ஓல்ட் சுவாமிகள் பின்னாளில் சொன்னதெல்லாம் எனக்கு நடந்தன.பிறந்ததில் இருந்தே பள்ளிக்கல்வித் துறை பிடிக்காத எனக்கு உயர்நிலைப் பள்ளியும் உவர்த்துக் கசந்தது ஆச்சர்யமில்லை.

இந்த இடத்தில் மதுரை திருப்பரங்குன்றத்துக்கு அருகாமையில் இருக்கிற திருநகர் என்ற ஊர் வருகிறது..அந்தக் காலத்தில் நடிகை சாவித்திரி இங்கே பங்களா வைத்திருந்தார் என்ற அதன் ஆரம்பமே ரசம் ததும்பும்.செல்வந்த செல்வாக்கு செல்லங்களின் வசிப்பிடம் என்பதை மனதில் இருத்திக் கொள்ளவும்.அங்கே நான் எனது 13ஆம் வயதில் குடியேறினேன்.89ஆம் ஆண்டு வாக்கில்.பின்னர் +1 வகுப்பிற்கு என் பள்ளி எனைத் துரத்தியதில் முத்து படத்து வெண்தாடி ரஜினி மாதிரி முட்டைபோண்டா கடையில் நான் என் சித்தப்பசோழர் உடன் நின்றுகொண்டிருந்ததெல்லாம் ஏற்கனவே சொல்லியாயிற்று.இங்கே வேறு கதை.

மு.மு.மேல் நிலைப் பள்ளி என்றொரு பள்ளி.நான் படித்துமுடித்ததன் பிறகு ஒரு சில வருடங்கள் கழித்து ஒருமாணவச்செல்வன் மாநிலத்தில் முதலாவதாக வந்திருக்கிறான்.அந்த அளவுக்கு நான் படித்ததையும் மீறி நல்லதொரு பள்ளி.அதன் தலைமை ஆசிரியர் திருமிகு நடன குருநாதன் அவர்கள் ஒரு வித்யாசமான நேசத்திற்குரிய ஆசிரியர்.அவரைப் பற்றி ஆசிரியப்பா ஒன்றையாவது பாடும் அளவுக்கு எனக்கு அவர் ஆசிரியர்.+ஞானத்தந்தையும் கூட.மண்ணைப் பொன்னாக்கியவர்.

அவரை கொஞ்ச நஞ்சமல்ல…நிறைய்ய சித்ரவதை செய்து இருக்கிறேன்.அது பின்னால் வரக்கூடும்.அவருக்கும் எனக்கும் டபுள் ஆக்ட் பள்ளியில் நான் மாணவனாக இருந்தேன்.அவர் ஹெச்.எம்.வீட்டில் அவர் எனக்கு பக்கத்து வீட்டுக்காரர்.ஆகவே சிறைக்கைதியாகவே மாறினேன் என்று சொல்லலாம்.மனிதர் பின்னாளில் விஜய் படத்தின் பன்ச் டைலாகிற்கு முன்னோடி.அவர் ஒரு முடிவெடுத்து விட்டால் அப்புறம் அவரது மனசாட்சி ஜிப்பா போட்டுக்கொண்டு தனியாகப் பிரிந்து வந்து நின்று எவ்வளவு கெஞ்சினால் கூட ஒத்துக்கொள்ளாதவர்.அவருடைய முடிவு பற்றியதல்ல இப்பதிவு…(அவருக்குப் பிடிக்கவே பிடிக்காத) என் ஜோட்டுப் பையர்களின் முடி பற்றியது.

ஃபங்க்…..எத்தனை அழகான பேர்….?அது எங்கள் ஜடையின் பேர்…அதை பிடிக்காதவர்களும் இருப்பார்களோ…?இரண்டு தோள்கள் வரை வழியும் சிகைக்கு அந்தக் காலகட்டத்தில் தான் எத்தனை மவுசு..?

