புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

'சவரக் கத்தி'

பூர்வமாகவே இப்படியான திரைப்படங்கள் வரும். இரண்டாயிரத் துக்குப் பின்னதான தமிழ்த் திரைப்படங்களில் முக்கியமான படங்கள் வரிசையில் கிட்டத்தட்டத் தன் எல்லா திரைப்படங்களையும் இடம் பெறச் செய்தவரான மிஷ்கின் எழுதி, நடித்து, அவர் உதவியாளர் மற்றும் தம்பி ஆதித்யா இயக்கத்தில் உருவாகியிருக்கிற 'சவரக் கத்தி' கண்களில் ஒற்றிக் கொள்ளுகிறாற் போன்ற ஒரு திரைப்படம்.

கதை என்கிற ஒன்றைப் பண்ணிப் பண்ணி உருவாக்குவதை விடவும் ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களை உருவாக்கி அவற்றை முரண்படச் செய்வது மூலமாகவே ஒரு முழுமையான திரைக்கதை ஒன்றைப் படைத்துவிட முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் இன்னும் ஒரு எடுத்துக்காட்டு. நிஜத்துக்கு அருகாமையில் அனர்த்தமறப் படைக்க விழைகிற எதுவும் உன்னதமாகவே மலரும். இதுவும் அப்படி மலர்ந்திருக்கிறது.

ஒரு பையன், ஒரு பெண், அதற்குப் பிறகும் மூன்றாவது குழந்தையை நிறைமாதமாகச் சுமந்து கொண்டிருக்கிற செவித்திறன் சற்றும் அற்ற பிச்சமூர்த்தியின் மனைவி அவனது சவரக் கடைக்கு முன்பாக வந்து இறங்கும்போது, தன் வீரப் பிரதாபங்களை உதவியாளனுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கேட்கிற குரலில் அளந்து விட்டுக் கொண்டிருக்கிறான் பிச்சமூர்த்தி என்கிற பிச்சை (ராம்). அவன் மனைவி (பூர்ணா), கூடப் பிறந்த தம்பி காதலித்த பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளுவதற்காகக் காணாமல் போயிருக்கிறான். அவனைக் கண்டுபிடித்துத் தாலி எடுத்துக் கொடுத்துத் திருமணத்தை நடத்தி வைக்குமாறு பிச்சையை அழைத்துச் செல்லுகிறாள்.

இது ஒரு புறம் கிளைக்க, பெயில் மூவ் பண்ணியது தோல்வியுற்று அன்று மாலை ஆறு மணிக்கு ஸ்டேஷனில் பரோல் முடிந்து சரணடைய வேண்டிய துரதிர்ஷ்டம் கோபமாகவும் வெறியாகவும் மாறி எத்தைத் தின்றால் தன் பித்தம் தெளியும் எனத் தெரியாமல் கூட்டமாகக் காரில் ஏறிப் புறப்படுகிற மங்கா என்கிற ரௌடி (மிஷ்கின்), இவர்கள் இருவரும் ஒரு ட்ராஃபிக் சிக்னலில் சந்திக்க நேர்கிறது. வேண்டா மழை வருகையாக அந்தச் சந்திப்பு முரணாகிப் பிறழ்ந்து பகையாகிக் கதையாக நீள்கிறது.

அடுத்த இரண்டு மணிநேரங்கள் மனசு மூளை உடம்பு ஆகியவற்றை லேசாக்கும் மெழுகுச் செதுக்கல் 'சவரக் கத்தி'. இதற்கு மேல் இதன் கதையைப் பற்றிச் சொல்லப் போவதில்லை. இதன் சிறப்புகளில் மூழ்குகையில் படர்க்கையில் கதை கசிவதும் கூடும். 

'துப்பறிவாளன்' படத்தில் விஷால் என்கிற கணியன் பூங்குன்றன் சொல்கிறாற்போல் (நீ பாக்குற நான் தேடுறேன்) தன் கதா உலகத்தைப் படைக்கையிலேயே தனிக்கச் செய்கிறது மிஷ்கினின் பாணி. காணவாய்க்கிற பாத்திரத் தோன்றல்களில் எதார்த்தமான குணமுரண்களைக் கொண்டுவந்து சேர்ப்பது அவரது ரெஸிப்பி. பாலச்சந்தர் தன் திரைக்கதைகளில் பாத்திரங்களைச் சார்வதில் காட்டுகிற அதே செறிவை மிஷ்கின் படங்களில் பார்க்க முடியும்.

