புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

மறையத் தொடங்கும் உடல்கிண்ணம்

மறையத் தொடங்கும் உடல்கிண்ணம் கவிதைத் தொகுப்பை முன்வைத்து

காலச்சுவடு வெளியீடு
விலை ரூ 100

சசிகலா பாபு எழுதிய மறையத் தொடங்கும் உடல்கிண்ணம் என்ற தொகுப்பின் கவிதைகள் நம்மை வரவேற்பதற்கு முன்பாக இந்த நூலின் பின் அட்டையிலும் உள்ளே முதற்பக்கங்களில் முழுமையாகவும் எழுதப்பெற்றிருக்கிற போகன் சங்கரின் முன்னுரையைப் படித்தபிறகு ஒரு மகாகனம் பொருந்திய படைப்பு ஒன்றைப் புரட்டப் போகிற அனுபவத்திற்கு மனம் தயாராகிறது.இந்தத் தொகுதியின் இக்கவிதைகளுக்காக எழுதப்பட்ட முன்னுரையாக அளவுகளுக்குள் நின்றாடி இருக்க வேண்டிய அந்த முன்னுரை அபாரமான பெருத்த எதிர்பார்ப்பை மனதுக்குள் நிகழ்த்துவதற்கு அடுத்த அனுபவமாக இத்தொகுதியின் கவிதைகளை வாசிக்க நேர்வது பாரமாகிறது. ன்னும் சொன்னால்  போகன் எழுதிய முன்னுரை இந்த நூலுக்கானது என்றால் அந்த முன்னுரைக்கானது இந்த நூல் அல்ல.

கவிதைகளை மகா எத்தனத்தோடு அணுக வேண்டியதில்லை.வெள்ளந்தியாக அணுகு என்று எங்கனம் நிர்ப்பந்திக்க முடியாதோ போலவே தான் டூல்ஸ் கிட்டோடு அணுகுவதும்.சசிகலாவுடைய கவி மனம் ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கிறது.மொழியை சூசகமாக டாக்டிகலாக அணுகுவதன் விளைவாகப் பலமுறை அடித்துத் திருத்தப்பட்ட கவிதைகளாக நம் முன் அணி வகுக்கின்றன இக்கவிதைகள்.கலையும் கச்சிதமும் உராய்கிற இடங்களிலெல்லாம் தீப்பற்றி எரியவேண்டிய எந்தக் கட்டாயமும் இல்லை.மிக மெலிதான உடல்சிராய்ப்பாகக் கூட அவ்வுராய்தல்கள் நிகழக் கூடும்.சசிகலாவின் பெரும்பாலான கவிதைகள் அவை நிகழ்கிற கணம் மற்றும் அவற்றைத் தொகுக்கிற மனம் இரண்டிலிருந்தும் வெளியேறிய கவிதைகளாகத் தோற்றமளிக்கின்றன.கூடவே ஒன்றுக்கு மேற்பட்ட கூற்றுகள் அக்கவிதைகளில் தென்படக் கூடிய முரண்பாடும் தெரிகிறது

கவிதை ஒருபோதும் கட்டியங்களாகாது.அல்லது கட்டியங்களோ தீர்மானங்களோ அறைகூவலோ கவிதைகளாக முற்றுப் பெறுவதில்லை

சிறுதெய்வங்கள்
செய்யும் 
பெரிய தவறு
பெருந்தெய்வங்கள் 
கைவிட்ட பக்தைகளுக்கெல்லாம் 
ஒரே சமயம் 
கைகொடுக்க
முயல்வது

 

இந்தக் கவிதையைப் பார்க்கலாம்.சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்கள் பெரிய தவறு இப்படி வலுவேற்றுவது கவிதையைத் தட்டையாக்குகிறது.இவற்றில் இரண்டு பெரிய ஒரு சிறிய இம்மூன்றில் எதாவது ஒன்றே ஒன்று இடம்பெற்றிருந்தால் கூடப் போதுமானதாய் இருந்திருக்கும்.மேலும் கவிதை என்பது முடிவதற்குள் வாசகனை அயர்த்தியாக வேண்டும் அல்லது அதிர்ச்சிப்படுத்த வேண்டும் என்று முனைவதெல்லாம் பெரிய காலர்களைக் கொண்ட பெரிய க்ராப்புகளைக் கொண்ட சிறிய நடிகர்கள் நடித்தபோது வெளியான படங்களின் பழைய காலத்தவை.இன்னமுமா அப்படியானவற்றை முனைந்து கொண்டே இருப்பது?