முடி என்பது இளமையின் உற்சாகம்.கொண்டாட்டத்தின் திறவுகோல்.தேவர் மகன் படத்தில் கமல் “சாந்துபொட்டு ஒரு சந்தனப் பொட்டு” என்று பாடித்திரிவாரே..அது தாங்க ஃபங்க்கு….. மதுரைக்கார காளையர் தம் பங்குக்கு இந்த தமிழ்ச்சமூகத்திற்கான பங்களிப்பை செய்ததென்பதன் துவக்கமே FUNK ஸ்டைல் தலைமுடி தான்.இளமை இண்டூ முதுமை.மாணவர் இண்டூ ஆசிரியர் என்று அழகுற ஏற்கனவே இருந்த பேதப்பிரிவுகள் இதில் தொடர்ந்து தொடர்ந்தது தான் சோகமே…

எந்த வாத்தியாருக்கும் எட்மாஸ்டருக்கும் ஃபங்கின் அருமை புரியவில்லை.அதையும் தாண்டி இடுப்பு வரை பெண் பிள்ளைகள் கூந்தல் வளர்த்து அழகுபார்த்துக் கொண்டது தலைமுறை தலைமுறையாக தலையின் முறையாகத் தானே இருந்து வந்தது..? அப்படியிருக்க எதற்காக ஆண்களை மட்டும் உன் கூந்தலை வளர்க்காதே என்று சொல்ல வேண்டும்,..? யோசித்துப் பாருங்கள்…அன்னிய ஏகாதிபத்தியத்தில்…(இது இல்லைடா ஆத்மா..).மாணவச்செல்வங்களின் வாழ்வில் அமைப்பின் பயங்கரக் கரம் பாய்வதை எப்படி ஒத்துக்கொள்ளும் மனம்..?(இது ஓக்கே டா ஆத்மா..)

ஒன்றா ரெண்டா நாங்கள் இரண்டு வருட மேல் நிலைப்பள்ளியில் பட்ட கஷ்டங்கள்….சனி ஞாயிறு விடுமுறை என்றால் ஒன்று வெள்ளி மாலையோ அல்லது திங்கள் காலையோ அந்த ரெண்டு நாளுக்கான அடிகளை வாங்கிக்கொண்ட பின்பே நகரமுடியும்..அந்த அளவுக்கு…கொடுமை சார்..கொடுமை..(சார் என்பதன் பொருள்…வேண்டாண்டா ஆத்மா…அது சொல்ல முடியாது…சென்”சார்”)

தினமும் காலையில் ஆறுமணிக்கு பள்ளிக்கு சென்று ஸ்டடிஹால் எனப்படும் நீள அரங்கத்தில் வரிசையாக அமர்ந்து 8.15 வரை படித்துவிட்டு பிறகு 9.30க்கு வழக்கப்பள்ளிக்கூடம் வந்தாக வேண்டும்.பின் மாலை 3.30க்கு வீட்டுக்கு போய்விட்டு 5.15க்கு பள்ளிக்கு வந்து இரவு 9 மணி வரைக்கும்ஸ்டடி….என்ன கொடுமை….?கொடுமையோ கொடுமை….இதையெல்லாம் செய்தாக வேண்டும் என்பது கட்டாயமில்லை.செய்தே ஆகவேண்டும் என்பது எட்மாஸ்டரின் உத்தரவூ… அதற்கு எல்லா ஆசிரியர்கள் ப்யூன் ஆயா முதற்கொண்டு தகப்பத்தாய்கள் வரை எல்லாரும் ஒத்துழைத்தனர்.மாணவர்கள்…ஹ…அதெப்படி ஒத்துழைப்போம்..?