தண்டனைக்கு அஞ்சாதவன் போக்கிரி. குற்றங்களுக்குப் பின்னதான அவனுடைய வரலாற்றில், மான அவமானங்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட அர்த்தங்களுக்காகவே அவன் வாழ்பவன். புற உலகில் பொதுப் புத்தியால் ஏற்றுக் கொள்ள முடியாத அறம் எனும் கூரைக்குக் கீழே நாளும் நிம்மதியாய் உண்டு உயிர்த்து சுகித்து வாடிக் கலங்கி நோய்மை கொண்டு தேய்ந்து சாகும் சாமான்ய நம்பகங்களுக்கும் விழுமியங்களுக்கும் அப்பாற்பட்ட வேறொரு வினோத மாதிரி இச்சைப் பிரயாசைகள் உட்கொண்டதான ஓட்டத்தை நாளும் ஓடுகிறவன். தனித்த வடிவமைக்கப்பட்டத் தன்னைத்தானே நீட்டித்துக் கொள்ளக்கூடிய அறம், மொராலிட்டி இத்தியாதிகளைக் கொண்டவனும் என்பது நுட்பமான நிஜம்.

'நீ ஓடு, நான் துரத்தறேன், நீ மாட்டிக்கிறியா பார்ப்போம்' என்கிற மான் புலித் துரத்தல்தான் 'சவரக் கத்தி'. நம் வாழ்வின் எல்லா ஒற்றை தினங்களும் மிகத் தனியான அனுபவங்களை அதற்கான சாத்தியப்பாடுகளுக்கு வெகு அருகாமையில் சென்று எதையும் நிகழ்த்தா விலகல்களுடன் முடிந்து போகிற அத்தனை அடுத்தடுத்த தினங்களையும் நாம் சாதாரண தினங்கள் என்று கருதுவது பார்வைப் பிழை. மாறாக, நிகழ்ந்திருக்கக் கூடிய ஆனால் எதுவும் நிகழாத தினங்கள் அவை என்பதுதானே நிஜம்?

இங்கே காட்சிக்கு உட்படுத்தப்படுகிற ஒற்றை தினத்தில் நிகழ்கிற ஒன்று மற்ற பிறவற்றை நிகழ்த்தியபடியே முடிவை நோக்கிச் செல்லுகிறது. இங்கே புலி, மானை ஒவ்வொருமுறை பிடிக்கும்போதும் வேட்டை பூர்த்தியானாற்போல் ஆசுவாசம் கொள்ளுகிறது. அந்தச் சிறுபொழுது போதுமாயிருக்கிறது மானுக்கு. நழுவி உருவிக் கொண்டு ஓட்டம் பிடிக்கிறது மான். மறுபடி துரத்தி மானைப் பிடிக்கிறது புலி. மான் மானாகித் தளர்கையில் புலியிடம் மாட்டுகிறது. மாட்டிய மான் புலியாகிறது. புலியை மானெனத் தளர்த்தித் தப்புகிறது. இன்னொரு முறை புலியிடம் அகப்படுகிறது. மானுக்குள் ஒரு புலி இருப்பதையும், புலிக்குள் ஒரு மான் இருந்தே ஆகவேண்டும் என்பதையும், இந்தத் திரைப்படம் இரு முரண்பட்ட மனிதர்களின் பாத்திரங்களை முன்வைத்துப் பார்க்கிற ஒவ்வொருவருக்குள்ளும் இருக்க வாய்ப்புள்ள மான், புலி இரண்டையும் அவர்களுக்கே அறிமுகப்படுத்துவதில் இந்தத் திரைப்படத்தின் வெற்றி உறுதியாகிறது.