 

தீயில் உரோமம் உருகி
மஞ்சளில் குளித்து
கழியில் தலைகீழாய்
தொங்கும் 
பன்றியுடல் போலும்
மிதக்கும்
முழுநிலவு

 

இங்கே அசைந்து நெளிவதான நீர் அளைதல் நிசமாக நேர்ந்திருக்க வேண்டிய அனுபவம்.இக்கவிதையின் முன் பின் பகுதிகள் ஒட்டவைக்கப்பட்டிருப்பதால் அந்த அனுபவம் அற்றுப் போகிறது.இங்கே இந்தக் கவிதையில் தொடக்கமும் முடிகிற இடமும் ஒரு புறம் இருக்கட்டும் தேவையற்று வலிந்து உருவாக்கப் பட்ட அதிர்ச்சி என்பது கவிதை நிகழ்த்த வாய்ப்புள்ள இயல்பான அனுபவத்திலிருந்து நெடுந்தொலைவுக்கு வாசகனைப் புறந்தள்ளி விடுகிறது.துவக்கத்தில் உருகி பிற்பாடு குளித்து ஆகிய இரண்டு சொற்களுமே தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும்.கொல்லப்பட்ட பன்றியின் உடலுக்கு நிகழ்த்தப்படுகிற ஒப்பனை மிதக்கும் முழு நிலவுடன் எந்த விதத்திலும் ஒட்டாமல் அன்னியப்படுகிறது.

இறுதி மலரையும்
உதிர்த்தபின்னர்
மரம்
ஒருமுறை
உடல்சிலிர்த்து
தன் ஆன்மாவை
உள்ளிழுத்துக் கொண்டது.


இந்தத் தொகுப்பில் இப்படியான நிறைய வறட்டுக் கூறல்கள் இருக்கின்றன.மேற்காணப் படுகிற கவிதை அத்தகைய மரம் ஒன்றின் இலையுதிர்கால சித்திரம் ஒன்றாக நம்முள் பெருகுவதற்குப் பதிலாக சரி..அப்புறம் என்றாவது சொலல் முறையின் பலவீனம்.இலைகள் உதிர்ந்து மரம் காலியாகிப் போவது என்பது எல்லாமொழிகளிலும் எத்தனாயிரம் முறைகள் சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்கு அப்பால் இன்னொரு முறை சொல்ல வருவதற்கான நியாயம் எதுவுமே இதில் இடம்பெறவில்லை.


தன் கால்விரல்களின்
மேல் ஓடும்
அடிவார ரயில்களை
குனிந்து
வேடிக்கைப் பார்க்கும்
குழந்தை மலை


இதுவும் அப்படியான இன்னுமொரு முயல்வு தான்.கவிதை முற்றுப்பெறவில்லை அல்லது கவிதையாகவில்லை.காட்சித் தோரணங்களிலிருந்து ஒரு கணத்தை உருவி சொற்படுத்தும் போது அது கவிதையாக நிறையாது.கவிதை என்பதை எழுதிய பிற்பாடு உள்ளே நுழைப்பது அபத்தமாகவே முடியவல்லது.குனிந்து என்ற சொல் மேற்சொன்ன கவிதையில் நிச்சயமாக நீக்கப் பட வேண்டிய ஒன்று.

கால்விரல்களின்
மேல் ஓடும் 
ரயில்களை 
வேடிக்கைபார்க்கும்
குழந்தைமலை

இது ஓரளவுக்கு சரியாய் வரும் போல இருக்கிறது.


சசிகலா பாபுவின் பலவீனம் சிந்தனாமுறையில் துவங்குகிறது,.சொற்களை அணுகுவதிலிருந்து அடுக்குவது வரைக்கும் கவிதை வனைவதில் காட்டப்படுகிற தேவையற்ற பதற்றம் புதிய கவிசொல்லிகளுக்கு முதல் சில கவிதைகளில் நேர்வது இயல்பே.அதனை உணர்ந்து நீக்காமற் போகும் பட்சத்தில் அதுவே பின் தள்ளும். சொல்மயக்கமும் சொற்கூட்டங்களைச் சார்வதும் மாத்திரம் கவிதைகளாக ஒருபோதும் ஆவதில்லை.சசிகலா பாபுவின் கீழ்க்கண்ட கீழ்க்காணும் கவிதை இன்னும் மொழியினூடாக ஒட்டியும் ஒட்டாமலும் செய்துபார்க்கிற பல மாதிரி முயல்தல்களுக்கான இன்னும் ஒரு உதாரணம்.