அப்போது தான் இந்த முடிப் பிரச்சினை எழுந்து சிலும்பியது…அவன் தான் பாலா…(இயக்குநர் பாலா அல்ல..இது வேறு பாலா……எங்கூட படிச்சவன்..விவரவிவகாரன் பாலா.) ஸ்டடியில் அன்றைக்கு ஹிட்லரே வந்தார்.அவரது நேரடி மேற்பார்வையில் படுகொலைகள் அரங்கேறின…வேறென்ன….?நாலுமணி நேரம் கொலையாய்க் கொல்வது தான்.யாரும் யாருடனும் பேசக்கூடாது..மூச்சுவிடலாம்..ஆனால் அதன் சப்தம் கேட்டால் அவ்வளவு தான்..துணைஹிட்லர் கணெசன் சாரும் ஹெச் எம்மும் சுற்றிக்கொண்டிருக்க ஸ்டைலாக தன் பின்னனதலை கூந்தல் ஃப்ங்க் அழகை கைகளால் கோதியபடியே பென்ச்சில் ஒய்யாரமாக சாய்ந்துகொண்டு கணக்குப் புத்தகத்தின் ஏதோ ஒரு பக்கத்தை சப்தமாக வாசித்துக்கொண்டிருந்தவனைப் (கவனிக்கவும் கணக்கை சப்தமாக படித்த விஞ்ஞானிகள் நாங்கள்.) பார்த்த ஹெச் எம்முக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது…நெருங்கி அவனை எழுப்பி வெளியே அழைத்து விட்டார் ஒரு அறை.அவனது பின்னந்தலையை தன் கையால் பற்றிக்கொண்டு..

“ஏண்டே…இதென்னடே….?பள்ளிக்கூடத்துக்கு படிக்க வரச்சொன்னா சவுரி வியாபாரமாடே பாக்குறே…?”என்றார்.

வழக்க மற்ற மாணவர்கள் ஹிட்லரை எதிர்த்து மூச்சுவிடவோ மூச்சா போகவோ மாட்டார்கள்.நாங்கள் புரச்சீ படை அல்லவா..?விலுக்கென்று அவரது கையை உதறிக்கொண்டு “விடுங்க சார்…ஏன் என்னைய அடிக்கிறீங்க..?பளனி முருகனுக்கு வளர்த்த முடி…எதுக்கு அதை பிடிச்சு உலுக்குறீங்க..?சாமிகுத்தம் சார்…”என்று எச்சரிக்கை தொனியில் சொல்லிவிட்டு நேராக நடந்து தன் புத்தகங்களை எடுத்துக்கொண்டு “நா வர்றேன் சார்….பளனி முருகன் கிட்டே உங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுட்டு தான் வருவேன்…”:என்று கிளம்பி சென்றுவிட்டான்.

அவன் போனதும் ஹெச் எம் ஒன்றுமே பேசவில்லை..மூணு நாள் கழித்து சந்தன மொட்டையனாக பழைய ஃபங்க்கை இழந்த “புதியமனிதா” வாகத் திரும்பி வந்து தன் தந்தையோடு சென்று ஹெச்எம்முக்கு பஞ்சாமிருதம் கொடுத்தான் பாலா.நாங்களெல்லாரும் வழக்கமாக சந்திக்கிற டாப்புக்கு வந்த வெற்றி வீரன் ஹிட்லரை வென்றான் பாலாவை தடபுடலாக வரவேற்றோம் அன்றைக்கு..

“எப்பிடிடா இந்த ஐடியா வந்துச்சி என்று அதிசயித்தோம்,..அவன் சொன்னான்..இல்லை மாப்பிள்ளை…முடியை பிடிச்சதும் எனக்கு கெட்டகோவம் வந்துச்சி….உடனே முருகன் பேரை சொல்லிட்டேன்..அப்பறம் வீட்டுக்குப் போனதும் யோசிச்சேன்..முருகன் பேரை சொன்னது முருகனுக்கே சேரட்டும்னு பளனிக்கு போய்ட்டேண்டா…”என்று சொன்னான்.