தன் கையில் பிடிபட்ட பிச்சையின் மனைவி பிரசவ வேதனையில் துடிக்கும்போது புலி நெகிழ்ந்து மானாகிறது. மங்கா தன் கூட்டத்தோடு சேர்ந்து அவளை மருத்துவமனையில் சேர்க்கிறான். அங்கிருந்து அவள் உடனே தப்பிச் செல்லுவதைத் தாங்க முடியாமல் துரத்துகிறான். துரத்தப்படுகிறவனின் மனைவியும் மானாகித் தன் குட்டிகளோடு தப்பி ஓடுகிறாள். அந்த நேரத்திலே பிச்சையிடமிருந்து மங்காவுக்கு ஃபோன் வருகிறது. கெஞ்சுகிறான். தான் இருக்குமிடத்தைச் சொல்லி அரற்றுகிறான், தன் மனைவி குழந்தைகளை விட்டுவிடுமாறு பிரார்த்திக்கிறான். அந்தக் கணம் தன் பிடிமானத்தில் அவன் மனைவி இல்லை என்று மங்கா சொல்லி, "நீ ஓடு, நான் துரத்துறேன், நானே வந்து பிடிக்கறேன்' என்கிறான். இந்த ஒரு இடம் அறமற்ற இருளில் பூர்த்தியில் சுயமே சுடராய் ஒளிர்கிற புலியின் அறம் வேட்டையாடி மானை வீழ்த்துவது அன்றித் தந்திரமாய் ஏமாற்றுவது அல்ல என்பதை முன்னிறுத்துகிற இடம் அபாரமானது.

நெகிழும்போது மானாகிற மங்கா எனும் புலி, துரத்திப் பிடிப்பதிலிருந்து வழுவாமல் இறுதிவரை உறுதியாக இருப்பது துரத்துகிற புலி தன் மூர்க்கத்தைப் போலவே தன் வேட்டையின் முன்னகர்தலிலும் எந்தச் சமரசமும் செய்துகொள்ள விரும்பது என்கிற 'வலியது வலுக்கும்' என்ற விதியை நிறுவியபடி மலர்கிறது. பிச்சை எனும் மான் கிடைத்த இடங்களிலெல்லாம் நழுவி ஓட வல்லது. காலைப் பிடித்துக் கெஞ்சிக் கொண்டிருக்கும் அடுத்த கணம் தன்னைப் புலி தாக்க வரும்போது புலியின் கண்களில் மண்ணள்ளிக் கொட்டிவிட்டு 'உயரம் தாண்டுவது உயிர்க்கும்' என்கிற தப்புதல் ஒன்றே சுதந்திரம் என்கிற வகைமையற்ற மான் வாழ்வின் நிர்ப்பந்தங்களை அழகாக முன்வைத்தபடிப் பிடிபடப் பிடிபடத் தப்பியோடுகிறது.

வாழ்வு என்பது நாம் வாழ்வதல்ல, யார் யாரோ அல்லது எல்லோரும் நம்மை வாழ அனுமதிப்பதன் பேரே வாழ்வு. மிஷ்கின் எழுதி, ஆதித்யா இயக்கியிருக்கிற 'சவரக் கத்தி' ஆழமான, உறுதியான மனிதர்களை முன்வைத்து நகர்கிறது. ஒரு பேர் பெற்ற கவிஞனின் கவிதைத் தொகுதியை விடவும் அதிகதிகக் கவிதைகளாய்க் காட்சிகள் பெருகுகின்றன. பிச்சை கடையின் பக்கத்துக் கடை டெய்லர், பிச்சையிடம் வேலை பார்க்கும் பையன், அவனது ஒன்றுவிட்ட மாமா, மங்காவின் உறவினரான பெத்தப்பா, அவனது அடியாள் தம்பிகள், பூர்ணாவின் தம்பி ரகு, அவனது காதலி, அவளது பெற்றோர், கரும்பு ஜூஸ் விற்கிற பெண், ரிஜிஸ்திரார், மங்காவின் விசுவாசியாக வரும் சப் இன்ஸ்பெக்டர், என இந்தக் கதையெங்கும் தென்படுகிற அத்தனை மனிதர்களும் பார்வையாள மனதுகளில் ஆழப் பதியனிடுகிறார்கள். அந்த விசுவாசி எஸ்.ஐக்கும் பிச்சைக்கும் இடையிலான சந்திப்பு, வாதம், பகை, முரண், விலகல் வரை, தப்புகிற மான் என்று கதையெங்கும் அலைகிற பிச்சை எனும் மான் ஒரு கணம் புலியாகிற சந்தர்ப்பம் தத்ரூபமான இயல்போடு மலருகிறது.

மங்காவிடம் உயிர்ப்பிச்சை கேட்கிற அதே மான், தன் அதிகாரம் எனும் பற்களால் தனைக் குதறிய  காவல் அதிகாரி என்கிற ஓநாயைத் தனித்துவமாகத் தண்டித்துவிட்டு விலகுகிற காட்சி நெடுமரம் நீரளையும் நிழற்புலியெனக் காட்சிப் பிழையாய்க் கவித்துவம் பொங்குகிறது. 