ஒரு துல்லிய
உச்சத்தின் பின்
காணக் கிடைக்கும்
பெண்ணின் விழிகள்   
போல் 
ஒரு மழைக்குப் பிறகு
இன்று மிளிர்ந்தன
ஜன்னலை எட்டியிருந்த
மணிப்ளாண்ட் இலைகள்


கவிதை செய்தல் என்பதற்கான ரெஸிப்பி பிரகாரம் கவிதைகளை உருவாக்க முயல்வதன் அபத்தம் மேற்காணும் கவிதைகள்.,துல்லிய உச்சத்தின் பின் காணக் கிடைக்கும் என்பதை எப்படிப் பார்த்தாலும் ஒப்புக் கொள்ள முடியாமற் போவதற்கான காரணம் சொற்களுக்கு இடையே நிலவ வாய்க்கிற இயல்பான முரண் என்பது அனர்த்தமாய்ப் பெருகுகிறது.காணக்கிடைக்கும் என்ற வார்த்தைகள் கவிதையின் உள்ளுறையும் உயிர்த்தலைக் கொன்றுபோடுகின்றன.அங்கே நிகழ்வது ஒரு சந்திப்பல்லவா..?காண வாய்க்கும் என்பதைத் துண்டாய் எடுத்துச் செருகி இருப்பது பிழையாகிறது.

கவிதை என்பது ஒரு காட்சியை ஒரு நிகழ்தலை ஒரு கற்பனையை அல்லது ஒரு அபூர்வத்தை என எது பற்றியதாகவும் இருந்துவிடக் கூடும்.ஆனால் அது வாசிப்பவனை அதிகாரம் செய்தபடி நகர்வதாக இருக்கக் கூடாது.இருக்க முடியாது என்பதே மெய்.சசிகலா பாபு தன் கவிதைகளைத் தன் சொந்தச் சொற்களின் மீதான தேர்வு பிடிவாதம் ஆகிய இரண்டின் மூலமாகவும் எதை எப்படி அணுகவேண்டும் அல்லது எதை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை நிர்ப்பந்திக்க விழைவது இக்கவிதைகளுக்குப் பின்னால் நியாயமாக நேர்ந்தொலிக்க வேண்டிய நல்லிசையை அற்றுப் போகச் செய்வதோடு தேவையற்ற நாராசத்தையும் உற்பத்தி செய்வது தவிர்க்கப் பட வேண்டியது.

கவிதை எழுதுவது ராஜகலை என்று மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டே இருக்கும் பெருங்கூட்டம் நாசமாய்ப் போகட்டும்.;கவிதை என்பது ஆன்மாவிலிருந்து செய்து பார்க்க வேண்டிய சின்னஞ்சிறிய ஒத்திகை .அதைச் சமர் செய்வது போலச் செய்யவேண்டியதில்லை. அப்படியான பிடிவாதத்தை விடவும் வென்றிடாத சமரசங்கள் பேரழகு

சசிகலா பாபு எழுதிய இந்தத் தொகுப்பு அவருடைய இரண்டாவது தொகுதி.இந்தத் தொகுப்பில் என்னைக் கவர்ந்த ஒன்று என மஞ்சள் நிற சமாதானம் போல் இருகோடிகளுக்கும் ஓடி ஓடிப் பேசித் தீர்க்கும் ஊமை வெய்யில் என்று முடிகிற கவிதையை சுட்டுவேன்.சசிகலா பாபுவுக்கு எழுத வருகிறது.கவிதை மீது மாறாத ப்ரியம் இருக்கிறது.இன்னும் தன் மொழியைச் செப்பனிட்டுக் கொள்வதன் மூலமாய் சிறப்பான கவிதைகள் பலவற்றை அவர் படைப்பார் என்ற நம்பிக்கையுடனும் அன்பின் வாழ்த்துகளுடனும்


வாழ்தல் இனிது

அன்போடு
ஆத்மார்த்தி