பாலா புண்ணியத்தில் எங்கள் பள்ளி மாணவர்கள் அனைவரின் சிகைகளும் அளவெடுத்து திருத்தவைக்கப்பட்டது.ஒருவரும் தப்பவில்லை.அதற்கெல்லாம் சேர்த்து ஒரு ஐந்தாண்டு காலம் அதன் பின் கல்லூரி எல்லாம் முடித்த பின்னும் அவ்வப்பொழுது முடிவளர்ப்பதும் பிறகு வெட்டுவதுமாய் திரிந்தோம்.

காதலிக்காக முடியை இழந்தவனும் இருந்தான்.முடி தான் முக்கியம்,வேறெதும் வேண்டாம் என காதலை உதறிய முடியதடியனும் இருந்தான்.முடியை வெட்டியதன் பின் நில புலன்களை இழந்த மிட்டாதார் போலத்திரிந்தவனும் இருந்தான்.எனக்கு ஏன் நீளமாக முடி வளரவில்லை என்று தவமிருந்து யோசித்த சித்தனும் இருந்தான்..கட்டியிருப்பது கைலி என்றதை மறந்து போடாத பேண்டில் இல்லாத சீப்பை எடுக்க மானசீகமாய்த் தடவிக்கொண்டிருந்தது இன்றைக்கும் ஞாபகசுகம்.அன்புப்பிணைப்புக்களில் இரண்டு நட்பன்பர்கள் ஒருவருக்கொருவர் தலையைத் தடவிக்கொடுத்துக்கொள்வது இதமோ இதம்.சண்டைகளில் ஒருவன் தலைமுடியை இன்னொருவன் பிடிப்பது உச்சபட்ச வதம்.ஹ்ம்ம்…..வெறும் முடியா அது…?நினைவுதிர் செடி….

ஆண்களின் அடையாளம் சிகை.அதிலும் மஷ்ரூம் கட்…மிலிட்டரி கட்…ரஜினி ஃப்ரண்ட் கட் ரஜினி பேக் கட்…ரஜினி டோட்டல் கட்,ப்ளீச்,கலரிங்,அட்டாக்,கர்லிங்க் என ஏகப்பட்ட அலங்காரங்கள்…எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று திரிந்த அந்தக் காலகட்டத்தின் மொத்த வெளியேற்றமறைவுகள் (ஹைட் அவுட்டை இப்படி சொல்வது அராஜகம்டா ஆத்மா..)குறைவே…சலூன்கள் சொர்க்க வாசல்களாகினதும் விதவிதமாக முடி முடி என்றே யோசித்து…தலையை வளர்த்தவனே தலைவனாக முடியும் என்று திரிந்த அந்தக் காலகட்டம் செல்லச்சிகைகாலம்..

இதை மட்டுமா இழந்தோம்…?

பெல் பாட்டம் பேன்ட்டுகள்…பெல்ட் வெளித்துருத்தித் தெரிய நெஞ்சில் ஏற்றி கட்டிய பேண்ட் களை,விஜய் லூனா மொபெட் ஏன் சமீபத்திய சன்னி வரையிலான வாகனங்களை,தாய் சாவி மோனா போன்ற பத்திரிக்கைகளை ஒரு கால கட்டத்தின் எண்ணற்ற பிராண்ட்களை இழந்துதான் இருக்கிறோம் என்பதை நினைக்கையில் அதே காலகட்டத்திற்கென தனிக்குறிப்பிடலாய் அபூர்வமாய் முன்னும் பின்னும் வாய்ப்பற்ற நட்பை நண்பர்களை தனித்த நட்புக்கான சுதந்திரப் பரவல்களை முரண்களை என மொத்தப் பொட்டலமாக ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதிலிருந்து தொண்ணூற்றைய்ந்து வரையிலான காலகட்டம்,நட்புக்கான பொற்காலம்.இன்று இருப்பது…கல்முளைத்த பிற்காலம்.


இன்னமும் தொடரலாம்

அன்போடு

ஆத்மார்த்தி