ஒரு பைத்தியத்தின் ஆடையைத் தான் பெற்றுக் கொண்டு தன் ஆடையை அதற்கு அணிவித்துப் பிச்சை அனுப்புகிற ஒரு காட்சி வருகிறது. அதற்கு முன் வரை பெரும் பொய்களைச் சுமந்து திரிந்த பிச்சை, அதற்குப் பின்னால் படம் முடியும் வரை பொய்யேதும் பேசுவதில்லை. பைத்தியம் தெய்வ சமானம். பொய்மை அறிவதில்லை அன்றோ.

'சவரக் கத்தி' முழுமையாகச் சின்னஞ்சிறிய தீர்க்கமான காட்சிகளின் தோரணம். வாயை யாரெனத் தெரியாமல் கொடுத்துவிட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளும் வடிவேலு பாத்திரங்களுக்கு நாம் பலமுறை சிரித்திருக்கிறோம். பிச்சை எனும் நகர்வாழும் மத்தியமப் பாத்திரமாய் அதே வாய் அளந்து வம்பு வளர்க்கும் நிகழ்வைக் கற்பனை செய்த புள்ளியிலிருந்து நாமும் ராமும் ஒன்றாகிறோம். வருவது யாரெனத் தெரியாமல் சட்டையைக் கழற்றிவிட்டுப் பார்க்கில் உடற்பயிற்சி செய்கிற காட்சியாகட்டும், தன்னைத் தெரிந்து தேடுகிற மங்காவைத் தெரியாமல் தேடுகிற இன்னொரு க்ரூப்பிடம் 'இதான் நீங்க தேடுகிற பிச்சை' எனக் கோர்த்துவிடுவதிலாகட்டும், பைக்கை எப்படியாவது இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்றுவிட நடத்தும் பேரக் காட்சி யிலாகட்டும், புகை போடுகிறாற்போல் தன் கடைக்குள் சூசகமாய் நுழைந்து லாவகமாய் வெளியேறுகிற பொழுதாகட்டும், வாழ்ந்திருக்கிறார் ராம். 

ப்ளீஸ் நடிக்காதீங்க என்று சொன்னவர் களையெல்லாம் ப்ளீஸ் நடிங்க என்று சொல்லவைப்பது எளிதல்ல. நல்ல கதாபாத்திரங்கள் யார் கிடைத்தாலும் அவர்கள் மூலமாகத் தங்களை நிகழ்த்திக் கொள்ள வல்லவை. இரண்டு புதிய நடிகர்கள் நடித்திருந்தால் பத்ம விருதுகளைப் போல், பிச்சை - மங்கா கதாபாத்திரங்கள் அந்த இருவரின் மீதும் ஒட்டிக் கொண்டிருக்கும்.அரோல் கொரேலியின் இசை மற்றும் ஒளிப்பதிவு, எடிட்டிங், ஃப்ரிஜ்ஜில் வைத்து எடுத்த சீஸ் கட்டியை உறைபிரிக்காமல் கன்னத்தில் வைத்தாற்போல் சில் ஜிலீரென இருக்கின்றன. ஒரு கூட்டுப் பிரார்த்தனை போல் இந்தத் திரைப்படம் உருவாகியிருப்பதை உணர முடிகிறது. 

தன் வீட்டிலிருந்து ஒருவர் வெளியே வருகிறார், தங்கள் தந்தையுடன் உடனே பேசவேண்டும் என்று அவரது செல்ஃபோனை வாங்கிப் பிச்சைக்கு அழைக்கிறாள் அவரது மகள். மனமிரங்கி ஃபோனை எடுத்து 'குட் ஐ ஸ்பீக் டு மிஸ்டர் பிச்சமூர்த்தி ப்ளீஸ்" என்கிறார் அவர். எதோ டெலிகாலிங் கால் என்று திட்டிவிட்டு வைக்கிறான் பிச்சை. ராம் எடுத்த 'கற்றது தமிழ்' படத்தை விட இந்த ஒரு காட்சி அதிகதிகம் 'பற்றது தமிழ்' எனப் பேசுகிறது. குழந்தை மறுபடியும் ஒரு கால் எனக் கேட்க, முடியாது என மீண்டும் வீட்டுக்குள்ளேயே போகிறார் அந்த மனிதர்.


தன் மகளை இழுத்துக் கொண்டு ஓடியவன் கால்கள் கூழாக வேண்டுமென்று சபிக்கிறாள் அம்மா. அடுத்த காட்சியில் நடக்க முடியாத மாற்றுத் திறனாளியைக் காதல் திருமணம் செய்து கொள்ளுவதற்காக அவர்களது பெண் ரிஜிஸ்திரார் ஆஃபீஸில் அறிமுகம் ஆகிறாள். இதற்கு முன் எத்தனையோ திரைப்படங்கள் சாதாரணக் கண்களைக் கொண்டு மாற்றுத் திறனாளிகளைப் பார்த்துப் பரிதாபப்படும் திரைப்படங்களை எடுத்து அடுக்கியிருக்கின்றன. இதில், மூன்று மாற்றுத் திறனாளிகளை மிஷ்கின் படைத்திருக்கிறார்.

பிச்ச மூர்த்தியின் காதல் தலைவி, கதைநெடுகத் தன்னை மலர்த்தியபடித் தோன்றுகிற வாழ்வழகி, செவித்திறன் அவளுக்கு இல்லையென்பது இந்தக் கதையில் ஒரு துளியும் குறையாகச் சித்தரிக்கப்பட்டிருக்காது. கால்கள் நடக்க முடியாத ரகு, இந்தக் கதையின் காதல் பேரழகன். அவனைத் தன் மனதிலும் வாழ்விலும் ஒருங்கே சுமந்து திரிவாள் அவன் காதலி. இவர்களோடு, தன் மனைவி குழந்தைகளை எப்படி மீட்பேன் என்று டீக்கடையில் ஒரு கணம் குலைசாய்ந்து கதறிக் கொண்டிருக்கும் பிச்சையைப் பேச்சுத்திறன் இல்லாத அந்தக் கடையின் உரிமையாளர் தன் உடல் மொழி மூலமாகவே பிச்சைக்கு ஊக்கத்தையும், உணர்வையும், உற்சாகத்தையும் ஊட்டி மறுபடி அவனைப் போர்க்களத்துக்கு அனுப்பி வைப்பார். 

இந்தப் படம் முடியும் இடமும் டைம் ட்ரா என்று ஒரு கிரிக்கெட் மேட்சை நிறுத்தும்போது ஏற்றுக் கொள்ளும் நம் மனங்களின் முன் ஒரு யுத்தத்தை நிறுத்திக் கொள்ளும் வேறொரு சித்திரத்தை முன்னிறுத்துகிற இடம் அழகியலின் உச்சம். இன்னும் இரண்டு நறுக்குகளுடன் இந்த விமர்சனத்தைப் பூர்த்தி செய்யச் சித்தம்.

ஒன்று. உள்ளார்ந்த ஓரிடத்தில் அம்மாவையும் சகோதரனையும் விட்டுவிட்டு வீதி முனைக்கு வரும் பிச்சையின் மகள் ஒரு காகிதக் காற்றாடியை வாங்கிக் கொண்டு திரும்புவாள். அந்த நேரத்தில் அவர்களைத் தேடிக் கொண்டு காற்றாடி விற்பவனிடம் மங்கா பிச்சை குடும்பத்தைப் பற்றி விசாரிக்க, அந்த வியாபாரி இந்தியில் பதில் சொல்வான். உடனே மங்கா கண் காட்ட, மங்காவின் உபகர்த்தன் இந்தியில் விசாரிப்பான். அவன் தெரியாது என்று சொன்னதும் கார் நேர் வழியில் சென்று மறையும். வண்ணக் காகிதங்களில் சுழல்கிற காற்றாடி வழியாக அந்தக் குழந்தையின் கவலை தோய்ந்த கண்கள் ஒரு கணம் மின்னி மறையும். விஷுவல் சிற்பம். 

இரண்டு. இன்னொரு காட்சியில், மிக நெருக்கு வட்டத்தில் ரயில் பூச்சி மேடேறுகிற காட்சி வரும். அதன் விலக்கத்தில் ஒரு வண்ணத்துப் பூச்சி இங்குமங்கும் சிறகடித்துப் பறக்கும். வண்ணத்துப் பூச்சியின் வாழ்காலச் சொற்பம் போல் ஆறு மணிக்குள் தன் வேட்டையை முடித்துக் கொள்ள வேண்டிய மங்கா, தன்னை எதுவோவென்று எண்ணியபடி வாழ்வை ஊர்ந்து நகர்கிற பிச்சமூர்த்தி, எப்போதாவது காணவாய்க்கிற அபூர்வம்.

சவரக்கத்தி சல்யூட் !!!